ஒரே பாலின திருமணங்கள், லைவ்-இன் உறவுகள், சமூகத்தை சீர்குலைக்கும்.....!
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கருத்து.....!!
புதுடெல்லி, டிச.21- ஒரே பாலின திருமணங்கள் மற்றும் லைவ்-இன் உறவுகள் தவறான வாழ்க்கை முறை என்று மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து, சமீபத்திய யூடியூப் போட்காஸ்ட் ஒன்றில், இத்தகைய வழிமுறைகள் சமூகத்தை மிகவும் சீர்குலைக்கும் என்று அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.
சமூக கட்டமைப்புகளுக்கு எதிரானது:
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ஒரே பாலின திருமணங்கள் ஆகீயவை குறித்து யூடியூப் போட்காஸ்டில், பல்வேறு கேள்விகளுக்கு விரிவான விளக்கம் அளித்து, இத்தகைய உறவு முறைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஒரே பாலின திருமணங்கள், சமூக கட்டமைப்புகளை முற்றிலும் சீர்குலைத்துவிடும் என்று அவர் அச்சம் தெரிவித்துள்ளார். ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவது, பலதார மணம் போன்ற பிற நடைமுறைகளை ஏற்க வழிவகுக்கும் என்றும் கட்கரி எச்சரித்துள்ளார்.
பாரம்பரிய திருமணம் மற்றும் சமூக சமநிலைக்கு, குழந்தை வளர்ப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ள கட்கரி, ஐரோப்பாவில் வாழும் உறவுகளின் (லைவ்-இன் உறவுகள்) எழுச்சி குறித்து பிரிட்டன் தலைவர்களிடம் தாம் எழுப்பிய கவலைகளை குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டன் தலைவர்களிடம் கவலை:
அண்மையில், பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திற்கு சென்றபோது, அந்நாட்டு பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோரிடம் மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த பிரச்சினைகள் குறித்து தாம் விவாதித்து, தனது கருத்துகளை பகிர்ந்துகொண்டதாக அவர் கூறியுள்ளார். இதனால் இங்கிலாந்து நாடு சந்தித்துவரும், சவால்கள், சிக்கல்கள் ஆகியவை குறித்தும் அவர்களிடம் தாம் கேட்டறிந்ததாக கட்கரி குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் இளைஞர்களும் பெண்களும் திருமணத்திற்குப் பதிலாக, லிவ்-இன் உறவுகளைத் தேர்ந்தெடுக்கும் போக்கு அதிகரித்து வருவதை, அவர்கள் ஒரு முக்கிய பிரச்சினையாகக் கண்டறிந்ததாக கட்கரி நினைவு கூர்ந்துள்ளார்.
குழந்தைகளின் அவசியம்:
பாலின விகிதத்தை சமநிலைப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ள கட்கரி, மேலும் சமூக ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த திருமணமான தம்பதிகள், அவசியம் குழந்தைகளைப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். "பாலின விகிதம் ஆயிரத்து 500 பெண்கள் மற்றும் ஆயிரம் ஆண்கள் மட்டுமே இருக்கும் நிலையை எட்டினால், ஆண்களுக்கு இரண்டு மனைவிகளை, நாம் அனுமதிக்க வேண்டியிருக்கும்," என்றும் கட்கரி அச்சம் தெரிவித்துள்ளார்.
பாரம்பரிய குடும்ப விழுமியங்களுக்காக வாதிட்டுள்ள கட்கரி, குழந்தைகளை ஒழுங்காகப் பெற்று வளர்ப்பதில் பெற்றோரின் பங்கை எடுத்துக்காட்டி, இதை ஒரு சமூகப் பொறுப்பாக வடிவமைத்து கருத்து கூறியுள்ளார்.
முக்கியத்துவம் பெறும் கருத்து:
உறவுகள் தொடர்பான சிவில் சட்டங்கள் பற்றிய விவாதங்கள் நடந்து வரும் நிலையில், பா.ஜ.க. ஆளும் உத்தரகாண்ட் அரசாங்கம், திருமணம், விவாகரத்து மற்றும் வாரிசுரிமை தொடர்பாக பல்வேறு மதங்களில் ஒற்றுமையை உறுதி செய்யும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை சமீபத்தில் இயற்றியது. மேலும், லைவ் இன் உறவுகள் குறித்து கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்றும் அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் இந்த கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
மேலும், பா.ஜ.க. மற்றும் ஆர்எஸ்எஸ் இஸ்லாமியர்களுக்கு எதிரானவை என்ற குற்றச்சாட்டுகளை கட்கரி மறுத்துள்ளார். அந்த அமைப்புகள் பெரும்பான்மை அல்லது சிறுபான்மைவாதத்தை ஆதரிக்கவில்லை என்றும், அவர்களின் கொள்கைகள் மத அடிப்படையில் பிளவுபடுவதை விட பரந்த சமூக வளர்ச்சியில் கவனம் செலுத்துகின்றன என்றும் கட்கரி தெளிவுபடுத்தியுள்ளார்.
- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
==================
No comments:
Post a Comment