Thursday, March 27, 2025

லைலத்துல் கதர்...!

 "உலக முழுவதும் லைலத்துல் கதர்"

புனித ரமளான் மாதத்தின் 27வது இரவு 'லைலத்துல் கதர்' இரவாக இருந்து வருகிறது. ஏக இறைவன், முதன் முதலாக, திருக்குர்ஆன் வசனங்களை இறக்கியது இந்த புனிதமான இரவில் தான். இந்த இரவு கண்ணியமான இரவு மட்டுமல்லாமல், ஆயிரம் மாதங்களை விட மேன்மையான இரவு என்ற சிறப்பையும் கொண்டது. அதன் காரணமாக ரமளான் பிறை 21, 23, 25, 27 மற்றும் 29 ஆகிய இரவுகளில் லைலத்துல் கதர் வரும் என்று உறுதியாக நம்பிக்கை கொள்ளும் முஸ்லிம்கள், இந்த 5 இரவுகளில் அதிகப்படியான இறை வணக்கங்களில் ஈடுபட்டு, பாவ மன்னிப்பு கோரி, உலக அமைதிக்காக ஏக இறைவனிடம் மனம் உருகி, கண்ணீர் விட்டு அழுது துஆ கேட்கிறார்கள். பிரார்த்தனை செய்கிறார்கள்.

உலகம் முழுவதும் லைலத்துல் கதர்:

இந்தாண்டு புனித ரமளானில் வழக்கம் போல, லைலத்துல் கதர் இரவு, உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது. இதுபோன்ற ஒரு இறை வணக்கம், பிற மதங்களில் நாம் காண முடியாது. இஸ்லாமிய மார்க்கத்தில் மட்டுமே இத்தகைய இபாதத்தை காண முடியும். வழக்கம் போல, பிறை கணக்கின் அடிப்படையில் ஒவ்வொரு நாடுகளிலும் லைலத்துல் கதர் இரவின் தேதி மாறுபட்டு இருந்தது. வளைகுடா நாடுகளில் மார்ச் 26ஆம் தேதியும் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் மார்ச் 27ஆம் தேதியும் லைலத்துல் கதர் கடைப்பிடிக்கப்பட்டது.

புனிதமான இந்த இரவில் மகிழ்ச்சி பொங்க மஸ்ஜித்துகளில் குவிந்த முஸ்லிம்கள், தராவீஹ் என்ற சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டு, ஏக  இறைவனை வணங்கி, உலக அமைதிக்காக துஆ கேட்டனர். அத்துடன், தங்களுடைய பிரச்சினைகள் தீர வேண்டும் என்றும் இறைவனிடம் மன்றாடி பிரார்த்தனை செய்தனர்.  துஆக்கள் தோற்பதில்லை என்ற நம்பிக்கை முஸ்லிம்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருவதால் இந்த புனித இரவில் அவர்கள் கேட்கும் துஆக்களும் தோற்பதில்லை.

இத்தகைய லைலத்துல் கதர் இரவு இந்தாண்டும், உலக முஸ்லிம்களால் மிகவும் புனிதமான முறையில் கடைப்பிடிக்கப்பட்டது.

மக்கா, மதீனாவில் குவிந்த இறை நம்பிக்கையாளர்கள்:

ரமழான் மாதத்தில் புனித உம்ரா பயணம் செல்வது ஹஜ் செய்வது போலாகும் என்ற நம்பிக்கை முஸ்லிம்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதன் காரணமாக, உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் சவுதி அரேபியாவின் மக்காவிற்கு சென்று புனித உம்ராவை நிறைவேற்றி வருகிறார்கள். அதன்படி இந்தாண்டும் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் புனித உம்ரா கடமையை நிறைவேற்றினார்கள். குறிப்பாக, மக்காவில் உள்ள புனித மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலில் ஒவ்வொரு நாளும் நடைபெற்ற  தராவீஹ் தொழுகையில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

இதே போல், மதீனாவில் உள்ள மஸ்ஜிதுல் நபவி பள்ளிவாசலில் இறை நம்பிக்கையாளரின் எண்ணிக்கை இந்தாண்டு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிகமிக அதிகமாக இருந்தது.

குறிப்பாக, லைலத்துல் கதர் இரவின்போது, மஸ்ஜிதுல் ஹராம் மற்றும் மஸ்ஜிதுல் நபவியில் தொழுகைக்காக திரண்ட இறை நம்பிக்கையாளர் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருந்தது. மஸ்ஜிதுல் ஹராமில் 27வது இரவான லைலத்துல் கதர் இரவில் இறை வழிபாட்டிற்காக சுமார் 42  லட்சம் முஸ்லிம்கள் வந்ததாக சவுதி அரேபியாவின் அரசு புள்ளிவிவரங்களை தந்துள்ளது. இதே நிலைமை மஸ்ஜிதுல் நபவி பள்ளிவாசலிலும் இருந்தது.

ஒரேநேரத்தில் லட்சக்கணக்கான இறை நம்பிக்கையாளர்கள் திரண்டதால், மிகப்பெரிய அளவில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால்,மக்கா, மதீனா வீதிகள் தொழுகை நடக்கும் மையங்களாக மாறின. இந்த அற்புதமான, அழகிய காட்சிகளை நேரடி நிகழ்ச்சி மூலம் ஒளிபரப்பில் காணும்போது உள்ளம் பரவசம் அடைந்தது. ஓர் இறைக் கொள்கை, நிறம், மொழி, உள்ளிட்ட அனைத்தையும் ஒதுக்கிவிட்டு எந்தளவுக்கு மனிதர்களை இணைக்கிறது காண முடிகிறது. எல்லாப் புகழும் ஏக இறைவனுக்கே.

பாலஸ்தீன மக்களுக்காக துஆ:

இந்த புனிதமான லைலத்துல் கதர் இரவில், உலக முஸ்லிம்கள் அனைவரும் பாலஸ்தீன மக்களின் நல்வாழ்விற்காக, அமைதிக்காக, பாதுகாப்பிற்காக, மனம் உருகி ஏக இறைவனிடம் மன்றாடி கையேந்தினார்கள். குறிப்பாக, காசா மக்கள் மீது இஸ்ரேல் நடத்தும் கொடூர தாக்குதல்கள் நிற்க வேண்டும். அங்கு மக்கள் படும் துன்பங்கள் , துயரங்கள் நீங்க வேண்டும். குழந்தைகள், பெண்கள் இனப்படுகொலை செய்யப்படுவது நிறுத்தப்பட்டு மீண்டும் அங்கு இயல்பான நிலை திரும்ப வேண்டும். காசா மக்களின் வாழ்வில் நிம்மதி ஒளி பிறக்க வேண்டும் என புனிதமான லைலத்துல் கதர் இரவில், உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் துஆ கேட்டு, அவர்களின் நல்வாழ்விற்காக பிரார்த்தனை செய்தது கூடுதல் சிறப்பாகும்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்.

No comments: