முஸ்லிம்களுக்கு அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை நிறைவேற்ற வேண்டும்...!
நாடு உண்மையான வளர்ச்சியை பெற வேண்டுமானால் முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைந்து ஒன்றிய அரசு செயல்பட வேண்டும்...!!
மாநிலங்களவையில் இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய பொருளாளர் அப்துல் வஹாப் எம்.பி. பேச்சு....!!!
புதுடெல்லி, டிச.18-அரசியலமைப்புச் சட்டம் முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளை ஒன்றிய அரசு நிறைவேற்றி, அனைத்துத் தரப்பு மக்களையும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மாநிலங்களவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொருளாளர் அப்துல் வஹாப் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
இந்திய அரசிலமைப்புச் சட்டம் ஏற்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, மாநிலங்களவையில் இரண்டு நாள் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் நேற்று (17.12.2024) அன்று அப்துல் வஹாப் எம்.பி. பங்கேற்று பேசினார். அவர் ஆற்றிய உரையின் முழு விவரம் வருமாறு:
இந்திய முஸ்லிம்கள் பெருமை:
இந்தியாவில் முஸ்லிம்கள் வாழ்வதை பெருமையாக கருதுகிறார்கள். பாகிஸ்தான், வங்கசேதம் உள்ளிட்ட நாடுகளில் வாழும் முஸ்லிம்களை விட இந்திய முஸ்லிம்கள் ஓரளவுக்கு மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். அதனால் தான் இந்தியா ஒரு சிறந்த நாடு என நாங்கள் கூறுகிறோம். ஆனால், இந்தியாவில் வாழும் பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையின மக்களாக உள்ள முஸ்லிம்கள், முன்பு இருந்ததை விட தற்போது தொடர்ந்து பின்தங்கியே இருக்கிறார்கள். பின்னோக்கிக் கொண்டே செல்கிறார்கள். பல்வேறு துறைகளில் முஸ்லிம்களின் வளர்ச்சி விகிதம் மிகவும் குறைவாக உள்ளது.
முஸ்லிம்களின் நிலைமை:
அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்து 75 ஆண்டுகள் நிறைவு அடைந்துவிட்டன. ஆனால், முஸ்லிம்களின் வளர்ச்சியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனவே அரசு தற்போது அதில் தனி கவனம் செலுத்த வேண்டும். இந்திய மக்களாக வாழும் முஸ்லிம்கள் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள். பல்வேறு நிலைகளில் துன்புறத்தப்பட்டு வருகிறார்கள். அவர்களின் வழிப்பாட்டுத்தலங்கள் இடிக்கப்படுகின்றன. அல்லது மாற்றி அமைக்கப்படுகின்றன. இதை யாரோ ஒருவர் செய்துக் கொண்டு வருகிறார்கள் என நாம் நினைத்துவிடக் கூடாது.
நாட்டிற்காக தியாகம் செய்த குடும்பம்:
இந்த அவையில் பலர் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரின் பணிகள் குறித்து எடுத்துக் கூறினார்கள். இவர்கள் அனைவரும் ஒரு குடும்ப சூழ்நிலையில் இருந்து வருகிறார்கள். ஆனால் பிரதமர் மோடிக்கு தற்போது குடும்பம் இல்லை. ஒரு குடும்பம் நல்ல குடும்பமாக இருப்பதில் என்ன தவறு இருக்கிறது. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஒரு குடும்ப அமைப்புடன் வாழ்வதில் என்ன தவறு இருக்கிறது. அவர்கள், அரசியலுக்கு வருவதில் என்ன தவறு இருக்கிறது. அதை நாம் எப்படி விமர்சனம் செய்ய முடியும்.
காந்தியின் குடும்பம் நாடு முழுவதும் உள்ள மக்களின் அன்பை பெற்று இருக்கிறது. எங்களுடைய வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி மிகப்பெரிய அளவுக்கு எப்படி வெற்றி பெற முடிந்தது. இதற்கு என்ன காரணம், இந்த குடும்பம் தங்களுடைய வாழ்க்கையை நாட்டிற்காக தியாகம் செய்து இருக்கிறார்கள். அனைத்தையும்இழந்து இருக்கிறார்கள். ஜவஹர்லால் நேரு மற்றும் ராகுல் காந்திக்கு இடையே நான் மிகப்பெரிய வேறுபாடுகளை காணவில்லை. நாட்டிற்காக தியாகம் செய்த ஒரு குடும்பத்தை நாம் மதிக்க வேண்டும். கவுரவப்படுத்த வேண்டும்.
இ.யூ.முஸ்லிம் லீக் பங்களிப்பு:
அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்த நாளில் இருந்தும், தற்போதும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டு சிறந்த முறையில் பணியாற்றி வருகிறார்கள். நாட்டின் வரலாற்று எடுத்து பார்த்தால், நாம் (முஸ்லிம் லீக்) நாட்டிற்காக என்ன செய்து இருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ளலாம். எனவே குறைந்த எண்ணிக்கையில் உறுப்பினர்களாக இருந்தாலும் நாங்கள் சிறுபான்மையின மக்களுக்கு உரிய நீதி கிடைக்க குரல் கொடுத்து வருகிறோம். எனவே அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை கிடைக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், நாடாளுமன்றத்தில் எத்தனை முறை டாக்டர் அம்பேத்கரின் பெயர் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது என்பதை நாம் எண்ணி பார்க்க முடியாது. ஒவ்வொரு உறுப்பினர்களும் அம்பேத்கரை மேற்கோள் காட்டி பேசி வருகிறார்கள். அம்பேத்கர் அன்று மட்டுமல்ல இன்றும் மிகப்பெரிய மனிதராக மக்களின் மனங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அம்பேத்கர் எப்படி உயர்ந்த நிலைக்கு வந்தார். மிகச் சிறப்பான முறையில் பணியாற்றினார். அவருக்கு யார் உதவியாக இருந்தார்கள் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். அம்பேத்கர் குறித்து ஆளும் தரப்பு நன்கு அறிந்துகொண்டால், இந்தியாவில் வாழும் சிறுபான்மையின மக்களுக்கு உள்ள உரிமைகளை நன்கு உணர்ந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும்.
வட மாநிலங்களில் பரிதாப நிலை:
இந்தியாவில் கேரளவை தவிர்த்து பிற மாநிலங்களில் முஸ்லிம்களின் நிலைமை மிகவும் வருத்தம் அளிக்கும் வகையில் உள்ளது. உத்தரப் பிரதேசம், பீகார், மற்றும் பிற வட மாநிலங்களில், அவர்களின் அமைதி பறிக்கப்படுகிறது. தற்போது நாம் அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்து நூறாவது ஆண்டை நோக்கி பயணம் செய்து கொண்டு இருக்கும் நிலையிலும், அம்பேத்கர் நூற்றாண்டு விழா கொண்டாடும் நிலையிலும் ஒன்றைய நினைவில் கொள்ள வேண்டும்.
நாடு உண்மையான வளர்ச்சியை நோக்கிச் செல்ல வேண்டுமானால், அனைத்துத் தரப்பு மக்களும் ஒருங்கிணைந்து பயணிக்க வேண்டும். ஒரு வாகனம் நான்கு சக்கரங்களுடன் இருந்து ஓட்டினால் தான் அது நன்கு செயல்படும். சாலையில் சரியாக செல்லும். வாகனத்தின் ஒரு டயர் பஞ்சர் ஆகிவிட்டால், வாகனம் ஓடாது. நின்று விடும். எனவே முஸ்லிம் சிறுபான்மையின மக்களின் உரிமைகளை கவனத்தில் கொண்டு அரசு செயல்பட வேண்டும். அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகள் அனைத்தையும் முஸ்லிம்களுக்கு வழங்கி நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
இவ்வாறு அப்துல் வஹாப் எம்.பி. பேசினார்.
சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment