Tuesday, December 10, 2024

மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் பேசிய நீதிபதி...!

 

மத ஒற்றுமையை சீர்குலைத்து, கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசிய அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ்:

வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் கண்டனம், பதவி நீக்கம் செய்ய உச்சநீதிமன்றத்தில் முறையீடு

உலகிலயே மிகச் சிறந்த நாடு, நம் இந்திய நாடு என்று சொன்னால் அது மிகையாகாது. பல்வேறு கலை, கலாச்சாரம், பண்பாடு, பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறையில் வெவ்வேறு மாற்றங்கள், உணவு முறையிலும், மிகப்பெரிய அளவுக்கு வேறுபாடுகள் கொண்ட சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமூகங்கள் வாழும் ஒரு அற்புதமான நாடு நம் இந்திய நாடு. வாழ்க்கை முறையிலும், கலாச்சார பழக்க வழக்கங்களிலும் மிகப்பெரிய அளவுக்கு மாற்றங்கள் இருந்ததாலும், இந்திய நாடு எப்போதும் சகோதரத்துவம் கொண்ட ஒரு மதசார்பற்ற நாடாகவே இருந்து வருகிறது.

இந்திய மக்கள் ஒருவர் மீது ஒருவர் அன்பைச் செலுத்தி, அமைதியாக வாழ்வதை மிகவும் விரும்புகிறார்கள். அந்த திசையில் செல்வது மூலம் மட்டுமே, நாட்டில் ஒற்றுமையும் அமைதியும் எப்போதும் இருக்கும் என நம்பிக்கை கொள்ளும் மக்கள் கொண்ட இந்திய நாட்டில், கடந்த 11 ஆண்டுகளாக நிலைமை மெல்ல மெல்ல தவறான வழியை நோக்கிச் சென்றுக் கொண்டு இருக்கிறது.

ஒற்றுமை, அமைதியை சீர்குலைத்துவிட்டு:

ஒன்றியத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபிறகு, நாட்டில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. மக்களிடையே ஒற்றுமையை சீர்குலைத்துவிட்டு, அமைதியை பறிக்கும் செயல்கள் தொடர்ந்து நாட்டில் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, நாட்டில் வாழும் 25 கோடிக்கும் அதிகமான இந்த மண்ணின் மைந்தர்களான முஸ்லிம்களை குறிவைத்து, ஒரு பாசிச கும்பல் தொடர்ந்து வெவ்வேறு வடிவங்களில் தாக்குதல்களை நடத்திக் கொண்டே வருகிறது. மஸ்ஜித்துகள் மீது தாக்குதல், முஸ்லிம் இளைஞர்கள், குழந்தைகள் மீது தாக்குதல், மன ரீதியாக துன்புறுத்துதல்கள் என தொடர்ந்து முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. நாள்தோறும் அதுதொடர்பான செய்திகள் ஊடகங்களில் வந்துக் கொண்டே இருக்கின்றன.

இந்த செயல்களில் சாதாரண இந்துத்துவ அமைப்பு சேர்ந்தவர்கள் மட்டும் ஈடுபடவில்லை. உயர் பதவிகளில் உள்ளவர்கள் கூட, இத்தகைய கொடூமையான செயல்களை மறைமுகமாக அரங்கேற்றி வருகிறார்கள். தற்போது முக்கிய துறைகளில், இந்துத்துவ கொள்கையில் உறுதியாக இருப்பவர்கள் பதவிகளில் அமர்ந்து இருக்கிறார்கள். அவர்கள், இந்த நாடு பெரும்பான்மை மக்களின் நாடு, பெரும்பான்மை மக்கள் என்ன விருப்புகிறார்களே, அதுவே மற்றவர்களும் பின்பற்ற வேண்டும். அதுவே சட்டமாக மதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்து வருகிறார்கள்.

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியின் சர்ச்சை பேச்சு:

உத்தரப் பிரதேசத்தில் அண்மையில் நடந்த விஷ்வ இந்து பரிஷத் நிகழ்ச்சி ஒன்றில், அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் கலந்துகொண்டார். பிரக்யாக்ராஜில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ஹிந்துஸ்தான், பெரும்பான்மையினரின் விருப்பப்படி நாடு இயங்கும் ஒரு நாடு என சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார். மேலும், ஒரே மாதிரியான சிவில் சட்டம் (யுசிசி) குறித்து நீதிபதி சேகர் குமார் யாதவ் பேசும் போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார்., நாட்டில் வாழும் பெரும்பான்மை மக்களின் விருப்பப்படி இந்த நாடு இயங்கும் என்று கூறுவதில் தனக்கு எந்தத் தயக்கமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

"இதுதான் சட்டம்.... சட்டம். உண்மையில், பெரும்பான்மைக்கு ஏற்ப சட்டம் செயல்படுகிறது. குடும்பம் அல்லது சமூகத்தின் பின்னணியில் பாருங்கள்.  பெரும்பான்மையினரின் நலனுக்கும் மகிழ்ச்சிக்கும் என்ன நன்மைகள் கிடைக்கும், அது மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்" என்று நீதிபதி யாதவ் தெரிவித்தார்.

"மதம், பாலினம் அல்லது சாதி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், அனைத்து குடிமக்களுக்கும் பொருந்தும் தரப்படுத்தப்பட்ட தனிப்பட்ட சட்டங்களின் தொகுப்பை உருவாக்க, சீரான சிவில் சட்டம் (பொது சிவில் சட்டம்) நடைமுறைப்படுத்த நாடு முயல்கிறது. இது திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு, வாரிசுரிமை மற்றும் வாரிசு போன்ற அம்சங்களை உள்ளடக்கும். முஸ்லிம் சமூகத்தின் பெயரைக் குறிப்பிடாமல் பேசிய நீதிபதி, பல மனைவிகள், முத்தலாக், குல்லாஹ் மற்றும் ஹலால் போன்ற நடைமுறைகள் "ஏற்றுக்கொள்ள முடியாதவை" என்று கூறினார்.

“முஸ்லிம்கள் எங்கள் தனிச்சட்டம் அனுமதிக்கிறது என்று சொன்னால் அதை ஏற்க முடியாது. நம் சாஸ்திரங்களிலும் வேதங்களிலும் தெய்வமாக அங்கீகரிக்கப்பட்ட பெண்ணை அவமரியாதை செய்ய முடியாது. நான்கு மனைவிகள் இருக்க உரிமை கோர முடியாது. ஹலால் அல்லது மூன்று முறை தலாக் நடைமுறைப்படுத்துங்கள். பெண்களுக்கு பராமரிப்பு வழங்க முடியாது என்று அவர்கள் கூறுகிறார்கள் விஎச்பி, ஆர்எஸ்எஸ், அல்லது இந்து மதத்தின் வழக்கறிஞர்களும் இதைப் பற்றி பேசுகிறார்கள்" நீதிபதி சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார்.

முஸ்லிம்கள் குறித்து மறைமுகமாக விமர்சனம்:

இந்து மதத்தில் குழந்தை திருமணம் மற்றும் சதி போன்ற சமூக தீமைகள் உள்ளன என்பதை ஒப்புக்கொண்ட நீதிபதி, அதே கலாச்சாரம் மற்றும் மரபுகளை மற்ற சமூகங்கள் பின்பற்ற வேண்டும் என்று இந்துக்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவர்கள் (முஸ்லிம்கள்) "இந்த நாட்டின் கலாச்சாரம், சிறந்த ஆளுமைகள் மற்றும் இந்த மண்ணின் கடவுளை அவமதிக்க மாட்டார்கள் என்று அவர்கள் (இந்துக்கள்) நிச்சயமாக எதிர்பார்க்கிறார்கள்" என்றும் அவர் கூறினார்.

“நம் நாட்டில், சிறிய விலங்குகளைக்கூடத் துன்புறுத்தக் கூடாது. எறும்புகளைக் கொல்லக் கூடாது என்று கற்பிக்கப்படுகிறது, இந்தப் பாடம் நமக்குள் பதிந்திருக்கிறது. ஒருவேளை அதனால்தான் நாம் சகிப்புத்தன்மையுடனும் இரக்கத்துடனும் இருக்கிறோம். மற்றவர்கள் கஷ்டப்படும் போது நாம் வலியை உணர்கிறோம். ஆனால் உங்கள் (முஸ்லிம்) கலாசாரத்தில் சிறு வயது முதலே குழந்தைகள் மிருகவதைக்கு ஆளாகின்றனர். அவர்கள் சகிப்புத்தன்மையுடனும் இரக்கத்துடனும் இருப்பார்கள் என்று நீங்கள் எப்படி எதிர்பார்க்கிறீர்கள்? என்றும் நீதிபதி சர்ச்சைகுரிய முறையில் கேள்வி எழுப்பினார்.

நாடு தழுவிய பொது சிவில் சட்டத்துக்கான நம்பிக்கையை வெளிப்படுத்தும் போது, ​​அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு நேரம் எடுத்ததாகவும், "ஒரு நாடு என்றால், அனைவருக்கும் ஒரே சட்டம் இருக்க வேண்டும் என்பது தெளிவாகும் நாள் வெகு தொலைவில் இல்லை" இப்படி நீதிபதி சேகர் குமார் யாதவ் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறினார். இப்படி அவர் கூறுவது இது முதல்முறை இல்லை. 2021ஆம் ஆண்டு   நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் "ஆக்சிஜனை வெளியேற்றும் ஒரே விலங்கு பசு என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்"  என்று குறிப்பிட்டார். மேலும், பசுவை தேசிய விலங்காகவும், பசுப் பாதுகாப்பை "இந்துக்களின் அடிப்படை உரிமையாக" அறிவிக்கவும் வலியுறுத்தினார். விஷ்வ இந்து பரிஷத் நடத்திய நிகழ்ச்சியில் மற்றொரு உயர்நீதிமன்ற நீதிபதி தினேஷ் பதக்கும் உடனிருந்தார்.

கபில்சிபல் உள்ளிட்டோர் எதிர்ப்பு:

நீதிபதி சேகர் குமார் யாதவ் கூறியுள்ள சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கபில் சிபல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நீதிபதியாக பொறுப்பில் உள்ள ஒருவர், மத நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது சரியல்ல என்றும், கலந்துகொண்ட நிகழ்ச்சியில் கூட, நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் கருத்துகளை கூறுவது ஏற்றக் கொள்ள முடியாது என்றும் அவர் கடும் விமர்சனம் செய்துள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இந்த விவகாரத்தில் உடடினயாக தலையிட்டு, நீதிபதி சேகர் குமார் யாதவ்வை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் சிபல் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்  அசதுத்தீன் ஒவைசி உள்ளிட்ட பலரும் நீதிபதி யாதவ் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நீதிபதி யாதவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்களவையில் தீர்மானம் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய பார் கவுன்சில், வழக்கறிஞர்கள் சங்கம் என பல்வேறு அமைப்புகளும் யாதவ்விற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.

வெறுப்புப் பேச்சுக்காக இந்த நீதிபதி மீது வழக்கு தொடர வேண்டும் என்றும், பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் மற்றொரு உச்சநீதிமன்ற பெண் வழக்கறிஞர் கருணா நந்தி வலியுறுத்தியுள்ளார். நாட்டின் ஒற்றுமை மற்றும் அமைதியில் அக்கறை கொண்ட சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோரும், மத ஒற்றுமையை சீர்குலைத்து, கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசிய அல்லது பேசும் நீதிபதிகளை உச்சநீதிமன்றம் களை எடுக்குமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்  

No comments: