கர்நாடகாவில் கல்வி, வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு மீண்டும் அமல்படுத்தப்படும்....!
சட்டப்பேரவையில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு...!!
பெல்காவி, டிச.10- கர்நாடகா மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்டு வந்த 4 சதவீத இடஒதுக்கீட்டை முந்தைய பா.ஜ.க. அரசு ரத்து செய்த நிலையில், அந்த திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என மாநில சட்டப்பேரவையில் முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
கர்நாடகா மாநில சட்டப்பேரவைக் கூட்டத் தொடர், பெல்காவியில் உள்ள பேரவையில் திங்கட்கிழமை (09.12.2024) தொடங்கியது. இந்த கூட்டத் தொடரில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா, கடந்த 2023-ஆம் ஆண்டு முந்தைய பா.ஜ.க. அரசு முஸ்லிம்களுகளுக்கு அளிக்கப்பட்டு வந்த இடஒதுக்கீடு முறையை திடீரென ரத்து செய்ததாக குற்றம்சாட்டினார்.
பா.ஜ.க. இரட்டை நிலை:
முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்டு வந்த 4 சதவீத இடஒதுக்கீட்டை, பிரித்து மற்ற இரண்டு சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு பா.ஜ.க. அரசு வழங்கியதாகவும், இடஒதுக்கீடு முறையை எதிர்த்த, பா.ஜ.க., ஆனால் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் இதற்கு நேர்மாறாக விளக்கம் கூறி, தொடர்ந்து இரட்டை நிலையை பின்பற்றி வருவதாகவும் சித்தராமையா குற்றம்சாட்டினார்.
முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்த பா.ஜ.க. அரசு, ஆனால், பஞ்சாமாசாலி லிங்காயாத் சமுகத்திற்கு இடஒதுக்கீட்டை அளிக்கவில்லை என்றும் அவர் விமர்சனம் செய்தார்.
ஆதாரம் தாக்கல் செய்யப்படும்:
முதலமைச்சர் சித்தராமையாவின் கருத்துக்கு எதிர்ப்பு கூறிய பேசிய பா.ஜ.க. உறுப்பினர் அசோகா, முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை ரத்து செய்ததற்கான ஆதாரம் இருக்கிறாதா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த சித்தராமையா, உச்சநீதிமன்றத்தில் பா.ஜ.க. அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் நாளை (இன்று 10.12.2024) சட்டப்பேரவையில் தாம் தாக்கல் செய்ய இருப்பதாக கூறினார். இதேபோன்று பேசிய பா.ஜ.க. எம்.எல்.ஏ. பசன்குடா பாட்டேல், தானும் நாளை (புதன்கிழமை) பா.ஜ.க. தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தை சட்டப்பேரவையில் அளிக்க இருப்பதாக கூறினார்.
காரசார விவாதம்:
சட்டப்பேரவையில், பஞ்சாமாசாலி லிங்காயாத் சமுகத்திற்கான இடஒதுக்கீடு மற்றும் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு ஆகிய பிரச்சினையால், ஆளும் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. உறுப்பினர்களுக்கு இடையே காரசார விவாதம் நடைபெற்றது. இதனால், அவையில் அனல் பறந்தது.
இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக, பஞ்சாமாசாலி லிங்காயாத் சமுகத்தினர் நடத்த இருந்த போராட்டத்திற்கு தடை விதித்து, பேச்சு மற்றும் அடிப்படை உரிமைகளை காங்கிரஸ் அரசு பறித்து வருவதாக பா.ஜ.க. உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர். ஆனால், இதுபோன்ற எந்த தடையையும் தமது அரசு விதிக்கவில்லை என சித்தராமையா விளக்கம் அளித்தார்.
மேலும், பெல்காவி மாவட்ட ஆட்சியர் முஹம்மது ரோஷன், பேரணியை தடுக்கும் நோக்கில், வாகனங்களுக்கு தடை விதித்து குறித்து பா.ஜ.க. உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியபோது, குறுக்கிட்டு பேசிய உள்துறை அமைச்சர் பரமேஸ்வாரா, கர்நாடகா காங்கிரஸ் அரசு போராட்டத்திற்கு ஒருபோதும் தடை விதிக்கவில்லை என்று விளக்கம் அளித்தார். இடஒதுக்கீடு வழங்கக் கோரி போராட்டம் நடத்துவது ஒரு சமூகத்தின் ஜனநாயக உரிமை என்று குறிப்பிட்ட அவர், ஒரே நேரத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பெங்காவியில் வந்தால் அதனால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் தான் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது என்றும் விளக்கம் அளித்தார்.
சித்தராமையா உறுதி:
அரசின் இந்த விளக்கத்தை பா.ஜ.க. உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டாலும், பஞ்சாமாசாலி லிங்காயாத் சமுகத்திற்கு இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றம் கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் சித்தராமையா, இந்த பிரச்சினை தொடர்பாக தாம் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக கூறினார். மேலும் நிரந்தர பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஆணையம் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், முழுமையான இட ஒதுக்கீட்டை பஞ்சாமாசாலி லிங்காயாத் சமுகத்திற்கு காங்கிரஸ் அரசு அளிக்கும் என்று தாம் அவர்களிடம் உறுதி அளித்து இருந்தாகவும் சித்தராமையா பேரவையில் விளக்கம் அளித்தார்.
கர்நாடகாவில் கல்வி, வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு மீண்டும் 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற காங்கிரஸ் அரசின் அறிவிப்பு, அம்மாநில முஸ்லிம்கள் மத்தியில், மகிழ்ச்சி அளித்து வரவேற்பை பெற்றுள்ளது.
- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment