Wednesday, March 19, 2025

கோழை இஸ்ரேல் நடத்திய இனப்படுக்கொலை....!

"போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி  கோழை இஸ்ரேல் நடத்திய மிகப்பெரிய இனப்படுக்கொலை"

புனித ரமளானின் 17வது நோன்பின் அதிகாலை நேரம் (காசாவில் 18வது நோன்பு).

போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு மீண்டும், தங்களது நிலத்திற்கு திரும்பிய காசா மக்கள், ஏக இறைவன் மீது உறுதியாக நம்பிக்கையுடன் இருந்து, பல்வேறு கடும் இழப்புக்கு மத்தியிலும், ரமளான் நோன்பை கடைப்பிடித்து வரும் ஈமானின் காலமாகும். 

வழக்கம் போல் அதிகாலை நேரத்தில் ஸஹர் உணவு அருந்திவிட்டு, மறுநாள் நோன்பு நோற்க நிய்யத் வைத்துவிட்டு, ஃபஜர் தொழுகையை தொழுதுவிட்டு, சிறிது நேரம் உறங்க முடிவு செய்து, காசா மக்கள் உறங்கிய நேரம் அது. 

குழந்தைகள், பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் என அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, திடீரென குண்டுமழை பொழிந்தது. 

ஆம், கோழை இஸ்ரேல், போர்நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி, மீண்டும் காசா மக்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தி மிகப்பெரிய இனப்படுக்கொலையை நடத்தியது.

இந்த திடீர் வான்வழி தாக்குதலில், குழந்தைகள், பெண்கள் உட்பட 400க்கும் மேற்பட்டவர்கள் ஷயீத் ஆனார்கள். கொல்லப்பட்டார்கள். 

இப்படி ஷயீத் ஆன கள்ளங்கபடமற்ற அழகான பிஞ்சுக் குழந்தைகளின் முகங்களை பார்க்கும்போது, ஈரம் அற்ற நெஞ்சிலும் கண்ணீர் சுரக்கும். 

படுகாயங்கள் அடைந்து மருத்துவமனையை நோக்கி ஓடோடி செல்லும் காசா மக்களின் நிலைமையே காணொளிகளில் காணும்போது, கண்களில் கண்ணீர் சுரையாக சுரந்துகொண்டே இருக்கிறது. கண்களில் மட்டுமல்ல, தாங்க முடியாத துன்பத்தால், இதயத்திலும் கூட வழக்கத்திற்கு மாறாக கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. 

கோழை இஸ்ரேலின் கொடுமையான செயல்: 

இந்த குண்டு வெடிப்பு தாக்குதல் மூலம், 17 மாத போரில் கடந்த ஜனவரி முதல் நடைமுறைபடுத்தப்பட்டிருந்த போர் நிறுத்த அறிவிப்பை இஸ்ரேல் கைவிட்டுள்ளது  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, உத்தரவின் பெயரில் நடத்தப்பட்ட தாக்குதலில் குழந்தைகளும் பெண்களும் பலியானார்கள்.  போர் நிறுத்த ஒப்பந்தத்தை மாற்ற வேண்டும் என்ற இஸ்ரேலின் கோரிக்கையை ஹமாஸ் ஏற்காததால் மீண்டும் தாக்குதல் நடத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த தாக்குதல் இன்னும் தீவிரமாகும் என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர்  இஸ்ரேல் காட்ஸ் என்று கொக்கரித்துள்ளான்.  புதன்கிழமை (19.03.2025) அன்று வெளியிட்டுள்ள ஒரு காணொளி செய்தியில், ஹமாஸ் இன்னும் 59 பணயக்கைதிகளை பிடித்து வைத்திருப்பதாகவும், அவர்களில் 24 பேர் உயிருடன் இருப்பதாக நம்பப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.  தங்களது இரண்டு கோரிக்கைகளும் நிறைவேற்றப்படாவிட்டால், காசாவில் "முழு அழிவு மற்றும் பேரழிவு" என்றும் அவன் எச்சரித்துள்ளான். அத்துடன், காசா மக்கள் கிழக்கு காசாவை விட்டு வெளியேறி மைய பகுதிக்கு செல்லுமாறு இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது. அத்துடன் இன்றுமுதல் (20.03.2025) இஸ்ரேல் புதிய தரைவழி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. 

ஏற்கெனவே காசாவில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கான உணவு, மருந்து, எரிபொருள் மற்றும் பிற பொருட்களின் வருகையை இஸ்ரேல் துண்டித்து இரண்டுவாரங்கள் கடந்துள்ள நிலையிலும், பொருட்கள் தீர்ந்துவருவதாக பாலஸ்தீனியர்களுக்கு உதவும் குழுக்கள் எச்சரித்துள்ள நிலையிலும், இஸ்ரேல் எதிர்பாராத தாக்குதலை நடத்தியுள்ளது.  கடந்த ஓராண்டாக நடந்த போரினால் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் இறந்ததுடன், காசா முழுவதுமே தரைமட்டமாக்கப்பட்டிள்ளது. புனித ரமளான் மாதத்தில் மீண்டும் போர் தொடங்குவது பாலஸ்தீனியர்கள் மத்தியில் கவலையை எழுப்பியுள்ளது. 

ஹமாஸ் போராளிகள் விளக்கம்:

இஸ்ரேலின் இந்த கோழை தாக்குதல் குறித்து ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையில், "ஆக்கிரமிப்பாளர்களுக்கு (இஸ்ரேலுக்கு) எல்லையில்லாத அரசியல் மற்றும் ராணுவ உதவிகளை வழங்கிவரும் அமெரிக்கா தான், மிகப்பெரிய இன அழிப்புக்கும் காசாவில் நடக்கும் குழந்தைகள் மற்றும் பெண்கள் படுகொலைகளுக்கும் முழு பொறுப்பு" எனக் குறிப்பிட்டுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் துல்லியமாக கடைபிடித்து வருவதாகவும், இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்கள் வாக்குறுதியை மீறி போரையும் ஆக்கிரமிப்பையும் தொடங்கி ஒப்பந்தத்தை மீறியுள்ளனர் என்றும் ஹாமஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.  அத்துடன், மத்தியஸ்தர்களுடன் இணைந்து ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்துவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் ஹாமஸ் போராளிகள் தெரிவித்துள்ளனர்.

இதுஒருபுறம் இருக்க, இஸ்ரேலின் செயல்களை தாங்கள் ஆதரிப்பதாக அமரிக்கா கூறியுள்ளது. இந்த தாக்குதல் குறித்து தங்களது   ஆலோசனை பெறப்பட்டதாகவும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த விளக்கம் மேலும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் அளிக்கும் ஆதரவால் இஸ்ரேல் இத்தகைய கொலை வெறியாட்டம் நடத்தி, இனம் குழந்தைகள் கொன்று குவித்து வருகிறது. 

உலக நாடுகளில் கண்டன போராட்டங்கள்:

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, இஸ்ரேல் நடத்திவரும் இந்த தாக்குதல்களுக்கு உலக நாடுகளில் முழு கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இஸ்ரேலின் கோழை செயலுக்கு முஸ்லிம் நாடுகளில் மட்டுமல்லாமல், அமெரிக்காவின் நியூயார்க் உள்ளிட்ட பல நகரங்களில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று, இஸ்ரேலுக்கும், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கும் எதிராக முழக்கங்களை எழுப்பினர். 

ஐரிஷ் நாடாளுமன்றத்தில், மிகவும் ஆழ்ந்த துக்கத்துடன், கண்ணீர் விட்டு அழுதப்படி, தழுதழுத்த குரலுடன்  பேசிய உறுப்பினர் ஒருவர், இஸ்ரேலின் இந்த கொடுமையான தாக்குதலுக்கு  கண்டனம் தெரிவித்தார். அத்துடன், "இஸ்ரேல் பிரதமர்  பெஞ்சமின் நெதன்யாகு, குழந்தைகளையும், பெண்களையும் குண்டு மழைகளால் கொன்று அழகிய குடும்பங்களையும் அழித்து வருகிறார். இந்த கொடுங்கோலன் நரகத்திற்கு செல்வதற்கு மிகவும் தகுதியானவன். எனவே என் அன்பு கடவுளே, என் இறைவனே, இந்த அநியாயகாரனை நரகத்தில் புகுத்தி, வீழ்த்தி, கொளுந்துவிட்டு எரியும் நெருப்பில், அவனை  தொடர்ந்து எரித்துக் கொண்டே இரு. இஸ்ரேல் பிரதமர் நம்பிக்கையானவன் அல்ல. உலக மக்களின் நம்பிக்கையை அவன் பெறவில்லை. இஸ்ரேலிய மக்களின் நம்பிக்கையும் அவனுக்கு இல்லை. மனிதநேயம் இல்லாத ஒரு கொடுங்கோலன் அவன். இஸ்ரேலிய யூத மக்களே, பெஞ்சமின் நெதன்யாகுவை நீங்கள் ஒருபோதும் ஆதரிக்காதீர்கள்" இப்படி ஐரிஷ் எம்.பி. ஒருவர் பேசிய காணொளியை காணும்போது நமது உள்ளமும் அழுகிறது. அவரது பிரார்த்தனையை இறைவன் ஏற்க வேண்டும் என மனம் விரும்புகிறது. 

பிரியங்கா காந்தி கடும் கண்டனம்:

காசா மக்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் கொடுமையான தாக்குதல்களுக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளரும், வயநாடு எம்.பி.யுமான பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் வலைத்தளப் பதிவில் செய்தி ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், 130 குழந்தைகள் உட்பட 400க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் இஸ்ரேலிய அரசால் கொல்லப்பட்டு இருப்பது அவர்களுக்கு மனிதநேயம் ஒரு பொருட்டல்ல என்பதை காட்டுகிறது என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். 

மேலும், இஸ்ரேலிய அரசு எவ்வளவு குரூரமாக செயல்படுகிறதோ, உண்மையிலேயே அவர்கள் அவ்வளவு கோழைகளாக தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள் என்றும் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். மறுபுறம் பாலஸ்தீன மக்களின் துணிச்சல் மேலோங்குகிறது. அவர்கள் கற்பனை முடியாத அளவுக்கு துன்பங்களைத் தாங்கிக் கொண்டு, அசைக்க முடியாத நம்பிக்கையுடன் உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்தியா உறுதி: 

இஸ்ரேல் மீண்டும் போர் தொடங்கியுள்ள நிலையில், காசா மக்களுக்கு அளிக்கப்பட்டுவரும்  நிவாரண உதவிகள், மனிதநேய பணிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது.  இதுதொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் காசாவில் மீண்டும் தாக்குதல் தொடங்கப்பட்டு இருப்பது மிகவும் வேதனையும் வருத்தமும் அளிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில் காசா மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிவாரண உதவிகள் நிறுத்தப்படக் கூடாது என்றும், அவை தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது. 

பாலஸ்தீன மக்களுக்கு பிரார்த்தனை:

புனித ரமளான் மாதத்தில் நோன்பு வைத்திருக்கும் உலக இஸ்லாமியர்கள் அனைவரும், ஒவ்வொரு வக்த் (வேளை) தொழுகையிலும், தராவீஹ் தொழுகையின்போதும், பாலஸ்தீன மக்களுக்காக, குறிப்பாக, காசா மக்களுக்கு கண்ணீர் மல்க ஏக இறைவனிடம் துஆ (பிரார்த்தனை) செய்து வருகிறார்கள். புனித ரமளான் மாதத்தில் இஸ்ரேல் நடத்திய இந்த கொடூர தாக்குதல்களில் இருந்து காசா மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அனைத்து மஸ்ஜித்துகளிலும் தொழுகைக்கு வரும், முஸ்லிம்கள், மற்றும் வீடுகளில் தொழுகையில் ஈடுபடும் பெண்கள், ஏக இறைவனிடம் ஒரே வேண்டுகோளாக வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். 

இஸ்லாமியர்களின் இரண்டு புனித மஸ்ஜித்துகளான மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுந் நபவி ஆகியவற்றில் மட்டுமல்லாமல், பைதுல் முகத்தஸ், மஸ்ஜிதுல் குபா ஆகியவற்றிலும் நாள்தோறும் தொழுகைக்கு வரும் முஸ்லிம்கள், பாலஸ்தீன் விடுதலைக்காகவும், பாலஸ்தீன் மக்களின் நல்வாழ்விற்காகவும், ஈமானில் உறுதியுடன் இருக்கும் அந்த மக்களின் துயரங்கள் நீங்கவும் துஆ கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அப்பாவி குழந்தைகள், பெண்கள், முதியவர்களை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேல், நிச்சயம் அழிந்தே போகும். இது தான் வரலாறு மனித இனத்திற்குச் சொல்லித்தரும் பாடமாகும். துஆக்கள் என்றுமே தோற்பதில்லை என்ற உறுதியான நம்பிக்கை கொண்ட முஸ்லிம்கள், பாலஸ்தீன் மக்களுக்காக கேட்கும் துஆக்கள் கூட நிச்சயம் தோற்காது என ஈமானுடன் உறுதியாக இருந்து வருகிறார்கள். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: