Wednesday, December 11, 2024

தமிழ்நாடு உர்தூ அகடமி நேரில் மனு...!

தமிழக அரசு கல்லூரிகளில் நீண்ட காலமாக காலியாக உள்ள உர்தூ பேராசிரியர், உதவி பேராசிரியர் மற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் பணியிடங்களை உடனே நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்...!

உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியனிடம் தமிழ்நாடு உர்தூ அகடமி நேரில் மனு அளிப்பு...!!

சென்னை, டிச.12-தமிழகத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் நீண்ட காலமாக காலியாக உள்ள உர்தூ பேராசிரியர், உதவி பேராசிரிய மற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் பணியிடங்கள் இதுவரை நிரப்பப்படவில்லை. இதுதொடர்பாக பல்வேறு முறை அரசின் கவனத்திற்கு தமிழ்நாடு உர்தூ அகடமி நிர்வாகிகள் கொண்டு சென்றனர். மேலும், உர்தூ ஆர்வலர்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் கூட, நிரப்பப்படாமல் உள்ள உர்தூ பேராசிரியர் உள்ளிட்ட அனைத்துப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். 

அமைச்சருடன் சந்திப்பு:

இந்நிலையில், தமிழ்நாடு உர்தூ அகடமியின் துணைத் தலைவர் முஹம்மத் நயீமூர் ரஹ்மான் தலைமையில் குழு ஒன்று சென்னை தலைமைச் செயலகத்தில் 10.12.2024 அன்று மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியனை நேரில் சந்தித்தனர். அப்போது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் உள்ள உர்தூ பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களை உடனே நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து விவரமான மனு ஒன்றையும் அளித்தனர். 

அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்:

உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியனிடம் அளிக்கப்பட்ட மனுவில், இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றது குறித்த அனைத்து விவரங்கள் புள்ளிவிவரங்களுடன் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. மேலும், தமிழகத்தில் உள்ள அரசு  கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள கவுரவ விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர் பணியிடங்கள் ஆயிரத்து 895 நிரப்பப்படும் என கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் 25 அன்று அரசு அரசாணையை வெளியிட்டது தொடர்பாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த அரசாணையில் உர்தூ  துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக எந்த அறிவிப்பும் குறிப்பிடப்படவில்லை.  இந்த அரசாணை வெளியிட்ட பிறகு கூட, அரசு காலியாக உள்ள உர்தூ பேராசிரியர்கள் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. 

உர்தூ மொழி பேசும் மக்கள்:

தமிழகத்தில் பல ஆண்டுகளுக்கும்  மேலாக உர்தூ மொழி பேசும் மக்கள் மிகப்பெரிய அளவில் வாழ்ந்து வருகிறார்கள். எனவே மாநிலத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உர்தூ துறை இயங்கி வருகிறது. மேலும் மாநிலத்தில் 600க்கும் மேற்பட்ட உர்தூ மொழி போதிக்கும் நடுநிலைப் பள்ளிகள் இயங்கி வந்த நிலையில், அதன் எண்ணிக்கை தற்போது 278 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் உர்தூ மொழி பேசும் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று கல்லுரிகளில் சேர முடியாத நிலை உள்ளது. 

உர்தூ மொழி துறைக்கான பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்கள் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் உள்ளதால், உர்தூ மொழி படித்த மாணவர்கள் பி.ஏ., எம்.ஏ., எம்.பிஃல், பி.எச்.டி. உள்ளிட்ட உயர் கல்வியை பெற முடியாத கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  சென்னையில் உள்ள காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியில் பணிபுரிந்த உர்தூ பேராசிரியர் ஓய்வுபெற்ற பிறகு, அந்த பணியிடம் இதுவரை நிரப்பப்படவில்லை. இதேபோன்று மாநிலத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருக்கும் உர்தூ துறைக்கான பணியிடங்கள் இன்னும் காலியாகவே உள்ளன. இதனால், உர்தூ மொழி பேசும் மாணவர்கள், மற்றும் மக்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். 

பரிசீலனை செய்ய கோரிக்கை:

நீண்ட காலமாக நிரப்பப்படாமல் உள்ள உர்தூ பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசு பரிசீலனை செய்ய வேண்டும். அதற்காக உரிய நடவடிக்கை எடுத்து உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். இப்படி ஒரு நடவடிக்கையை அரசு எடுத்தால், உர்தூ மொழி பேசும் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள். மேலும், உர்தூ மொழி மாணவர்கள் உயர்கல்வி பெற எந்தவித தடையும் ஏற்படாது. தமிழகத்தில் உர்தூ மொழி மேன்மை அடைந்து, உர்தூ மொழியில் கல்வி பெறும் மாணவர்கள் வேலைவாய்ப்புகளையும் பெற வாய்ப்பு உருவாகும். எனவே உயர்கல்வித்துறை அமைச்சர் இந்த பிரச்சினையை தீவிரமாக எடுத்துக் கொண்டு, உர்தூ மொழி பேசும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு கல்லூரிகளில் காலியாக உர்தூ பேராசிரியர், உதவி பேராசிரியர் மற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிட்ட பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்றும் அந்த மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

========================

No comments: