சம்பல் ஷாஹி ஜாமிஆ மஸ்ஜிதில் வெள்ளையடிக்கும் பணி தொடக்கம்
சம்பல், மார்ச்,17- உத்தரப் பிரதேச மாநிலம் சம்பலில் உள்ள ஷாஹி ஜாமிஆ மஸ்ஜித்தின் வெளிப்புற சுவரில் வெள்ளையடிக்கும் பணி ஞாயிற்றுக்கிழமையன்று (16.03.2025) காலை தொடங்கியுள்ளது. அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, ஷாஹி ஜாமிஆ மஸ்ஜித்தில் கடந்த 13ஆம் தேதி அன்று இந்திய தொல்லியல் ஆய்வு மையக் குழு அளவீடுகள் மற்றும் மதிப்பீடுகளை மேற்கொண்டது.
முகலாய காலத்து மிகவும் பழமையான மஸ்ஜித்தான ஷாஹி ஜாமிஆ மஸ்ஜித்தில் கடந்த ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி இந்திய தொல்லியல் ஆய்வு மையக் குழு நடத்திய கணக்கெடுப்பைத் தொடர்ந்து கலவரம் வெடித்தது. இதைத் தொடர்ந்து சம்பல் பதற்றமடைந்துள்ளது. இந்த மோதல்களில் நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் காவல்துறையினர் உட்பட பலர் காயமடைந்தனர்.
வெள்ளையடிக்கும் பணி:
இந்த விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், மஸ்ஜித்தில் வெள்ளையடிக்கும் பணியை ஒரு வாரத்திற்குள் மேற்கொண்டு முடிக்குமாறு இந்திய தொல்லியல் ஆய்வு மையத்திற்கு உத்தரவிட்டது. இதேபோன்று, தொல்லியல் துறையின் ஆய்வு அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மஸ்ஜித் நிர்வாகம் சார்பில், உயர்நீதிமன்றம் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மஸ்ஜித்தை சுத்தப்படுத்தி, வெள்ளையடிக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. மேலும் மஸ்ஜித் முழுவதும் கூடுதலாக மின் விளக்குகள் பொருத்தவும், வெளிப்புறத்தில் ஜொலிக்கும் மின்விளக்குகளை போடவும் அனுமதி வழங்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டது.
மஸ்ஜித் தலைவர் தகவல்:
இந்நிரைலயில் "சம்பலில் உள்ள ஷாஹி ஜாமிஆ மஸ்ஜித்தின் வெளிப்புற சுவரில் வெள்ளையடிக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது" என்று சம்பல் மாவட்ட நீதிமன்றத்தில் மஸ்ஜித் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஷகீல் வார்சி தெரிவித்துள்ளார். இதேபோன்று கூறியுள்ள மஸ்ஜித்தின் தலைவர் ஜாபர் அலி, பத்து ஊழியர்களுடன் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு பணி தொடங்கியதாக தெரிவித்துள்ளார். இந்த பணி நான்கு நாட்களில் முடிக்க வேண்டுமானால், மேலும் 20 பணியாளர்கள் கூடுதலாக தேவைப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் நிறங்கள் குறித்து விளக்கம் அளித்த அவர், கடந்த பல நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டு வரும் நிறங்களை தான் மஸ்ஜித் நிர்வாகிகள் பயன்படுத்தி வருவதாக கூறினார். மேலும், வெள்ளை, பச்சை, இளம் தங்க நிறம் ஆகியவற்றை தாங்கள் பயன்படுத்தி வருதாகவும் ஜாபர் அலி தெரிவித்தார்.
============================
No comments:
Post a Comment