"அஜ்மீர் தர்கா குறித்த
இந்து சேனாவின் சர்ச்சை கூற்றுக்கு
வரலாற்று ஆதாரம் இல்லை"
இந்திய நாட்டில் அமைதியாக வாழும் 25 கோடிக்கும் அதிகமான இஸ்லாமியர்கள், நாட்டின் மீது உண்மையான அன்பு வைத்து, அதன் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள். அறிவியல், விவசாயம், தொழில்நுட்பம், பொருளாதாரம், வணிகம் என பல்வேறு துறைகளில் முஸ்லிம்களின் பங்களிப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் ஒன்றியத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபிறகு, முஸ்லிம்களை மட்டுமே குறிவைத்து, இந்துத்துவ அமைப்புகள் காரியங்களை ஆற்றி வருகிறார்கள். இந்திய முஸ்லிம்கள் அமைதியாக வாழக் கூடாது என்ற கெட்ட எண்ணத்துடன் அவர்கள் மீது வீண் பழிச்சுமத்திக் கொண்டே இருக்கிறார்கள். முஸ்லிம்களின் வழிப்பாட்டுத் தலங்களை கைப்பற்ற ஒரு கும்பல் சதி வேலை செய்துக் கொண்டே இருக்கிறது.
அந்த வரிசையில் தற்போது உலகப் புகழ்பெற்ற 'அஜ்மீர் காஜா முயுனுத்தீன் சிஷ்தி தர்கா' மீது இந்துத்துவ அமைப்புகளின் கண் பட்டுள்ளது. அஜ்மீர் தர்காவில் சிவன் கோயில் இருந்தாக இந்து சேனா அமைப்பு புதிய புரளி ஒன்றை தற்போது கிளப்பி, ராஜஸ்தானில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து, அதற்கு பதில் அளிக்க அந்த நீதிமன்ற நீதிபதி சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அஜ்மீர் தர்காவும் உண்மை நிலவரமும்:
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள உலகப் புகழ்பெற்ற சூஃபி துறவி காஜா முயுனுத்தீன் சிஷ்தியின் தர்காவில், சிவன் கோயில் இருப்பதாக கேலிக்குரிய, மனதை வருத்தம் அடையும் கூற்றை இந்து சேனா அமைப்பு கூறி இருப்பது அனைத்துச் சமுதாய மக்களையும் கோபம் மற்றும் அதிருப்தியும் அடையச் செய்துள்ளது. இந்த தர்காவிற்கு உலகமும் முழுவதும் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். ஒரு அமைதியான இடமாக அஜ்மீர் தர்கா இருந்து வருகிறது.
இத்தகைய சூழ்நிலையில், இந்து சேனா தலைவரின் கூற்றுகளையும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் அஜ்மீர் தர்காவின் திவான் சையது ஜைனுல் அபேதின் அலி சிஷ்டி, முற்றிலும் நிராகரித்துள்ளார். "இந்த கூற்று ஆதாரமற்றது என்றும், உண்மைகள், சான்றுகள் மற்றும் வரலாற்றுக் குறிப்புகள் எதுவும் இல்லாத பொய்யான குற்றச்சாட்டு" என்றும் அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
"காஜா சாஹிப்பின் தர்கா 800 ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பதால், வரலாற்றில் கூட இந்து சேனா தலைவரின் கூற்றுப் பற்றிய எந்தக் குறிப்பும் காணப்படாது" என்று தர்காவின் திவான் தெரிவித்துள்ளார். "முன்பு எப்போதும் அத்தகைய கூற்றை யாரும் முன்வைக்கத் துணியவில்லை. ஆனால் இப்போது மதவாதிகளின் தைரியம் அதிகரித்துள்ளது. அதன் காரணமாக முஸ்லிம்களின் வழிப்பாட்டுத்தலங்களின் மீது குறிவைக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன" என்றும் திவான் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆச்சரியம் அளிக்கும் நோட்டீஸ்:
அஜ்மீர் தர்கா ஒரு சிவன் கோயில் என்று கூறியதுடன், உள்ளூர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதை ஏற்று உள்ளூர் நீதிமன்றத்தால் விசாரணைக்கு அங்கீகரிக்கப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது ஆச்சரியமாக உள்ளது. இந்த மனுவில், ஹருலாஸ் சாரதாவின் புத்தகத்தைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது, அதில் எவ்வளவு உண்மை உள்ளது என்பதை நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. ஆனால் அது ஒரு அறிவிப்பை வெளியிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்கள் மற்றும் பிற மதங்களில் உள்ள காஜா சாஹிப் அவர்களின் நேசர்களிடையே கவலையும், கோபமும் சுனாமி அலையாக வீசியுள்ளது. நீதிமன்றத்தின் இந்த அணுகுமுறையும், இந்து சேனாவின் இந்த நடவடிக்கையும் கண்டனத்துக்குரியது.
"இது ஒரு குற்றச் சதி என்பது தெளிவாகிறது. இதன் காரணமாக, நாட்டின் இனவாத சூழல் பாதிக்கப்படுவதுடன், லட்சக்கணக்கான பக்தர்களின் மனவேதனை வேறுவிதமாக இருக்கும். இந்த விவகாரத்தில் இந்திய அரசும், உச்சநீதிமன்றமும் தலையிட வேண்டும். நாட்டில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட வேண்டும்/ என்று தர்காவின் திவான் ஜைனுல் அபேதீன் வலயுறுத்தியுள்ளார்.
மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஹருலாஸ் சாரதாவின் புத்தகத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், இந்த புத்தகத்தில், எந்த உறுதியான கருத்தையோ அல்லது வாதத்தையோ முன்வைக்காமல், "அது கூறப்பட்டுள்ளது" என்று மட்டுமே எழுதப்பட்டுள்ளது. ஆனால் எந்த ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை. புத்தகத்தின் ஆசிரியர் எந்த ஆதாரத்தையும் கொடுக்கவில்லை, ஆனால் அவர் கேள்விப்பட்டதை வெறுமனே நம்பினார் மற்றும் சிந்திக்காமல் பதிவு செய்தார் என்பதை இது காட்டுகிறது. அது எப்படி அடிப்படையாகக் கருதப்படும்?" என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
கூற்றில் உண்மையே இல்லை:
"அஜ்மீர் தர்கா ஒரு கோவில் என்ற கூற்றில் உண்மையே இல்லை. ஏனெனில் காஜா சாஹிப்பின் சன்னதி சுமார் 150 ஆண்டுகளாக பயிரிடப்படாமல் இருந்தது. எனவே ஒரு வயல் இருந்தது. அதன் கீழ் ஒரு கோவில் இருக்க சாத்தியமே இல்லை. இந்து சேனா தலைவர் விஷ்ணு குப்தா கோவில் உரிமையை விட்டுவிட்டு நீதிமன்றத்தை அணுகியுள்ளார். எனவே குப்தா இதேபோன்ற விஷயங்களைத் தேடுகிறார்" என்று திவான் ஜைனுல் அபேதீன் விளக்கம் அளித்துள்ளார்.
"ஏதோ ஒரு வகையில் மலிவான புகழைப் பெற்றுக்கொண்டு சர்ச்சையைக் கிளப்பி தலைப்புச் செய்திகளில் நீடிக்க வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம். எனவே, இவர்களின் சதி பங்கு குறித்தும் ஆராயப்பட வேண்டும்" என்றும் திவான் சாஹிப் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆச்சரியம் தரும் வகையில், காஜா கரீப் நவாஸின் தலைமுறையைச் சேர்ந்த நபரை இந்த வழக்கில் தரப்பினர் சேர்க்காத நிலையில், மற்ற தரப்பினருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், சுற்றுச்சூழலைக் கெடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுபோன்ற முயற்சிகள் குறித்து இந்திய மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சர்ச்சைக்கு மேல் சர்ச்சைகள்:
உத்தரபிரதேசத்தின் சம்பலில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான ஷாஹி ஜும்ஆ மஸ்ஜித்தில் ஆய்வின்போது போலீசார் நடத்திய ‘ துப்பாக்கிச் சூட்டில் 6 முஸ்லிம் இளைஞர்கள் கொல்லப்பட்டது நாட்டு மக்களை வேதனை அடைய செய்துள்ள நிலையில், இந்த வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கும் போதே, ராஜஸ்தானின் அஜ்மீரில் உள்ள மற்றொரு நீதிமன்றம், மதிப்பிற்குரிய சூஃபி துறவியான ஹஸ்ரத் மொய்னுதீன் சிஸ்தி (ரஹ்) அவர்களின் மாநிலத்தின் சின்னமான அஜ்மீர் ஷெரீப் தர்காவை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது.
அதற்கு முன் நீதிமன்ற உத்தரவுப்படி ஞானவாபி மசூதி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. முதலில் சந்தேகங்கள் எழுப்பப்பட்டு, பின்னர் நீதிமன்றம் ஆய்வுக்கு உத்தரவிடுவது, பின்னர் பெரும்பான்மை கோரிக்கைகள் திருப்திப்படுத்தப்பட வேண்டும் என்ற வேண்டுமென்றே ஒரு முறை இருப்பதாகத் தெரிகிறது. பாபர் மசூதி பிரச்சினை, இதுபோன்ற கூற்றுகளுக்குப் பிறகு, அதைத் தொடர்ந்து இப்படிப்பட்ட நிலைகள் எடுக்கப்பட்டு வருவது முஸ்லிம்களின் மனதில் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது. 1991ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வழிப்பாட்டுத்தலங்களின் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தி, அனைத்து வழிப்பாட்டுத்தலங்கள் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே, தொடரும் சர்ச்சைக்ளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment