Monday, March 10, 2025

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு தீர்மானம்...!

காசவை கையகப்படுத்தும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு.....!

பாலஸ்தீன் அதிகாரத்தின் கீழ் காசாவை மீண்டும் கட்டியெழுப்ப மாற்று திட்டத்தை முன்மொழிந்து  இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு தீர்மானம்

ஜெத்தா, மார்ச்.10-சவுதி அரேபிய தலைநகர் ஜெத்தாவில், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் அவரசக் கூட்டம் கடந்த சனிக்கிழமை (மார்ச் 08, 2025) அன்று நடைபெற்றது.இந்த கூட்டத்தில் அமைப்பில் இடம்பெற்றுள்ள 57 நாடுகளின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் காசாவை மீண்டும் கட்டியெழுப்ப மாற்றுத்தை திட்டம் முன்மொழியப்பட்டது. 

உச்சி மாநாட்டில் அரபி லீக் முன்மொழிவு:

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில், காசா பகுதி அதன் அழகிய தோற்றத்தை இழந்து தற்போது சின்னபின்னமாக காட்சி அளிக்கிறது. மக்கள் துன்பங்கள், துயரங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில், அமெரிக்க அதிபராக பொறுப்பு ஏற்றுக் கொண்ட டொனால்ட் டிரம்ப், காசாவைக் கைப்பற்றி அதன் குடியிருப்பாளர்களை இடம்பெயர்க்கும் திட்டத்தை அறிவித்து இருந்தார். காசாவில் உள்ள மக்கள் அனைவரும் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக சென்றுவிட வேண்டும் என டிரம்ப் மிரட்டி இருந்தார்.  டிரம்பின் இந்த முடிவுக்கு முஸ்லிம் நாடுகளில் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் கெய்ரோவில் நடந்த அரபு லீக் உச்சி மாநாட்டில்,அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் திட்டத்திற்கு எதிராக ஒரு முன்மொழி கொண்டு வரப்பட்டது. 

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம்:

கெய்ரோவில் மூன்று நாட்களுக்கு முன்பு அரபு லீக் அமைப்பின் உச்சி மாநாட்டில், டிரம்பின் திட்டத்திற்கு எதிராக ஒரு முன்மொழிவு நிறைவேற்றப்பட்ட நிலையில், சவுதி அரேபிய தலைநகர் ஜெத்தாவில்,இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் அவரசக் கூட்டம் மார்ச் 8ஆம் தேதி நடைபெற்றது. அதிகாலை நேரத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், 57 நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துகொண்டார்கள்.  இதில், டிரம்பின் காசா திட்டத்திற்கு மாற்றமான திட்டம் குறித்தும், பாலஸ்தீன் மக்களின் அமைதி, பாதுகாப்பு ஆகியவை குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. கூட்டத்தில் கெய்ரோவில் அரபு லீக் சார்பில் முன்மொழியப்பட்ட தீர்மானத்தை, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு ஏற்றுக் கொள்வதாக முடிவு செய்யப்பட்டது. மேலும், ட்ரம்பின் காசா கையகப்படுத்தும் திட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய நாடுகள்  மற்றும் அரபு நாடுள் அரபு லீக் கொண்டுவந்த முன்மொழிவை  ஏற்றுக்கொள்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அரபு-இஸ்லாமிய திட்டமாக மாறிவிட்டது:

பாலஸ்தீன அதிகாரத்தின் கீழ் காசா பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான திட்டம் 'இப்போது ஒரு அரபு-இஸ்லாமிய திட்டமாக மாறிவிட்டது' என்று எகிப்திய வெளியுறவு அமைச்சர் பத்ர் அப்தெலட்டி கூறியுள்ளார். டிரம்பின் கையகப்படுத்துதல் திட்டத்திற்க்கு கூட்டத்தில் பரவலாகக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது என்றும், மேலும், எகிப்தியரால் வடிவமைக்கப்பட்ட மாற்று திட்டத்தின்படி,  பாலஸ்தீன அதிகாரத்தின் கீழ் காசாவின் நிர்வாகத்தை கொண்டு வந்து அதை மீண்டும் கட்டியெழுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.  இது நிச்சயமாக மிகவும் நேர்மறையான விஷயம் என அப்தெலட்டி கூறினார்.  ஹமாஸ்-இஸ்ரேல் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தராக இருந்த தனது நாடு, அதை "அரபுத் திட்டமாகவும் இஸ்லாமியத் திட்டமாகவும்" மாற்ற இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின்  ஆதரவை விரும்புவதாக அப்தெலட்டி தெரிவித்தார். 

ஜெத்தாவில் நடந்த பேச்சுவார்த்தைகளின் தொடக்கத்தில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின்  பொதுச்செயலாளர் ஹிஸ்ஸீன் பிரஹிம் தாஹா அரபு லீகின் திட்டத்திற்கு தனது ஆதரவை வழங்கியிருந்தார். பாலஸ்தீனப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான முகமது முஸ்தபா இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கவுன்சிலின் அமர்வில் கலந்து கொண்டார்.  

கடந்த செவ்வாயன்று கெய்ரோவில் நடந்த உச்சிமாநாட்டில், அரபுத் தலைவர்கள் காசாவின் மறுகட்டமைப்புக்கு நிதிச் செலுத்த ஒரு அறக்கட்டளை நிதியை அறிவித்தனர் மற்றும் சர்வதேச சமூகம் அதை ஆதரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்தத் திட்டம், அமெரிக்கா காசாவை "கையகப்படுத்தி" அதை "மத்திய கிழக்கின் ரிவியரா"வாக மாற்ற பரிந்துரைப்பதன் மூலம் உலகளாவிய சீற்றத்தைத் தூண்டிய டிரம்பிற்கு எதிரானது. அதேநேரத்தில் டிரம்பின் திட்டம், பாலஸ்தீனிய மக்களை எகிப்து, ஜோர்டான் அல்லது பிற நாடுகளுக்கு இடம்பெயர கட்டாயப்படுத்தியது.

டிரம்பின் திட்டத்திற்கு எதிராக ஒற்றுமை:

அரபு லீகின்  திட்டத்தை ஆதரிப்பதே இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக் கூட்டத்தின் முக்கிய குறிக்கோள் என்று பெயர் வெளியிட விரும்பாத பாகிஸ்தான் தூதர்  ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். இது ஒரு முக்கியமான நேரம், இஸ்லாமிய உலகம் அமெரிக்கத் திட்டத்திற்கு எதிராக முடிந்தவரை ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  அரபு லீக் திட்டம், பாலஸ்தீன அதிகாரசபையிடம் காசாவை ஆறு மாத காலத்திற்கு நிர்வகிக்கும் தொழில்நுட்ப வல்லுநர்களின் சுயாதீனக் குழுவை உருவாக்க திட்டமிட்டுள்ளது. முழு மக்களும் இடம்பெயர்க்கப்பட வேண்டும் என்ற டிரம்பின் திட்டத்திற்கு மாறாக, பாலஸ்தீனியர்கள் மீண்டும் கட்டப்படும் வரை அந்தப் பகுதியில் வாழ இந்த திட்டம் உறுதி வழங்குகிறது. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின் மூலம் சர்வதேச அமைதி காக்கும் துருப்புக்களை காசாவில் அனுப்ப இது அனுமதி வழங்குகிறது.  இருப்பினும், அரபு லீக் திட்டம் ஹமாஸைப் பற்றி பேசவில்லை. மாறாக காசாவில் உள்ள ஆயுதக் குழுக்களை பாலஸ்தீன அரசை நிறுவும் ஒரு அரசியல் செயல்முறை மூலம் மட்டுமே முழுமையாகக் கையாள முடியும் என்று கூறுகிறது.

டிரம்ப் திட்டத்தைப் போலல்லாமல், அரபு லீக்  திட்டம், ஜனவரி 19 அன்று பலவீனமான போர்நிறுத்தம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு, 15 மாதங்களுக்கும் மேலாக பேரழிவு தந்த  மோதலைத் தாங்கிய காசா பகுதியில் 24 லட்சம்  மக்களை இடம்பெயராமல் காசாவை மீண்டும் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு:

அரபு லீகின் முன்மொழிவை இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு ஏற்றுக் கொண்டதற்கு பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் ஒரு கூட்டு அறிக்கையில் தங்கள் ஆதரவை அளித்தனர். இது போரினால் பாதிக்கப்பட்ட காசாவை அதன் பாலஸ்தீன மக்களை வேரோடு பிடுங்காமல் மீண்டும் கட்டியெழுப்புவதற்கான யதார்த்தமான பாதை என்று பாராட்டினர். காசாவின் ஆரம்பகால மீட்பு மற்றும் மறுகட்டமைப்பு குறித்து, அறிக்கை வெளியிட்டுள்ள இஸ்லாமிய கூட்டமைப்பு சர்வதேச சமூகம் மற்றும் சர்வதேச மற்றும் பிராந்திய நிதி நிறுவனங்கள் தேவையான ஆதரவை விரைவாக வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. 

அடுத்த கட்டமாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜப்பான், ரஷ்யா, சீனா மற்றும் பிற சர்வதேச நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் மூலம் இந்த திட்டம் ஒரு சர்வதேச திட்டமாக மாற வேண்டும் என்று எகிப்து வெளியுறவு அமைச்சர் அப்தெலட்டி கூறியுள்ளார்.  ஹமாஸ் ஆட்சியின் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு, மேற்குக் கரையை தளமாகக் கொண்ட பாலஸ்தீன அதிகாரசபையின் கட்டுப்பாட்டிற்கு காசா திரும்புவதற்கான திட்டத்தின் முன்மொழிவை நான்கு ஐரோப்பிய அரசாங்கங்களும் வரவேற்றன. மேலும் இந்த மீட்பு மற்றும் மறுகட்டமைப்பு திட்டத்தை கூட்டாக உருவாக்குவதன் மூலம் அரபு நாடுகள் அனுப்பியுள்ள முக்கியமான சமிக்ஞையைப் பாராட்டுவதாக அந்த நாடுகள் கூறியுள்ளன. 

- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: