Tuesday, March 18, 2025

வக்ஃப் சொத்துக்களை அபகரிக்க நடக்கும் மிகப்பெரிய சதி:

வக்ஃப் சொத்துக்களை அபகரிக்க  நடக்கும் மிகப்பெரிய சதி: 

விழித்துக் கொண்ட சமுதாயம்....!

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் - 

இஸ்லாமியர்கள் உட்பட சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்களின் கடும் எதிர்ப்புக்கு  மத்தியில், வக்ஃப் திருத்த மசோதாவைநாடாளுமன்றத்தில் மத்திய பா.ஜ.க. அரசு தாக்கல் செய்துவிட்டது. இந்த மசோதாவிற்கு எதிராக நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்புகளின் சார்பில் பல்வேறு கருத்தரங்கங்கள், மாநாடுகள் நடைபெற்றன. அதில், அறிஞர் பெருமக்கள் கலந்துகொண்டு, வக்ஃப் சொத்துக்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்கள். வக்ஃப் சொத்துக்கள் தனிப்பட்ட ஒரு நபரின் சொத்துக்கள் இல்லை. அவை, ஏக இறைவனாகி அல்லாஹ்வின் சொத்துக்கள் ஆகும். எனவே, இறைவனின் சொத்துக்களை பாதுகாக்க அனைவரும் ஒன்று திரள வேண்டும் என கருத்தரங்கங்கள், மாநாடுகளில் பேசியவர்கள் மிகவும் உறுதிப்பட கூறினார். 

வக்ஃப் சொத்துக்கள் - ஒரு பார்வை:

மார்க்கச் சேவை, கல்வி மற்றும் மருத்துவ நோக்கங்களுக்காக முஸ்லிம் செல்வந்தர்களால் அந்தக் காலத்தில் நன்கொடையாக வழங்கப்பட்ட சொத்துகளை பாதுகாக்கவும், அவற்றை எளியோருக்கு பயன்படுத்தவும் தான் வக்ஃப் அமைப்புகள் தோற்றுவிக்கப்பட்டன. தற்போதும் நாட்டில் உள்ள ஏராளமான முஸ்லிம் மக்கள், தங்களது சொத்துக்களை வக்ஃப் செய்து வருகிறார்கள். இந்த சொத்துக்கள் அனைத்தும் நல்ல காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் கொடுக்கப்பட்டு வருகிறது. இப்படி இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வக்ஃப் சொத்துக்கள் இருந்து வருகின்றன. ஆனால்,வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமான சொத்துக்களில் 70 சதவிகிதமானவை , பெரிய மனிதர்களாலேயே ஆக்கிரமிக்கப்பட்டும், விற்கப்பட்டும் உள்ளன. மிச்சமுள்ளவை கூட முறையாக பயன்படுத்தப்படுவதில்லை. 

வக்ஃப் வாரிய சொத்துக்களை முறையாக பயன்படுத்தினால் முஸ்லிம்களால் கேந்திரிய வித்தியாலயா போல 500 பள்ளிகளை ஆரம்பித்து நடத்த முடியும். யானைக்கு தன் பலம் தெரிவதில்லை. அது போல சிறுபான்மை சமூகமும் தன் பலத்தை உணர்வதில்லை. இதனால், முஸ்லிம் சமுதாயம் அரசியல் கட்சிகளின் வாக்கு வங்கியாக மட்டுமே பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக வக்ஃப் சொத்துக்களை சரியான முறையில் பயன்படுத்தால், முஸ்லிம் சமுதாயம் மிகவும் பின்நோக்கியே சென்றுக் கொண்டிருக்கிறது.  இந்தியாவில் வக்ஃப் வாரியத்திற்கான சொத்து என்பது இந்திய ரயில்வே துறை மற்றும் பாதுகாப்பு துறைக்கு சொந்தமான சொத்துக்களுக்கு சற்று இணையானதென்றால் மிகையாகாது. இப்படி இருக்க வக்ஃப் வாரியங்கள் மத்திய, மாநில அரசிடம் கையேந்தி கொண்டுள்ளன. 

வக்ஃப் திருத்த மசோதா:

இப்படிப்பட்ட சூழ்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இருக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் கண் பார்வை, தற்போது வக்ஃப் சொத்துக்கள் மீது விழுந்திருக்கிறது. எனவே, வக்ஃப்  திருத்த மசோதா என்ற பெயரில் புதிய மசோதாவை கொண்டு வந்து மக்களவையில் தாக்கல் செய்தது. அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பவே, நாடாளுமன்றக் கூட்டுக்குழுவை நியமித்து, பல்வேறு ஆலோசனைகளுக்குப் பிறகு, மீண்டும் அந்த மசோதா மக்களவையில் பா.ஜ.க. அரசு தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதாவிற்கு எதிராக நாடாளுமன்றக் கூட்டுக்குழுவில் இடம்பெற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்துகள் ஏற்றுக் கொள்ளாமல் புறக்கணிக்கப்பட்டன. இதேபோன்று, நாடு முழுவதும் உள்ள இஸ்லாமிய அமைப்புகள், சமூக அமைப்புகள் தெரிவித்த கருத்துகளும் கண்டுக் கொள்ளப்படவில்லை. ஏற்றுக் கொள்ளப்படவில்லை. எத்தகைய வகையிலும் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் செயல்படும் அரசு, இந்த ஒன்றை இலக்குடன் செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது. 

வக்ஃப் மசோதாவிற்கு எதிராக திரண்ட இஸ்லாமியர்கள்:

வக்ஃப் சொத்துக்கள் விவகாரத்தில் நிலைமை மிகவும் மோசமான திசையை நோக்கிச் செல்வதைக் கண்ட முஸ்லிம் சமுதாயம், தூக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டு, தலைநகர் டெல்லியில், ரமளான் நோன்பு 16 அன்று (17.03.2025) மிகப்பெரிய அளவுக்கு போராட்டத்தை நடத்தியது, அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (AIMPLB) டெல்லியின் ஜந்தர் மந்தரில் ஒரு பெரிய போராட்டத்தை ஏற்பாடு செய்தது.  இந்த மாபெரும் போராட்டத்தில், பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு வக்ஃப் திருத்த மசோதாவை உடனடியாக திரும்பப் பெறக் கோரினார்கள்.  

குறிப்பாக, காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சி.பி.ஐ., சி.பி.எம்., தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம், அகில இந்திய மஜ்லிஸ்-இத்தேஹாதுல் முஸ்லிம் (ஏ.ஐ.எம்.ஐ.எம்.)வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா, ஆம் ஆத்மி, உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள், எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.  போராட்டத்தில் பங்கேற்ற பேச்சாளர்கள் அனைவரும்,  மசோதாவை கடுமையாக எதிர்த்தனர்.  இது நிறைவேற்றப்பட்டால் நாடு தழுவிய ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்று மத்திய அரசை அவர்கள் எச்சரித்தனர். 

கூட்டத்தில் உரையாற்றிய மௌலானா ஒபைதுல்லா கான் அஸ்மி, அனைத்து மத சிறுபான்மையினரும் தங்கள் அறக்கட்டளைகளை நிர்வகிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் இந்த மசோதா மூலம் வக்ஃப் சொத்துக்களை அரசாங்கம் அபகரிக்க முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். அத்தகைய முயற்சி வெற்றிபெறாது என்று மௌலானா உறுதிப்பட தெரிவித்தார். 

ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந்த் தலைவரும் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் துணைத் தலைவருமான சையத் சதாதுல்லா ஹுசைனி, வக்ஃப் திருத்த மசோதா, 2024, இந்திய முஸ்லிம்களின் மத உரிமைகளை மீறுவதாகக் கூறினார். இந்த மசோதா அரசியலமைப்பின் அடிப்படை மதிப்புகளை அச்சுறுத்துகிறது. எனவே, இந்தியாவின் அனைத்து குடிமக்களும் அதை எதிர்க்கவும், எந்த சூழ்நிலையிலும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதைத் தடுக்கவும் ஒன்றுபட வேண்டும்  என்றும் அவர் வலியுறுத்தினார். 

முஸ்லிம் நிலங்களை அபகரிக்க முயற்சி:

சிபிஐ(எம்எல்) இன், சார்பில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தீபங்கர் பட்டாச்சார்ஜி, இந்த மசோதாவை முஸ்லிம் நிலங்களை அபகரிக்கும் ஒரு அப்பட்டமான முயற்சி என்று கண்டனம் தெரிவித்தார். அதற்கு எதிரான போராட்டத்தில் தங்களது அசைக்க முடியாத ஆதரவுக்கு அவர் உறுதியளித்தார். இதேபோல், முன்னாள் எம்.பி.யும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினருமான ஹன்னன் மொல்லா, இந்த மசோதா முஸ்லிம்களுக்கு பயனளிக்கும் என்ற பாஜக அரசின் கூற்றுக்களை நிராகரித்தார். இது அரசியலமைப்பிற்கு முரணானது மற்றும் வக்ஃப் நிறுவனங்களுக்குச் சொந்தமான முக்கிய நகர்ப்புற சொத்துக்களை குறிவைத்து பெருநிறுவன நலன்களுக்கு பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கடுமையாக குற்றம்சாட்டினார். 

போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அதில் கலந்துகொண்டு பேசிய சீக்கிய தனிநபர் சட்ட வாரியத்தின் தலைவரான பேராசிரியர் ஜக்மோகன் சிங், முஸ்லிம் சமூகத்துடன் முழுமையான ஒற்றுமையை வெளிப்படுத்தினார், "நாம் ஒன்றாக நிற்கும்போது சிறுபான்மையினர் அல்ல, பெரும்பான்மையினர். ஒருவருக்கொருவர் காரணங்களுக்காகப் போராட வேண்டும்." என்றும் சிங் கேட்டுக் கொண்டார். 

அசாதுதீன் ஒவைசி  கண்டனம்:

வகுப்புவாத முரண்பாடுகளை உருவாக்கி நாட்டின் சமூகக் கட்டமைப்பை சீர்குலைக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட பிளவுபடுத்தும் நடவடிக்கை இந்த மசோதா என ஏ.ஐ.எம்.ஐ.எம்.யின் (AIMIM) தலைவர் அசாதுதீன் ஒவைசி கண்டித்தார். இந்த மசோதா வக்ஃப் சொத்துக்களை வலுப்படுத்துவதற்காக அல்ல, மாறாக முஸ்லிம்களின் உரிமையான சொத்துக்களைப் பறிப்பதற்காகவே என்று அவர் குற்றம்சாட்டினார். . இந்த மசோதாவை நிறைவேற்ற  தெலுங்கு தேசம், ஆர்ஜேடி மற்றும் எல்ஜேபியின் பிரிவுகள் அனுமதித்தால் முஸ்லிம்கள் அவர்களை மன்னிக்க மாட்டார்கள் என்றும் ஒவைசி எச்சரித்தார்.

சமாஜ்வாடி கட்சி எம்.பி. தர்மேந்திர யாதவ், மசோதாவுக்கு தனது கட்சியின் எதிர்ப்பை மீண்டும் உறுதிப்படுத்தினார். தியாகங்கள் தேவைப்பட்டாலும், அதை எந்த விலையிலும் எதிர்ப்பதாக உறுதியளித்தார். மசோதாவுக்கு எதிரான போராட்டம் நீடிக்கும் என்றும், நாடாளுமன்றத்திலும் நீதித்துறையிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்  என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் உறுதிப்பட கூறினார்.  அரசியலமைப்பு விழுமியங்களைப் பாதுகாப்பவர்கள் அனைவரும் இந்தியாவின் பன்முகத்தன்மையை அங்கீகரித்து நீதிக்காக நிற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

திரிணாமுல் காங்கிரஸ்  எம்.பி. மஹுவா மொய்த்ரா, மசோதாவுக்கு தனது கட்சித் தலைவர் மம்தா பானர்ஜியின் கடுமையான எதிர்ப்பை எடுத்துக்காட்டி இருப்பதாக சுட்டிக் காட்டினார்.. கூட்டு நாடாளுமன்றக் குழுவில் (ஜே.பி.சி) உள்ள டி.எம்.சி பிரதிநிதிகள் முஸ்லிம்களின் வாக்குரிமையை பறிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் கடுமையாக எதிர்ப்பார்கள் என்றும் இந்தப் போராட்டம் தெருக்களுக்கும் நாடாளுமன்றத்திற்கும் கொண்டு செல்லப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

இ.யூ.முஸ்லிம் லீக் எதிர்ப்பு:

போராட்டத்தில் உரையாற்றிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய அமைப்புச் செயலாளர்  இ.டி.முஹம்மது பஷீர், வக்ஃப் திருத்த மசோதாவிற்கு எதிராக நாடு முழுவதும் வீதிகளில் போராட்டத்தை முன்னெடுப்போம் என்று கூறியதுடன், சட்ட ரீதியாக நீதிமன்றங்களிலும் போராட்டங்கள் தொடங்குப்படும் என மிகமிக உறுதியாக தெரிவித்தார். அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் எடுத்துள்ள இந்த முயற்சிக்கு ஆதரவு அளித்த நாடாளுமன்ற உறுப்பினர்களில்  அஜீஸ் பாஷா, ராஜா ராம் சிங், டாக்டர் ஃபௌசியா, மௌலானா மொஹிபுல்லா நத்வி, இம்ரான் மசூத், முகமது ஜாவேத், கௌரவ் கோகோய், அபு தாஹிர் மற்றும் கே.சி. பஷீர் உள்ளிட்டோரும் அடங்குவர்.

தொடர் தாக்குதல்கள்:

வக்ஃப் திருத்த மசோதா உட்பட பல்வேறு நெருக்கடிகள், இந்திய முஸ்லிம் சமுதாயம்  மீது தொடர்ந்து சுமத்தப்பட்டு வருகின்றன. இந்திய முஸ்லிம்கள் அமைதியாக வாழவே கூடாது என்ற நோக்கத்தில், பாசிச அமைப்புகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. ஒரு பிரச்சினைக்கு தீர்வு வந்துவிட்டால், உடனடியாக மற்றொரு பிரச்சினையை முஸ்லிம் சமுதாயம் சந்திக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. இதன் காரணமாக முஸ்லிம்களின் அமைதி மெல்ல மெல்ல பறிக்கப்பட்டு வருகிறது. முஸ்லிம்கைள் மத்தியில் ஒருவித பதற்றம் உருவாகி இருப்பது உண்மையாகும்.  எனினும் ஏக இறைவனான அல்லாஹ் மீது உறுதியான நம்பிக்கைக் கொண்ட முஸ்லிம்கள் எந்தவொரு சவாலையும் அல்லாஹ்வின் மீது பாரத்தை போட்டுவிட்டு, சந்தித்துக் கொண்டே இருக்கிறார்கள். நெருக்கடிகள், சவால்கள் என்றும் நிரந்தரமானவை அல்ல. அதற்கு நிச்சயம் ஏக இறைவன் முற்றுப்புள்ளி வைப்பான் என்பது இஸ்லாமியர்களின் உறுதியான நம்பிக்கை. இப்படி தான் இஸ்லாமிய வரலாறும், முஸ்லிம்கள் எப்படி, நெருக்கடிகளை சந்தித்து அதில் இருந்து மீண்டெழுந்தார்கள் என்பதை மிக அழகாக சமுதாயத்திற்கு பாடம் சொல்லிக் கொண்டு இருக்கிறது. எனவே, வக்ஃப் விவகாரத்தில் மத்திய பா.ஜ.க. அரசு செய்து வரும் சதி திட்டங்கள் எல்லாம்,. நிச்சயம் வீழ்ந்துவிழும் என்பது முஸ்லிம்களின் உறுதியான நம்பிக்கையாகும். 

=========================


No comments: