Sunday, March 16, 2025

முஸ்லிம் சமூகம் கல்வி முன்னேற்றத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்....!

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தல்....!!

நாக்பூர், மார்ச்,17- முஸ்லிம்களின் முன்னேற்றத்தில் கல்வி மிக  முக்கிய பங்கை வகிப்பதாக மத்திய கப்பல் போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.  நாக்பூரில் 15.03.2025 சனிக்கிழமையன்று நடந்த மத்திய இந்தியா நிறுவனக் குழுவின் பட்டமளிப்பு விழாவில் பேசிய கட்கரி, கல்வி என்பது வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றத்தின் மூலக்கல்லாகும் என்று கூறினார். குறிப்பாக, முஸ்லிம் சமூகம் கல்வி முன்னேற்றத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

கல்வி அதிகம் தேவைப்படும் முஸ்லிம் சமூகம்:

இந்திய சமூகத்தில், கல்வி அதிகம் தேவைப்படும் சமூகமாக முஸ்லிம் சமூகம் இருந்து வருவதாக கட்சி தெரிவித்தார். தொழில் முறைகளை எடுத்துரைத்த அவர், முஸ்லிம் சமூகத்திற்குள் தற்போது குறைந்த எண்ணிக்கையிலான தொழில்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதை சுட்டிக்காட்டினார். துரதிர்ஷ்டவசமாக, தேநீர் கடைகள், பான் கடைகள், குப்பை வியாபாரம், லாரி ஓட்டுதல் மற்றும் சுத்தம் செய்தல் போன்ற தொழில்கள் முஸ்லிம் சமூகத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளன என்று அவர் வேதனையுடன் கூறினார்.

பொறியியல், மருத்துவம் மற்றும் சிவில் சர்வீஸ் துறைகளில் தொழில் செய்ய வேண்டும் என்று அவர் முஸ்லிம் சமூக உறுப்பினர்களை வலியுறுத்தினார். நமது சமூகத்தைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக முஸ்லிம்கள் பொறியாளர்கள், மருத்துவர்கள், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளாக மாறினால், நமது சமூகம் முன்னேறும். முஸ்லிம்கள் மஸ்ஜித்தில்  நூறு முறை பிரார்த்தனை செய்யபோதிலும், கல்வி அறிவு இல்லாமல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தால்  அவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்?  என்றும் கட்கரி கேள்வி எழுப்பினார்.

அப்துல் கலாமை போன்று உத்வேகம்:

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர்  டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் உத்வேகத்தைப் பெற்று, கல்வியில் முஸ்லிம் இளைஞர்கள் அதிக கவனம் கொள்ள வேண்டும். ஒரு நபரின் மகத்துவம் சாதி, பிரிவு, மதம், மொழி அல்லது பாலினத்தால் தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக அவர்களின் குணங்களால் தீர்மானிக்கப்படுகிறது. அதனால்தான் இந்த அடையாளங்களின் அடிப்படையில் நாம் பாகுபாடு காட்டக்கூடாது என்றும் கட்கரி கூறினார்.

அணு விஞ்ஞானியாக அப்துல் கலாமின் பங்களிப்புகள் இந்தியாவிற்கு உலகளாவிய அங்கீகாரத்தை எவ்வாறு கொண்டு வந்தன என்பதை எடுத்துக்காட்டிய அமைச்சர், டாக்டர் கலாமின் சாதனைகளைப் பாராட்டினார்.

சாதி அடிப்படையிலான அரசியல்:

சாதி அடிப்படையிலான அரசியலுக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுத்துக் கூறிய கட்கரி, தேர்தல் ஆதாயங்களுக்காக சாதித் தலைவர்களை திருப்திப்படுத்துவதில் தனக்கு எந்த ஆர்வமும் இல்லை என்று கூறினார். “நான் அரசியலில் இருக்கிறேன், சாதித் தலைவர்கள் அடிக்கடி என்னைச் சந்திக்க வருகிறார்கள். ஆனால் நான் தெளிவாக இருக்கிறேன். எனக்கு வாக்குகள் கிடைத்தாலும் இல்லாவிட்டாலும், நான் எனது சொந்த விதிமுறைகளின்படி வாழ்வேன்,” என்று அவர் வலியுறுத்தினார்.

கல்வி என்பது தனிநபர் நலனுக்கான ஒரு கருவி மட்டுமல்ல, சமூக மற்றும் தேசிய முன்னேற்றத்திற்கு உந்து சக்தியாகும் என்று மத்திய அமைச்சர் மீண்டும் வலியுறுத்தினார். “கல்வி உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் மட்டும் பயனளிக்காது. அது சமூகத்தையும் தேசத்தையும் உயர்த்துகிறது. அறிவு சக்தி, இந்த சக்தியை உள்வாங்குவது உங்கள் பணியாக இருக்க வேண்டும். எனவே முஸ்லிம் சமூகம் கல்வியில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்" என கூறி, தனது உரையை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி முடித்தார்.

-  சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: