"என்று தணியும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள்?"
ஒன்றியத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபிறகு, முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ந்து வெறுப்பு பேச்சுகள் அதிகளவு பரப்பப்பட்டு வருகின்றன. அத்துடன் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை நசுக்க திட்டமிட்டு காரியங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. முஸ்லிம்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள், வெறுப்பு பேச்சுகள், மிகச் சுதந்திரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏதாவது ஒரு காரணம் கூறி, முஸ்லிம்களின் வீடுகள் புல்டோர் மூலம் இடிக்கப்படுகின்றன. தேர்தல் காலங்களில் பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள் முதல் கடைசி ஊழியர் வரை முஸ்லிம்கள் மீது வெறுப்பு கக்கி வருவதை வழக்கமாக கொண்டு இருக்கிறார்கள். இதனால் நாட்டில் 25 கோடிக்கும் அதிகமாக உள்ள முஸ்லிம்கள், எப்போதும் ஒருவித அச்சத்துடன் வாழ வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
முஸ்லிம்களுக்கு எதிராக அண்மையில் பல சம்பவங்கள் நடைபெற்று இருக்கின்றன. அவற்றில் குறிப்பிட்ட சிலவற்றை நாம் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறோம். இதன்மூலம் முஸ்லிம்களுக்கு எதிராக எப்படி தொடர்ந்து வன்மம் விதைக்கப்பட்டு, அறுவடை செய்யப்பட்டு வருகிறது என்பதை மக்கள் தெளிவாக புரிந்துகொள்ளலாம்.
ரயிலில் மௌலானா மீது தாக்குதல்:
ராஜஸ்தானின் கங்காபூர் நகரில் உள்ள ஒரு மதரஸாவிற்கு நன்கொடை சேகரிக்க முயன்றபோது, ரயிலில் முதிய மௌலானா ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட கொடூரமான சம்பவம் ஒன்று அண்மையில் நடைபெற்றுள்ளது. மௌலானா 'பாகிஸ்தானி' என்று கூறி ரயிலில் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்தியவர்கள், அவர் மீது பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டினர். இருப்பினும், ரயில்வே அதிகாரிகள் இன்னும் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தவில்லை.
பாதிக்கப்பட்ட மௌலானாவின் குடும்பத்தினரின் கூற்றுப்படி, அவர் தனது இருக்கையில் அமர்ந்து புனித குர்ஆனை ஓதிக் கொண்டிருந்துள்ளார். மௌலானா கங்காபூர் நகரில் உள்ள ஒரு மதரஸாவில் இயக்குநராக உள்ளார். மேலும் மதரஸாவிற்கு நிதி சேகரிக்க அங்காலேஷ்வருக்குச் சென்றிருந்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர் மீது வேண்டும் என்றே பொய் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, ரயிலில் சிலர் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
ஒலிபெருக்கியில் இப்தார் அறிவிப்பால் கைது:
உத்தரபிரதேசத்தில் ஒலிபெருக்கியில் இப்தார் அறிவிப்பு தொடர்பாக மஸ்ஜித்தின் இமாம் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். உத்தரபிரதேசத்தின் ராம்பூரில் ஒரு மஸ்ஜித்தில் ஒலிபெருக்கி மூலம் இப்தார் (நோன்பு திறப்பு) அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒரு சர்ச்சை வெடித்தது. தாண்டா காவல் நிலையத்தின் சையத் நகர் சௌகி பகுதிக்கு உட்பட்ட மனக்பூர் பஜாரியா கிராமத்தில் நடந்த இந்த சம்பவம், இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த ஒருவரின் போராட்டங்களுக்கு வழிவகுத்தது, இதன் விளைவாக காவல்துறையினர் தலையிட்டு மஸ்ஜித்தின் இமாம் உட்பட ஒன்பது பேர் கைது செய்துள்ளனர்.
புனித ரமளான் மாதத்தில் அமைதியான முறையில் நோன்பு அமைத்து, உலக நன்மைக்காக துஆ (பிரார்த்தனை) செய்யும் முஸ்லிம்கள் வேண்டும் என்றே தேவையில்லாமல் விஷயங்களில் உத்தரப்பி பிரதேச அரசு கைது செய்து வருவதற்கு இந்த சம்பவமே ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது என கூறலாம்.
மஸ்ஜித், மதரஸாக்கள் மூட நடவடிக்கை:
உத்தரகாண்டில் உள்ள பா.ஜ.க. அரசு தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. பொது சிவில் சட்டம் அமல் உள்ளிட்ட பல சட்டங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ளனது.
இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில், முசோரி டேராடூன் மேம்பாட்டு ஆணையம் (MDDA) அம்மாநிலத்தில் உள்ள மஸ்ஜித்துக்கள், மதரஸாக்களை மூட நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து மதரஸாக்கள் மற்றும் மஸ்ஜித்துக்களை மூடுவதற்கு எதிராக பல்வேறு முஸ்லிம் அமைப்புகளின் உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர். மாவட்ட நீதிபதி அலுவலகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடி, நிர்வாகத்தின் நியாயமற்ற நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். காவல்துறையினர் தலையிட்டு பல ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்ததால் பதற்றம் அதிகரித்தது
தராவீஹ் தொழுகை முடித்தவர்கள் மீது தாக்குதல்:
குஜராத்தின் வத்வாவில் உள்ள முஸ்லிம்கள், தாராவீஹ் தொழுகையிலிருந்து திரும்பும்போது அவர்கள் மீது தொடர்ந்து துன்புறுத்தல், கல்வீச்சு தாக்குதல்கள் நடைபெற்று வருவதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்
குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள வத்வாவில் உள்ள முஸ்லிம்கள், மார்ச் 3 ஆம் தேதி திங்கட்கிழமை தாராவீஹ் தொழுகையிலிருந்து வீடு திரும்பும்போது இந்துத்துவ அமைப்பினரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவங்களுக்குப் பின்னர், பல்வேறு தரப்பினர் கவலைகளை எழுப்பியுள்ளனர். நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி, தாக்குதல் நடத்தியவர்கள், குறிப்பாக முஸ்லிம் ஆண்களின் பொதுவான அடையாளமான மண்டை ஓடு தொப்பிகளை அணிந்த நபர்களை குறிவைத்து, குழந்தைகள் உட்பட, குழு மீது கற்களை வீசினர். இதனால் பதற்றமான ஒரு சூழ்நிலையில் ரமளான் தராவீஹ் தொழுகையில் கலந்துகொள்ள வேண்டிய சூழ்நிலையில் குஜராத் முஸ்லிம்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
பசு கொலை என்ற பேரில் முஸ்லிம்கள் கைது:
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் நகரில் பசு படுகொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட முஸ்லிம் இளைஞர்களை, மாலை அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும் தாக்கிய அதிகாரிகளை பஜ்ரங் தளம் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் போன்ற வலதுசாரி குழுக்களின் உறுப்பினர்கள் கொண்டாடியுள்ளனர்.
அணிவகுப்பின் கொடூரமான காட்சிகளில், இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் "கௌ ஹமாரி மாதா ஹை, போலீஸ் ஹமாரா பாப் ஹை (பசு எங்கள் தாய், போலீசார் எங்கள் தந்தை)" என்று கோஷமிட காவல்துறை அதிகாரிகளால் கட்டாயப்படுத்தப்படுவதைக் காண முடிகிறது. சலீம் மேவதி மற்றும் அகிப் மேவதி மீது காவல்துறையினர் நடத்திய கொடூரமான தாக்குதலின் வீடியோக்களுக்குப் பிறகு, வலதுசாரி குழுக்கள் ஒரு நாள் கழித்து காஹ்தியா காவல் நிலைய ஆய்வாளர் டி.எல். தசோரியாவைப் பாராட்டினர்.
உஜ்ஜைன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நிதேஷ் பார்கவ் கூறுகையில், காடியா பகுதியில் பசு படுகொலை நடப்பதாக ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்தவுடன், காவல்துறையினர் விசாரணை நடத்தி, இளைஞரின் வாகனங்கள் மற்றும் இறைச்சியைக் கைப்பற்றினர். இருவர் கைது செய்யப்பட்டனர், அதே நேரத்தில் போலீசார் மூன்றாவது சந்தேக நபரைத் தேடி வருகின்றனர். இந்த வீடியோக்கள் வைரலான பிறகு, காவல்துறையினர் சட்டத்தை கையில் எடுத்ததாக பலர் குற்றம் சாட்டினர்.
என்று தணியும் இந்த வன்முறைகள்:
மேலே நாம் கண்ட நான்கு சம்பவங்களும், இந்தாண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாத தொடக்கத்தில் நடைபெற்றவை. இதன்மூலம் ஒரு உண்மை மிகத் தெளிவாக தெரிய வருகிறது. முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்துபவர்கள் மீது காவல்துறை எந்தவித நடவடிக்கைகளையும் எடுப்பதில்லை. அத்துடன் அவர்களாகவே சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு பொய்யான குற்றச்சாட்டின் பேரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். இப்படி முஸ்லிம் இளைஞர்களை மாலை அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும் தாக்கிய அதிகாரிகளை பஜ்ரங் தளம் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் போன்ற வலதுசாரி குழுக்களின் உறுப்பினர்கள் கொண்டாடுகின்றனர்.
இந்திய முஸ்லிம்கள் அனைவரும் இந்திய நாட்டை மிகவும் நேசிக்கும் மக்கள், மற்றவர்களை விட தாய் நாட்டின் மீது மிகப்பெரிய அன்பை வைத்திருப்பவர்கள் முஸ்லிம்கள் தான் என உறுதியாக கூறலாம். இத்தகைய சூழ்நிலையில் அவர்கள் மீது ஏன் வெறுப்பு பரப்பப்படுகிறது? அதன்மூலம் ஏன் தாக்குதல்கள் நடத்தப்படுகிறது? சகோதரச் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களை முஸ்லிம்கள் தங்களுடைய சகோதரர்களாகவே நினைத்து பழகுகிறார்கள். இதை தான் இஸ்லாம் அவர்களுக்குச் சொல்லித்தரும் வாழ்க்கை முறையாகும். அனைவர் மீது அன்பு செலுத்த வேண்டும் என்ற இஸ்லாமிய வாழ்க்கை நெறிமுறைக்கு ஏற்ப, செயல்படும் முஸ்லிம்கள் மீது சில பாசிச அமைப்புகள் தங்களது சுயநலத்திற்காக தாக்குதல் நடத்துவது சரியா என்ற கேள்வி பொதுவாக சமூகத்தில் அக்கறை உள்ளவர்கள் எழுப்பிக் கொண்டே இருக்கிறார்கள். எனினும், முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படவில்லை. தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment