நவீன கல்வி மூலம் முஸ்லிம் இளைஞர்களை மேம்படுத்தும் மௌலானாக்கள்....!
இஸ்லாமிய மார்க்கத்தில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்பதை நாம் பலமுறை மணிச்சுடர் நாளிதழில் எழுதிய பல கட்டுரைகளில் குறிப்பிட்டு இருக்கிறோம். ஆண், பெண் இருவரும் நல்ல கல்வியை பெற வேண்டும். அதன்மூலம் நன்கு தெளிவுபெற்று இம்மை, மறுமை பலன்களை பெற வேண்டும் என இஸ்லாம் அறிவுறுத்துகிறது. மார்க்கக் கல்வி, உலகக் கல்வி என எந்த வகையிலான கல்வியாக இருந்தாலும் சரி, அதை பெற ஆர்வம் செலுத்த வேண்டும் என்பது இஸ்லாமிய நெறிமுறை போதிக்கும் பண்புகளில் ஒன்றாகும்.
தற்போது உலகம் நவீன அறிவியலை நோக்கி வேகமாகப் பயணித்துக் கொண்டு இருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், மார்க்கக் கல்வியுடன் நவீன கல்வியும் முஸ்லிம்கள் பெற வேண்டும். அதன்மூலம் மட்டுமே, தங்களுடைய இலக்கை அவர்கள் அடைய முடியும். இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு மார்க்கக் கல்வி மிகப்பெரிய அளவுக்கு பயன் அளிக்கும், அதேநேரத்தில், உலகத்தில் சந்திக்கும் பல்வேறு நெருக்கடியாக சவால்களை எதிர்கொள்ள நவீன கல்வி மிகமிக அவசியம். இதை தற்போது இஸ்லாமியர்கள் அறிந்துகொள்ள ஆரம்பித்து இருக்கிறார்கள். நாம் பார்த்த பல மார்க்கக் கல்வி பெற்ற முஸ்லிம் இளைஞர்கள், உலகக் கல்வியை பயின்று, மருத்துவர்களாகவும், பொறியியல் வல்லுநர்களாகவும் வாழ்க்கையில் சாதித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்திய முஸ்லிம்களின் நிலை:
இந்தியாவில் வாழும் 25 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்களில், மார்க்கக் கல்வி பயின்ற மௌலானாக்கள், முஸ்லிம்கள் வாழும் நகரங்களில் அதிகமாக இருந்து வருகிறார்கள். இதேபோன்று, மஸ்ஜித்துகள், தர்காக்கள், முஸ்லிம்கள் வாழும் நகரங்களில் முக்கியமானவையாக உள்ளன. இந்த சின்னங்கள் சமூகத்தின் கலாச்சார மற்றும் மத இதயத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. மௌலானாக்கள் மார்க்கப் பிரசங்கங்களை வழங்குகிறார்கள். இதேபோன்று, ஆன்மீக ஆறுதலுக்காக தர்காக்களுக்கு திரளும் பக்தர்களும் இருந்து வருகிறார்கள். இருப்பினும், இந்த நிறுவனங்கள் பெரும்பாலும் முஸ்லிம் சமூகத்தின் பின்தங்கிய நிலையுடன் தொடர்புடையவை. குறிப்பாக கல்வி மற்றும் சமூக-பொருளாதார முன்னேற்றத்தின் அடிப்படையில் மிகவும் பின்தங்கிய இருக்கிறார்கள்.
25 கோடிக்கும் அதிகமாக வாழும் இந்திய முஸ்லிம்களில் கல்வி குறித்து இன்னும் சரியான புரிதல் இல்லாமல் இருந்து வருகிறது. இதன் காரணமாக மார்க்கக் கல்வியுடன் சிலர் தங்களுடைய கல்வியை நிறுத்தி விடுகிறார்கள். நவீன கல்வியை எடுத்துக் கொண்டால், அந்த கல்வியையும் முஸ்லிம் இளைஞர்கள் சரியாக பெறுவதில்லை. கல்வியை இடையில் நிறுத்தும் போக்கு முஸ்லிம்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது. இதனால், உயர்படிப்புகளில் சேரும் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே இருக்கிறது. இதன் காரணமாக உயர் பதவிகளில் முஸ்லிம்களின் எண்ணிக்கையும் சரிந்துகொண்டே போகிறது.
இந்திய இளைஞர்களின் உலகம்:
இதற்கு நேர்மாறாக, வெற்றிகரமான இந்திய இளைஞர்களின் உலகம், குறிப்பாக, இந்திய நிர்வாக சேவைகள் (ஐ.ஏ.எஸ்) இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் (ஐ.ஐ.டிக்கள்) மற்றும் மருத்துவக் கல்லூரிகள் போன்ற மதிப்புமிக்க துறைகளில் நுழைபவர்கள், தங்களுடைய வாழ்க்கையில் மிகவும் வித்தியாசமான படத்தை வரைகிறார்கள். இந்த வெற்றிகரமான நபர்கள் பெரும்பாலும் போட்டி, நவீன கல்விச் சூழல்களில் இருந்து வெளிவருகிறார்கள். மேலும் அவர்களின் சாதனைகள் முஸ்லிம்கள், மௌலானாக்கள் மற்றும் தர்கா நிர்வாகிகளின் பாரம்பரிய பாத்திரங்களுக்கு அப்பாற்பட்ட உலகமாகத் தெரிகிறது.
இருப்பினும், அண்மை காலமாக மார்க்க அறிஞர்கள் மத்தியில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டு, இந்த இரண்டு உலகங்களின் நம்பிக்கைக்குரிய ஒருங்கிணைப்பைக் காட்டும் வகையில் மாற்றங்கள் உருவாகி வருகின்றன.. ஒரு சில மௌலானாக்கள் மற்றும் தர்கா நிர்வாகிகள் முஸ்லிம் இளைஞர்களில் ஏற்பட்டுள்ள கல்வி தொடர்பான மிகப்பெரிய இடைவெளியைக் குறைக்கத் தொடங்கியுள்ளனர். முஸ்லிம் இளைஞர்களுக்கு நவீன கல்வி மற்றும் போட்டி வாய்ப்புகளை வழங்கும் பணிகளை அவர்கள் தொடங்கியுள்ளனர்.
மௌலானா முகமது ஃபஸ்லுர் ரஹீம் முஜாதிதி:
புதுடெல்லியில் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு மௌலானா முகமது ஃபஸ்லுர் ரஹீம் முஜாதிதியால் நிறுவப்பட்ட கிரசன்ட் சிவில் சர்வீஸ் அகாடமி, இந்தியாவின் மதிப்புமிக்க சிவில் சேவைகளில் சேரும் நோக்கில் முஸ்லிம் ஆர்வலர்களுக்கு நல்ல பயிற்சி மற்றும் வழிகாட்டுதலை வழங்குகிறது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மற்றும் ஐ.எஃப்.எஸ். (IAS, IPS மற்றும் IFS) போன்ற சேவைகளில் முஸ்லிம்களின் வரலாற்றுக் குறைவான பிரதிநிதித்துவம் இருந்தபோதிலும், அகாடமி ஈர்க்கக்கூடிய முடிவுகளை உருவாக்கியுள்ளது.
கடந்த 2013 இல், கிரசன்ட் அகாடமியைச் சேர்ந்த 13மாணவர்கள், கடுமையான சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்றனர். மேலும் 30 இளைஞர்கள் ஆரம்பச் சுற்றில் தேர்ச்சி பெற்றனர். இன்றுவரை, அகாடமியில் இருந்து 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள், நீதிபதிகள் மற்றும் அரசு ஊழியர்கள் உட்பட இந்திய அரசாங்கத்தின் உயர் பதவிகளில் சேர்ந்துள்ளனர். இது நாட்டின் கொள்கை வகுப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மௌலானா வாலி ரஹ்மானியின் ரஹ்மானி:
பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த 2008ஆம் ஆண்டில், மௌலானா வாலி ரஹ்மானி, 'ரஹ்மானி-30 ஐஐடி நுழைவு பயிற்சி மையத்தை' நிறுவினார். இது முஸ்லிம் இளைஞர்கள் இந்தியாவின் சிறந்த பொறியியல் நிறுவனங்களான இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் (IITs) சேர்க்கை பெற உதவும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட மையமாகும்.
வரலாற்று ரீதியாக, முஸ்லிம் மாணவர்கள் ஐஐடிகளில் குறைந்த பிரதிநிதித்துவம் பெற்றுள்ளனர். 2013இல், ரஹ்மானி-30 மையத்தைச் சேர்ந்த 30 மாணவர்களில் 24 பேர் ஐஐடி கூட்டு நுழைவுத் தேர்வில் (JEE) வெற்றிகரமாக தேர்ச்சி பெற்றனர், இது மையத்தின் குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
ஐஐடியில் சேர விரும்பும் முஸ்லிம் மாணவர்களுக்கு இந்த மையம் இப்போது நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக மாறியுள்ளது. பட்டதாரிகள் உயர்மட்ட நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் மதிப்புமிக்க தொழில்களுக்கு செல்கின்றனர்.
காஜா பந்தனவாஸ் கைசுதராஸ் தர்கா:
கர்நாடக மாநிலம் குல்பர்காவில் உள்ள காஜா பந்தனவாஸ் கைசுதராஸ் தர்கா நிர்வாகம், முஸ்லிம் சமூகத்தில் கல்வியை மேம்படுத்துவதற்காக கடந்த 1966இல் காஜா கல்விச் சங்கத்தை நிறுவியது. தர்கா அறக்கட்டளை, குறிப்பாக, காஜா பந்தனவாஸ் பொறியியல் கல்லூரி (1980இல் நிறுவப்பட்டது) மற்றும் காஜா பந்தனவாஸ் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் (2000இல் நிறுவப்பட்டது) உட்பட அதன் 15 நிறுவனங்கள் மூலம் நவீன கல்வியை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.
இந்த நிறுவனங்கள் கல்வியில் பின்தங்கிய பின்னணியில் உள்ள முஸ்லிம் இளைஞர்களை உயர்த்தி, அவர்களை பொறியாளர்களாகவும், மருத்துவர்களாகவும் மாற்ற உதவுவதோடு, முஸ்லிம் சமூகம் மற்றும் தேசத்தின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றன.
மார்க்க அறிஞர்கள், படித்த முஸ்லிம்களின் பங்கு:
இந்த வெற்றிகளுக்குப் பின்னால் உள்ள ஒரு முக்கிய காரணம், மார்க்க அறிஞர்கள் (மௌலானாக்கள்) மற்றும் படித்த முஸ்லிம் தொழில் வல்லுநர்களுக்கு இடையிலான ஒத்துழைப்பாகும். இந்த மார்க்க அறிஞர்கள், போட்டியிடுவதற்குப் பதிலாக, மதப் பிரமுகர்களின் பரவலான செல்வாக்கையும், படித்த முஸ்லிம்களின் நவீனக் கல்வியின் அறிவையும் இணைக்க ஒன்றாகச் செயல்பட்டனர். கல்வி மற்றும் போட்டி வெற்றியின் மூலம் சமூகத்தை உயர்த்துவதற்கான ஒரு சக்திவாய்ந்த முன்மாதிரியை இந்த கூட்டாண்மை உருவாக்கியுள்ளது.
முன்னோக்கி செல்லும் பாதை:
இந்த வெற்றிக் கதைகள் அரிதாக இருந்தாலும், அதிகமான மௌலானாக்களும், தர்கா நிர்வாகிகளும் நவீனக் கல்வியை வழங்குவதிலும், இளைஞர்களை போட்டித் தேர்வுகளுக்குத் தயார்படுத்துவதிலும் கவனம் செலுத்தினால், முஸ்லிம் சமூகத்திற்குள் சமூக,பொருளாதார வளர்ச்சிக்கான மகத்தான பாதையை அடையலாம் என்பதை சாத்தியக்கூறுகளை எடுத்துக்காட்டுகின்றன. அரசியல் மற்றும் விளம்பரச் செயற்பாடுகளுக்காக செலவிடப்படும் ஆற்றல், இளைஞர்களை வலுவூட்டும் நோக்கில் திருப்பிவிடப்பட்டால், முஸ்லிம் சமூகம் ஒரு தலைமுறைக்குள் கடுமையான மாற்றத்தைக் காண முடியும்.
இத்தகைய முன்முயற்சிகள் மூலம், இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் வறுமை மற்றும் குறைவான பிரதிநிதித்துவத்தின் சுழற்சியில் இருந்து விடுபட்டு, அரசாங்க சேவைகள் முதல் பொறியியல், மருத்துவம் மற்றும் அதற்கு அப்பால் உள்ள துறைகளில் தங்கள் இளைஞர்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உறுதிசெய்ய முடியும். தரமான கல்வி மற்றும் ஒத்துழைப்பில் கவனம் செலுத்துவதன் மூலம், இந்தியாவின் முஸ்லிம் சமூகம் அதன் சமூக, பொருளாதாரப் பாதையை மாற்றுவதற்கும், சமய அல்லது கல்விப் பின்னணியால் வெற்றிகரமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் வாய்ப்பு உள்ளது.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment