Wednesday, March 19, 2025

கே.நவாஸ் கனி எம்.பி. பேட்டி...!

ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள வக்ஃபு சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்...!

தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர் கே.நவாஸ் கனி எம்.பி. பேட்டி...!!

திருநெல்வேலி, மார்ச்.20- நெல்லை மாவட்டத்தில் மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமான சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர் கே.நவாஸ் கனி எம்.பி. உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் வக்ஃபு சொத்து குறித்த தகராறில் படுகொலை செய்யப்பட்ட ஜாகீர் உசேன் குடும்பத்தினரை நேற்று (19.03.2025) நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அவர் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கே.நவாஸ் கனி பேசிய முழு விவரம் வருமாறு:

ஜாகீர் உசேன் படுகொலை குறித்து விளக்கம்:

மூர்சனான் வக்ஃபுடைய முத்தவல்லி, ஜாகீர் உசேன், பரம்பரை வழி முத்தவல்லி, தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் அங்கீகாரம் பெற்ற முத்தவல்லி நேற்று காலை (18.03.2025) படுகொலை செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணமூர்த்தி என்கிற தஃபீக்,  வக்ஃபு சொத்தை ஆக்கிரமித்து, தரை வாடகையாக 36 சென்ட் நிலத்தை வாடகைக்கு எடுத்து அந்த சொத்தை போலியான ஆவணங்கள் மூலமாக பத்திரப்பதிவு செய்து, அந்த இடத்திற்கு உரிமை கொண்டியிருக்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த சொத்தை மீட்கக் கூடிய சட்டப் போராட்டங்கைளை ஜாகீர் உசேன்  தொடர்ந்து செய்து வந்துள்ளார். சட்டப்படி அந்த சொத்தை மீட்கக் கூடிய நடவடிக்கைகளில் ஜாகீர் உசேன், ஈடுபட்டதால், கிருஷ்ணமூர்த்தி என்ற தஃபீக்கிற்கும், அவருக்கும் இடையே மோதல் இருந்து வந்துள்ளது. 

இதற்கிடையில் அந்த 36 சென்ட் நிலத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் பேச்சுவார்த்தைகள் மூலம் இரண்டரை சென்ட் நிலத்தை ஜாகீர் உசேன் மீட்டு, அந்த இடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரும்போது, கிருஷ்ணமூர்த்தி என்ற தஃபீக் அவரிடம் தகராறு செய்து, 18.3.2025 அன்று காலை அவரும் அவருடன் இரண்டு பேரும் சேர்ந்து, ஜாகீர் உசேனை படுகொலை செய்து இருக்கிறார்கள். படுகொலை செய்த குற்றவாளிகள் இரண்டு பேர்  காவல்நிலையத்தில் சரண் அடைந்திருக்கிறார்கள். கிருஷ்ணமூர்த்தி என்கிற தஃபீக்கை மாநகர காவல்துறை இன்று (19.03.2025) கைது செய்துள்ளது. 

முதலமைச்சரின் நடவடிக்கை பாராட்டு:

இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதில் அளித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இந்த கொலை வழக்கில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். அதன் அடிப்படையில் தலைமறைவாக இருந்த கிருஷ்ணமூர்த்தி என்கிற தஃபீகை போலீசார் சட்டுப் பிடித்து இருக்கிறார்கள். வழக்கை சரியான முறையில் விசாரிக்காமல் மெத்தனமாக இருந்த காவல்துறை ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வக்ஃபு சொத்துக்களை மீட்க நடவடிக்கை:

மேலும் ஜாகீர் உசேனின் குடும்பத்தினர் பல்வேறு கோரிக்கைகளை எங்களிடம் வைத்துள்ளார்கள். அதன்படி, கைது செய்யப்பட்டுள்ளவர்களின் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும். ஏற்கனவே ஆக்கிரமிப்பில் உள்ள வக்ஃபு சொத்துக்களை மீட்க வேண்டும் என்று கோரியுள்ளார்கள். இத்தகைய ஆக்கிரமிப்பில் உள்ள சொத்துக்கள் அனைத்தும் மீட்கும் நடவடிக்கைகளில் தமிழ்நாடு வக்ஃபு வாரியம் நிச்சயம் ஈடுபடும் என்று கூறிய நவாஸ் கனி, செய்தியாளர்கள் சிலர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும்போது, கிருஷ்ணமூர்த்தி என்கிற தஃபீக் வக்ஃபு சொத்தை தரை வாடகைக்கு எடுத்து அதனை தவறான முறையில் பயன்படுத்தி வந்து, தனதாக்கிக் கொள்ள முயற்சிகளை செய்துள்ளார் என்றும், ஆனால், அது வக்ஃபு சொந்தமான இடம் என்றதால் ஜாகீர் உசேன் எதிர்த்து வந்துள்ளார் என்றும் தெரிவித்தார். 

மேலும் பேசிய அவர், நெல்லையில் பல இடங்களில் முறையற்ற அளவில் வக்ஃபு சொத்துக்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. அந்த சொத்துக்கள் குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்படும். நானே நேரில் வந்து இரண்டு மூன்று நாட்கள் ஆய்வில் ஈடுபடுவேன். அந்த சொத்துக்களை எப்படி மீட்பது என்ற முயற்சியில் நாங்கள் நிச்சயம் ஈடுபடுவோம். 

இவ்வாறு கே.நவாஸ் கனி பேசினார்.

=============================


No comments: