Saturday, December 28, 2024

அரசியலமைப்புச் சட்டம் - உரிமைகள்....!

 

 "அரசியலமைப்புச்  சட்டம்  வழங்கியுள்ள உரிமைகள்" 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் -

 

இந்திய அரசிலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து  75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தின் படி நாட்டில் மக்களுக்கு பலன்கள் கிடைத்து வருகிறதா என்ற கேள்வி இன்னும் இருந்து வருகிறது. அரசியலமைப்புச் சட்டம் முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள் முழுமையாக கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்த குற்றச்சாட்டு உண்மையான குற்றச்சாட்டு என்றே கூறலாம்.

இந்தியாவில் வாழ்வதை முஸ்லிம்கள் பெருமையாக கருதுகிறார்கள். பாகிஸ்தான், வங்கசேதம் உள்ளிட்ட நாடுகளில் வாழும் முஸ்லிம்களை விட இந்திய முஸ்லிம்கள் ஓரளவுக்கு மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். அதனால் தான் இந்தியா ஒரு சிறந்த நாடு என முஸ்லிம்கள் கூறுகிறார்கள். ஆனால், இந்தியாவில் வாழும் பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையின மக்களாக உள்ள முஸ்லிம்கள், முன்பு இருந்ததை விட தற்போது தொடர்ந்து பின்தங்கியே இருக்கிறார்கள். பின்னோக்கிக் கொண்டே செல்கிறார்கள். பல்வேறு துறைகளில் முஸ்லிம்களின் வளர்ச்சி விகிதம் மிகவும் குறைவாக உள்ளது.

முஸ்லிம்களின் பரிதாப நிலைமை  :

அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்து 75 ஆண்டுகள் நிறைவு அடைந்துவிட்டன. ஆனால், முஸ்லிம்களின் வளர்ச்சியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்திய மக்களாக வாழும் முஸ்லிம்கள் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள். பல்வேறு நிலைகளில் துன்புறத்தப்பட்டு வருகிறார்கள். அவர்களின் வழிப்பாட்டுத்தலங்கள் இடிக்கப்படுகின்றன. அல்லது மாற்றி அமைக்கப்படுகின்றன. இதை யாரோ ஒருவர்  செய்துக் கொண்டு வருகிறார்கள் என நினைத்துவிடக் கூடாது.

இந்தியாவில் கேரளா, தமிழ்நாடு ஆகியவற்றைத் தவிர்த்து பிற மாநிலங்களில் முஸ்லிம்களின் நிலைமை மிகவும் வருத்தம் அளிக்கும் வகையில் உள்ளது. உத்தரப் பிரதேசம், பீகார், மற்றும் பிற வட மாநிலங்களில், அவர்களின் அமைதி பறிக்கப்படுகிறது. தற்போது அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்து நூறாவது ஆண்டை நோக்கி நாம் பயணம் செய்து கொண்டு இருக்கும் நிலையில், நாடு உண்மையான வளர்ச்சியை நோக்கிச் செல்ல வேண்டுமானால், அனைத்துத் தரப்பு மக்களும் ஒருங்கிணைந்து பயணிக்க வேண்டும். எனவே முஸ்லிம் சிறுபான்மையின மக்களின் உரிமைகளை கவனத்தில் கொண்டு அரசு செயல்பட வேண்டும். அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகள் அனைத்தையும் முஸ்லிம்களுக்கு வழங்கி நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

பன்முகத்தன்மையை சீர்குலைக்கு முயற்சி:

நமது இந்திய தேசம் ஒரு நவீன தேசம். தற்போது நாம் அனைவரும் நவீன தேசத்தில் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறோம். தற்போது நவீன சூழ்நிலைகளில் பல்வேறு பாரம்பரிய வரலாற்று அம்சங்கள், மற்றும் கலாச்சரங்களுடன் கொண்டு மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.  இந்தியாவின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றின் முக்கிய அம்சமாக, அதன் பன்முகத்தன்மையை தான் கூற வேண்டும். எப்படி வாழ்ந்தாலும், அது எப்படிப்பட்ட பொருளாதார, சமூக அம்சங்களுடன் இருந்தாலும் நாம் மனதில் பன்முகத்தன்மையை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். இது தான் இந்தியாவின் உண்மையான அமைப்பாகும். நாட்டின் இதயமாகும். இந்த அமைப்பு ஒரு அற்புதமான பங்களிப்பை நாட்டிற்கு தந்துகொண்டு இருக்கிறது.

ஆனால், வேதனை அளிக்கும் விஷயம் என்னவென்றால், தற்போது நாட்டில் நிலவும் அமைப்பை சீர்குலைக்கும் வகையில் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. நாட்டின் பாரம்பரிய கலாச்சாரத்தை சீர்குலைக்க சிலர் முயற்சி செய்துக் கொண்டு இருக்கிறார்கள். இது மிகவும் வருத்தம் அளிக்கும் விஷயமாகும். நாட்டில் வேலையில்லா திண்டாட்டம், வறுமை, பொருளாதார மந்த நிலை, பணவீக்கம் உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்து வருகின்றன. நாட்டின் பொருளாதர நிலையை உயர்த்துவதில் பிற்படுத்தப்பட்ட மற்றும் பின்தங்கிய மக்களின் உழைப்பு மிகவும் முக்கியமாக இருந்து வருகிறது. நமது நாடு, ஒவ்வொரு அம்சங்களிலும், கலாச்சாரம், பண்பாடு, ஒற்றுமை என அனைத்து நிலைகளிலும் உலகத்திற்கே ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருந்து வரும் நாடாகும்.

சிறுபான்மையின மக்களின் நிலை:

தற்போது நாட்டில் சிறுபான்மையின மக்களின் நிலை எப்படி உள்ளது? நாட்டில் மதசார்ப்பற்ற நிலை இருந்து வந்தாலும், அந்த அமைப்பு சீர்குலையும் வகையில் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மக்களுக்கு உண்மையான நீதி கிடைப்பது இல்லை. அவர்களுக்கு நீதி மறுக்கப்படுகிறது. ஒதுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு உரிய நீதி சரியான நேரத்தில்  கிடைப்பது இல்லை. சிறுபான்மையின மக்களுக்கு அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமைகளும் பறிக்கப்படுகின்றன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாடு எப்படி முன்னேற முடியும். தற்போது நாட்டில் வழிப்பாட்டுத்தலங்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட சம்பவங்கள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன. இதுதான் நாட்டில் தற்போது நடைபெற்று வருகிறது.  நாட்டில் நிலவும் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் கவனம் செலுத்தாமல், குறிப்பாக நாட்டில் உள்ள ஏழை மற்றும் பின்தங்கிய மக்கள் சந்திக்கும் பிரச்சினைக்கு முடிவு கட்டுவதை விட்டுவிட்டு, நாட்டின் அடிப்படை கட்டமைப்புகளை உடைக்கும் காரியங்கள் நடைபெற்று வருகின்றன. நாட்டின் உண்மையான அமைப்பை மெல்ல மெல்ல முற்றிலும் சீர்குலைக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன்மூலம் நாட்டின் சமூக ஒற்றுமை மற்றும் அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

சிறந்த அரசிலமைப்புச் சட்டம்:

உலகிலேயே மிகச் சிறந்த அரசிலமைப்புச் சட்டம் எது என்று கேள்வி எழுப்பினால், அது நமது (இந்தியா) சட்டம் என்று உறுதியாக கூறலாம். ஆனால், ஒரு முக்கிய கேள்வி என்னவென்றால், அரசியலமைப்புச் சட்டத்தின் படி மக்களுக்கு உண்மையான நீதி கிடைக்கிறதா என்பதாக இருக்கிறது. உலகின் பல நாடுகளுடன் இந்தியாவை ஒப்பீட்டால், பன்முகத்தன்மையில் இந்தியா மிகச் சிறந்து விளங்குகிறது. ஆனால், இந்தியாவின் உண்மையான தத்துவம், அதாவது வேற்றுமையில் ஒற்றுமை என்ற பன்முகத்தன்மை தற்போது நாட்டில் காணாமல் போய் விட்டது.

மதச்சார்பின்மை அரசியலமைப்பின் முக்கிய அடிப்படை தூணாக இருந்து வருகிறது. கடந்த காலங்களில் நாம் மதச்சார்பின்மை கொள்கையில் மிகவும் உறுதியாக இருந்து வந்தோம். ஆனால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடியுரிமைத் திருத்தச் சட்டம் ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்டபோது, மதர்ச்சான்பின்மை கொள்கையில் முறிவு ஏற்பட்டது. மத அடிப்படையில் குடியுரிமை வழங்கப்படும் என பா... அரசின் செயல்திட்டம் அரசியலமைப்பிற்கு எதிரானது.

இதேபோன்று மற்றொரு சட்டமான, வழிப்பாட்டுத்தலங்கள் சட்டம் பல்வேறு அடிப்படை உரிமைகளை கொண்ட சட்டமாக உள்ளது. ஆனால் இந்த சட்டம் நாட்டில் முறையாக அமல்படுத்தப்படவில்லை. இதனால் நாட்டில் சிறுபான்மையின மக்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலை உருவாகியுள்ளது.  சிறுபான்மையின மக்களுக்கு எதிராக புல்டோசர் நீதி அளிக்கப்படுகிறது. இவை அனைத்தும், அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானவை. அரசியலமைப்பு சட்டத்தில் பன்முகத்தன்மை ஒரு முக்கிய கட்டமைப்பாக உள்ளது.

அரசியலமைப்புச் சட்டம் 16 (4) மிகவும் பின்தங்கியுள்ள மக்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என தெளிவாக கூறுகிறது. முறையாக இட ஒதுக்கீடு வழங்கினால், அவர்களுக்கு உரிய நீதி கிடைக்கும், எனவே அதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது மிகவும் அவசியமாகும். ஆனால் பா... அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மறுக்கிறது. இது அரசியலமைப்புச் சட்டத்தின் மேல் நடத்தப்பட்ட பெரிய தாக்குதலாகும்.

சுதந்திரமான நீதி அமைப்பு:

சுதந்திரமான நீதி அமைப்பு அரசியலமைப்பு சட்டத்தின் ஒரு முக்கிய அடிப்படை அம்சமாக உள்ளது. ஆனால், உச்சநீதிமன்ற நீதிபதிகள் உட்பட அனைத்து நீதிபதிகளும், ஒருவித அச்சத்துடன் இருக்கும் நிலை தற்போது உருவாகியுள்ளது. நீதி வழங்குவது தொடர்பாக அவர்கள் தங்களை நியாயப்படுத்தும் வகையில் இருந்து வருகிறார்கள். நீதி வழங்குவது என்பது அரசியலமைப்பு சட்டத்தின்படி தான் இருக்க வேண்டும். மன ரீதியாக நீதி வழங்குவது இருக்கக் கூடாது. இதனால் அரசியலமைப்பு சட்டம் மிகவும் வருத்தம் அளிக்கும் வகையில் சென்றுக் கொண்டு இருக்கிறது. அரசியலமைப்பு சட்டம் அனைத்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இருக்க வேண்டும். நாட்டில் அனைத்து மக்களுக்கும் உரிய நீதி கிடைக்கவில்லை. எனவே, அரசியலமைப்பு சட்டத்தின் படி நாம் செயல்பட வேண்டும். அதன்மூலம் மட்டுமே, அரசியலமைப்பு சட்டம், அடுத்த வரும் ஆண்டுகளில் சரியான திசையை நோக்கிச் செல்ல முடியும்.

எதிர்திசையில் செல்லும் விஷயங்கள்:

இந்திய அரசியலமைப்பில் இரண்டு கரங்கள் உள்ளன.  மதச்சார்பின்மை மற்றும் உள்ளடக்கிய தன்மை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றி மேலும் ஆய்வு செய்தால், அது நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தைப் பொறுத்தது. ஆனால் இப்போது நாட்டில் என்ன நடக்கிறது? இப்போது விஷயங்கள் எதிர் திசையில் செல்கிறது என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இது குறித்து இந்த நாடு முற்றிலும் கவலையடைந்துள்ளது.

அரசியல் சாசனத்தில் உள்ள சிறுபான்மையினரின் உரிமையைப் பற்றிய பிரிவுகள் 14, 25, 29(1), 29(2), 30 மற்றும் பிரிவு 347 எடுத்துக் கூறுகின்றன. ஆனால் இப்போது, ​​என்ன நடக்கிறது? இந்த உரிமைகள் அனைத்தும் குறைக்கப்பட்டுள்ளன. இப்போது விஷயங்கள் எதிர் திசையில் செல்கின்றன. பாஜக அரசு முழுவதையும் கெடுத்துக் கொண்டிருக்கிறது.  வழிபாட்டுதலச் சட்டம், 1991 உறுதியாக நடைமறைப்படுத்தாமல் இருப்பதால், பாசிச கும்பல் அத்தனை பேரும் சர்வே, போன்ற விஷயங்களுக்குத்தான் நீதிமன்றங்களுக்கு போகிறார்கள். சம்பல் மஸ்ஜித்துக்கு ஏஎஸ்ஐ அதிகாரிகள் சென்றபோது, அவர்களும் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் எழுப்பினர். அங்கு ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். என்ன காரணத்திற்காக அப்பாவி மக்கள் இறந்தனர்? இந்த ஒரு வகையான துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதற்கு யார் காரணம்?. நாம் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள முடியும். நாட்டில் தொடர்ந்து மேலும் இதுபோன்ற செயல்களை  அரசாங்கமே செய்து வருகிறது

வேலி என்பது பாதுகாப்பிற்காக. வேலியே தேவை இல்லையென்றால் இந்த நாட்டை யார் காப்பாற்றுவது?  தற்போது விஷயங்கள் வேறு விதமாக நடந்து கொண்டிருக்கின்றன. நாட்டில் வெறுப்புப் பேச்சுக்கள் பரவி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த வகையான விஷயங்கள் நடக்கின்றன. சிறுபான்மையினரை சமூக மற்றும் பொருளாதார ஓரங்கட்டுதல் இந்நாட்டிலும் நடக்கிறது.  நமது சமூகத்தில், மிகவும் புறக்கணிக்கப்பட்ட பிரிவினர் உடல் ஊனமுற்றோர், மாற்றுத் திறனாளிகள். அவர்களுக்கு நீதி கிடைப்பதில்லை. அவர்கள் இன்னும் முடங்கிக் கிடக்கின்றனர். இந்த மக்களின் நலனுக்காக அரசு மிகவும் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் வகையில் தற்போது தொழில்நுட்பம் வளர்ந்து உள்ளது. நாட்டில் டிஜிட்டல் புரட்சி தற்போது நிலவுகிறது. இந்த நிலையில், நாமும் அனைத்து துறைகளின் வளர்ச்சிகளில் புதிய, நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் நாம் கவனம் செலுத்த வேண்டும். இதன்மூலம் மட்டுமே நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கிச் செல்லும். நாட்டில் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை முறையாக  பாதுகாத்து செயல்பட்டால், மக்களும்  அமைதியாக, மகிழ்ச்சியாக வாழ்வார்கள்.

=============================

No comments: