"காற்று மாசுபாட்டால் அதிகரித்து வரும் நோய்கள்"
- ஆய்வில் அதிர்ச்சி தகவல் -
காற்று மாசுபாடு ஒரு நபரின் சுவாச ஆரோக்கியத்தையும் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் சேதப்படுத்தும் முதன்மையான காரணங்களில் ஒன்றாகும். ஆஸ்துமா, நிமோனியா, இருதய நோய்கள், மூச்சுக்குழாய் அழற்சி, சிஓபிடி, நுரையீரல் புற்றுநோய் உட்பட காற்று மாசுபாட்டால் ஏற்படும் நோய்களாகும்.
காற்று மாசுபாடு மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். அதில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். இது சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அத்துடன், உலகளவில் மில்லியன் கணக்கான மக்களின் மரணத்திற்கு, காற்று மாசுபாடு காரணமாக உள்ளது. இரசாயனங்கள், நச்சுகள் மற்றும் பிற மாசுக்களை மக்கள் சுவாசிப்பதால் காற்று மாசுபாடு பல சுவாச நோய்களுக்கு வழிவகுக்கும். சுவாசக் கோளாறுகளைத் தவிர, காற்று மாசுபாட்டால் ஏற்படும் பல நோய்களும் உள்ளன.
ஆய்வில் அதிர்ச்சி தகவல்:
இந்நிலையில், காற்று மாசுபாட்டின் நீண்டகால வெளிப்பாட்டுடன் தொடர்புடைய மனநோய்கள் உட்பட அனைத்து காரணங்களுக்காகவும் நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அதிகரித்துள்ளதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றியில் கண்டறியப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் (BMJ) ஓப்பனில் வெளியிடப்பட்ட ஸ்காட்டிஷ் ஆய்வில், நைட்ரஜன் டை ஆக்சைடு (NO2) மற்றும் துகள்கள் (PM10 மற்றும் PM2.5) ஆகியவற்றின் அதிக வெளிப்பாடு காரணமாக இருதய, சுவாசம் மற்றும் தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டு அதிக மக்கள் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது தெரியவந்துள்ளது. .
பிரிட்டன், செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், PM2.5 மற்றும் NO2 மாசுபாடுகளில் ஒவ்வொரு கன மீட்டருக்கும் ஒரு மைக்ரான் அதிகரிப்பதற்கு, சுவாசக் கோளாறுகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிகழ்வுகள் முறையே நான்கு சதவிகிதம் மற்றும் ஒரு சதவிகிதம் உயர்ந்து இருப்பதை உறுதிசெய்துள்ளார்கள்.
மன கோளாறுகள்:
மேலும், மன அல்லது நடத்தைக் கோளாறுகளுக்காக அதிகமான பேர், மருத்துவமனைகளில் அனுமதிப்பது நைட்ரஜன் டை ஆக்சைடு அதிகரித்த வெளிப்பாட்டுடன் தொடர்புடையது. NO2, PM10 மற்றும் PM2.5 இன் சராசரி ஆண்டு அளவுகள் 2005 உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களை விட குறைவாக இருந்தபோதும், NO2 மற்றும் PM2.5 இன் அளவுகள் சமீபத்திய 2021 வழிகாட்டுதல்களில் இருந்ததை விட அதிகமாக இருப்பதாக குழு தெரிவித்துள்ளது.
காற்று மாசுபாட்டின் நீண்டகால வெளிப்பாட்டின் உடல்நல பாதிப்புகளை பகுப்பாய்வு செய்யும் முந்தைய ஆய்வுகள், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை விட இறப்புகளின் எண்ணிக்கை அதிகமாகி வருவதா க ஆராய்ச்சியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
2002 மற்றும் 2017 க்கு இடையில் பொது சுகாதார ஸ்காட்லாந்து தரவுத்தளத்திலிருந்து 17 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 2 இலட்சத்து 2 ஆயிரத்து 237 பேரை (நாட்டின் மக்கள்தொகையில் ஐந்து சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது) ஆய்வு கண்டறிந்தது. இந்த ஆய்வில் "காற்று மாசுபாடு உடல் (உதாரணமாக, சுவாசம், இருதய மற்றும் தொற்று) மற்றும் மன/நடத்தை நோய்கள் ஆகிய இரண்டிற்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அதிக விகிதங்களுடன் தொடர்புடையது" என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மக்களின் கைகளில் முடிவு:
உலகின் பல நாடுகளில் காற்று மாசுபாடு தற்போது ஒரு முக்கிய சவாலாக உருவெடுத்துள்ளது. ஒருவரின் உடல்நலம் மற்றும் கிரகத்தின் மீது அதன் தீங்கு விளைவிக்கும் விளைவுகளை சமாளிக்க மக்கள் முடிந்ததைச் செய்யத் தொடங்குவது அவசியம். எனவே, சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும். ஆரோக்கியமான மற்றும் நீண்ட ஆயுளுக்கு காற்று மாசுபாட்டில் இருந்து தப்பிக்க தேவையான நடவடிக்கைகளை ஒவ்வொருவரும் எடுத்துக் கொள்ள வேண்டும். காற்று மாசுபாட்டை குறைக்க, ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் இருந்து கடமைகளை தொடங்கினால், நகரம் மட்டுமல்லாமல், நாடும் காற்று மாசுபாடு பிரச்சினையில் இருந்து மெல்ல மெல்ல விடுபடும்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment