"மக்கள் மனங்களை வென்ற தப்லீக் ஜமாஅத் இஜ்தேமா"
இஸ்லாமியர்கள் மத்தியில் ஏக இறை நம்பிக்கையை வலுவாக உருவாக்கி, இறையச்சத்துடன், அவர்கள் வாழ வேண்டும். இஸ்லாமியக் கடமைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். குறிப்பாக, ஐந்து வேளை தொழுகையை குறிப்பிட்ட நேரத்தில் நிறைவேற்ற வேண்டும். குடும்பங்களை நேசிக்க வேண்டும். தாய் தந்தையருக்கு உரிய கண்ணியம் அளிக்க வேண்டும். சகோதரர்களுடன் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். அனைத்துச் சமுதாய மக்கள் மீதும் அன்பு செலுத்த வேண்டும். மறுமை மீது உறுதியாக நம்பிக்கை கொண்டு, இந்த உலகத்திலேயே நல்ல செயல்கள் செய்து அதற்கான தயாரிப்புகளில் ஈடுபட வேண்டும் என்பன போன்ற உயர்ந்த போதனைகளை செய்யும் ஒரு அமைப்பு தான் தப்லீக் ஜமாஅத். மேலும் தப்லீக் ஜமாஅத், மாற்று மத தோழர்களுக்கு எந்தவித அறிவுரையும், போதனைகளையும் செய்வதை நம்மைப் பொறுத்தவரை நாம் கேள்விப்பட்டது இல்லை. அப்படி செய்வதை பார்க்கவும் இல்லை. உலகம் முழுவதும் தப்லீக் ஜமாஅத் இயங்கி வருவதுடன், அந்தந்த நாடுகளில் வாழும் முஸ்லிம்களை நல்வழிப்படுத்த தேவையான பணிகளையும் செய்து வருகிறது.
இந்தியாவில் தலைநகர் டெல்லி நிஜாமுத்தீன் பகுதியில் தப்லீக் ஜமாஅத்தின், தலைமை அலுவலகம் இருந்து வருகிறது. இந்த தலைமை அலுவலகத்தில் தொழுகை, இஸ்லாமிய போதனைகள், இஸ்லாமிய வாழ்க்கை நெறிமுறைகளை பின்பற்றுவதால் கிடைக்கும் மன அமைதி. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய வாழ்க்கையையும் அவர் போதித்த மார்க்க நெறிகளையும் முஸ்லிம்களுக்கு சொல்லித் தரும் ஒரு இடமாக மட்டுமே இந்த அலுவலகம் இருந்து வருகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் தப்லீக் ஜமாஅத் நிர்வாகிகள் இந்த தலைமை அலுவலகத்தில் குறிப்பிட்ட சில நாட்கள் தங்கி, இஸ்லாமிய பாடங்களை அறிந்துகொண்டு, நன்கு தெளிவுப்பெற்று பின்னர், மீண்டும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. அத்துடன் நாட்டின் பல பகுதிகளில் எந்தவித பெரிய அளவுக்கு விளம்பரம் செய்யப்படாமல் “தப்லீக் ஜமாஅத் இஜ்தேமா" (மகத்தான நம்பிக்கை கூட்டம்) அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இந்த இஜ்தேமாவில் ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான மக்கள் கூடி, அமைதியாக போதனைகளையும், இஸ்லாமிய வாழ்க்கை நெறிமுறைகளையும் அறிந்துகொள்கிறார்கள்.
போபாலில் நடைபெற்ற 77-வது இஜ்தேமா:
அப்படி ஒரு மாபெரும் தப்லீக் ஜமாஅத் இஜ்தேமா தான், அண்மையில், மத்தியப் பிரதேச மாநில தலைநகர் போபாலில் கடந்த நவம்பர் 29, 30 மற்றும் டிசம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இது 77-வது ஆல்மி தப்லிகி இஜ்தேமா என்று அழைக்கப்பட்டது. போபாலில் இருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஈன்கேடியில் இருக்கும் காசிபுராவில் நடைபெற்ற இந்த இஜ்தேமாவில் 22க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து ஏராளமான ஜமாத்தார்கள் ஆர்வத்துடன் வந்து கலந்துகொண்டனர். அத்துடன், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் மிகுந்த உற்சாகத்துடனும், இறை அச்சத்துடனும் இந்த இஜ்தேமாவில் பங்கேற்றனர்.
மிகவும் அமைதியான முறையில் நடைபெற்ற போபால் தப்லீக் ஜமாஅத் இஜ்தேமாவில், சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த இஜ்தேமாவில், தினசரி மார்க்கச் சொற்பொழிவுகளை தலைசிறந்த ஆலிம் பெருமக்கள் ஆற்றினார்கள். இந்த சொற்பொழிவுகள் அனைத்தும் இறை நம்பிக்கையை முஸ்லிம்கள் மத்தியில் மேலும் வலுப்படுத்தும் வகையில் இருந்தது. முஸ்லிம்களின் ஈமான் எப்போதும் உறுதியாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் வரலாற்றில் நிகழ்ந்த சம்பவங்களை சுட்டிக் காட்டி, மார்க்க அறிஞர்கள், மௌலானா பெருமக்கள் தங்கள் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்கள்.
வெகுஜன திருமணங்கள்:
இஜ்தேமாவின் முதல் நாளான வெள்ளிக்கிழமை, மாலை 4:30 மணிக்குப் பிறகு வெகுஜன திருமண விழா நடந்தது. அங்கு 350 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. அவர்களில் 130 ஜோடிகள் போபாலைச் சேர்ந்தவர்கள். இந்த பாரம்பரிய நிகழ்வு, திருமணங்கள் எப்படி எளிமை நடத்தப்பட வேண்டும் என்பதையும், எந்தவித ஆடம்பரமும் இல்லாமல், பெண் வீட்டாரை துன்புறுத்தாமல் இஸ்லாமிய முறைப்படி எப்படி திருமணம் நடத்தப்பட வேண்டும் என்பதையும் இஸ்லாமிய சமூகத்தை வலியுறுத்தும் வகையில் இருந்தது. மேலும், இஜ்தேமாவை வரையறுக்கும் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தின் உணர்வைக் காட்டியது.
ஆன்மீக சொற்பொழிவுகள்:
இஜ்தேமாவின் போது, பங்கேற்பாளர்கள் ஒவ்வொரு நாளும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் நான்கு சொற்பொழிவுகளை நடத்தினார்கள். இறுதி நாளான திங்கட்கிழமை, புனிதமான மற்றும் இதயப்பூர்வமான துஆ-இ-காஸுடன் கூட்டம் முடிவடைவதற்கு முன்பு இரண்டு இறுதி சொற்பொழிவுகள் வழங்கப்பட்டன. . இந்த சொற்பொழிவுகள் நம்பிக்கை, சமூக சேவை மற்றும் ஆன்மீகத்தின் பல்வேறு அம்சங்களில் பங்கேற்பாளர்களை ஊக்குவித்து வழிகாட்டுவதை நோக்கமாகக் கொண்டு இருந்தன.
உலகளாவிய பங்கேற்பு:
இந்த மாபெரும் இஜ்தேமாவில் இந்தியா மற்றும் 22 நாடுகளைச் சேர்ந்த ஜமாத்தினர்கள் குவிந்தனர். மேலும், ராஜஸ்தான், பீகார், ஹிமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, கேரளா மற்றும் தமிழ்நாடு போன்ற பல்வேறு இந்திய மாநிலங்களில் இருந்து பங்கேற்பாளர்கள் வந்தனர். சர்வதேசப் பிரதிநிதிகளும் அந்த இடத்திற்குச் சென்றனர். இந்த குறிப்பிடத்தக்க நம்பிக்கைக் கூட்டத்திற்கு உலகளாவிய பரிமாணத்தைச் சேர்த்துள்ளனர்.
போக்குவரத்து மற்றும் இடம் மேலாண்மை:
சீரான போக்குவரத்து மற்றும் பங்கேற்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. நவம்பர் 29 ஆம் தேதி காலை 7 மணி முதல், சரக்கு லாரிகள், டம்ப்பர்கள் மற்றும் மிக்ஸிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் கோலா ஜோட் பைராசியா சாலையில் இருந்து கரவுண்ட் சதுக்கம் வரை கட்டுப்படுத்தப்பட்டன.. விதிஷாவிலிருந்து வரும் வாகனங்கள் லம்பகெடா பைபாஸ் சதுக்கம் வழியாக நியமிக்கப்பட்ட பார்க்கிங் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டன. .
இந்த ஆண்டுக்கான இஜ்தேமா 600 ஏக்கர் பரப்பளவில் நடைபெற்றது. பெருந்திரளான மக்கள் வருகையை நிர்வகிக்க, 45 ஆயிரம் தன்னார்வலர்கள் நிறுத்தப்பட்டனர். 300 ஏக்கர் பரப்பளவில் வாகனங்கள் நிறுத்துவதற்கு போதுமான இடவசதி செய்யப்பட்டது. மேலும், 45 குப்பை சேகரிக்கும் வாகனங்கள் தூய்மையை பராமரிக்க தினமும் பல சுற்றுகளை மேற்கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மக்கள் மற்றும் ஜமாஅத்களின் நடமாட்டத்தை சீராக்க நான்கு நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் நிறுவப்பட்டன. ஒவ்வொரு வாயிலிலும் பங்கேற்பாளர்களைப் பதிவு செய்ய வரவேற்புக் குழுக்கள் நிறுத்தப்பட்டன.. 80 ஏக்கர் பரப்பளவில் கழிவறைகள் மற்றும் மின்னணு சாதனங்களுக்கான 500 சார்ஜிங் பாயின்ட்கள் போன்ற அத்தியாவசிய வசதிகளையும் தப்லீக் ஜமாஅத் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
சகோதர சமுதாயத்தை கவர்ந்த இஜ்தேமா:
மொத்தம் நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த இஜ்தேமாவில் இலட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட போதும், எந்தவித சலசலப்பும், பதற்றமும் நிகழவில்லை. மக்கள் ஒழுக்கமாக வந்து அமைதியாக அறிவுரைகளை கேட்டுச் சென்றனர். மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், எந்தவித ஆடம்பரமும் இங்கு செய்யப்படவில்லை. 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் இஜ்தேமாவில் கலந்துகொண்டதால், அப்பகுதியில் சிறிய வணிகர்கள் திரண்டு நான்கு நாட்கள் தங்களுடைய சிறிய கடைகளை அமைத்து, வணிகத்தில் ஈடுபட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த இந்து மக்கள் ஆவார்கள்.
இஜ்தேமா குறித்தும், முஸ்லிம்கள் தங்களிடம் நடந்துகொண்ட முறை குறித்தும் கருத்து கூறியுள்ள இந்து வணிகர் அஜய், "எங்களிடம் முஸ்லிம்கள் யாரும் பெயர் கேட்கவில்லை. எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று வினா எழுப்பவில்லை. நாங்கள் அமைதியாக வணிகம் செய்த அனுமதி அளித்து நல்ல ஒத்துழைப்பையும் வழங்கினார்கள். எங்களிடம் யாரும் பேரம் பேசவில்லை. நாங்கள் சொன்ன விலைக்கு பொருட்களை வாங்கிச் சென்றார்கள். இதனால், எங்களுக்கு கூடுதல் வருவாய் கிடைத்தது. அத்துடன் அதிகமான பொருட்களை நாங்கள் விற்பனை செய்தோம். முஸ்லிம்கள் இப்படி எங்களிடம் நடந்துகொண்ட செயல் எங்களை மிகவும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. முஸ்லிம்கள் அமைதியானவர்கள். அன்பானவர்கள் என்பதை நாங்கள் இந்த இஜ்தேமா மூலம் அறிந்துகொண்டோம்" என்று அந்த சிறு வணிகர் கூறிய வார்த்தைகளின் காணொலி சமூக வலைத்தளங்களில் பரவி, முஸ்லிம்களின் பண்பும், அரவணைப்பும் உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
தலைநகர் டெல்லி உட்பட நாட்டின் சில பகுதிகளில் 'முஸ்லிம் வணிகர்கள் தங்களை பெயர்களை கடைக்கு முன்பு எழுதி வைக்க வேண்டும். இந்துக்கள் இந்து வணிகர்களிடம் மட்டுமே பொருட்களை வாங்க வேண்டும். இந்து வழிப்பாட்டுத்தலங்கள் பகுதிகளில் முஸ்லிம்கள் வணிகம் செய்யக் கூடாது' என இந்துத்துவ அமைப்புச் சேர்ந்தவர்கள் மிரட்டி வரும் நிலையில், போபாலில் நடைபெற்ற மாபெரும் தப்லீக் ஜமாஅத் இஜ்தேமாவில், இந்து வணிகர்களை முஸ்லிம்கள் ஒதுக்கவில்லை. அவர்களை மிரட்டவில்லை. அவர்களிடம் அன்பாக பழகி, அவர்கள் கூறிய விலைக்கு பொருட்களை வாங்கிச் சென்றனர். இது முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய கண்ணியத்தைக் கொடுக்கும் வகையில் இருந்தது. முஸ்லிம்களின் இந்த செயல்பாடுகள், பண்புகள் இந்து வணிகர்கள் மத்தியில், எப்போதும் பேசும் அளவுக்கு உயர்ந்து நின்றது. இப்படி ஒரு அற்புதத்தை போபாலில் நடைபெற்ற 77-வது தப்லீக் ஜமாஅத் இஜ்தேமா அமைதியாக செய்துக் காட்டியுள்ளது.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment