Tuesday, March 4, 2025

சீனாவில் முஸ்லிம்கள் சந்திக்கும் சவால்கள்....!

 "சீனாவில் முஸ்லிம்கள் சந்திக்கும் சவால்கள்"

சீன முஸ்லிம்களில் பெரும்பான்மையானவர்கள், பாரம்பரியமாக இஸ்லாத்தை பின்பற்றும் பத்து இன சிறுபான்மை குழுக்களைச் சேர்ந்தவர்கள். அவற்றில் ஹுய் மக்கள் மற்றும் உய்குர் மக்கள் ஆகியவை இரண்டு பெரிய இனங்கள் ஆகும்.  சீனாவின் பெரும்பாலான முஸ்லிம்கள் நாட்டின் வடமேற்குப் பகுதியில், குறிப்பாக கன்சு, கிங்காய், நிங்சியா மற்றும் ஜின்ஜியாங் பகுதிகளில் வாழ்கின்றனர்.சீன அதிகாரிகளும் சர்வதேச அறிஞர்களும் பொதுவாக சீனாவில் 18 மில்லியன் முஸ்லிம்கள் இருப்பதாக மதிப்பிடுகின்றனர். 

பியூ ஆராய்ச்சி மையத்தின் மதிப்பீடு அதேநிலையில் உள்ளது.  முஸ்லிம் மக்கள்தொகை எண்ணிக்கையைச் சுற்றியுள்ள ஒப்பீட்டு ஒருமித்த கருத்து இருந்தபோதிலும், சீனாவில் இஸ்லாத்தைப் பின்பற்றுவது பல சவால்களுடன் இருந்து வருகிறது. ஆரம்பத்தில், சீன அரசாங்கம் உய்குர்கள் மற்றும் பிற முஸ்லிம்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலைக்காக சர்வதேச அமைப்புகளால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சில சீன முஸ்லிம் அறிஞர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில் சீனாவில் இஸ்லாத்தைப் பின்பற்றும் சில வெளிநாட்டினர், நாட்டிற்குள் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், சீன முஸ்லிம்கள் தங்கள் மத அடையாளம், நம்பிக்கைகள் அல்லது நடைமுறைகள் குறித்து கணக்கெடுப்பு ஆராய்ச்சியாளர்களுடன் விவாதிக்கத் தயங்கி வருகிறார்கள்.

சீனாவில் முஸ்லிம் தொகை:

சீன மக்கள் தொகை கணக்கெடுப்பில் அளவிடப்படும் 56 இனங்களில் சீனாவின் 10 பாரம்பரிய முஸ்லிம் இனக்குழுக்கள் அடங்கும். சீனாவின் முஸ்லிம் மக்கள்தொகையின் அளவின் அதிகாரப்பூர்வ மதிப்பீடுகள் , இஸ்லாமிய விவகாரங்களை மேற்பார்வையிடும் அரசு நிறுவனமான சீன இஸ்லாமிய சங்கத்தால் உருவாக்கப்பட்டவை உட்பட பொதுவாக பாரம்பரிய முஸ்லிம் இனக்குழுக்களின் மொத்த மக்கள்தொகையைக் கூட்டுகின்றன, அந்த 10 குழுக்களில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் விதிவிலக்கு இல்லாமல் முஸ்லிம்கள் என்றும், ஹான் பெரும்பான்மையினரிடையே முஸ்லிம்கள் யாரும் இல்லை என்றும் கருதுகின்றன. இந்த மதிப்பீட்டு முறையின்படி, 2020 ஆம் ஆண்டில் சீனாவில் சுமார் 18 மில்லியன் முஸ்லிம்கள் உள்ளனர்.

எனினும், பியூ ஆராய்ச்சி மைய மக்கள்தொகை ஆய்வாளர்கள் சீனாவின் 10 முஸ்லிம் பெரும்பான்மை இனக்குழுக்களில் தோராயமாக 90 சதவீதம் மக்கள் முஸ்லிம்களாக அடையாளப்படுத்துகிறார்கள் என்றும், தோராயமாக 7 லட்சம் ஹான் சீனர்கள் இஸ்லாத்துடன் அடையாளப்படுத்துகிறார்கள் என்றும் மதிப்பிட்டுள்ளனர். இது சீனாவில் சுமார் 17 மில்லியன் முஸ்லிம்கள் அல்லது வயது வந்தோர் மக்கள்தொகையில் சுமார் 2 சதவீதம் என மொத்த மதிப்பீட்டை அளிக்கிறது.  பெரும்பாலான உய்குர் மற்றும் ஹுய் மக்கள் இஸ்லாத்தின் சன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள்.

வேகமாக வளரும் முஸ்லிம் தொகை:

கடந்த  தசாப்தத்தில், பெரும்பான்மையான முஸ்லிம் இனக்குழுக்கள் பெரும்பான்மையான ஹான் மக்கள்தொகையை விட வேகமாக வளர்ந்துள்ளன. 2010 மற்றும் 2020 மக்கள் தொகை கணக்கெடுப்புகளுக்கு இடையில், பெரும்பான்மையான முஸ்லிம் இனக்குழுக்களில் பெரியவர்களின் எண்ணிக்கை 9 சதவீதம் அதிகரித்து 17 புள்ளி 9 மில்லியனாகவும், ஹான் பெரும்பான்மை 5 சதவீதம் அதிகரித்து 1 புள்ளி பூஜ்யம் இரண்டு  பில்லியனாகவும் உள்ளது.

1980 முதல் 2016 வரை நடைமுறையில் இருந்த ஒரு குழந்தை கொள்கையின் கீழ், சிறுபான்மையினருக்கான குடும்ப அளவில் சீன அரசாங்கம்  கடுமையான கட்டுப்பாடுகளை விதித்ததன் விளைவாக இந்த ஏற்றத்தாழ்வு ஏற்பட்டிருக்கலாம். ஹான் சீனர்கள் ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தை (அல்லது சில நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் இரண்டு) மட்டுமே பெற்றிருக்க வேண்டும் என்று கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், இன சிறுபான்மையினர் ஒரு குடும்பத்திற்கு மூன்று குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

முஸ்லிம் மக்கள்தொகையின் ஒப்பீட்டளவில் இளம் வயது அமைப்பும் மக்கள்தொகை வளர்ச்சியைத் தூண்டுகிறது. 2020 சீன மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சீனாவின் பெரும்பான்மையான முஸ்லிம் இன சிறுபான்மையினரில் 27 சதவீதம் பேர் 15 வயதுக்குட்பட்டவர்கள்.  ஹான் பெரும்பான்மையினரில் 17 சதவீதம் பேர் மட்டுமே உள்ளனர்.

சமீபத்திய ஆண்டுகளில், ஜின்ஜியாங்கில் உள்ள உய்குர்கள் மற்றும் பிற முஸ்லிம் இனக்குழுக்கள் மீது கட்டாய கர்ப்ப பரிசோதனைகள் மற்றும் கருத்தடை அறுவை சிகிச்சைகள், அத்துடன் கருக்கலைப்புகள் உள்ளிட்ட கட்டாய பிறப்பு கட்டுப்பாட்டு முறைகள் விதிக்கப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன. இத்தகைய நடவடிக்கைகளின் விளைவாக உய்குர் வளர்ச்சி விகிதங்கள் குறையும். அதேநேரத்தில் சீன அரசாங்கம் குடும்ப அளவுகள் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்திய பிறகு ஹான் சீனர்களிடையே விகிதம் உயரக்கூடும். சீனாவின் மக்கள்தொகையில் முஸ்லிம்கள் ஒரு சிறிய பங்காக இருப்பதாலும், கணக்கெடுப்புகள் பெரும்பாலும் அதிக முஸ்லிம் மக்கள்தொகை கொண்ட பகுதிகளைத் தவிர்ப்பதாலும், சீன முஸ்லிம்களின் நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகள் குறித்த தரவு குறைவாகவே உள்ளது. 

சீனர்களை ஈர்க்கும் இஸ்லாம்:

முஸ்லிம்களிடையே  இருக்கும் உயர்ந்த அளவிலான மத ஒற்றுமை காரணமாக சீனாவில் இஸ்லாம் மற்ற மதங்களிலிருந்து மதம் மாறுவதை ஈர்க்கிறது.  சீனாவின் முக்கிய மதக் குழுக்களில் முஸ்லிம்கள் தங்கள் மதத்திற்குள் திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பு அதிகம் என்று கணக்கெடுப்புத் தரவுகள் குறிப்பிடுகின்றன. பெரும்பாலான ஹுய் முஸ்லிம்கள்  தங்கள் மனைவி அல்லது இணைந்து வாழும் துணையைப் போலவே அதே நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அதிகரித்து வரும் கட்டுப்பாடுகள் நிறைந்த அரசாங்கக் கொள்கைகள் அல்லது உண்மையான நடத்தையில் மாற்றம் அல்லது இரண்டிலும் சிலவற்றை எதிர்கொண்டு சீன முஸ்லிம்கள் கணக்கெடுப்பு கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

சீனாவில் கிட்டத்தட்ட அனைத்து உய்குர்களும்  ஒரு மாகாணமான ஜின்ஜியாங்கில் வாழ்கின்றனர். ஹுய் மக்கள் மிகவும் பரவலாக சிதறடிக்கப்படுகிறார்கள், ஜின்ஜியாங்கில் 10 சதவீதம் மற்றும்  கன்சு, நிங்சியா மற்றும் கிங்காய் போன்ற பிற வடமேற்கு மாகாணங்களில் 42 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது. மீதமுள்ள பாதி நாடு முழுவதும் சிதறிக்கிடக்கின்றன, ஹெனானில்  8 சதவீதமும், மற்றும் யுன்னானில் 6 சதவீதம் என குறிப்பிடத்தக்க செறிவு உள்ளது.

சீனாவில் முஸ்லிம்கள் சந்திக்கும் சவால்கள்:

சீனாவில் முஸ்லிம்கள் கடுமையான சவால்களை சந்தித்து வருகிறார்கள். இதற்கு சீன அரசாங்கத்தின் முக்கிய கொள்கை இருந்து வருகிறது. முஸ்லிம்களில் பெரும்பான்மையானவர்கள் ஜின்ஜியாங் மற்றும் நிங்சியாவின் வடமேற்கு மாகாணங்களில் வசிக்கின்றனர்.  மலைப்பாங்கான, குறைந்த மக்கள் தொகை கொண்ட பகுதிகள், அவை பெரும்பாலும் நடைமுறை காரணங்களுக்காக தேசிய ஆய்வுகளில் விலக்கப்படுகின்றன. முஸ்லிம்கள் கணக்கெடுக்கப்பட்டாலும் கூட, அந்த விவரங்கள் முழுமையாக அறிக்கையில் இடம்பெறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சீன அரசாங்கம் முஸ்லிம்களை நடத்தும் விதம் சவால்களை அதிகரிக்கிறது. கணக்கெடுக்கப்பட்ட முஸ்லிம்கள் தங்கள் பதில்களில் பாதுகாக்கப்படலாம், அதேநேரத்தில் இஸ்லாத்தை உறுதியாக கடைப்பிடிக்கும் சீன முஸ்லிம்கள்  தனிப்பட்ட கஷ்டங்களை எதிர்கொண்டுள்ளனர். உதாரணமாக, ஜின்ஜியாங்கில் சீன அரசாங்கக் கொள்கைகளை விமர்சித்த பெய்ஜிங்கை தளமாகக் கொண்ட பொருளாதார நிபுணரும் உய்குருமான ஐஹாம் தோஹ்தி, 2014 இல் "பிரிவினைவாத" குற்றவாளி எனக் கண்டறியப்பட்டு, ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். ஜின்ஜியாங் பல்கலைக்கழகத்தில் உய்குர் மரபுகளின் பேராசிரியரான ரஹில் தாவுத், 2017 இல் பெய்ஜிங்கிற்கு ஒரு பயணத்திற்கு முன்னதாக காணாமல் போனார். அதன் பின்னர் அவர் பற்றிய எந்த தகவலும் இல்லை என்று தி நியூயார்க் டைம்ஸ் மற்றும் பிற ஊடகங்களில் வந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

உய்குர்கள் குறித்த அவர்களின் பணி தொடர்பாக சீனாவிற்கு பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டதாக அமெரிக்க அறிஞர்கள் கூறியுள்ளனர். ஜின்ஜியாங்கில் உள்ள நிலைமைகள் குறித்த விரிவான காட்சி ஆதாரங்களை ஆன்லைன் விசாரணைகள் மூலம் கண்டுபிடித்த ஜெர்மன் மானுடவியலாளர் அட்ரியன் ஜென்ஸ், 2021 இல் சீன நிறுவனங்களால் அவரது பணிக்காக வழக்குத் தொடரப்பட்டது.  இதை சீன வெளியுறவு அமைச்சகம் "தீங்கிழைக்கும் அவதூறு செயல்கள்" என்று விவரித்தது என தி வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

சவால்களுக்கு மத்தியில் சீன முஸ்லிம்கள்:

சீன அரசின் கடும் கட்டுப்பாடுகள் காரணமாக, சீனாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கையை மதிப்பிடுவதில் சவால்களை ஏற்படுத்துகின்றன. கணக்கெடுப்பின்போது, அதிக சிறுபான்மை மக்கள்தொகை கொண்ட சில பகுதிகள் தவிர்க்கப்பட்டுள்ளன.  இத்தகைய சூழ்நிலையில்,கிங்காய் மாகாணத்தின் சுன்ஹுவாவில் உள்ள ஜாங்கா மஸ்ஜித் உள்ளிட்ட பல பழையான மஸ்ஜித்துக்கள்   சீனாவில்  இருந்து வருகின்றன. இங்கு வழக்கமான உற்சாகத்துடன் ரமளான் நோன்பு கடைப்பிடிக்கப்பட்டு வரும் முஸ்லிம்கள், தராவீஹ் தொழுகை நிறைவேற்றி வருகிறார்கள். 

(குறிப்பு: சீனாவில் மதம் தொடர்பாக பியூ ஆராய்ச்சி மையம்  வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது.)

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: