உன்னாவ் வன்முறையில் படுகொலை செய்யப்பட்ட ஷெரீப் கானின் குடும்பத்திற்கு 50 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும்...!
இ.யூ.முஸ்லிம் லீக் கோரிக்கை....!!
உன்னாவ், மார்ச்.25- உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவில் இந்துத்துவ கும்பலால் கடந்த 15ஆம் தேதி (மார்ச் 15, 2025) படுகொலை செய்யப்பட்ட ஷெரீப் கானின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கி, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது.
மாவட்ட நீதிபதியிடம் மனு:
உத்தப் பிரதேச மாநில இ.யூ.முஸ்லிம் லீக் டாக்டர் முகமது மதீன் கான் தலைமையிலான பிரதிநிதிகள் குழு ஒன்று, மாவட்ட நீதிபதியை நேரில் சந்தித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது. அத்துடன், ஷெரீப் கானை படுகொலை செய்தவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட ஷெரீப் கானின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையாக நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி மனு ஒன்றை அளித்தனர்.
ஷெரீப் கான் குடும்பத்தினருக்கு ஆறுதல்:
மேலும், உன்னாவ் சென்ற இ.யூ.முஸ்லிம் லீக் பிரதிநிதிகள் குழு, வன்முறை கும்பலால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ஷெரீப் கானின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துக் கொண்டது. மேலும், மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் உள்ள ஷெரீப் கானின் குடும்பத்திற்கு இ.யூ.முஸ்லிம் லீக் துணையாக இருக்கும் என்றும், அவர்களுக்கு நீதி கிடைக்க அனைத்து வழிகளிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதி அளித்தது.
இந்தக் குழுவில் இ.யூ.முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் முகமது சாத், கான்பூர் மாவட்டத் தலைவர் அதீக் அகமது, எம்.எஸ்.எஃப். சோஹ்ராப் கான், மாநிலச் செயலாளர் மற்றும் மாவட்டத் தலைவர் முகமது அகமது ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
=============================
No comments:
Post a Comment