தெலங்கானா மாநில உர்தூ அகடமி குழு டிசம்பர் 3வது வாரத்தில் தமிழகம் வருகை.....!
தமிழ்நாடு உர்தூ அகடமி நிர்வாகிகள், கல்வியாளர்களுடன் ஆலோசனை மற்றும் கலந்துரையாடல் செய்ய திட்டம்....!!
ஹைதராபாத், டிச.09- தெலுங்கானா மாநில உர்தூ அகடமியைச் சேர்ந்த நிர்வாகிகள் வரும் டிசம்பர் 3வது வாரத்தில் தமிழ்நாட்டிற்கு வருகை தர இருப்பதாக அம்மாநில உர்தூ அகடமியின் இயக்குநர் ஷேக் லியாகத் உசேன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தமிழ்நாடு உர்தூ அகடமியின் பதிவாளர் மற்றும் செயலாளருக்கு ஷேக் லியாகத் உசேன் கடந்த 2ஆம் தேதி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
ஆலோசனை மற்றும் கலந்துரையாடல்:
அந்த கடிதத்தில் தெலங்கானா மாநில உர்தூ அகடமியின் தலைவர் தாஹிர் பின் ஹம்தான் தலைமையிலான குழு ஒன்று, வரும் டிசம்பர் 3வது வாரத்தில் தமிழ்நாடு வர இருப்பதாக குறிப்பிடடப்பட்டுள்ளது. இந்த குழு தமிழ்நாடு உர்தூ அகடமியின் துணைத் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் அகடமியைச் சேர்ந்த அதிகாரிகள் ஆகியோரை சந்தித்து பேசுவார்கள் என்றும், தமிழகத்தில் உர்தூ அகடமியின் செயல்பாடுகள், உர்தூ மொழியை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் ஆகிவற்றை குறித்தும் ஆலோசனை செய்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உர்தூ பேசும் மக்களிடையே மட்டுமல்லாமல், அனைத்துத் தரப்பு மக்கள் மத்தியிலும் உர்தூ மொழியை கொண்டு சேர்க்க செய்யப்பட்டு வரும் பணிகள் குறித்தும் தெலங்கானா மாநில உர்தூ அகடமி குழுவினர் ஆய்வு செய்து ஆலோசனை மேற்கொள்வார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
தலைவர் தாஹிர் பின் ஹம்தான் தலைமையில் வரும் தெலங்கானா மாநில உர்தூ அகடமி குழுவுடன், அகடமியின் இயக்குநர், செயலாளர் மற்றும் பிற மூத்த அதிகாரிகளும் தமிழகம் வருவார்கள் என்றும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேண்டுகோள்:
தமிழ்நாட்டிற்கு வரும் தெலங்கானா மாநில உர்தூ அகடமி குழுவினருக்கும் தேவையான ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் என்றும், தமிழ்நாடு உர்தூ அகடமியைச் சேர்ந்த துணைத் தலைவர் உட்பட அனைத்து உறுப்பினர்களையும் சந்தித்து பேச வாய்ப்பு உருவாக்கத் தர வேண்டும் என்றும், கல்வியாளர்களுடன் கலந்துரையாடல் செய்ய தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் தெலங்கானா மாநில உர்தூ அகடமியின் இயக்குநர் ஷேக் லியாகத் உசேன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment