நாட்டின் விடுதலைக்காக உயிர்களை தியாகம் செய்து, சிறை சென்ற இஸ்லாமியர்கள் தேசவிரோதிகள் போன்று சித்தரிக்கப்பட்டு வருகிறார்கள்
இஸ்லாமியர்களுக்கு எதிராக தொடர்ந்து புதிய புதிய சட்டங்களைகளை நிறைவேற்றிக் கொண்டே இருக்கிறார்கள்
வக்பு மசோதாவை நிறைவேற்றி இஸ்லாமியர்களின் சொத்துக்களை தொழில் அதிபர்களுக்கு தாரைவார்க்க திட்டங்களை போடுகிறார்கள்
தமிழ், மாநில உரிமை, சிறுபான்மையினரின் உரிமை, ஆகிய அனைத்துக்கும் எதிராக ஒன்றிய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது
சென்னையில் இ.யூ.முஸ்லிம் லீக் மகளிர் அணி சார்பில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. பேச்சு....!
சென்னை, மார்ச்.15- ஒன்றியத்தில் இருக்கும் பா.ஜ.க. அரசு சிறுபான்மையின மக்களுக்கு எதிராக மக்களுக்கு மட்டுமல்லாமல், நாட்டில் உள்ள அனைத்து மாநில மக்களுக்கு எதிராக, குறிப்பாக, மகளிர், இளைஞர்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது என்று மக்களவை உறுப்பினரும், திமுக துணை பொதுச் செயலாளருமான கனிமொழி கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி சார்பில் இப்தார் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை எழும்பூரில் உள்ள பைஃஸ் மஹாலில் 15.03.2025 சனிக்கிழமையன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இ.யூ.முஸ்லிம் லீக் மகளிர் அணியின் தேசிய தலைவி ஏ.எஸ்.பாத்திமா முஸப்பர் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் வழக்கறிஞர் ஆயிஷா மாலிக் வரவேற்பு ஆற்றினார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிரீன் வாழ்த்துரை வழங்கினார். மாநில முதன்மை துணைத் தலைவர் எம்.அப்துர் ரஹ்மான், இறையன்பன் குத்தூஸ் உள்ளிட்டோரும் வாழ்த்துரை வழங்கினார்கள். இறுதியில் மாநில பொருளார் ஏ.எம்.ஜெய்தூன் நன்றியுரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கனிமொழி கருணாநிதி எம்.பி. வாழ்த்துரை வழங்கி பேசினார். அப்போது உரையின் முழு விவரம் வருமாறு:
நெருக்கடியான காலக்கட்டம்:
சிறப்பாக நடைபெறும் இந்த இஃப்தார் மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்றுள்ள தோழியர் பாத்திமா முஸப்பர், மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத்தின் தேசிய தலைவர் மரியாதைக்குரிய பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், வரவேற்புரை வழங்கிய வழக்கறிஞர் ஆயிஷா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துர் ரஹ்மான், இறையன்பன் குத்தூஸ், நன்றியுரை வழங்கும் ஜெய்தூன் மற்றும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கும் இ.யூ.முஸ்லிம் லீக் மகளிர் அணியைச் சார்ந்த சகோதரிகள், மற்றும் சகோதரர்கள், அன்புத் தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள் ஆகிய அனைவருக்கும் என்னுடைய வணக்கம் மற்றும் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த கூட்டம் என்பது இன்றைய சூழ்நிலையில் மிகவும் முக்கியமான ஒரு நோன்பு துறப்பு நடக்கும் ஒரு பெருவிழா என்பதை தாண்டி, நாம் நம்முடைய கருத்துகளை பரிமாறிக் கொள்ளக் கூடிய நம்முடைய எதிர்கால திட்டங்கள் என்ன என்பதை சிந்திக்கக் கூடிய ஒரு கூட்டமாக, ஒரு இயக்கமாக எடுத்துச் செல்ல வேண்டிய ஒரு காலக்கட்டத்தில் நாம் இருந்துகொண்டு இருக்கிறோம் என்பதை நாம் அத்தனை பேரும் மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
எப்போதும் முஸ்லிம்களுடன் இருப்போம்:
நான் இங்கு வந்தபோது என்னுடைய சகோதரி பாத்திமா முஸப்பர் அவர்கள், காரில் இருந்து வந்து இறங்கி நடந்துவந்தபோது, எங்களுடைய நிறத்தில் நிகழ்ச்சிக்கு வந்து இருக்கிறீர்கள் மிகவும் மகிழ்ச்சி என்று கூறினார். நான் எப்போதும் உங்களோடு தான், கலைஞர் தலைவர் அவர்கள் காலத்தில் இருந்து, உங்களோடு தான் இருக்கிறேன். தலைவர் கலைஞராக இருக்கட்டும், நம்முடைய இன்றைய முதலமைச்சர் அண்ணன் தளபதியாக இருக்கட்டும், உடை எந்த உடையாக இருந்தாலும், மனம் உங்களோடு தான் இருக்கிறது. அதற்கு காரணம் திராவிட இயக்கம் என்று சொல்லக் கூடிய அந்த நிலையிலே, திராவிட மாடல் ஆட்சி என்று நம்முடைய முதலமைச்சர் பெருமையுடன் சொல்லக் கூடிய இந்த நேரத்திலே, தமிழ் அடையாளங்கள், தமிழ் மொழி, தமிழ் பெருமை, தமிழ் பாரம்பரியம், நம்முடைய மொழியை நாம் பாதுகாக்க வேண்டிய இந்த காலக்கட்டத்தில், நின்றுக் கொண்டிருக்கும் இந்த நேரத்திலே, மற்றவர்களை போல் இல்லாமல், மொழியோடு, சுயமரியாதையோடு நம் பண்பாட்டோடு, கலந்து நின்று அதன் பெருமையை உணர்ந்து இருக்கும் இஸ்லாமிய மக்களோடு நாம் என்றும் இணைந்து இருப்போம்.
மக்களை பிரித்து அரசியல் செய்யும் பாஜக:
தற்போது ஒன்றியத்தில் டெல்லி இருக்கும் ஆளும் பா.ஜ.க., அவர்களுக்கு தெரிந்த அரசியலின்படி, மக்களுக்கு பிரித்து வைக்கும் அரசியல் செய்து வருகிறது. மக்களை மொழியால், மதத்தால், சாதியால், ஆண் பெண் என்ற வித்தியாசங்களை கொண்டு வந்து புகுத்தி, இப்படி எந்தந்த வகையில் மக்களை, மனிதர்களை பிரிக்க முடியுமோ அதையெல்லாம் தொடர்ந்து செய்துகொண்டிருக்கும் ஒரு ஆட்சி தான் ஒன்றியத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆண், பெண் என்று அவர்கள் எப்படி பிரிக்கிறார்கள் என்று கேட்டால், நான் ஒரே ஒரு உதாரணத்தைத்தான் கூறுவேன். முத்தலாக் என்ற இஸ்லாமிய முறையை எதிர்த்து பா.ஜ.க. ஒரு மசோதாவை கொண்டு வருகிறது. தலாக் செய்ய இஸ்லாம் மிகவும் கடினமாக முறைகளை அளித்து, அதன்மூலம் இஸ்லாமிய பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. ஆனால், பா.ஜ.க. கொண்டு வந்துள்ள முத்தலாக் மசோதாவில் இஸ்லாம் ஏற்றுக் கொள்ளதாக ஒரு முறையில் முத்தலாக் கூறிவிட்டால், அந்த முஸ்லிம் ஆணுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை என்று கூறி ஒரு ஆயுதத்தை கையில் வைத்துக் கொண்டு மசோதாவை கொண்டு வந்தார்கள்.
நான் நாடாளுமன்றத்தில் பேசியபோது கூறினேன். இந்த மசோதாவில் மட்டும் ஏன் இப்படிப்பட்ட சட்டம் கொண்டு வரப்படுகிறது. அப்போது எதிரில் இருந்து அமைச்சர் ஒருவர், ஏன் இஸ்லாமியப் பெண்கள் மீது உங்களுக்கு அக்கறை இல்லையா என்று கேட்டார். இஸ்லாமிய பெண்கள் மீது அக்கறை இருக்கிறது. ஆனால், நீங்கள் இஸ்லாமிய பெண்களுக்காக இதை செய்யவில்லை. இஸ்லாமிய ஆண்களை எப்படியெல்லாம் சிறைக்கு அனுப்ப முடியுமோ, அதற்கு எல்லாம் வழித் தேடிக் கொண்டிருக்கிறிர்களே தவிர, இஸ்லாமிய சகோதரிகளை காப்பாற்ற இதை செய்யவில்லை. ஏன்னென்றால் கிறிஸ்துவர் ஒருவர் தன்னுடைய மனைவியை விட்டு விலகினால், அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை கிடையாது. ஒரு இந்துவோ, வேறு இனைத்தை சார்ந்தவரோ, தன்னுடைய குடும்பத்தை விட்டுவிட்டு, விலகி சென்றுவிட்டால், அவர்களுக்கு சிறைத் தண்டனை கிடையாது. ஆனால் ஒரு இஸ்லாமிய சகோதரர் இதே தவறை செய்யும்போது, அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை வழங்கி சிறைக்கு அனுப்பப்படுகிறார்கள் என்றால், அதற்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஒரு பிரிவை ஏற்படுத்தக் கூடிய ஒரு ஆட்சியாக தான் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி இருந்து வருகிறது.
நாட்டின் விடுதலைக்காக போராடிய முஸ்லிம்கள்:
இதேபோன்று சி.ஏ.ஏ.,, என்று சட்டம் இருக்கிறது. நாடு முழுவதும் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய ஒரு சட்டத்தை கொண்டு வந்தார்கள். இப்படி ஒவ்வொன்றாக சட்டம் கொண்டு வந்து நாட்டில் உள்ள சிறுபான்மையின முஸ்லிம் மக்கள் ஒடுக்குவதற்காக, அவர்கள் ஏதோ இந்த நாட்டின் விரோதிகளாக சித்தரிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். நான் கேட்கிறேன். இந்த நாட்டின் விடுதலை போராட்டத்தில் பங்கேற்றவர்கள் இஸ்லாமியர்கள். இந்த நாட்டிற்காக உயிர்களை தியாகம் செயதவர்கள் இஸ்லாமியர்கள். நாட்டின் விடுதலைக்காக சிறைச் சென்றவர்கள் இஸ்லாமியர்கள். நாட்டின் விடுதலைக்காக போராடிய யாராவது ஒரு ஆர்.எஸ்.எஸ். ஆளை உங்களால் காட்ட முடியுமா. ஒரே ஒரு பெயர் சொல்வார்கள். அவரும் மன்னிப்புக் கடிதம் எழுதி சிறையில் இருந்து வெளியே வந்துவிட்டார். அவர் மன்னிப்புக் கடிதம் எழுதி வந்தது எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஒரு பறவையின் சிறகில் ஏறி, மன்னிப்புக் கடிதம் கொடுத்து வெளியே வந்தார் என கதைகளை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். இப்படி தான் கட்டுக்கதைகளை புனைந்து கொண்டு இருக்கிறார்கள். சிறைக்கு போன ஒரே நாள் மன்னிப்புக் கடிதம் எழுதி வெளியே வந்துவிட்டார். இந்த நாட்டிற்கு அவர்கள் செய்திருப்பது அது மட்டும் தான், ஆனால், அவர்கள் நம்மைப் பார்த்தை தேச விரோதிகள் என்கிறார்கள். அர்பன் நக்சல்கள் என்கிறார்கள். நம்மைப் பார்த்து நீங்கள் இந்த நாட்டிற்கு நீங்கள் நேர்மையாக, உண்மையாக இல்லை என்கிறார்கள்.
தமிழர்களை அவமரியாதை செய்யும் அமைச்சர்:
இப்போது கூட ஒன்றியத்தில் இருக்கும் ஒரு அமைச்சர், நம்மை பார்த்தை நாகரிகமற்றவர்கள் என்று கூறுகிறார். இப்படி நீங்கள் அழைப்பதை நாங்கள் பெருமையாக தான் ஏற்றுக் கொள்கிறோம். ஏன் எனில் உங்களுக்கு நாகரிகம் என்ன என்பது நிச்சயம் தெரியாது. அப்படிப்பட்டவர்கள் நம்மை பார்த்து இப்படி அழைக்கும் போது, 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நாகரிகம் கொண்ட குடியில் பிறந்த தமிழர்கள் பார்த்து ஒருவர் நீங்கள் அநாகரிகமானவர்கள் என்று அழைக்கிறார். அவர்களுடைய நாகரிம், அவர்களின் சரித்திரம் என்ன என்பதை நாம் நன்கு அறிந்துகொள்ளலாம்.
இப்படி ஒவ்வொன்றாக இந்த நாட்டில் இருக்கும் சிறுபான்மையின முஸ்லிம்களுக்கு தமிழர்களுக்கு ஒடுக்கப்பட்ட சமுகத்தினருக்கு எதிராக ஒரு ஆட்சியை நடத்திக் கொண்டு இருப்பவர்கள், இன்று தமிழ்நாட்டிற்கே எதிராக தமிழ் மக்களுக்கு எதிராக நம்முடைய மொழி, பண்பாட்டு, கலாச்சாரம், பாரம்பரியம், எதிராக நம்முடைய மாநிலத்தை அழிக்கும் வகையில், வளர்ந்து நிற்கிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
வக்பு சட்டத்தின் மூலம் புதிய சதி திட்டம்:
அது மட்டுமல்ல, வக்பு மசோதா ஒன்று கொண்டு வந்து இருக்கிறார்கள். இஸ்லாமிய சகோதர, சகோதரிகளின் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்க்த்தில் அந்த சட்ட மசோதா கொண்டு வரவில்லை. இந்த வக்பு சொத்துகளையெல்லாம், பிடுங்கி யாருக்கு கொடுக்க வேண்டும் என அவர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள் என்றால், அவருடைய வாரிசு என நினைக்கு இரண்டு தொழில் அதிபர்களுக்கு கொடுப்பார்கள். அதற்காக கொண்டு வரப்பட்ட இந்த மசோதாவை நிறைவேற்றி விட வேண்டும் என்று துடித்துக் கொண்டு ஒன்றிய ஆட்சி இருந்து வருகிறது.
இப்படி, தமிழ், மாநில உரிமை, சிறுபான்மையினரின் உரிமை, ஆகிய அனைத்துக்கும் எதிராக ஒவ்வொரு, நாளும் சட்டங்களை இயற்றி அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு ஆட்சிக்கு எதிராக இன்று ஒரு நிகழ்ச்சியை நாம் நடத்திக் கொண்டு இருக்கிறோம். இது இன்று முடியக் கூடிய போராட்டம் இல்லை. ஏன் என்றால் இது வளர்த்துவிட்டது. இன்று டெல்லியில் ஆட்சியில் இருக்கும் இடத்திற்கு மக்கள் இடம் அளித்துவிட்டார்கள். ஒரு மாற்றம் வேண்டும் என்ற செய்தியை தவறாக புரிந்துகொண்டு, ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்த டெல்லியில் அமர வைத்துவிட்ட ஒரு ஆட்சியால், நாடு முழுவதும் மக்கள் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
மக்களின் உரிமைகள் பறிப்பு:
நாட்டில் கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டு விட்டது. ஊடகத்துறை சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. எல்லாமே தொழில் அதிபர்கள் கைகளில் தான் உள்ளது. எல்லா ஊடகங்களும் தொழில் அதிபர்களின் கைகளில் சென்றுவிட்டது. அந்த தொழில் அதிபர்கள் ஒன்றிய அரசின் கைகளில் மாட்டிக் கொண்டு முழிக்கிறார்கள். ஊடகத்துறை, எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், எதிர்கருத்துகளைச் சொல்ல முடியாது. கேள்வி கேட்க முடியாது. எதிர்த்து நிற்கும் கட்சிகளையெல்லாம், வருமான வரி துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ., ஆகியவற்றின் மூலம் மிரட்டுகிறார்கள். இப்படி தான் எதிர்க்கட்சிகளை பயமுறுத்தி, அச்சுறுத்தி, அடக்க முடியும் என அவர்கள் புரிந்துகொண்டு இருக்கிறார்கள். எதிராக இருக்கும் ஒவ்வொரு மாநில அரசின் மீதும் எதிர்க்கட்சிகள் மீதும் ஒரு வன்முறையை வெளியே சொல்லாத ஒரு வன்முறையை ஒரு புதிய மொழியில் சொல்லக் கூடிய ஒரு வன்முறையை அவர்கள் கட்டவிழ்த்துக் கொண்டுகிறார்கள்.
இப்படி யாரும் தனக்கு எதிராக கருத்துகளையோ சொல்ல முடியாது. தேர்தல் ஆணையம்இன்று எப்படிப்பட்ட நிலைக்கு ஆளாகி இருக்கிறது என்பது உங்களுக்கு நன்கு தெரியும். தற்போது தலைமை தேர்தல் ஆணையரை அவசர அவசரமாக இரவோடு இரவாக நியமித்து இருக்கிறார்கள். ஏன் எனில், தேர்தல் ஆணையம் அவர்கள் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள், வாக்காளர் பட்டியல் குளறுபடிகள் குறித்து மிகவும் அணித்தரமாக எடுத்து கூறினார்கள். இமாசலப் பிரதேசம், மகாராஷ்டிராக உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் நடந்துள்ளன. இப்படி தான் தேர்தல் நடந்துகொண்டிருக்கிறது இந்த நாட்டிலே. இதேபோன்று மேற்கு வங்க மாநிலத்தில் இருக்கும் ஒரு வாக்காளர் அடையாள அட்டையின் எண், அரியானாவில் உள்ள மற்றொரு வாக்காளரின் அடைய அட்டையில் இடம்பெற்று இருக்கிறது. இப்படி பல மாநிலங்களில் உள்ளது. இது எப்படி சாத்தியமானது. இப்படி எத்தனை பேர் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள். எத்தனை இப்படிப்பட்ட வாக்காளர் அட்டைய வைத்து இருக்கிறார்கள் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பி இருக்கிறார்.
தொகுதி மறுசீரமைப்பில் புதிய சதி:
நம்முடைய முதலமைச்சர் தொகுதி மறுசீரமைப்பு என்று வரும்போது, தமிழ்நாடு போன்று பா.ஜ.க.விற்கு வாக்களிக்காத மாநிலங்கள் தங்களுடைய பிரநிதிதிகளைஇழக்க நேரிடும் என்று மிகத் தெளிவாக கூறியிருக்கிறார்கள். மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நடக்கும் இந்த மறுசீரமைப்பு இவர்களுக்கு யாரெல்லாம் வாக்காளிப்பார்களோ, உ.பி. போன்ற மாநிலங்களில் எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இவர்களுக்கு எதிராக இருக்கும் மாநிலங்களில் எம்.பி.க்களின் எண்ணிக்கை குறைக்கப்படும்.
இப்படி எந்தெந்த விதத்தில் மக்களை ஏமாற்ற முடியுமோ, அதிகாரத்தை தன்னுடைய கையில் வைத்துக் கொள்ள முடியுமோ, அதையெல்லாம் ஒன்றில் இருக்கும் பா.ஜ.க. செய்துக் கொண்டு இருக்கிறது. இந்த நாட்டில் இருக்கும் சிறுபான்மையிருக்கு மட்டுமல்லாமல், நாட்டின் பெண்களுக்கு , இளைஞர்களுக்கு, இந்த நாட்டின் ஒவ்வொரு மாநில மொழி, பண்பாடு, பாரம்பரியம், கலாச்சாரம், அனைவரின் உரிமைகளும் பறிக்கக் கூடிய ஒரு அரசாக ஒன்றிய பா.ஜ.க. அரசு இருந்து வருகிறது. இந்த ஒரு நிலையை அகற்ற நாம் ஒரு போராட்டம் நடத்துவோம் என்ற சூளுரையை மனதில் ஏற்கும் வகையில், இருக்க வேண்டும். எல்லோரும் மனிதர்களாக, ஒற்றுமையாக இந்த மண்ணில் வாழும் மக்களாக இருக்க வேண்டும். அதற்கான அணி திரளுவோம் என்று சொல்லக் கூடிய ஒரு நாளாக இன்றைய நோன்பு துறக்கும் நிகழ்ச்சி இருக்க வேண்டும். உங்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய வாழ்த்துகளை கூறிக் கொள்கிறேன்.
இவ்வாறு கனிமொழி கருணாநிதி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில, மாவட்ட நிர்வாகிகள், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment