நாட்டில் சிறுபான்மையின மக்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது....!
மதச்சார்பின்மை உள்ளிட்ட தத்துவங்கள் நாட்டில் காணாமல் போய்விட்டன..!!
சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த ஒன்றிய பா.ஜ.க. அரசு மறுக்கிறது...!!!
அரசியலமைப்பு சட்டத்தின்படி செயல்பட்டாமல் மட்டுமே, நாடு சரியான திசையை நோக்கிச் செல்லும்...!!!!
மாநிலங்களவையில் இ.யூ.முஸ்லிம் லீக் உறுப்பினர் வழக்கறிஞர் ஹாரிஸ் பீரான் பேச்சு:
புதுடெல்லி, டிச.19- ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில் நாட்டில் உள்ள சிறுபான்மையின மக்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழ்நிலை இருப்பதாக மாநிலங்களவை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் வழக்கறிஞர் ஹாரிஸ் பீரான் குற்றம்சாட்டியுள்ளார்.
மாநிலங்களவையில் கடந்த செவ்வாய்கிழமை (17.12.2024) அன்று இந்திய அரசிலமைப்புச் சட்டம் ஏற்கப்பட்டு, 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஓட்டி, விவாதம் நடைபெற்றது. இதில், இ.யூ.முஸ்லிம் லீக் உறுப்பினர் வழக்கறிஞர் ஹாரிஸ் பீரான் கலந்துகொண்டு பேசினார். அவர் ஆற்றிய உரையின் முழு விவரம் வருமாறு:
சிறந்த அரசிலமைப்பு சட்டம்:
அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க கடும் முயற்சிகளை எடுத்துக் கொண்டு அரசியலமைப்பு சட்டக் குழு உறுப்பினர்கள் மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகளை இந்த நேரத்தில் நான் நினைவு கூறுகிறேன். குறிப்பாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவனர் காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்களையும் அவர் இந்த அவையில் உறுப்பினராக இருந்து ஆற்றிய பணிகளையும் தற்போது நினைவுக் கூர்ந்து எடுத்துக் கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
உலகிலேயே மிகச் சிறந்த அரசிலமைப்பு சட்டம் எது என்று கேள்வி எழுப்பினால், அது நமது (இந்தியா) சட்டம் என்று உறுதியாக கூறலாம். ஆனால், ஒரு முக்கிய கேள்வி என்னவென்றால், அரசியலமைப்பு சட்டத்தின் படி மக்களுக்கு உண்மையான நீதி கிடைக்கிறதா என்பதாக இருக்கிறது.
உண்மையான தத்துவம் காணாமல் போய்விட்டது:
உலகின் பல நாடுகளுடன் இந்தியாவை ஒப்பீட்டால், பன்முகத்தன்மையில் இந்தியா மிகச் சிறந்து விளங்குகிறது. ஆனால், இந்தியாவின் உண்மையான தத்துவம் அதாவது வேற்றுமையில் ஒற்றுமை என்ற பன்முகத்தன்மை தற்போது நாட்டில் காணாமல் போய் விட்டது.
மதச்சார்பின்மை அரசியலமைப்பின் முக்கிய அடிப்படை தூணாக இருந்து வருகிறது. கடந்த காலங்களில் நாம் மதச்சார்பின்மை கொள்கையில் மிகவும் உறுதியாக இருந்து வந்தோம். ஆனால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடியுரிமைத் திருத்தச் சட்டம் ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்டபோது, மதர்ச்சான்பின்மை கொள்கையில் முறிவு ஏற்பட்டது. மத அடிப்படையில் குடியுரிமை வழங்கப்படும் என பா.ஜ.க. அரசின் செயல்திட்டம், அரசியலமைப்பிற்கு எதிரானது.
இதேபோன்று மற்றொரு சட்டமான, வழிப்பாட்டுத்தலங்கள் சட்டம் பல்வேறு அடிப்படை உரிமைகளை கொண்ட சட்டமாக உள்ளது. ஆனால் இந்த சட்டம் நாட்டில் முறையாக அமல்படுத்தப்படவில்லை.
சிறுபான்மையின மக்களின் உரிமை பறிப்பு:
நாட்டில் சிறுபான்மையின மக்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலை உருவாகியுள்ளது. மணிப்பூரில் அமைதி சீர்குலைந்து, மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். சிறுபான்மையின மக்களுக்கு எதிராக புல்டோசர் நீதி அளிக்கப்படுகிறது. இவை அனைத்தும், அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானவை.
அரசியலமைப்பு சட்டத்தில் பன்முகத்தன்மை ஒரு முக்கிய கட்டமைப்பாக உள்ளது. நான் கேரளாவில் இருந்து வருகிறோன். கேரள மாநில அரசு, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு மாநில ஆளுநர் ஒப்புதல் வழங்க மறுக்கிறார். இந்த செயல் நாட்டின் பன்முகத்தன்மைக்கு வேட்டு வைக்கும் செயலாகும்.
ஓரே நாடு, ஓரே தேர்தல்:
மக்களவையில் ஓரே நாடு, ஓரே தேர்தல் மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது அரசியலமைப்புக்கு விரோதமானது. சமூக நீதியை எடுத்துக் கொண்டால் இடஒதுக்கீடு பிரச்சினையில் அநீதி இழைக்கப்படுகிறது. அரசியலமைப்பு சட்டம் 16 (4) மிகவும் பின்தங்கியுள்ள மக்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என தெளிவாக கூறுகிறது. முறையாக இட ஒதுக்கீடு வழங்கினால், அவர்களுக்கு உரிய நீதி கிடைக்கும், எனவே அதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது மிகவும் அவசியமாகும். ஆனால் இந்த அரசு (பா.ஜ.க. அரசு)சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மறுக்கிறது. கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இது அரசியலமைப்பு சட்டத்தின் மேல் நடத்தப்பட்ட பெரிய தாக்குதலாகும்.
சுதந்திரமான நீதி அமைப்பு:
சுதந்திரமான நீதி அமைப்பு அரசியலமைப்பு சட்டத்தின் ஒரு முக்கிய அடிப்படை அம்சமாக உள்ளது. ஆனால், உச்சநீதிமன்ற நீதிபதிகள் உட்பட அனைத்து நீதிபதிகளும், ஒருவித அச்சத்துடன் இருக்கும் நிலை தற்போது உருவாகியுள்ளது. நீதி வழங்குவது தொடர்பாக அவர்கள் தங்களை நியாயப்படுத்தும் வகையில் இருந்து வருகிறார்கள். நீதி வழங்குவது என்பது அரசியலமைப்பு சட்டத்தின்படி தான் இருக்க வேண்டும். மன ரீதியாக நீதி வழங்குவது இருக்கக் கூடாது. இதனால் அரசியலமைப்பு சட்டம் மிகவும் வருத்தம் அளிக்கும் வகையில் சென்றுக் கொண்டு இருக்கிறது என நாங்கள் விமர்சனம் செய்கிறோம்.
மக்களின் பாதுகாப்பு:
அரசியலமைப்பு சட்டம் அனைத்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இருக்க வேண்டும். வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிக்க சட்டம் வழி வகை செய்துள்ளது. ஆனால் அந்த உரிமையை நாம் இன்னும் வழங்கவில்லை. நாட்டில் அனைத்து மக்களுக்கும் உரிய நீதி கிடைக்கவில்லை. எனவே, அரசியலமைப்பு சட்டத்தின் படி நாம் செயல்பட வேண்டும். அதன்மூலம் மட்டுமே, அரசியலமைப்பு சட்டம், அடுத்த வரும் ஆண்டுகளில் சரியான திசையை நோக்கிச் செல்ல முடியும் என்பதை கூறிக் கொள்கிறேன்.
இவ்வாறு வழக்கறிஞர் ஹாரிஸ் பீரான் பேசினார்.
சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment