18 வயதில் கமர்ஷியல் பைலட் லைசென்ஸ் பெற்று முஸ்லிம் இளம் பெண் சமைரா ஹுல்லூர் சாதனை...!
இஸ்லாமிய பெண்கள் தற்போது அனைத்து துறைகளிலும் நன்கு கோலோச்சி சாதனை புரிந்து வருகிறார்கள். பல்வேறு சவால்கள், தடைகளை எதிர்கொண்டு, ஆகியவற்றை உடைத்து விட்டு, இஸ்லாமிய மார்க்கம் வழங்கிய உரிமைகளுக்கு ஏற்ப, தங்களுடைய திறமைகளை வளர்த்துக் கொண்டு, அவற்றை நன்கு வெளிச்சத்திற்கு கொண்டு வந்து, தங்கள் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும், நாட்டிற்கும் சேவை ஆற்றி வருகிறார்கள்.
அறிவியல், விண்வெளி, பொருளாதாரம், நீதி, கல்வி, வரலாறு, விளையாட்டு என பல முக்கிய துறைகளில் முஸ்லிம் பெண்கள், மார்க்கக் கட்டுப்பாட்டுடன், நன்கு செயல்பட்டு, சாதனை புரிந்து வருவது உண்மையிலேயே பெருமையும், மகிழ்ச்சியும் அளிக்கிறது. முஸ்லிம் பெண்கள் கல்வியில் ஆர்வம் செலுத்தி, நன்கு படித்து தேர்ச்சிப் பெற்று, பின்னர் முன்னணி துறைகளில் சாதித்து வருவது, மற்ற பெண்களுக்கும் ஒரு உந்துதல் தருகிறது என்றே கூறலாம்.
இளம் வயதில் பைலட் லைசென்ஸ் பெற்ற சமைரா:
கர்நாடகா மாநிலம் பெங்களூரு விஜயபுராவைச் சேர்ந்த சமைரா ஹுல்லூர் என்ற முஸ்லிம் பெண், தனது 18வது வயதில் கமர்ஷியல் பைலட் லைசென்ஸ் பெற்றுள்ளார். சமைரா ஹுல்லூர் புது தில்லியில் உள்ள வினோத் யாதவ் ஏவியேஷன் அகாடமியில் பயிற்சி பெற்றார். பின்னர் மகாராஷ்டிராவின் பாரமதியில் உள்ள கார்வர் ஏவியேஷன் அகாடமியில் சேர்ந்தார்.
இதன்மூலம், இந்தியாவில் வணிக பைலட் உரிமம் பெற்ற இளையவரில் கர்நாடகாவைச் சேர்ந்த 18 வயது சமைரா ஹுல்லூர் ஒருவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
சமைரா ஆறு தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, சுமார் ஒன்றரை ஆண்டுகளில் 200 மணிநேர விமானப் பயண அனுபவத்தைப் பெற்றார்.
சமைரா ஹுல்லூர், 18 வயதில் வணிக பைலட் உரிமம் பெற்று தனது கனவை நிறைவேற்றி இருப்பது மட்டுமல்லாமல், தனது குடும்பத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்
அவரது தந்தை அமீன் ஹுல்லூர், கட்டிடக் கலை உள் வடிவமைப்பாளராக தொழில் செய்து வருகிறார். தனது மகளின் இந்த சாதனை குறித்து பெருமையுடன் கூறும் அமீன் 'இந்தியாவில் இளம் வயதில் பைலட் லைசென்ஸ் பெற்ற பெண் என்ற பெருமை தனது மகள் சமைராவுக்கு கிடைத்து இருக்கிறது " என்று மகிழ்ச்சி அடைகிறார்.
"ஒருமுறை ஹெலிகாப்டர் ஒன்றில் சிறுமியாக இருந்த சமைரா பயணம் செய்தபோது, தாமும் விமானம் ஓட்ட வேண்டும். பைலட் ஆக வேண்டும் என்ற இலட்சியம் மகளுக்கு பிறந்ததாக" தந்தை நினைவு கூறுகிறார்.
"அதன் பிறகு, விமானம் ஓட்டுவது தொடர்பான கேள்விகளும், சந்தேகங்களையும் தேட ஆரம்பித்த மகள் சமைரா, விமான சேவை நிறுவனங்களில் பணிபுரியும் பைலட்களிடம் தனது சந்தேகங்களும் நன்கு விளக்கம் பெற்றார்" என்றும் மகளின் இலட்சிய கனவு குறித்து தற்போது நினைவுக் கூர்ந்து மகிழ்ச்சி அடைகிறார்.
இளம் வயதில் கனவு:
சமைரா ஹுல்லூருக்கு பள்ளிப் படிப்பு படிக்கும் போதே, பைலட் ஆக வேண்டும் என்ற கனவு இருந்து வந்தது. 25 வயதில் பைலட் லைசென்ஸ் பெற்ற கேப்டன் குமாரின் சாதனையை முறியடித்து வெற்றி பெற வேண்டும் என அவர் விரும்பினார். மகளின் இந்த விருப்பத்தை அறிந்து அவரது பெற்றோர், குறிப்பாக தந்தை அமீன் மகள் சமைராவுக்கு முழு ஆதரவும், ஒத்துழைப்பையும் அளித்து எப்போதும் ஊக்கம் அளித்து வந்தார். எனவே தான் தனது பெற்றோரின் ஆதரவு இல்லாமல் தாம் பைலட் ஆகி இருக்க முடியாது என சமைரா தற்போது பெருமையுடன் கூறி மகிழ்ச்சி அடைகிறார்.
அத்துடன், தனக்கு நன்கு பயிற்சி அளித்த கேப்டன் தபேஷ் குமார் மற்றும் கேப்டன் வினோத் யாதவ் ஆகியோரின் பயிற்சி, தொழில்நுட்ப உதவி, ஆலோசனைகள் ஆகியவை பெரிதும் உதவியாக இருந்தது என்றும் சமைரா நன்றியுடன் கூறியுள்ளார்.
கல்வியில் சாதனை:
சமைரா ஹுல்லூர் 10வது வகுப்பு தேர்வில் மாநிலத்தில் 15வது இடத்தையும், 12வது வகுப்பு தேர்வில் 17வது இடத்தையும் பிடித்து தேர்ச்சிப் பெற்றார். பின்னர் கல்லூரியில் அறிவியல் பாடப் பிரிவில் சேர்ந்த அவர், அங்கும் நன்கு படித்து தேர்ச்சிப் பெற்றார்.
பல்வேறு தடைகள் இருந்த போதிலும், பைலட் ஆக வேண்டும் என்ற இலட்சியத்தை மட்டும் சமைரா ஒருபோதும் கைவிடவில்லை. 18வது பூர்த்தி ஆவதற்கு முன்பு, சமைரா தொழில்நுட்ப பயிற்சி பெற அனுமதிக்கவில்லை. இப்படி சவால்களை எதிர்கொண்டாலும், பின்னர் அந்த தொழில்நுட்ப தேர்வை எழுதிய சமைரா, தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
200 முறை விமானம் ஓட்டி பயிற்சி பெற்ற சமைரா, இரவு நேரத்தில் எப்படி விமானத்தை இயக்குவது என்ற தொழில்நுட்பத்தையும் நன்கு அறிந்து கொண்டார். அத்துடன், பலவகையான விமானங்களையும் அவர் இயக்கி நன்கு தேர்ச்சிப் பெற்று பயிற்சி அளித்த விமான கேப்டன்களை வியப்பு அடையச் செய்துள்ளார்.
பெற்றோருக்கு பெருமை:
தந்தை அமீன், ஆசிரியையாக இருக்கும் தாய் ஆகியோர் தங்களது மகள் நாட்டிலேயே இளம் பைலட் என்ற பெருமையுடன் தேர்ச்சிப் பெற்று இருப்பது தங்களுக்கு பெரிதும் மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளனர்.
"இளம் வயதில் பைலட் லைசென்ஸ் பெற்ற சமைரா மற்ற பெண்களுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருக்கிறார்" என்று பெங்களூருவில் வசிக்கும் ஊடகவியல் துறை பேராசிரியர் ஓம்கர் காகேடே தெரிவித்து உள்ளார்.
முஸ்லிம் இளம் பெண் சமைரா ஹுல்லூரின் சாதனை சாதாரண சாதனை இல்லை. வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என கனவு காணும் மற்ற இளம் பெண்களுக்கு நல்ல உந்துதலை அளிக்கும் சாதனையாகும். வாழ்க்கையில் நல்ல கல்வி பெற்று சாதிக்க விரும்பும் தங்கள் குழந்தைகளை பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். அப்போது தான் சமைரா போன்ற சாதனையாளர்கள் சமூகத்திற்கும் நாட்டிற்கும் கிடைப்பார்கள்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment