"வீடுகள் இடிப்புகள் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறும் மகாராஷ்டிரா அரசு"
உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய பாஜக ஆளும் மாநிலங்களில் முஸ்லிம்களின் வீடுகள் மட்டுமே குறிவைக்கப்பட்டு, ஏதாவது ஒரு காரணம் காட்டி, இடிக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய இடிப்பு நடவடிக்களை மேற்கொள்ளக் கூடாது என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கியுள்ளது. எனினும், அந்த தீர்ப்பை காலில் போட்டு மிதித்துவிட்டு, தங்களுடைய வழக்கமான நடவடிக்கைகளை பா.ஜ.க. ஆளும் மாநில அரசுகள் தொடர்ந்து செய்து வருகின்றன,.
அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் நடந்த வன்முறையை காரணம் காட்டி, முஸ்லிம் ஒருவரின் வீட்டை நாக்பூர் நகராட்சி கடந்த திங்கட்கிழமை மார்ச் 24 அன்று இடித்து தள்ளியது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்த நிலையில் 'தி டைம்ஸ் ஆப் இந்தியா' ஆங்கில நாளிதழ் 25.03.2025 அன்று "உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறும் மகாராஷ்டிரா அரசு - உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்ற தலைப்பில் தலையங்கம் ஒன்று எழுதியுள்ளது. அதன் தமிழாக்கத்தை மணிச்சுடர் நாளிதழ் வாசகர்களுக்கு தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
தீர்ப்பை மீறும் மகாராஷ்டிரா அரசு:
கடந்த மார்ச் 17 அன்று நாக்பூர் நகரத்தை உலுக்கிய வகுப்புவாத வன்முறையில் முக்கிய குற்றவாளி என குற்றம்சாட்டி, அவரது வீட்டை நாக்பூர் நகராட்சி திங்கட்கிழமை (24.03.2025) இடித்தது. மார்ச் 20 அன்று, சர்வேயர்கள் குற்றம் சாட்டப்பட்டவரின் வளாகத்தை சட்டவிரோதமானது என்று அறிவித்தனர். மார்ச் 24 அன்று புல்டோசர்கள் அதை இடித்தன. இது உச்ச நீதிமன்றத்தின் நவம்பர் 2024 உத்தரவை முற்றிலும் மீறும் செயலாகும். உச்சநீதிமன்றத்தின் உத்தரவு, அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் உட்பட கட்டடங்களை இடிக்க, இந்தியா முழுவதும் பொருந்தும். அந்த உச்சநீதிமன்ற உத்தரவில், தெளிவற்ற வாசகங்கள் எதுவும் இல்லை. மிகமிக தெளிவாக தீர்ப்பில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, "உள்ளூர் நகராட்சி சட்டங்களால் வழங்கப்பட்ட நேரத்திற்கு ஏற்பவோ அல்லது அத்தகைய அறிவிப்பு வழங்கப்பட்ட தேதியிலிருந்து 15 நாட்களுக்குள், எது பின்னர் வருகிறதோ அதுவரை முன் காரணம் காட்டும் அறிவிப்பு இல்லாமல் எந்த இடிப்பும் மேற்கொள்ளப்படக்கூடாது." என்று உச்சநீதிமன்றம் தெளிவாக தெரிவித்துள்ளது.
ஆனால் நாக்பூர் வன்முறை நடந்து ஒரு வாரம்தான் ஆகிறது. சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்ட நான்கு நாட்களுக்குள் கட்டிடம் இடிக்கப்பட்டது. பம்பாய் உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்ச் திங்கள்கிழமை பிற்பகுதியில் மற்றொரு குற்றம் சாட்டப்பட்டவரின் சொத்தை இடிப்பதை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. அத்துடன், அதிகாரியின் நடவடிக்கையை "அதிகப்படியான செயல்" என்றும் கண்டனம் தெரிவித்தது. ஆனால், இரண்டு மாடி கட்டடம் இடிக்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு பிறகு, இந்த உத்தரவு மிகவும் தாமதமானதால் கட்டடம் இடிக்கப்பட்டுவிட்டது.
மகாராஷ்டிரா நகராட்சி நிர்வாகத்திற்கு நோட்டீஸ்:
தங்களது நவம்பர் 2024 உத்தரவை, மகாராஷ்டிரா நகராட்சி நிர்வாகம் மீறியதாக, மால்வன் நகராட்சி அதிகாரிகளுக்கு திங்களன்று (24.03.2025) உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. பிப்ரவரி 23 அன்று சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பாகிஸ்தான் அணியை ஆதரித்ததற்காக உள்ளூர்வாசிகள் அவரது மகன் மற்றும் குடும்பத்தினரை துன்புறுத்தியதை அடுத்து மால்வன் ஸ்கிராப் வியாபாரியின் கடை இடிப்பு நடந்தது. நோட்டீஸ் தொடர்பாக பதிலளிக்க மால்வன் நகராட்சிக்கு உச்சநீதிமன்றம் நான்கு வாரங்கள் அவகாசம் அளித்துள்ளது. நான்கு வாரங்கள் என்பது மிகவும் அதிகமான கால அவசாகம் என்று வாதிடலாம். ஏனெனில், உ.பி., மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அசாம், குஜராத், ஜார்கண்ட் மற்றும் டெல்லியில் காணப்பட்ட கட்டமைப்புகளை இடிக்கும் தன்னிச்சையான மாநில நடவடிக்கைக்கான வேண்டுகோள்களுக்கு பதிலளிக்கும் விதமாக, நவம்பர் உத்தரவில் இத்தகைய உடனடி நீதியின் "சட்டவிரோதத்தை" உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.
மேலும், "ஒரு கட்டிடத்தை புல்டோசர் இடிக்கும் அதிர்ச்சியூட்டும் காட்சி... சரியான இடத்தில் ஒரு சட்டமற்ற நிலையை நினைவூட்டுகிறது." என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அரசியலமைப்பின் 142 வது பிரிவின் கீழ் அதன் அசாதாரண அதிகாரங்களைப் பயன்படுத்தி, தனது 95 பக்க தீர்ப்பில் உச்சநீதிமன்றம், பொது அதிகாரிகளின் பொறுப்புணர்வை நிர்ணயித்தது. உள்ளூர் அதிகாரிகளின் நடவடிக்கையை சவால் செய்ய உரிமையாளர்கள், குடியிருப்பாளர்களுக்கு இந்த உத்தரவுகள் அவகாசம் அளித்தன.
நீதிமன்றங்களுக்கு அரசு இயந்திரங்கள் பயப்படவில்லை:
உச்சநீதிமன்றத்தின் முக்கியமான உத்தரவு மற்றும் கடுமையான வார்த்தைகளுக்குப் பிறகு, நான்கு மாதங்களுக்குள் இரண்டு வழக்குகள், உள்ளூர் அரசாங்கங்கள் புல்டோசர் நடவடிக்கையில் இருந்து தப்பித்துவிடுவோம் என்று தொடர்ந்து நம்புகின்றன என்பதைக் காட்டுகின்றன. பொறுப்பான அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை மற்றும் அவர்கள் மீது வழக்குத் தொடருவது உள்ளிட்ட உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு அரசு இயந்திரங்கள் பயப்படவில்லை என்பது தெளிவாகிறது. இடிக்கப்பட்ட சொத்தை மீட்டெடுப்பதற்கு அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் பொறுப்பாவார்கள் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. எனவே, திங்களன்று நடைபெற்ற நாக்பூர் மீறல் குறித்து உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கடுமையான நடவடிக்கைகள் மூலம், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறியதற்கு பொறுப்பானவர்களை மற்றவர்களுக்கு ஒரு உதாரணமாக மாற்ற வேண்டும். சாதாரண மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த இந்தியர்களின் உரிமைகளை உள்ளூர் அரசாங்கங்களால், மண் அள்ளும் இயந்திரங்களின் மூலம், இவ்வளவு சாதாரணமாக நசுக்குவதை ஒருபோதும் ஏற்க முடியாது.
நன்றி: தி டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழ்
தமிழில்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment