Wednesday, December 18, 2024

கண்டனம்....!

ஒரே நாடு ஒரே தேர்தல், நாட்டின் அரசியலமைப்பு, ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி தத்துவங்களுக்கு எதிரானது....!

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவை கண்டித்து இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய அமைப்புச் செயலாளர் இ.டி.முஹம்மது பஷீர் பேச்சு...!!

புதுடெல்லி, டிச.19-ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டம் நாட்டின் உண்மையான தத்துவங்களுக்கு எதிரானது மட்டுமல்லாமல், மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் திட்டம் என மக்களவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய அமைப்புச் செயலாளரும், மலப்புரம் தொகுதி எம்.பி.யுமான இ.டி.முஹம்மது பஷீர் கண்டனம் தெரிவித்துள்ளார். 

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பான மசோதாவை ஒன்றிய அரசு மக்களவையில் கடந்த செவ்வாய்கிழமை (17.12.2024) அன்று தாக்கல் செய்தது. இந்த மசோதாவிற்கு எதிராக இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் கடுமையாக கண்டனம் தெரிவித்தனர். 

இ.டி.முஹம்மது பஷீர் கண்டனம்:

இதேபோன்று, இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள இ.யூ.முஸ்லிம் லீகும் மசோதாவிற்கு தனது எதிர்ப்பை பதிவு செய்தது. முஸ்லிம் லீகின் மலப்புரம் தொகுதி எம்.பி. இ.டி. முஹம்மது பஷீர், மசோதாவிற்கு எதிராக பேசி தனது கண்டனங்களை தெரிவித்துக் கொண்டார். மக்களவையில் மசோதாவிற்கு எதிராக அவர் ஆற்றிய உரையின் முழு விவரம் வருமாறு:

நாட்டின் தத்துவங்களுக்கு எதிரானது:

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவிற்கு நான் எனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறேன். காரணம் இந்த மசோதா இந்திய நாட்டின் ஜனநாயகம், அரசியமைப்பு மற்றும் கூட்டாட்சி தத்துவங்களுக்கு மீதான ஒரு மிகப்பெரிய தாக்குதல் ஆகும். 

அத்துடன், இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ள திருத்தங்கள் நாட்டில் அமல்படுத்தினால், பல மாநிலங்களில் உள்ள ஆட்சிகள் மூன்று ஆண்டுகளுக்குள் முடிந்துவிடும். இது, அந்த மாநில மக்கள் ஜனநாயக முறையில் அளித்த மகத்தான தீர்ப்புக்கு எதிரானது. 

இந்த திட்டம் அமல்படுத்தினால், நாட்டில் உள்ள மாநிலங்களில் நிலவும் முக்கியத்துவம் வாய்ந்த உள்ளூர் பிரச்சினைகளுக்கு எந்தவித தீர்வும் கிடைக்க வாய்ப்பு இருக்காது. பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். எனவே கூட்டாட்சி முறைக்கு எதிரான இந்த மசோதாவை நான் கடுமையாக எதிர்க்கிறேன். 

இவ்வாறு இ.டி.முஹம்மது பஷீர் பேசினார். 

- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: