சென்னையில் வரும் 22ஆம் தேதி நடைபெறும் தொகுதி மறுவரையரை கூட்டு நடவடிக்கை கூட்டம்...!
இ.யூ.முஸ்லிம் லீக் கேரள மாநிலம் சார்பில் வழக்கறிஞர் பி.எம்.ஏ.சலாம் பங்கேற்பு....!!
மாநில தலைவர் சையத் சாதிக் அலி ஷிஹாப் தங்ஙள் அறிவிப்பு....!!!
மலப்புரம், மார்ச்.18- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு, சென்னைடியில் மார்ச் 22-ஆம் தேதி நடைபெறும் தொகுதி மறுவரையரை கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில், இ.யூ.முஸ்லிம் லீக் கேரள மாநிலம் சார்பில் முன்னாள் எம்.எம்.ஏ. வழக்கறிஞர் பி.எம்.சலாம் பங்கேற்பார் என அந்த மாநில தலைவர் சையத் சாதிக் அலி ஷிஹாப் தங்ஙள் தெரிவித்துள்ளார்.
தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாமல், தென்மாநிலங்களுக்கும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க அண்மையில் சென்னை தலைமையச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் உட்பட 56 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில், தென் மாநிலங்களின் எம்.பி.க்களை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கைக் குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, சென்னையில் வரும் 22ஆம் தேதி தொகுதி மறுவரையரை குறித்த கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் பங்கேற்க தென்மாநில அரசியல் தலைவர்களுக்கு தமிழக அமைச்சர்கள் நேரில் சந்தித்து, அழைப்பு விடுத்து வருகிறார்கள். இதேபோன்று, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரள மாநில தலைவர் சையத் சாதிக் அலி ஷிஹாப் தங்ஙளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
முதலமைச்சருக்கு கடிதம்:
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இ.யூ.முஸ்லிம் லீக் கேரள மாநில தலைவர் சையத் சாதிக் அலி ஷிஹாப் தங்ஙள் 16.03.2025 அன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தொகுதி மறுசீரமைப்பால் ஏற்படும் பாதிப்பு மற்றும் இதற்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துவரும் நடவடிக்கைகள் ஆகியவற்றை குறிப்பிட்டுள்ள தங்ஙள், தொகுதி மறுவரையரை கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் இ.யூ.முஸ்லிம் லீக் கட்டாயம் கலந்துகொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார்.
கடிதத்தின் முழு விவரம்:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சையத் சாதிக் அலி ஷிஹாப் தங்ஙள் எழுதிய கடிதத்தின் முழு விவரம் வருமாறு:
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையான தொகுதி மறுவரையரை தொடர்பாக, தாங்கள் அனுப்பி கடிதத்தின் அவசியம் மற்றும் அவசரம் குறித்து நாங்கள் நன்கு உணர்ந்துகொண்டோம். இதுதொடர்பாக நீங்கள் எடுத்துவரும் நடவடிக்கைகளை நாங்கள் பாராட்டுகிறோம். பெரிதும் மதிக்கிறோம். தொகுதி மறுவரையரை மூலம் இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் பல்வேறு சவால்களுடன் பல நெருக்கடிகளையும் சந்திக்கும் நிலை ஏற்படுவதுடன், ஜனநாயகத்திற்கும் இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் என்பதே உண்மையாகும்.
நீங்கள் (மு.க.ஸ்டாலின்) சுட்டிக் காட்டியபடி, ஜனநாயகம் மற்றம் பன்முகத்தன்மை கொள்கையின்படி, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் சம உரிமைகளைக் கொண்ட மாநிலங்களாகும். இந்த உரிமைகளின்படி, நாடாளுமன்றத்தில் சரியான பிரதிநிதித்துவம் அவசியம் வழங்கப்பட வேண்டும். ஆனால் தற்போது நடைமுறைப்படுத்துவதாக கூறப்படும் தொகுதி மறுவரையரை, உண்மையில் 2026ஆம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையில் அமல்படுத்தப்பட்டால், நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு, மக்கள் தொகை கட்டுப்பாட்டை மிகச் சிறந்த முறையில் நடைமுறைப்படுத்திய நமது தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மிகப்பெரிய தண்டனையாக இருக்கும். இந்த நடவடிக்கை வளர்ச்சி அடைந்த மாநிலங்களாக இருக்கும் தென் மாநிலங்கள் மீது நடத்தப்படும் போர் என்ற உங்கள் கருத்தை நாங்கள் வரவேற்கிறோம்.
வழக்கறிஞர் சலாம் பங்கேற்பு:
இந்த பிரச்சினையில் தங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகள் மற்றும் தென் மாநிலங்கள், அத்துடன் கிழக்கு மற்றும் வடக்கு மாநிலங்களை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்கப்படும் என்ற தங்களின் முடிவிற்கு இ.யூ.முஸ்லிம் லீக் தனது முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது. இந்த கூட்டு நடவடிக்கைக் குழு மூலம் எடுக்கப்படும் ஒருங்கிணைந்து முயற்சிகள், நம்முடைய மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்க நிச்சயம் உதவும் என்றும் நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
அத்துடன், தேசிய அளவில் மேற்கொள்ளப்படும் செயல்திட்டங்களில் நம்முடைய மாநிலங்களுக்கு உரிய உரிமைகள் மற்றும் பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கிறோம்.
உங்களுடைய வேண்டுகோளை முழுமையாக ஏற்றுக் கொண்ட இ.யூ.முஸ்லிம் லீக் கேரள மாநில அமைப்பு, சென்னையில் நடைபெறும், தொகுதி மறுவரையரை கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில், கேரள மாநில இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் முன்னாள் எம்.எம்.ஏ. வழக்கறிஞர் பி.எம்.சலாம் பங்கேற்பார் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கூட்டத்தில் நான் ( சையத் சாதிக் அலி ஷிஹாப் தங்ஙள்) பங்கேற்க முடியாத சூழ்நிலைக்காக, எமது வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். எனினும், முன்னாள் எம்.எம்.ஏ. வழக்கறிஞர் பி.எம்.சலாம் பங்கேற்று கட்சியின் நிலைப்பாடு குறித்து எடுத்துரைப்பார். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பிரச்சினையில், இ.யூ.முஸ்லிம் லீகின் முழு ஒத்துழைப்பு மற்றும் ஆக்கப்பூர்வமான பணிகள் நிச்சயம் இருக்கும். நாட்டின் மக்கள் நலனுக்காகவும், ஜனநாயகத்தை பாதுகாக்கவும், பல்வேறு அரசியல் நிலைப்பாடுகளை மறந்துவிட்டு, ஒன்றுபடக் கூடிய நேரம் இது என்பதை நாங்கள் உறுதியாக நினைக்கிறோம். எனவே, அரசியலமைப்பு நமக்கு வழங்கியுள்ள உரிமைகளை பாதுகாக்க அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுவோம். அத்துடன், தொகுதி மறுவரையரை என்பது மிகவும் நியாயமாகவும் நீதியாக நடந்து, நம்முடைய மாநிலங்களும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும். இதன்மூலம் மட்டுமே, தென்மாநிலங்கள் எந்தவித பாதிப்பையும் சந்திக்காது என்றும் நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
இவ்வாறு தனது கடிதத்தில் சையத் சாதிக் அலி ஷிஹாப் தங்ஙள் தெரிவித்துள்ளார்.
- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment