இந்திய நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கை குறைந்து வருகிறது
உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேச்சு....!
சென்னை,மார்ச்.23-இந்திய நீதித்துறையின் மீதான நாட்டு மக்களின் நம்பிக்கை வெகுவாக குறைந்து வருவது வேதனை அளிப்பதாக என உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார். சென்னையில் சனிக்கிழமை (22.03.2025) தனியார் சட்டக்கல்லூரி சட்டக் கல்லூரி சார்பில் சட்ட மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் தலைமை நீதிபதி, தீர்வுகளை உருவாக்கும்போது, இந்தக் கருத்துக்களை ஒப்புக்கொண்டு, அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நீதித்துறையை கண்டு அஞ்சம் மக்கள்:
தொடர்ந்து பேசிய அவர், துரதிர்ஷ்டவசமாக, சமீப காலமாக ஒரு சராசரி குடிமகன் நீதிமன்றங்களை அணுகுவதில் அச்சம் கொள்கிறான் என்றார். மேலும், தெரியாதவற்றைக் கண்டு அவன் பயப்படுகிறான் என்று குறிப்பிட்ட முன்னாள் தலைமை நீதிபதி, தாமதங்கள், நிலுவையில் இருப்பது, அணுகல், குறைபாடுள்ள உள்கட்டமைப்பு, பெரிய காலியிடங்கள், சட்ட நடவடிக்கைகளின் வெளிப்படைத்தன்மை, போதுமான வசதிகள் இல்லாத குற்றவியல் நீதி அமைப்பு, அதிகரித்து வரும் பொய் வழக்குகள் போன்றவை குறித்து இத்தகைய கவலைகளை எழுப்பியுள்ளன என்று வேதனை தெரிவித்தார். இந்தியாவின் கடைக்கோடியில் உள்ள மக்களும், சட்ட அமைப்பை எளிதில் அணுகக்கூடியதாக நீதித்துறையை மாற்றுவதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
தாய் மொழிக்கு முக்கியத்துவம்:
இந்திய நீதித்துறையில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவம் அதேவேளையில், நிர்வாக ரீதியில் உள்ளூர் மொழிகளை (தாய்மொழி) பயன்படுத்தும் வகையில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் இதன்மூலம் வெளிப்படைத் தன்மையை வலுப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி வலியுறுத்தினார். மொழி பிரச்சினை காரணமாக நீதிமன்ற நடவடிக்கைகளை புரிந்துகொள்வதில் மக்களுக்கு கடும் சிரமம் ஏற்படுவதாக வேதனை தெரிவித்த ரமணா, வழக்கு தொடரப்பட்ட பிறகு, நாள்தோறும் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக மக்கள் கடும் மன உலைச்சலுக்கு ஆளாகுவதாகவும் கூறினார்.
எனினும், மொழி பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டால், நீதிமன்ற நடவடிக்கைகள் எளிமையாக அமையும் என்றும் மக்களின் அணுகுமுறையில் நல்ல மாற்றம் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பன்முகத்தன்மை கேள்விக்குறி:
நீதித்துறையில் நாட்டின் பன்முகத்தன்மையை போதுமான அளவு பிரதிபலிக்கவில்லை என்றும், நீதிபதி ரமணா குறிப்பிட்டார். அதிக பிரதிநிதித்துவ கொண்ட அமர்வு மட்டுமே நீதித்துறையை வளப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
எனவே, பல்வேறு சமூக மற்றும் பொருளாதார பின்னணிகள் கொண்டவர்களை அதிகளவில் நீதிபதிகளாக நியமிக்க, உயர் நீதித்துறையின் தரப்பில் நடவடிக்கை தேவை என்றும் முன்னாள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா கேட்டுக் கொண்டார்.
- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment