Monday, March 10, 2025

ரமழானில் நற்செயல்.....!

 "ரமழானில்  ஒரு  நற்செயல்"

முஷ்தாக் ஒரு பெரிய புன்னகையுடன் மாலை தொழுகையைத் தொழுதுவிட்டு, பிரகாசமான  வாயில் வழியாக நிஜாமுதீன் சாலையை நோக்கி விறுவிறுப்பாக நடந்தார். சில நேரங்களில் அவர் தனது பேண்ட் பாக்கெட்டில் கையை வைத்துப் பார்ப்பார். சில சமயங்களில் அவர் தனது பாக்கெட்டில் கையை வைத்து பணத்தை சரியாகப் போட்டாரா இல்லையா என்று உணர்வார். 

முஷ்தாக்கின் முதலாளி பேரீச்சம்பழம் மற்றும் இப்தாருக்கு தேவையான மற்றப் பொருட்களை வாங்க மூவாயிரம் ரூபாய் கொடுத்திருந்தார். அவர் பாதையில் நடந்து செல்லும்போது, ​​நாளைய இப்தாருக்கு என்ன வாங்குவது என்று யோசித்துக்கொண்டிருந்தார். முஷ்தாக்கின் வீட்டில் அவரது தாயார் மற்றும் ஒரு மூத்த சகோதரி இருந்தனர். அவர் படித்துக் கொண்டே ஒரு மருத்துவமனையில் வரவேற்பாளராகவும் பணிபுரிந்தார். தந்தையின் திடீர் மரணத்திற்குப் பிறகு, இரு குழந்தைகளும் (அக்கா மற்றும் தம்பி) வீட்டைப் பராமரிக்கும் பொறுப்பில் இருந்தனர். 

மேலும் முஷ்தாக் தனது பட்டப்படிப்பின் முதலாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தார். அதே நேரத்தில் ஒரு செருப்புக் கடையில் வேலையும் செய்து வந்தார். அவர் செல்லும் பாதை, ஒருபோதும் முடிவடையாத ஒரு பாதையாக இருந்தது. அவர் யோசிக்க ஆரம்பித்தார். அந்த நாள் சீக்கிரமா போயிருக்கும், இன்று என்ன ஆச்சு? அவர் கண்களில் மகிழ்ச்சியும் துக்கமும் கலந்த நட்சத்திரங்கள் பிரகாசிக்கத் தொடங்கின.

கடந்த வருடம் அவர், தந்தை உயிரோடு இருந்தபோது இதெல்லாம் தனக்குத் தெரியாது என்று அவர் நினைக்கத் தொடங்கினார். தந்தை எல்லாவற்றையும் கொண்டு வருவார்கள், மேலும் வீட்டிற்கு ஏதாவது கொண்டு வருவதில் உள்ள தொந்தரவை அவர்கள் கவனிக்கவே மாட்டார்கள். அதைப் பற்றி கவலைப்படாமல், அலட்சியம் செய்துவிட்டு, வீட்டுக்கு தேவையான பொருட்களை மகிழ்ச்சியாக கொண்டு வருவார்கள். ஒரு மரம் தரையை விட்டு நீங்கும்போது, ​​அதன் நிழலில் அமர்ந்திருப்பவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் வாழ்க்கையின் கடுமையான வெயிலைத் தாங்குவது அவர்களுக்கு கடினமாகிவிடும். 

அவர் தனது தந்தையை நினைத்துக் கொண்டிருந்தபோது ஒரு குழந்தை அவர் முன் தோன்றியது. முஷ்தாக் உடனே, "ஏய், சாரி, மகனே, சாரி" என்று பதறினார். குழந்தை திரும்பிப் பார்த்தது. குழந்தையின் கண்கள் கண்ணீரால் நிரம்பி இருந்தன. முஷ்தாக்கைப் பார்த்த பிறகு, அவன் தன் தாயிடம் திரும்பினான். அவன் தன் சிறிய கைமுட்டிகளால் தன் தாயின் புர்காவை தொடர்ந்து இழுத்துக் கொண்டிருந்தான். 

"மகனே, நான் விழப் போகிறேன்." என்றாள் தாய்.

 "அம்மா, போய்டுங்க, நான் பேச மாட்டேன்." என்றது அந்த குழந்தை.

 பின்னர் குழந்தையின் தாய் அவன் தலையில் கையை வைத்து, "மகனே, தயவுசெய்து இன்னொரு நோன்பு நோற்றப்பிறகு மறுநாள் உன்னை நோன்பு நோற்கச் செய்வோம்" என்றாள்.

"இல்லை, அம்மா! முதல் நோன்பு வைத்தால் நீ எனக்கு ஒரு புது உடை வாங்கித் தருவதாய் சொன்னாய்." என்றது குழந்தை.

முஷ்தாக் பின்னால் இருந்து இருவரின் உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்தார். திடீரென்று, ஒரு சிறிய துணிக்கடை கண்ணில் பட்டது. அங்கே குழந்தை நின்றது. முஷ்தாக் தூரத்தில் இருந்ததால், அவர் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தார். 

பின்னர் குழந்தையின் தாய் கடைக்காரரிடம், "அண்ணா, இந்த குழந்தையின் அளவில் குர்தா, பைஜாமா அல்லது பதானி உடை இருக்கிறதா என்று சொல்லுங்கள்." என்றாள்.

 கடைக்காரர் அது வெள்ளை நிற குர்தாவும் பைஜாமாவும் என்று சொன்னார். அந்த பெண்மணி சைகையுடன் "எவ்வளவு?" என்று கேட்டார்.

 கடைக்காரர், “ஐநூறு” என்றார்.

"சரி, அண்ணா, நாளைக்கு பணம் கொண்டு வந்து வாங்கிட்டு போகிறோம்" என்று கூறிவிட்டுஅந்த பெண் தன்  குழந்தையை பார்த்து, ஆறுதலுடன் "இன்னும் இரண்டு நாட்களில் ஆடையை வாங்கிடலாம். நாளைக்கும் மறுநாளும் நோன்பு இரு மகனே." என்றாள். 

ஆனால் குழந்தை பிடிவாதமாக இருந்தது. அந்த பெண் குழந்தையைத் தன் கைகளில் ஏந்தி, அன்பாக விளக்க ஆரம்பித்தாள், "நல்ல மகனே, நாளை வேலை முடிந்ததும் சாரா பாஜியிடமிருந்து பணம் பெற்றுவிடுவேன்." என்று அவள் விளக்கத் தொடங்கினாள்.

முஷ்தாக் அந்த தாய் மற்றும் மகனின் பின்னால் பின்தொடரத் தொடங்கினார். குழந்தை அழுது கொண்டிருந்தது. "உனக்கும் நல்ல காலணிகளைத் தருகிறேன்," என்று பெண் ஒரு மூட்டையைக் காட்டிச் சொன்னாள். பிறகு அவள் பின்பக்கம் திரும்பினாள். குழந்தை அமைதியாகிவிட்டது. 

காலணிக் கடைக்குச் சென்று, "இந்தக் குழந்தையின் அளவில் ஷூக்கள் கிடைக்குமா?" என்றாள். "ஆம். இருக்கு  அத்தை" என்று கூறிய கடை பெண் ஊழியர், பிறகு கருப்பு காலணிகளை குழந்தைக்கு அணிந்தாள். அந்தக் குழந்தை மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. 

எவ்வளவு என்று கடை முதலாளியிடம் தாய் கேட்டபோது, ​​அவர், இருநூறு ரூபாய் என்றார். உடனே தாய்  குழந்தையின் காலில் இருந்த ஷூவை கழற்றி திருப்பிக் கொடுத்தார். " நன்றி அண்ணா என்று கூறிய அந்த பெண், "இறைவன் நாடினால், நாளை அதை எடுத்துக்கொள்வோம்."  என்று தெரிவித்தாள். 

குழந்தையை மகிழ்விக்க அவள் இதையெல்லாம் செய்து கொண்டிருந்தாள். அத்துடன்  தன் துப்பட்டாவால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்தாள். குழந்தை இப்போது அமைதியாக இருந்தது. இருவரும் பேச ஆரம்பித்தனர். "நான் நாளைக்கு சாரா பாஜிகிட்ட சொல்றேன் மகனே, அவங்க பாத்திரம் கழுவிட்டுப் பிறகு, நமக்கு பணம் கொடுப்பாங்கள். அதைக் கொண்டு,  நாளைக்கு மறுநாளுக்கு  உடை, ஷு ஆகியவற்றை வாங்கிக் கொள்ளலாம்" என்றாள் தாய். 

முஷ்தாக் இருவரையும் பின்தொடர்ந்து சென்றபோது, ​​வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்க வேண்டும் என்பதை மறந்துவிட்டார். திடீரென்று அவர்கள் ஒரு தெருவில் உள்ள மூன்றாவது வீட்டிற்குள் சென்றனர். 

முஷ்தாக் அந்த தாய் மற்றும் மகன் பேசிய சில விஷயங்களைக் கேட்டார். ஆனால் தூரத்தின் காரணமாக சிலவற்றை முழுமையாக சரியாக் கேட்க முடியவில்லை. ஆனால் குழந்தை பிடிவாதமாக இருந்தது. அவனது தாய் அவனுக்கு எதுவும் வாங்கிக் கொடுக்கவில்லை. அவன் அவர்களைப் பார்த்துக் கொண்டே அவர்களைப் பின்தொடர்ந்து, அவர்களுடைய வீடு வரை சென்றார். அவர்களுடைய வீடு சம்பா சௌக்கில்தான் இருந்தது. அவர் தெருவில் திரும்பி, வீட்டைப் பார்த்தார். அதைப் பார்த்ததும், இருவருக்கும் அத்தியாவசிப் பொருட்கள்  மிகவும் தேவைப்படுவதாக உணர்ந்தார். 

அவர் திரும்பி வந்து குர்தா, பைஜாமா, காலணிகள், ஒரு பெட்டி பேரீச்சம்பழம் மற்றும் இப்தாருக்காக சில பழங்களை வாங்கி வந்தார். குழந்தையின் வீட்டு வாசலில் அனைத்து பொருட்களையும் வைத்துவிட்டு, கதவை சத்தமாகத் தட்டிவிட்டு விலகி நின்றார்.  குழந்தையின் தாய் கதவைத் திறந்தபோது, ​​வாசலில் யாரும்  இல்லை. திடீரென்று, பல பொருட்கள் அவள் கண்ணில் பட்டது. அந்த தாய் சுற்றிப் பார்த்தபோது, ​​அங்கு யாரும் இல்லை. அதனால் அவள் பொருட்களை எடுத்துக்கொண்டு தேட ஆரம்பித்தாள். இதற்கிடையில், அந்தப் பிள்ளையும் வந்தது. "அம்மா, இதை யார் கொண்டு வந்தது?" என்று குழந்தை மகிழ்ச்சியுடன் கேட்டது.

குழந்தையின் தாய் மகிழ்ச்சியுடன் வானத்தைப் பார்த்து, ஏக இறைவனுக்கு நன்றி கூறிவிட்டு வீட்டிற்குச் சென்றார். இதையெல்லாம் பார்த்து முஷ்தாக் சிரித்தார். ஒருவருக்கு நல்லது செய்த பிறகு அவருக்கு ஒருவித அமைதி ஏற்பட்டது. திடீரென்று தொழுகைக்கான அழைப்பு கேட்டது. அவர் இஷாவையும் தராவீஹையும் தொழுதுவிட்டு வீட்டிற்குச் சென்றார்.  வீட்டை அடைந்தவுடன், அவரது அம்மா, “மகனே! "இன்று ஏன் ரொம்ப நேரம் ஆச்சு."என்று கேட்டார்.

 "ஆமாம் அம்மா, நான் ஒரு நல்ல காரியத்தைச் செய்வதில் மும்முரமாக இருந்ததால், தாமதமாகிவிட்டது" என்ற பதில் கூறிக் கொண்டே , அவரது கண்கள் மேஜையின் மீது விழுந்தன. மேஜையில் இருந்து பொருட்களைப் பார்த்து, "அம்மா, இந்த இப்தார் பொருட்கள் மற்றும் பேரீச்சம்பழங்களை யார் கொண்டு வந்தார்கள்?" என்ற கேட்க, "மகனே, உன் அத்தை அவற்றைக் கொண்டு வந்தாள்." என்று தாய் பதில் கூறினார். "சரி, அம்மா. "இந்தப் பணத்தை நீயே வைத்துக்கொள். நம்ம முதலாளி உன்னிடம் கொடுக்கச் சொன்னாரு." என்று கூறி முஷ்தாக் தாயிடம் பணத்தை கொடுத்தார். 

இரவு உணவு சாப்பிடும்போது, ​​அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் ஒரு நல்ல செயலைச் செய்தால், அல்லாஹ் உங்களுக்குப் பத்து மடங்கு வெகுமதி அளிப்பான் என்று ஹஸ்ரத் அலி கூறியதை முஷ்தாக் நினைவு கூர்ந்தார். அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் எனது முதல் ரமழான் நற்செயலை ஏற்றுக்கொண்டான். அவர் மனதிற்குள் ஏக இறைவனுக்கு  நன்றி சொல்ல ஆரம்பித்தார். 

(குறிப்பு: இந்த சிறுகதை, இன்குலாப் உர்தூ நாளிதழில்  அவுரங்காபாத் தஸ்னீம் முஸம்மில் ஷேக் எழுதியது)

தமிழில்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: