Monday, December 2, 2024

மஸ்ஜித் இமாமின் மகள் நீதிபதியான கதை...!

பீகாரில் மஸ்ஜித் இமாமின் மகள் நீதிபதியான கதை...!

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் மத்தியில் தற்போது கல்வி குறித்த நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இந்திய முஸ்லிம்களிடையே கல்வி தொடர்பான பார்வை விரிவு அடைந்து வருகிறது. வாழ்க்கையில் வறுமையை வெல்ல வேண்டுமானால் நல்ல கல்வியறிவு மிகவும் அவசியம் என்ற எண்ணம் இஸ்லாமியர்கள் மத்தியில் தற்போது பிறந்துள்ளது. இதன் காரணமாக வறுமையிலும் தங்களுடைய குழந்தைகளுக்கு நல்ல கல்வியை தர பெற்றோர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். 

நாட்டில் சிறுபான்மையின மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமாக இருக்கும் நிலையில் கூட, பல்வேறு நெருக்கடிகளையும் எதிர்கொண்டு, இந்தியாவில் வாழும் 25 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள், கல்வி மீது தற்போது தனி கவனம் செலுத்தி வருகிறார்கள். அதற்கு முக்கிய காரணம், இஸ்லாத்தில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்பதை தற்போது சமுதாயம் உணரத் தொடங்கியுள்ளது. ஆண், பெண் ஆகிய அனைவரும் நல்ல கல்வியை பெற வேண்டும் என இஸ்லாமிய மார்க்கம் ஊக்குவிக்கிறது. 'சீன தேசம் சென்று கூட, நல்ல கல்வியை பெறுங்கள்' என இஸ்லாம் வலியுறுத்துகிறது. 

கல்விதான் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும். வாழ்க்கையில் புதிய அத்தியாயங்களை தொடங்க வழி வகுக்கும். கல்வி பெற்ற பலர் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவுக்கு சாதித்து இருககிறார்கள். நல்ல கல்வி பெற்று வேலைவாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் இளைஞர்களில் சிலர் கூட, தங்களுடைய கல்வியறிவு மூலம் சுயத் தொழில் தொடங்கி அதன்மூலம் தங்களுடைய பொருளாதார தேவைகளை பூர்த்திசெய்து வருகிறார்கள். அத்துடன் மற்றவர்களுக்கும் வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறார்கள். இதன்மூலம் கல்வியின் முக்கியத்துவத்தை நாம் அறிந்துகொள்ள முடியும். 

கல்வி குறித்த விழிப்புணர்வு:

இந்திய முஸ்லிம்கள் மத்தியில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கல்வி குறித்து நல்ல புரிதல் இல்லாமல் இருந்தது. எனவே அவர்கள் கல்வியில் மிகப்பெரிய அளவுக்கு ஆர்வம் செலுத்தவில்லை. ஆனால், மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபிறகு, இஸ்லாமியர்கள் நல்ல கல்வி பெறுவதை விரும்பவில்லை என்ற எண்ணம், இந்துத்துவ அமைப்புகளின் செயல்பாடுகள் மூலம் முஸ்லிம்களுக்கு புரிய ஆரம்பித்தது. முஸ்லிம்களுக்கான கல்வி உதவித்தொகை நிறுத்தம், உர்தூ மொழியை  அழிக்க சதி வேலைகள் என பல செயல்பாடுகள் நாட்டில் அரங்கேறி வரும் நிலையில், அதனை நன்கு உணர்ந்துகொண்ட சமுதாயம், தற்போது கல்வி மூலம் மட்டுமே, தங்களுக்கு எதிரான சதிகளை உடைக்க முடியும் என்பதை நன்கு அறிந்துகொண்டுள்ளது. 

அதன் காரணமாக, இந்திய முஸ்லிம்கள் தற்போது நல்ல கல்வி பெற தனிக் கவனம் செலுத்தி வருகிறார்கள். பல்வேறு போட்டித் தேர்வுகளில் கலந்துகொண்டு முஸ்லிம் மாணவ மாணவியர்  மற்றும் இளைஞர்கள் சாதித்து வருகிறார்கள். அறிவியல் துறையிலும் இஸ்லாமிய இளைஞர்களின் கவனம் தற்போது செல்லத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக இஸ்ரோ உள்ளிட்ட அமைப்புகளில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. நீதித்துறையிலும் இஸ்லாமிய இளைஞர்கள் சாதித்து வருகிறார்கள். அதற்கு பல எடுத்துக்காட்டுகள் நாட்டில் இருந்து வருகின்றன. அவற்றில் ஒன்று தான், பீகார் மாநில மஸ்ஜித்தில் இமாமாக சேவை ஆற்றும் ஒருவரின் மகள் நீதிபதியாக  உயர்ந்து இருப்பதை குறிப்பிடலாம். 

மஸ்ஜித்  இமாமின் மகள் நீதிபதி:

பீகாரின் முங்கர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹபீபா புகாரி, அங்குள்ள மஸ்ஜித் ஒன்றில் இமாமாக  சேவை ஆற்றும் மவுலவியின் மகளாவார். இதன்மூலம் பீகாரின் கிராமப்புற மையத்தில் மற்றொரு அமைதியான புரட்சி ஏற்பட்டுள்ளது. முங்கரின் முக்கிய மஸ்ஜித்துகளில் ஒன்றில் தான்  ஹபீபா புகாரியின் தந்தை இமாமாக இருந்து வருகிறார். பல்வேறு நெருக்கடிகள், பல்வேறு சவால்கள், பல்வேறு தடைகள், ஏராளமான விமர்சனங்கள், பல்வேறு சூழ்ச்சிகள் என அனைத்தையும் உடைத்ததுடன் மட்டுமல்லாமல், அனைத்து சமூக இடஒதுக்கீடுகளையும் தகர்த்து, பீகார் நீதித்துறை சேவை தேர்வில் 30வது ரேங்க் எடுத்துள்ளார் சாதனை மாணவி ஹபீபா புகார். ஏழ்மை மற்றும் பொருளாதார நெருக்கடிகள்  இருந்தபோதிலும் பெரிய கனவு காணும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஹபீபா புகாரியின் கதை ஒரு பிரகாசமான நம்பிக்கை ஒளியாகும்.

ஹபீபாவைப் பொறுத்தவரை, சாதனை என்பது கடின உழைப்பு மட்டுமல்ல, கல்வியின் சக்தி மற்றும் கனவு காணும் தைரியம் பற்றியததாக உள்ளது. பீகாரில் உள்ள குறைந்த வளங்களைக் கொண்ட கிராமப்புற அமைப்பில் வளர்ந்ததால், அவரது சவால்கள் பெரும்பாலானவர்கள் கற்பனை செய்வதை விட அதிகமாக இருந்தன. ஆனாலும், ஹபீபா மிகப்பெரிய வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளார். .

அவருடைய தந்தை, ஒரு மரியாதைக்குரிய இமாம். சாதாரண வருவாய் உள்ள மனிதர். இருந்தும், தம்முடைய மகளின் திறனை அவர் நம்பினார். நிதி நெருக்கடிகள் மற்றும் சமூக எதிர்பார்ப்புகள், சமூக எதிர்ப்புகள் இருந்தபோதிலும், இமாம், தனது மகளின் கல்விக்கு முன்னுரிமை அளித்தார். இந்த அசைக்க முடியாத ஆதரவு ஹபீபாவின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது.

சவால்களை சமாளித்தல்:

கிராமப்புற பீகாரில் வாழ்க்கை எளிதானது அல்ல. குறிப்பாக சிறுமிகளுக்கு. முறையான கல்வி வசதிகள் இல்லாதது. அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு, சமூக அழுத்தங்கள் ஆகியவை பெரும்பாலும் கடக்க முடியாத தடைகளை உருவாக்குகின்றன. ஆனால் ஹபீபா அவர்களை எதிர்கொண்டு தனது நல்ல கனவியின் மூலம் இலட்சியத்தை அடைந்து தற்போது உயர்ந்துள்ளார். 

அவர் தனது நேரத்தை சரியான முறையில் பயன்டுத்திக் கொண்டார். சரியான திட்டமிடல் காரணமாக, மங்கலான விளக்குகளின் கீழ் இரவு வெகுநேரம் வரை படித்தார்.  மேலும் தன் வசம் உள்ள ஒவ்வொரு வளத்தையும் நல்ல முறையில் பயன்படுத்தினார். உயர்தர பயிற்சி மையங்களுக்கு அணுகல் இல்லாமல், அவர் சுய படிப்பு மற்றும் இலவச ஆன்லைன் பொருட்களை நம்பி கல்வியில் தனது கவனத்தை செலுத்தினார்.  அவருடைய விடாமுயற்சி பல  வரம்புகளை வாய்ப்புகளாக மாற்றியது.

கனவுகள் மற்றும் கல்வியின் சக்தி:

ஹபீபாவின் கதை, கல்வியின் முக்கியத்துவம், மற்றும் கல்வி வாழ்க்கையை எப்படிப்பட்ட மாற்றும் சக்தி கொண்டது என்பதை அறிந்துகொள்வதற்கு ஒரு சக்திவாய்ந்த சிறந்த சான்றாகும். சிறுவயதில், சட்டம் மற்றும் நீதி வழங்குவதில் அதன் பங்கு பற்றி ஹபீபா ஆர்வமாக இருந்துள்ளார்.  அந்த ஆர்வம் அவரை  நீதித்துறையில் சேர தூண்டியது. அவருடைய பெற்றோர், குறிப்பாக அவருடைய தந்தை, 'மகளுக்கு நல்ல கல்வி தர வேண்டும். அதன்மூலம் மகளை பாதுகாக்க வேண்டும்' என்ற முழக்கத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டு இருந்தார். இந்த உணர்வை வெளிப்படுத்தி, தனது மகளின் கல்விக்குத்  தந்தை மட்டுமல்லாமல், தாயும் துணையாக நின்றார்கள். பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் அவர்களின் நம்பிக்கை வெறும் முழக்கம் அல்ல அது ஒரு தேவை என்பதை இமாம் நன்கு அறிந்து இருந்தார். இதன் காரணமாக தனது மகள் ஹபீபாவின் இலட்சியப் பாதைக்கு துணையாக எப்போதும் இருந்து வந்தார். 

பீகார் நீதித்துறை சேவைகள் தேர்வு, மாநிலத்தில் மிகவும் கடினமான ஒன்றாகும். இது பரந்த சட்ட அறிவு, பகுப்பாய்வு திறன் மற்றும் பல மாதங்கள் ஒழுக்கமான தயாரிப்பு ஆகியவற்றைக் கோருகிறது. ஹபீபாவைப் பொறுத்தவரை, உயரடுக்கு பயிற்சி இல்லாமல் பயணம் இன்னும் கடினமாக இருந்தது. சட்டக் கருத்துகள், வழக்கு ஆய்வுகள் மற்றும் நடப்பு விவகாரங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி விரிவான ஆய்வு அட்டவணையை அவர் உன்னிப்பாகத் தயாரித்தார். கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் அவரது உறுதியை வலுப்படுத்தியது மட்டுமல்லாமல்,   அவரது இலக்கை நெருங்கி அழைத்துச் சென்றது. 

சமுதாயத்திற்கு பெருமை சேர்த்த ஹபீபா:

ஹபீபா புகாரியின் வெற்றி அவரது குடும்பத்தின் பெருமை மட்டுமல்ல, முஸ்லிம் சமுதாயத்திற்கும்,  ஒட்டுமொத்த பீகார் மாநிலத்திற்கும் பெருமை சேர்க்கும் தருணமாகும்.  உறுதியான ஒரு பெண்ணால் முடியாதது எதுவுமில்லை என்பதை அவரது வெற்றி நிரூபிக்கிறது. ஹபீபாவின் பயணம் குறிப்பாக, கிராமப்புறங்களில் பெண்களுக்கு சம வாய்ப்புகள் தேவை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. கல்வியின் மூலம் பெண்களை மேம்படுத்துவது மகத்தான சமூக நன்மைகளை அளிக்கிறது என்பதை அவரது வெற்றி நிரூபிக்கிறது.

ஹபீபா புகாரியின் நம்பமுடியாத கதை, ஒவ்வொரு பெண்ணின் திறனையும் பெரிதாகக் கனவு காணவும், மேலும் ஆதரிக்கவும், நம்பவும் நம்மைத் தூண்டுகிறது. கடின உழைப்பும் உறுதியும் எந்த சவாலையும் சமாளிக்கும் என்பதற்கு ஹபீபா புகாரியின் வெற்றியே சான்றாக உள்ளது. இதேபோன்று, மற்றொரு இமாம் ஷர்ஜீல்  இமாமின் சகோதரியும் பீகாரில் நீதிபதியாகிறார். இவை  சமுதாயத்திற்கு பெருமையும் மகிழ்ச்சியும் அளிக்கும் செய்திகளாகும். இதுபோன்ற சாதனைகளை நிகழ்த்த, இஸ்லாமிய பெண்கள் நல்ல கல்வி பெற்று வாழ்க்கையில் உயர்ந்த இலட்சியம் அடைய வேண்டும். அதற்கு ஏக இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: