Friday, March 14, 2025

மும்பை சீவுட் ஜாமிஆ மஸ்ஜித்....!

"மும்பை சீவுட் ஜாமிஆ மஸ்ஜித்தில் தொழுகை ஆரம்பம்"

மும்பையின் நெருலில் (மேற்கு) உள்ள சீவுட் ஜாமிஆ மஸ்ஜித்தில் பல வருட கடின உழைப்பும் முயற்சியும் பலனளித்து தற்போது தொழுகை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாலமான மஸ்ஜித்தில் புனித ரமளானின் இரண்டாவது  வெள்ளிக்கிழமையன்று, தொழுகையாளிகளின் எண்ணிக்கை அதிகம் காரணமாக தொழுகை (பிரார்த்தனைகள்) இரண்டு  ஜமாஅத்தாக  நடைபெற்றன.. பிரமாண்டமான இந்த அற்புதமான மஸ்ஜித்தில் ஒரேநேரத்தில் சுமார் இரண்டரை ஆயிரம் பேர் தொழுகை செய்யலாம்.

தன்னலமற்ற முயற்சிகளுக்குப்  பலன்:

பல வருடங்களாக அயராத உழைப்பு மற்றும் பலரின் தன்னலமற்ற முயற்சிகளுக்குப் பிறகு, 2020 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட நவி மும்பை நெருலில் (மேற்கு) உள்ள 'சீவுட் ஜாமிஆ மஸ்ஜித்' இறுதியாக  NOC-யைப்  (தடையில்லா சான்றிதழைப்) பெற்றது. அதன் பிறகு உடனடியாக அழகிய மஸ்ஜித்தில் தொழுகைகள்  தொடங்கின. இருப்பினும், கடந்த 14ஆம் தேதி (மார்ச் 14) அன்று, முதல் முறையாக இங்கு வெள்ளிக்கிழமை தொழுகை நடத்தப்பட்டது, மேலும், ஒரேநேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் தொழுகையை நடத்தும் அளவுக்கு திறன் இருந்தபோதிலும், வெள்ளிக்கிழமையன்று இறை நம்பிக்கையாளர்களின் வருகை மிகவும் அதிகமாக இருந்ததால், இரண்டு ஜமாஅத்தாக தொழுகைகள் நடத்தப்பட்டன.  இதன்மூலம் இந்தப் பகுதியில் ஒரு மஸ்ஜித்தின் தேவை எவ்வளவு அவசியமானது என்பதைக் காட்டுகிறது. அத்துடன், புனித ரமளான் மாதத்தில் தடையில்லா சான்றிதழ்களைப் பெற்றதில்  மக்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். 

பல போராட்டங்களுக்குப் பிறகு வெற்றி:

இந்த மஸ்ஜித்தைக் கட்டுவதில் பலர் தங்கள் சொந்த முயற்சிகளை மேற்கொண்டனர். உண்மையான அர்ப்பணிப்புகளை வழங்கினர். அதற்கு ஏக இறைவன் தற்போது நல்ல பலனை அளித்து இருப்பதாக  மஸ்ஜித் அறக்கட்டளையின் செயலாளர் ஹாஷிம் தம்ஸ்கர்  தெரிவித்துள்ளார். மஸ்ஜித்திற்கு எதிராக உள்ளூர்வாசிகள், அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள், பாசிச அமைப்புகள் பல முறை பெரும் தடைகளை உருவாக்கினர். ஆனால் அல்லாஹ்வின் அருளால், இறுதி என்.ஓ.சி. (NOC) பெற்ற பிறகு, தொழுகைகள் மஸ்ஜித்தில் தொடங்கின. 

இந்த அழகிய மஸ்ஜித் கட்டி முடிக்கப்பட்டப் பிறகு,  தொழுகை நடத்த பல்வேறு துறைகளிடமிருந்து சுமார் 13 என்.ஓ.சி.கள் பெறப்பட்டதாகவும், ஆனால் நவி மும்பை நகராட்சி  மார்ச் 12, 2025 அன்று தான் என்.ஓ.சி. வழங்கியது. அதன் பிறகு சிலர், அசர் தொழுகைகளை நடத்தினர். பின்னர் வழக்கமான தொழுகைகள், பிரார்த்தனைகள் இங்கு தொடங்கின என்றும்  மஸ்ஜித் அறக்கட்டளையின் செயலாளர் ஹாஷிம் தம்ஸ்கர்  கூறியுள்ளார்.

இஸ்லாமிய நலச் சங்கத்தின் அருமையான பணி:

1998 ஆம் ஆண்டு, முன்னாள் ரிசர்வ் வங்கி அதிகாரி முகமது அலி படங்கர், முஸ்லிம்களின் நலன் மற்றும் மதத் தேவைகளுக்காக நேருலில் (மேற்கு) ‘இஸ்லாமிய நலச் சங்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கினார். இந்த பகுதியில் மஸ்ஜித்  இல்லாததால் முஸ்லிம்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்பதை, குறுகிய காலத்திற்குள் அவருக்கு உணரப்பட்டது. எனவே ஒரு மஸ்ஜித் கட்டப்பட வேண்டும் என்று முடிவு செய்து, அதற்கான பணிகளில் ஈடுபட்ட இஸ்லாமிய நலச் சங்கம், மஸ்ஜித் கட்டுவதற்கான முதல் விண்ணப்பம் 2002 ஆம் ஆண்டில் சிட்கோவிடம்  (SIDCO)சமர்ப்பித்தது. 

ஆர்.ஆர். பாட்டீல் உள்துறை அமைச்சராக இருந்த காலத்திலிருந்தே மஸ்ஜித் கட்டுவதற்கான முயற்சிகள் நடந்து வந்தன. ஆனால் சில சமயங்களில் சி.ஆர்.இசட் பிரச்சினைகள் அல்லது நகராட்சியின் அனுமதி இல்லாததால் பணிகள் நிறுத்தப்பட்டன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், மஸ்ஜித் அறக்கட்டளையின் செயலாளர் ஹாஷிம் தம்ஸ்கர்,  மற்றும் மஸ்ஜித்தின் பிற பொறுப்பாளர்களையும் தவிர, இஸ்லாமிய நலச் சங்கத்த்தைச் சேர்ந்த மஸ்ரூர் கான் (தலைவர்), முகமது ஏ.எச் (துணைத் தலைவர்) மற்றும் பிறரும், கான் முகமது பஸ்திவாலா, இப்ராஹிம் பாய் ஜான், ஆரிஃப் நசீம் கான், நவாப் மாலிக் மற்றும் அபு அசிம் ஆஸ்மி, மாலேகானைச் சேர்ந்த அப்துல் ரஷீத் மற்றும் பிறரும் தேவைக்கேற்ப அரசியல் செல்வாக்கைப் பெற தங்கள் சொந்த முயற்சிகளை மேற்கொண்டனர்.

எந்த அழுத்தத்திற்கும் அடிபணியாமல்:

மஸ்ஜித்தின் நிர்வாகிகளுக்கு தீங்கிழைக்கும் பாசிச சக்திகளால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு, மஸ்ஜித்துக்கு  எதிராக உச்சநீதிமன்றத்திற்குச் செல்லாமல் இருக்க பல கோடிக்கணக்கான ரூபாய்களைக் கோரி பேரம் பேசிய போதிலும், அவர்கள் (மஸ்ஜித் நிர்வாகிகள்) எந்த அழுத்தத்திற்கும் அடிபணியாமல் அரசுத் துறைகள், கீழ் நீதிமன்றங்கள், உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் வழியாகச் சென்றனர். அத்துடன், மிகவும் நெருக்கடியான நேரத்தில், நல்ல உள்ளம் கொண்ட  சக நாட்டு மக்களில் பலர்,  அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள் ஆகியோரும் உதவினார்கள். மேலும், சில அரசாங்க அதிகாரிகள் நல்ல ஆலோசனை வழங்கினர். இது மஸ்ஜித்தின் கட்டுமானத்தை முடிக்க அனுமதித்தது.

 மஸ்ஜித்தின்  கட்டுமானத்தில் இருந்த தடைகளையும், அதைக் கட்ட விசுவாசிகளின் முயற்சிகளையும், நகராட்சி மஸ்ஜித்தின் திட்டத்தை 40 முறை மாற்றியமைத்ததிலிருந்தும், கட்டடக் கலைஞர் ஃபசல் சாரங் 40 முறை அதில் எந்த இழப்பீடும் வசூலிக்காமல் மாற்றங்களைச் செய்ததிலிருந்தும் அறியலாம். மஸ்ஜித்துக்கான இடத்தை வாங்குவதற்கு இர்ஃபான் அல்-அனா ஆரம்பத்தில் நிதி உதவி வழங்கினார். பின்னர், நாட்டின் அக்கறை கொண்ட மக்கள் தொடர்ந்து உதவி வழங்கினர். மேலும் மஸ்ஜித்தின் மேலாளர்களும் தாங்களாகவே பணத்தை ஏற்பாடு செய்தனர்.

பிரமாண்டமான மஸ்ஜித்:

இப்படி பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து, பல தியாகங்களையும் செய்து, கடின உழைப்புக்குப் பிறகு  இன்று, இந்த பிரமாண்டமான மஸ்ஜித் ஆயிரத்து  47 மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.  இதில் 2 நிலத்தடி பார்க்கிங் அடித்தளங்கள் ஒரு கார் லிஃப்ட் மற்றும் 3 மேல் தளங்களுடன் உள்ளன. அடித்தளம் கணக்கிடப்படாவிட்டாலும், மஸ்ஜித்தில் ஒரே நேரத்தில் சுமார் 2 ஆயிரத்து 500 பேர் தொழுகை  செய்யும் வசதி இருந்து வருகிறது. மேலும், இந்த புனித ரமளான் மாதத்தில், ஃபஜ்ரிலும் கூட மஸ்ஜித் முழுமையாக நிரம்பி வழிகிறது. மஸ்ஜித் முழுவதும் மையப்படுத்தப்பட்ட ஏசியைக் கொண்டுள்ளது.  அத்துடன், ரயில் நிலையம் மற்றும் பாம் பீச் சாலைக்கு அருகில் சீவுட் ஜாமிஆ மஸ்ஜித் இருப்பதால், அங்கு வரும் இறை நம்பிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: