"ஆரவாரம் இல்லாமல் அமைதியாக சாதித்த மாமனிதர் மன்மோகன் சிங்"
இந்திய பிரதமர்களில் அமைதியான மற்றும் திறமையான ஒரு தலைவர் யார் ? என வினா எழுப்பினால், நிச்சயமாக அனைவரும் மன்மோகன் சிங் என்றே கூறுவார்கள். இந்தியாவின் முதல் சீக்கியப் பிரதமரான மன்மோகன் சிங், மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருக்குப் பிறகு முழு ஐந்தாண்டு பதவிக் காலத்தை முடித்த பிறகு, மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதமரும் ஆவார். அத்துடன், ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, பிறகு நீண்ட நாட்களுக்கு பிரதமராகப் பதவியில் இருந்தவர் என்ற பெருமையும் மன்மோகன் சிங்கிற்கு உண்டு. கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2014 வரை 13-ஆவது இந்தியப் பிரதமராக சேவை ஆற்றிய அவர், அரசியல்வாதியாக மட்டுமல்லாமல், சிறந்த பொருளாதார வல்லுநராகவும், கல்வியாளராகவும் திகழ்ந்தவர் .
வாழ்க்கை குறிப்பு:
இன்றைய பாகிஸ்தானின் கா நகரில் பிறந்த மன்மோகன் சிங், கடந்த 1947-ஆம் ஆண்டு இந்தியப் பிரிப்பின் போது குடும்பத்துடன் இந்தியாவுக்குக் குடி பெயர்ந்தார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளியலில் முனைவர் பட்டம் பெற்ற பிறகு, சிங் 1966-1969 இல் ஐக்கிய நாடுகள் அவையில் பணியாற்றினார். லலித் நாராயண் மிஸ்ரா அவரை வணிக, தொழில்துறை அமைச்சகத்தின் ஆலோசகராக நியமித்தார். 1970 மற்றும், 1980-களில், சிங் இந்திய அரசாங்கத்தில் தலைமைப் பொருளாதார ஆலோசகர் (1972-1976), ரிசர்வ் வங்கியின் ஆளுநர் (1982-1985), திட்ட ஆணைக் குழுவின் தலைவர் (1985-1987) போன்ற பல முக்கிய பதவிகளை வகித்தார்.
பொருளாதார சீர்திருத்தங்கள்:
1991-இல், இந்தியா கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டபோது, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அன்றைய பிரதமர் பி. வி. நரசிம்ம ராவ், அரசியல்வாதி இல்லாத மன்மோகன் சிங்கை, நிதியமைச்சராக தனது அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டார். மறைந்த நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது, மன்மோகன் சிங்கின் திறமையை, அவரது சேவையை நாட்டிற்காக பயன்படுத்த விரும்பினார். அதன்படி, ஒரு நாள் நள்ளிரவில் சிங்கிற்கு போன் செய்து, தனது அமைச்சரவையில் சேர வேண்டும் என விருப்பம் தெரிவித்தார். நிர்வாக அதிகாரியாக மட்டுமே இருந்த மன்மோகன் சிங், அரசியல்வாதியாக அப்போது இருக்கவில்லை. யு.ஜி.சி.யின் தலைவராக இருந்த மன்மோகன் சிங்கை நரசிம்ம ராவ், நாட்டின் நிதியமைச்சராக நியமித்ததைக் கண்டு அனைவரும் வியப்பு அடைந்தனர். ஆனால், சிங்கின் திறமை மீது நம்பிக்கை கொண்ட ராவ், எடுத்த முடிவு, இன்று இந்தியா பொருளாதாரத்தில் வலுவாக இருக்க மன்மோகன் சிங் ஆற்றிய பணிகள் முக்கிய காரணம் என்று உறுதியாக கூறலாம். தனது அற்புதமான பணிகள் மூலம் நவீன இந்தியாவை கட்டமைத்த பெரும் தலைவர் தான் மன்மோகன் சிங்.
நிதியமைச்சராக சிங் இருந்தபோது, அடுத்த சில ஆண்டுகளில், கடுமையான எதிர்ப்பையும் மீறி, இந்தியாவின் பொருளாதாரத்தை தாராளமயமாக்கும் பல கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொண்டார். இந்த நடவடிக்கைகள் நெருக்கடியைத் தவிர்ப்பதில் வெற்றிகரமாக இருந்தது. சீர்திருத்த எண்ணம் கொண்ட பொருளாதார வல்லுநராக உலகளவில் சிங்கின் நற்பெயரை உயர்த்தியது. காங்கிரசுக் கட்சி 1996 பொதுத் தேர்தலில் தோல்வியை சந்தித்து ஆட்சியை இழந்தபோது, இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில், சிங் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.
பிரதமராக பொறுப்பு ஏற்பு:
கடந்த 2004-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஒன்றியத்தில் ஆட்சியை கைப்பிடித்தபோது,அதன் தலைவர் சோனியா காந்தி எதிர்பாராதவிதமாக பிரதமர் பதவியை மன்மோகன் சிங்கிற்கு விட்டுக்கொடுத்தார். பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டு மன்மோகன் சிங், தனது முதல் அமைச்சரவையில் தேசிய ஊரக சுகாதார இயக்கம், தனித்துவ அடையாள ஆணையம், ஊரக வேலை உறுதித் திட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் உள்ளிட்ட பல முக்கிய சட்டங்களையும் திட்டங்களையும் நிறைவேற்றினார். இவரது ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்தது. 2009 பொதுத் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. அப்போது இரண்டாவது முறையாக மன்மோகன் சிங் பிரதமர் பதவியைத் தக்க வைத்துக் கொண்டார். பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் இரண்டாவது முறையாகவும் மன்மோகன் சிங் சிறப்பான முறையில் நாட்டிற்காக சேவை ஆற்றினார். சிங் ஒருபோதும் மக்களவை உறுப்பினராக இருக்கவில்லை, ஆனால் 1991 முதல் 2019 வரை அசாம் மாநிலத்தில் இருந்தும், 2019 முதல் 2024 வரை ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு, மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றினார்.
ஆரவாரம் இல்லாமல் அமைதியாக:
இந்திய அரசியலில் யார் மீதும் வெறுப்பு கொள்ளாமல், அமைதியாக பணியாற்றி பெருமை மன்மோகன் சிங்கை மட்டுமே சேரும். எதிர்க்கட்சிகள் கூட பெரிதும் மதித்த ஒரு பிரதமர் மன்மோகன் சிங் என்றால் அது மிமையாகாது. ஆரவாரம் இல்லாமல் அமைதியாக பணியாற்றிய மன்மோகன் சிங், நாட்டை உண்மையாக நேசித்து, அதன் வளர்ச்சிக்கு தேவையான அனைத்துப் பணிகளையும் செய்தார். பிரதமராக இருந்தபோது, ஊடகங்களை அடிக்கடி சந்தித்து, செய்தியாளர்களின் சந்திப்புகளை நடத்தினார். தன்னை கடுமையாக விமர்சனம் செய்தவர்களுக்கு கூட, மென்மையான போக்கில் பதிலடி தந்த மன்மோகன் சிங், என்னுடைய பணிகள், சேவைகள் ஆகியவற்றை வரலாற்றில் நினைத்து நிற்கும் என குறிப்பிட்டு, தன்னை சாடியவர்களை அற்புதமான முறையில் மறைமுகாக விமர்சனம் செய்தார்.
அமைதியான சிங்கம்:
மறைந்த மன்மோகன் சிங்கை, எல்லாரும் அவர் ஒரு அமைதியான சிங்கம் என அன்புடன் அழைப்பு உண்டு. அது உண்மை தான். இந்தியாவில் மிகப்பெரிய அளவுக்கு பொருளாதார சீர்திருத்தங்கள் கொண்டு வந்து, உலக நாடுகளை வியக்கச் செய்த பெருமை சிங்கிற்கு மட்டுமே உண்டு. ஜென்ட்டில்மேன் அரசியல்வாதியாக மன்மோகன் சிங், பிரதமராக பொறுப்பு ஏற்பதற்கு முன்பு ரிசர்வ் வங்கி ஆளுநர், ஒன்றிய அமைச்சகத்தின் நிதி செயலாளர், உள்ளிட்ட பல முக்கிய பதவிகளில் இருந்து, அந்த பதவிகளிலும் மிகச் சிறந்த முறையில் கோலோச்சியவர் என்ற பாராட்டுதல்களை பெற்றவர்.
இந்தியாவில் மிகப்பெரிய பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்ட நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வியப்பு அடைந்தபோது, தனது அற்புதமான வெளியுறவுக் கொள்கை மூலம், உலக நாட்டு தலைவர்களின் அன்பை பெற்ற ஒரே தலைவர் மன்மோகன் சிங் என கூறலாம். தற்போது, வெற்று முழக்கங்களை எழுப்பி, நாட்டில் மிகப்பெரிய அளவுக்கு மாற்றங்களை கொண்டு வந்துவிட்டதாக பா.ஜ.க. தலைவர்கள், கூறிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், இந்த மாற்றங்கள் அனைத்தும் மன்மோகன் சிங் காலத்தில் கொண்டு வந்த நிறைவேற்றப்பட்டவை. பிரதமர் நரேந்திர மோடி, பண மதிப்பிழப்பு திட்டத்தை கொண்டு வந்தபோது, அதை கடுமையாக எதிர்த்த பொருளாதார நிபுணர் தான் மன்மோகன் சிங் ஆவார். நாட்டின் பொருளதாரத்தை இந்த திட்டம் சீர்குலைத்துவிடும் என அவர் எச்சரிக்கை செய்து இருந்தார். அது உண்மையானது. பண மதிப்பிழப்பு திட்டம் அமல்படுத்திய பிறகு, நாடு இன்னும் பொருளாதார நிலைகளில் இருந்து மீண்டு வரவில்லை என்றே கூறலாம்.
மன்மோகன் சிங் கடந்த 2004 முதல் 2014ஆம் ஆண்டு வரை பத்து ஆண்டுகள் பிரதமராக சேவை ஆற்றியபோது பல நிகழ்ச்சிகளில், மாநாடுகளில், கருத்தரங்கங்களில், பன்னாட்டு மாநாடுகளில் கலந்துகொண்டு சிறப்பித்து இருக்கிறார். இந்த நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று ஆற்றிய ஒவ்வொரு உரையும் சிந்தனையை தூண்டும் உரைகளாகும். நான் ஜி மற்றும் ராஜ் தொலைக்காட்சிகளில் பணிபுரிந்தபோது, மன்மோகன் சிங்கின் நிகழ்ச்சிகளை நேரலை செய்து, அவரது உரைகளை உடனுக்கு உடன் மொழிப்பெயர்த்து, ஒளிப்பரப்பியது இன்னும் மறக்க முடியாது அனுபவமாகும். அந்த உரைகள், நமக்கு ஒரு புதிய வேகத்தையும், உந்துதலையும் தந்தது என்பது உண்மையாகும்.
அனைத்து தரப்பு மக்களிடம் அன்பை செலுத்திய மன்மோகன் சிங், நாட்டில் ஒருபோதும் மக்களிடையே வெறுப்பு பிரச்சாரத்தை செய்யவில்லை. அரசியல் லாபத்திற்காக, மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தவில்லை. பதவிக்காக மக்களை வதைக்கவில்லை. மக்கள் மீது வெறுப்பு காட்டவில்லை. இந்திய மக்கள் அனைவரையும் ஒரே குடும்பமாக கருதி, அனைத்து மக்களுக்கும், குறிப்பாக நாட்டில் உள்ள 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மக்களுக்கும் சேவை ஆற்றியவர் மன்மோகன் சிங். ஏக இறைவனின் விருப்பப்படி 92 வயதில் சிங் இறை அழைப்பை ஏற்றக் கொண்டார். எனினும், இந்தியாவிற்காகவும், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் சிங் ஆற்றிய பணிகள், சேவைகள் என்றென்றும் நினைவில் இருக்கும். இந்திய மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment