Monday, December 2, 2024

ஏஞ்சலா மெர்க்கல் எழுதிய நூல்.....!

"இந்தியாவில் சிறுபான்மையின மக்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள், வன்முறைகள் கவலை அளிக்கின்றன"

ஜெர்மன் முன்னாள் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் எழுதிய நூலில் வேதனை 

ஜெர்மனி நாட்டின் முன்னாள் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் தனது சுயசரிதை குறித்து 600 பக்கங்கள் கொண்டு நூல் ஒன்றை எழுதியுள்ளார். இந்த நூல் அண்மையில் ஜெர்மனியில் வெளியிடப்பட்டது. நூல் வெளியிட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய ஏஞ்சலா மெர்க்கல், தனது நூலில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து எடுத்துக் கூறினார். குறிப்பாக, இந்தியாவில் "இந்து தேசியவாதிகளின்" எழுச்சி குறித்து ஏஞ்சலா மெர்க்கல் கவலைப்பட்டுள்ளார். இந்தியாவில்  2014 ஆம் ஆண்டு முதல் மத சகிப்புத்தன்மை அதிகரித்ததாக பிரதமர் நரேந்திர மோடி கூறியதை ஏஞ்சலா மெர்க்கல் மறுத்துள்ளார். 

அவர் எழுதி வெளியிட்ட 600  பக்க நூலில், இந்தியாவைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. "சுதந்திரம்: நினைவுகள் 1954-2021" என்ற தலைப்பில் எழுத்தப்பட்டுள்ள இந்த சுயசரிதை நூலில் இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் பதவிக்காலத்தில் (2005-2021) ஜெர்மனி மற்றும் இந்தியா இடையே நீடித்த பொருளதார உறவுகள், பொருளாதார வளர்ச்சி மற்றும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் இரு நாடுகளும் மேற்கொண்ட நடடிவக்கைகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை ஏஞ்சலா மெர்க்கல் குறிப்பிட்டுள்ளார். 

இதுஒருபுறம் இருக்க, இந்தியாவைப் பற்றிய ஏஞ்சலா மெர்க்கலின் நினைவுக் குறிப்புகள் என்ற பெயரில் மற்றொரு புத்தகமும் வெளியிடப்பட்டுள்ளது. ஜெர்மனியின் முன்னாள் இந்தியத் தூதுவர் வால்டர் லிண்ட்னர், டெல்லியில் இருந்த ஆண்டுகளில் (2019-2022) மிக நெருக்கமான அரசியல் முன்னேற்றங்களை உள்ளடக்கிய நாட்டில் வகுப்புவாத துருவமுனைப்பு குறித்து தமது கவலைகளை இந்த நூலில் வெளிப்படுத்துகிறார். அத்துடன் உக்ரைன் படையெடுப்பிற்குப் பிறகு ரஷ்யாவுடனான இந்தியாவின் நீடித்த உறவுகள் குறித்தும், இந்தியாவிலிருந்து மேற்கு நாடுகள் என்ன கற்றுக்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் அதில் லிண்டட்னர் குறிப்பிட்டுள்ளார். லிண்ட்னர் 1970 களில் பேக் பேக்கர் மற்றும் இசைக்கலைஞராக இந்திய நாட்டிற்கு முதல் முறையாக வந்தபோது, தமக்கு ஏற்பட்ட இந்திய ஆன்மீகம் குறித்தும், மற்றும் அவரது சமீபத்திய இராஜதந்திர பதவியைப் பற்றியும் எழுதியுள்ளார். 

சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள்:

ஜெர்மன் முன்னாள் அதிபர் ஏஞ்சலா மெர்க்கலின் சுயசரிதைய நூலில், "மோடி பிரதமர் ஆன பிறகு, 'முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகிறது" என்று மோடியிடம் மெர்க்கல் கூறியதாகவும், ஆனால் மோடி அதை கடுமையாக மறுத்ததாகவும் எழுதப்பட்டுள்ளது. ஆனால் மெர்க்கல் தனது நினைவுக் குறிப்புகளில், 'துரதிர்ஷ்டவசமாக, உண்மைகள் வேறுவிதமாக இருப்பதாக' எழுதியுள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம், 'நாட்டின் ஒற்றுமை அதன் பன்முகத்தன்மையில் இருந்து எழுகிறது.' என்று ஏஞ்சலா மெர்க்கல் குறிப்பிட்டுள்ளார்.

"சுதந்திரம்: நினைவுகள் 1951-2021" என்ற  அந்த புத்தகத்தில், ஜெர்மனியின் முன்னாள் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல், பிரதமர் நரேந்திர மோடியுடனான தனது சந்திப்புகளில், “பிற மதங்களைச் சேர்ந்தவர்கள், முக்கியமாக முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். மோடி பதவியேற்றதிலிருந்து இந்தியாவில் கிறிஸ்தவர்கள், இந்து தேசியவாதிகளால் தாக்கப்பட்டனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மெர்க்கலின் கூற்றுப்படி,  மோடியுடன் இந்த விஷயத்தைப் பற்றி பேசுகையில், "அவர் அதை கடுமையாக மறுத்தார்  என்றும், மேலும் இந்தியா மத சகிப்புத்தன்மை கொண்ட நாடாகவும் இருக்கும் என்றும் உறுதிப்பட கூறினார்" என்று மெர்க்கல் குறிப்பிட்டுள்ளார். 

ஆனால் "துரதிர்ஷ்டவசமாக, உண்மைகள் வேறுவிதமாக இருப்பதாகவும், மோடியின் வாதத்தை தாம் ஏற்றுக் கொள்ளவில்லை" என்றும் முன்னாள் ஜெர்மன் அதிபர் தெரிவித்துள்ளார். அவர் மேலும்  இப்படி கூறுகிறார், " சிறுபான்மையின் மக்கள் மீதான வன்முறைகள் கவலை அளிக்கும் வகையில் இருந்தன. மத சுதந்திரம், எல்லாவற்றிற்கும் மேலாக, ஒவ்வொரு ஜனநாயகத்தின் முக்கிய அங்கமாகும்" என்றும் அவர் நூலில் சுட்டிக் காட்டியுள்ளார். 

மோடியின் ஆர்வம்:

ஜெர்மனியில், ஏப்ரல் 2015 இல் இந்திய பிரதமர் மோடியுடனான தனது முதல் சந்திப்பை விவரித்த மெர்க்கெல், "மோடி விஷுவல் எஃபெக்ட்களை விரும்பினார்" என்று குறிப்பிட்டுள்ளார். மோடி தனது தேர்தல் பிரச்சாரங்களைப் பற்றி தம்மிடம் கூறினார் என்றும், அதில் அவர் ஒரு ஸ்டுடியோவில் பேசியதாகவும், 50க்கும் மேற்பட்ட வெவ்வேறு இடங்களில் தனது படத்தை ஹாலோகிராம் வடிவில் காட்டினார் என்றும், ஒவ்வொன்றிலும் ஆயிரக்கணக்கான மக்கள் அவரைக் கேட்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். 2014 பொதுத் தேர்தலுக்கான தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி ஹாலோகிராம் பயன்படுத்தினார் என்றும் நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மன்மோகன் சிங்கிற்கு பாராட்டு:

முன்னாள் ஜெர்மன் அதிபர், முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்குடன் தான் சந்தித்ததையும் தனது நூலில் விவரித்துள்ளார். "பரந்த அளவிலான உலகளாவிய அனுபவத்துடன் பயிற்சி பெற்ற பொருளாதார நிபுணர், நாட்டின் முதல் இந்து அல்லாத பிரதமர் என்பதை எடுத்துக்காட்டி, சிங்கின் முதன்மை நோக்கம் இந்தியாவின் 1.2 பில்லியன் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதாகும்" என்று பாராட்டி மெர்க்கெல் எழுதியுள்ளார்.   

“மன்மோகன் சிங் உடனான தனது உரையாடல்களில், வளர்ந்து வரும் நாடுகளின், செல்வந்த நாடுகளின் மீதுள்ள அவநம்பிக்கைகளை தாம் நன்கு புரிந்துகொண்டதாக கூறியுள்ளார்,. அவரது கண்ணோட்டத்தில், அவர்கள் எங்கள் பிரச்சனைகளில் அதிக அக்கறை காட்டுவார்கள் என்று தாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் அதே மரியாதையை அவர்களுக்கு வழங்க நாங்கள் தயாராக இல்லை”என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.. "சிங்கின் கருத்தை தன்னால் உணர முடிந்தது. மேலும் வளர்ந்து வரும் நாடுகள் எதிர்கொள்ளும் சவால்களை இன்னும் நெருக்கமாகப் படிக்க ஆரம்பித்தேன்" என்றும் மெர்க்கல் கூறியுள்ளார். 

மெர்க்கலிடம் "தனது நாட்டின் கலாச்சார பன்முகத்தன்மை பற்றி மன்மோகன் சிங் கூறியதாகவும், ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட ஒரு துணைக் கண்டம்இந்தியா என்பதையும், இந்திய அரசியலமைப்பு மட்டும் இருபத்தி இரண்டு அதிகாரப்பூர்வ மொழிகளை அங்கீகரிக்கிறது என்பதையும் தாம் அறிந்துகொண்டதாக அந்த நூலில் எழுதப்பட்டுள்ளது. நாட்டின் ஒற்றுமை அதன் பன்முகத்தன்மையில் இருந்து எழுகிறது. இந்த வகையில், இந்தியா அதன் உறுப்பு நாடுகளுடன் ஒப்பிடும்போது ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பிடத்தக்கது என்றும் ஏஞ்சலா மெர்க்கல் குறிப்பிட்டுள்ளார்.  அவர் 2006 இல் சிங்கை முதலில் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதேபோன்று, ஜெர்மனியின் முன்னாள் இந்தியத் தூதுவர் வால்டர் லிண்ட்னர் எழுதியுள்ள நூலில் இந்தியாவில் வாழும் சிறுபான்மையின மக்களின் மத சுதந்திர உரிமைகள், ஜனநாயக உரிமைகள் ஆகியவை குறித்து எழுதப்பட்டு, இந்தியா சர்வாதிகார  இந்து நாடாக மாற வேண்டும் என்ற திசையை நோக்கி பயணிப்பதாகவும் அச்சம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சிறுபான்மையின மக்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க மோடி அரசு தடுத்துவிட்டதாகவும் இந்துத்துவ அமைப்புகளுக்கு ஆதரவாக இருப்பதாகவும், லவ் ஜியாத், பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு ஆகியவற்றையும்  வால்டர் லிண்ட்னர் தனது நூலில் எழுதியுள்ளார். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: