"அல்-மஸ்ஜித் அன் நபவியில் இஃப்தாருக்கு தினமும் 15 இலட்சம் பேரீச்சும்பழங்கள் வினியோகம்"
புனித ரமளான் மாதத்தில், சவுதி அரேபியாவில் உள்ள புனித நகரங்களான மெக்கா மற்றும் மதீனாவிற்கு உலகம் முழுவதும் இருந்து வருகை தரும் இறை நம்பிக்கையாளர்களின் எண்ணிக்கை பல லட்சத்தை தாண்டி வருகிறது. இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் இருந்து புனித உம்ரா பயணத்தை மேற்கொள்ள ஒவ்வொரு நாளும் வரும் முஸ்லிம்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரிகரித்துக் கொண்டே செல்கிறது. புனித ரமளான் மாதத்தில் உம்ரா பயணம் மேற்கொண்டு, இறைக் கட்டளையின்படி, நோன்பு வைத்து, தராவீஹ் தொழுகையை இந்த புனித நகரங்களில் நிறைவேற்ற உலக முஸ்லிம்கள் மிகவும் ஆவல் கொள்கிறார்கள். இதனால், இந்த இரண்டு புனித நகரங்களும் இறை நம்பிக்கையாளர்களால் நிரம்பி வழிகிறது.
சவூதி அரேபியாவில் உள்ள மெக்காவும் மதீனாவும் முஸ்லிம்களின் புனிதத் தலங்கள். மெக்கா என்பது கஃபா அமைந்துள்ள நகரமாகும். மிகப் புனிதத் தலமான மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலின் நடுவில் அமைந்துள்ள கனசெவ்வக வடிவக் கட்டடம் கஃபா ஆகும். உலகெங்குமுள்ள முஸ்லிம்களின் தொழுகை இத்திசையை நோக்கியே மேற்கொள்ளப்படுகின்றது. அதன் தவாஃப் மற்றும் ஹஜ் (புனித யாத்திரை) முஸ்லிம்களுக்கு கட்டாயமாகும் (ஃபார்ஸ்), மதீனா என்பது மஸ்ஜித் நப்வி அமைந்துள்ள புனித நகரமாகும். இதை இறைத்தூதர் ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களுடன் கட்டினார்கள். இப்படிப்பட்ட புனித நகரங்களில் அமைந்துள்ள இந்த இரண்டு மஸ்ஜித்துகளிலும் ஏக இறைவனின் கட்டளையை ஏற்று தொழுகை செய்யும்போது கிடைக்கும் மகிழ்ச்சி, ஆனந்தம் ஆகியவற்றுக்கு அளவே இல்லை என்று கூறலாம்.
ரமழானும் பேரீச்சம்பழமும்:
உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களுக்கு பேரீச்சம்பழம் எப்போதும் ஒரு சிறப்பு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. குறிப்பாக, ரமழான் மாதத்தில் ஒவ்வொரு இஃப்தார் மேசையிலும் பேரீச்சம்பழம் கண்டிப்பாக இருக்கும். பேரீச்சம்பழத்தைக் கொண்டு நோன்பு துறப்பது சுன்னத் என்பது இஸ்லாமிய நெறிமுறைகளில் ஒன்றாகும். அந்த வகையில் உலகம் முழுவதும் உள்ள மஸ்ஜித்துகளில் இஃப்தார் நேரத்தில் நோன்பாளி அனைவருக்கும் பேரீச்சம்பழம் கொடுக்கப்பட்டு வருகிறது. நோன்பு துறக்கும் போது, துஆ ஓதிவிட்டு, முதலில் பேரீச்சம்பழம் கொண்டும் பின்னர் தண்ணீர் அருந்தியும், முஸ்லிம்கள் நோன்பு துறப்பதை வழக்கமாக கொண்டு இருக்கிறார்கள். இதன்பின்னர், பிற உணவு வகைகளை சாப்பிட்டு, நோன்பாளிகள் ஏக இறைவனுக்கு நன்றி செலுத்தி, தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள்.
அல்-மஸ்ஜித் அன் நபவியில் இஃப்தார்:
புனித மதீனாவில் உள்ள அல்-மஸ்ஜித் அன் நபவியில் (நபிகள் நாயகம் (ஸல்) மஸ்ஜித்) ரமளான் மாதம் முழுவதும் இஃப்தாருக்கு தினமும் 15 இலட்சத்திற்கும் அதிகமான பேரீச்சம்பழங்கள் நோன்பாளிகளுக்கு வழங்கப்படுகின்றன. நோன்பாளிகளுக்கு விநியோகிக்கப்படும் இஃப்தார் பாக்கெட்டுகளில் ஒவ்வொன்றிலும் ஏழு பேரீச்சம்பழங்கள் கண்டிப்பாக இருக்கும். அத்துடன் சாப்பிட முடியாத அளவுக்கு பிற உணவு வகைகளும் பாக்கெட்டுகளில் இடம்பிடித்து இருக்கும். இப்படி பல லட்சம் பாக்கெட்டுகள் தயாரிக்கப்பட்டு, நோன்பு துறக்க அல்-மஸ்ஜித் அன் நபவிக்கு வரும் நோன்பாளிகளுக்கு நள்தோறும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதை வாங்கி நோன்பு துறந்து சாப்பிடும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என்று கூறலாம்.
பல்வேறு வகையான பேரீச்சம்பழங்கள்:
மதீனாவின் தோட்டங்களில் அல்-ருதானா, அல்-அஜ்வா, அல்-அன்பர், அல்-சஃபாவி, அல்-சக்'இ, அல்-பர்னி அல்-மதீனா, அல்-பர்னி அல்-அய்ஸ், அல்-பைதா அல்-மஹ்த், அல்-மப்ரூம், அல்-ஹிலியா, அல்-ஜுபைலி, அல்-லபானா, அல்-மஷ்ரூக், அல்-மஜ்துல், அல்-ரபீ'ஆ மற்றும் அல்-ஷல்பி பேரீச்சம்பழங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பேரீச்சம்பழங்கள் வளர்க்கப்படுகின்றன.
மதீனாவிற்கு வருகை தரும் யாத்ரீகர்கள் தங்கள் புனித யாத்திரைக்கையின்போது, பேரீச்சம்பழங்களை அவற்றின் சுவை காரணமாக விரும்புகிறார்கள், மேலும் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்புவதற்கு முன்பு அவற்றை அதிக அளவில் வாங்குகிறார்கள். மதீனாவில் உள்ள மொத்த பேரீச்சம்பழ மரங்களின் எண்ணிக்கை 70 இலட்சத்திற்கும் அதிகமாகும். அவை 29 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பண்ணைகளில் பரவியுள்ளன.
அவை 3 லட்சத்து 40 ஆயிரம் டன் பல்வேறு வகையான பேரீச்சம்பழங்களை உற்பத்தி செய்கின்றன. இது நாட்டின் மொத்த பேரீச்சம்பழ உற்பத்தியில் தோராயமாக 18 சதவீதம் ஆகும். இந்தப் பேரீச்சம்பழங்கள் உள்ளூர் சந்தையில் நேரடியாக விற்கப்படுகின்றன அல்லது சேமிக்கப்படுகின்றன. இந்தப் பேரீச்சம்பழங்கள் பல்வேறு பாக்கெட்டுகள் மற்றும் அளவுகளில் சந்தைக்கு வழங்கப்படுகின்றன. இந்த நோக்கத்திற்காக, 44 பேக்கேஜிங் மற்றும் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. கூடுதலாக, பல்வேறு பேரீச்சம்பழப் பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன.
உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களுக்கு:
இப்படி, மதீனாவின் தோட்டங்களில் உற்பத்தியாகும் பல்வேறு வகையான பேரீச்சம்பழங்கள், உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக, ரமளான் மாதத்தில், பேழிச்சம்பழங்களின் ஏற்றுமதி மிகமிக அதிகம் என்றே கூறலாம். சவுதி அரேபியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தரமான, சுவையான பேரீச்சம்பழங்களை ரமளான் காலத்தில் அதிகமாக பயன்படுத்தும் வழக்கம் உலக முஸ்லிம்களிடையே இருந்து வருகிறது. இதன் காரணமாக மதீனா தோட்டங்களில் விளையும் சுவையான பல்வேறு வகையான பேரீச்சம்பழங்கள் மீது முஸ்லிம்கள் ஆர்வத்துடன் இருப்பார்கள். அதன் சுவையில் உண்டு, மயங்கி ஆனந்தம் அடைவார்கள்.
கூடுதல் தகவல், பேரிச்சம் பழத்தில் வளமான அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், தினமும் பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வந்தால், ஒரு நாளைக்கு ஒருவருக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். குறிப்பாக காப்பர், பொட்டாசியம், நார்ச்சத்து, மாங்கனீசு, வைட்டமின் பி6, மக்னீசியம் போன்றவற்றைப் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment