ஒன்றியத்தில் முதன்முறையாக சிறுபான்மையின நலத்துறை அமைச்சகத்தை உருவாக்கி வரலாற்றில் இடம்பிடித்தவர் மன்மோகன் சிங்
சென்னையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் இ.யூ.முஸ்லிம் லீக்
மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் புகழாரம்...!
சென்னை, டிச.29- இந்திய முஸ்லிம்களின் துயரங்களை போக்க ஒன்றியத்தில் முதன்முறையாக சிறுபான்மையின நலத்துறை அமைச்சகத்தை ஏற்படுத்தி, பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியவர் மறைந்த பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மறைந்த பாரத பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கான நினைவு கூட்டம் சனிக்கிழமையன்று (28.12.2024) மாலை 5.30 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. காங்கிரஸ் மூத்த தலைவர் எஸ். பீட்டர் அல்போன்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அப்துல் சமது எம்.எல்.ஏ., மக்கள் நீதி மையம் செயலாளர் அப்பாஸ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் கூட்டத்தில் பங்கேற்று நாட்டுக்கும் நாட்டில் வாழும் சிறுபான்மையின மக்களுக்கு மன்மோகன் சிங் ஆற்றிய சேவைகள், பணிகள் குறித்து பல்வேறு அரிய தகவல்களை கூறி பெருமை அடைந்தார். முஹம்மது அபூபக்கரின் உரையின் முழு விவரம் வருமாறு:
மிகப்பெரிய இழப்பு:
தலை சிறந்த பொருளாதார மேதையும், காங்கிரஸ் பேரியக்கத்தின் மாபெரும் தலைவராகவும் விளங்கிய டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுடைய மறைவையடுத்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகத்தில் நடக்கக் கூடிய இரங்கல் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அனைவருக்கும் என பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன். அந்த வகையில் நானும், இந்த கூட்டத்தில் பங்கேற்று, மறைந்த மாமேதை டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பிலும், எங்களுடைய தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் சார்பிலும், ஆழ்ந்த இரங்கலை இங்கே பதிவு செய்கிறேன். மன்மோகன் சிங்கின் இழப்பு காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் மிகப்பெரிய இழப்பு அல்ல. அவரோடு நீண்ட நெடிய தொடர்புடன் இருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் இழப்பாகும். ஒ,ன்றியத்தில் பத்து ஆண்டு காலம், அவர் பிரதமராக இருந்தபோது, அவரது அமைச்சரவையில் வெளியுறவுத்துறை இணை அமைச்சராக இருந்தவர் மறைந்த எங்களுடைய தேசிய தலைவர் இ.அஹமது அவர்கள் ஆவார்கள்.
முஸ்லிம்களின் நலனில் அக்கறை:
முஸ்லிம் சமுதாயத்திற்கு எப்போதெல்லாம் பிரச்சினைகள் வரும்போதும், அதுதொடர்பாக அவரை சந்தித்த கூறும்போது, ஆறுதலான வார்த்தைகளை கூறி, உடனடியாக நடவடிக்கைகளை எடுத்ததை எல்லாம் இன்றும், நன்றியோடு இந்த நேரத்தில் பதிவு செய்கிறோம். கடந்த 2004 ஆம் ஆண்டு அவர் பிரதமராக பொறுப்பு ஏற்ற போது, முஸ்லிம் எம்.பி.க்கள் எல்லாம், ஒரு குழுவாக எங்களுடைய தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்களின் தலைமையில் சென்று, அவரை சந்தித்து, பல்வேறு பிரச்சினைகள் குறித்து சொன்னார்கள். உண்மையில் இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை எப்படி இருக்கிறது என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்கள்.
இதையடுத்து உடனடியாக சச்சார் குழு அமைக்கப்பட்டு, இந்தியா முழுவதும் முஸ்லிம்களின் உண்மை நிலை அறியப்பட்டு, அதன்மூலமாக டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள், இந்திய வரலாற்றில் முதன்முறையாக சிறுபான்மையின நலத்துறை அமைச்சகத்தை ஏற்படுத்தினார். அந்த அமைச்சகத்தின் முதல் அமைச்சராக அப்துல் ரஹ்மான் அந்துலே பதவி ஏற்றார். அதன்மூலமாக பல்வேறு திட்டங்களை உருவாக்கி, டாக்டர் அபுல்கலாம் ஆசாத் பெயரில் சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை, உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் எல்லாம் செய்து முஸ்லிம் சமுதாயம் ஓரளவுக்கு முன்னேறும் சமூகமாக உருவாவதற்கு, காரணமாக இருந்தவர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் ஆவார்கள். அதை நாங்கள் நன்றி உணர்வுடன் இங்கே பதிவு செய்வதை கடமைப்பட்டிருக்கிறோம்.
பொற்கால ஆட்சி;
அத்துடன், டாக்டர் மன்மோகன் சிங்கின் ஆட்சி காலம் பொற்கால ஆட்சி காலம் என சொல்ல வேண்டும். அவர் பொருளாதார சீர்திருத்தங்களை கொண்டு வந்தபோது பலர் எதிர்த்தார்கள். அத்தகைய அனைத்து எதிர்ப்புகளையும் அவர், உள்வாங்கிக் கொண்டு, இன்று என்னை நீங்கள் வெறுத்தாலும், நாளை வரலாறு என்னை பாராட்டும் என்று சொன்னார். இன்றைய தினம், மன்மோகன் சிங்கின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை, நாட்டில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் பாராட்டிக் கொண்டு இருக்கிறார்கள். அன்று அவர் சொன்னது இன்று உண்மையாக நடந்துக் கொண்டு இருக்கிறது.
டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள், ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்து பொருளாதார சீர்திருத்தங்களை செய்தார். எளிமைக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக விளங்கியவர். பன்முகத்தன்மைக் கொண்ட ஒரு சிறந்த அரசியல்வாதி. ஒரு அற்புதமான தலைவர். அவருடைய சிறப்புகள் குறித்து ஊடகங்கள் பெரிதும் பாராட்டியுள்ளன. அவருடன் பணியாற்றி அதிகாரிகள், அவரது சிறப்பை பாராட்டு எழுதி இருப்பதை படிக்கும்போது, உண்மையில் நமக்கு பெருமையாக உள்ளது.
எவ்ளளவு நேர்மையாகவும் எளிமையாகவும் இருந்தார் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. சொந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு கூட அவர் பரிந்துரை செய்வதை மறுத்துவிட்டார். இப்படி பல்வேறு நிலைகளில், அவர் சிறப்பாக பணியற்றியுள்ளார். இந்தியா இன்று பொருளதாரத்தில் உயர்ந்து இருக்கிறது என்றால், அதற்கு காரணம் ஒரு சிறுபான்மை சமூதாயத்தைச் சேர்ந்த, சீக்கிய சமுதாயத்தைச் சேர்ந்த, ஒருவர் நாட்டின் பிரதமராக ஆக முடியும் என்ற வரலாற்றை உருவாக்கிய பெருமை காங்கிரஸ் மூத்த தலைவர் அன்னை சோனியா காந்தி அவர்களை சேரும் என கூறலாம்.
பத்து ஆண்டு கால ஆட்சியில் சாதனை:
ஒன்றியத்தில் பிரதமராக பத்து ஆண்டு காலம் மிகச் சிறப்பாக அவர் பணியாற்றியுள்ளார். அவரது ஆட்சியைப் போன்ற ஒரு நல்ல ஆட்சி இனி வர வாய்ப்பே இல்லை. இன்று பா.ஜ.க. ஆட்சியில் சிறுபான்மையின நல அமைச்சகத்தையே எடுத்து விட்டார்கள். சிறுபான்மையின மக்கள் நாட்டில் வாழ முடியும் என்ற கேள்விக்குறி தற்போது எழுந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மைக்ரோ மைனாரிட்டி என்று சொல்லக் கூடிய சீக்கிய சமூதாயத்தைச் சேர்ந்த ஒருவரை நாட்டின் பிரதமராக உயர்த்திய பெருமை, காங்கிரஸ் பேரியக்கத்திற்கும், அன்னை சோனியா காந்தி அவர்களுக்கும் சேரும். இவையெல்லாம் உலக நாடுகளுக்குச் சொல்ல வேண்டிய செய்திகளாக இருந்துகொண்டு இருக்கிறது.
தமிழ்நாட்டிற்கான திட்டங்கள்:
தமிழ்நாட்டிற்காக மிகச் சிறப்பான பல்வேறு திட்டங்களை மன்மோகன் சிங் கொண்டு வந்தார். இன்றைய தினம் நாம் எல்லோரும் வேகமான பயணம் செய்கிறோம் என்றால், அந்த திட்டங்களை எல்லாம் கொண்டு வர வழிவகுத்து தந்தவர் மன்மோகன் சிங் அவர்கள் ஆவார்கள். சேதுசமுத்திர திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வழிவகைகளை உருவாக்கி தந்தவர். தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்ததை வழங்கியவர். இப்படி பலவற்றை சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு அற்புதமான தலைவரை நாடு இழந்து இருக்கிறது. உலகம் இழந்து இருக்கிறது. காங்கிரஸ் பேரியக்கம் இழந்து இருக்கிறது. நாம் இழந்து இருக்கிறோம். இந்த துயரமான நேரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பாக, ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்.
இவ்வாறு முஹம்மது அபூக்கர் பேசினார்.
- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment