Saturday, December 21, 2024

உலக அமைதிக்கான தேடல்.....!

 "இஸ்லாம் மூலம் உலக அமைதிக்கான தேடல்"

- இந்தோனேஷியாவில் நடைபெற்ற சர்வதேச மாநாடு -

உலகம் தற்போது அமைதியை இழந்து மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகளில் வன்முறைகள், மோதல்கள் தொடர்ந்து நடைபெற்றுகொண்டே இருக்கின்றன. உலக நாடுகளுக்கு மத்தியில் போர் மேகங்கள் குறையாமல் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கின்றன. இதனால், நாளுக்கு நாள் மனித உயிரிழப்புகள் உயர்ந்துகொண்டே வருகின்றன. போர் காரணமாக மக்கள் வறுமையில் தள்ளப்பட வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பசி அவர்களை வாட்டி வதைக்கிறது. சுகாதாரம் மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறிவிட்டது. 

இத்தகைய கொடுமையான ஒரு காலக் கட்டத்தில் மனித இனம் தற்போது வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, உலகில் அமைதி நிலவ வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் விரும்புகிறார்கள். அதற்காக பிரார்த்தனை (துஆ) செய்கிறார்கள். அமைதியை நோக்கி அவர்கள், ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கிறார்கள். எந்த வகையில் அமைதி கிடைக்கும் என தேடுதல் மக்கள் மத்தியில் தற்போது அதிகரித்து வருகிறது. இதற்கு நல்ல ஒரு தீர்வாக இஸ்லாம் இருந்து வருகிறது. மனிதாபிமான இஸ்லாமிய நெறிமுறைகளின்படி, உலக அமைதிய மேம்படுத்துவதற்கான பணிகளில் இந்தோனேனியா உள்ளிட்ட முஸ்லிம் நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. மக்களிடையே சீர்குலையும் அமைதியை இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு ஏற்ப மீண்டும் கொண்டு வர அற்புதமான சேவையை இந்த முஸ்லிம் நாடுகள் செய்து வருகின்றன. 

மனிதநேய இஸ்லாம் குறித்த சர்வதேச மாநாடு:

அந்த வகையில் இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவாவில் உள்ள டெபோக்கில் "மனிதநேய இஸ்லாம் குறித்த சர்வதேச மாநாடு" அண்மையில் நடைபெற்றது.  இந்த சிறப்பான மாநாட்டில் இந்தோனேஷிய அதிபர்  பிரபோவோ சுபியாண்டோ, மத விவகாரங்களுக்கான அமைச்சர் நசருதீன் உமர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாநாட்டில் பேசிய இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ, "மனிதாபிமான இஸ்லாம்" மூலம் உலக அமைதியை மேம்படுத்துவதற்கான இந்தோனேஷியாவின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

மதம், கலாச்சாரம் மற்றும் இனம் ஆகியவற்றில் பன்முகத்தன்மையுடன் 280 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அமைதியாக இணைந்து வாழும் இந்தோனேஷியா, நல்லிணக்கத்தின் முன்மாதிரியாக இருந்து வருவதாக அதிபர் பிரபோவோ  பெருமையுடன் கூறினார். இஸ்லாமியக் கொள்கைகளை மனிதநேய, உள்ளடக்கிய உணர்வோடு இணைக்கும் தேசத்தின் அடிப்படைத் தத்துவமான பஞ்சசீலா மூலம் இந்த ஒற்றுமை நிலவுவதாக குறிப்பிட்ட அவர், இத்தகைய பணிகள் இந்தோனேஷியாவில் தொடர்ந்து நல்ல முறையில் நடைபெற்று வருவதற்கு தமது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொண்டார். 

இந்தோனேஷியாவின் பணிகள்:

"இந்தோனேஷியா நட்பு மற்றும் அமைதியான இஸ்லாமிய விழுமியங்களை எடுத்துக்காட்டுகிறது" என்று பிரபோவோ குறிப்பிட்டார், ஒற்றுமையை வளர்ப்பதில் இந்தோனேஷியாவின் நிறுவன தந்தைகளின் பாரம்பரியத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் அதிபர் வலியுறுத்தினார்.

இந்தோனேஷியாவின் வரலாற்றுப் பங்களிப்புகளைப் பிரதிபலிக்கும் வகையில், கடந்த 1955ஆம் ஆண்டு ஆசிய-ஆப்பிரிக்கா மாநாட்டை தங்களது நாடு வெற்றிகரமாக நடத்தியதாக குறிப்பிட்ட அவர், இந்த மாநாடு ஒற்றுமை மற்றும் அமைதியை முன்னேற்றுவதற்கான ஒரு மைல்கல் என்றும் பெருமையுடன் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணிகளில் இந்தோனேஷியாவின் தற்போதைய பங்கு மற்றும் சர்வதேச மோதல்களுக்கு சமரசம் செய்வது ஒரு இணக்கமான உலகளாவிய ஒழுங்குக்கான உறுதிப்பாட்டின் சான்றாகவும் இருப்பதாக அதிபர்  குறிப்பிட்டார்.

விஷன் 2045:

விஷன் 2045-ஐ எதிர்நோக்கி, உலக அமைதிக்கு தீவிரமாக பங்களிக்கும் ஒரு வளர்ந்த நாடாக மாற இந்தோனேஷியா விரும்புவதாக அதிபர் பிரபோவோ அடிக்கோடிட்டுக் காட்டினார். அந்த இலக்கை அடைவதற்கான ஒரு மிகப்பெரிய சக்தியாகவும் அணுகுமுறையாகவும், மனிதாபிமான இஸ்லாம் இருப்பதாக அவர் தெரிவித்தார். இஸ்லாம், உரையாடல், உள்ளடக்கம் மற்றும் பன்முகத்தன்மைக்கு மதிப்பளித்தல் ஆகியவற்றில் வேரூன்றியது என்றும் அதிபர் பெருமையுடன் குறிப்பிட்டார்.  "இந்த மாநாடு ஒரு பிரகாசமான, மிகவும் இணக்கமான எதிர்காலத்தை உருவாக்க கூட்டு முயற்சிகளை ஊக்குவிக்கட்டும்" என்று பிரபோவோ  தனது விருப்பத்தை தெரிவித்து  உரையை நிறைவு செய்தார். 

அறிஞர்கள், கல்வியாளர்கள் பங்கேற்பு:

நஹ்த்லத்துல் உலமாவால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாடு, நுண்ணறிவு மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ள உலகெங்கிலும் உள்ள அறிஞர்கள் மற்றும் கல்வியாளர்களை ஒன்றிணைத்தது. அத்துடன், கூட்டாண்மை மற்றும் புரிந்துணர்வை மேலும் மேம்படுத்துவதற்காக மத்திய ஜாவாவிற்கு அறிஞர்கள், கல்வியாளர்கள் வருகை தந்து உலக அமைதிக்காக தங்களது எண்ணங்களையும், சிந்தனைகளையும், கருத்துகளையும், தெரிவித்தனர். 

உலக அமைதிக்காக இந்தோனேஷிய அரசு மேற்கொண்டு வரும் பணிகள் மிகவும் பாராட்டும் வகையில் இருப்பதாக மாநாட்டில் பங்கேற்று பேசிய அறிஞர்கள், கல்வியாளர்கள் பெருமையுடன் கூறி மகிழ்ச்சி அடைந்தனர். உலகில் தற்போது சீர்குலைந்து வரும் அமைதிக்கு ஒரே தீர்வாக இஸ்லாம் இருந்து வருகிறது. இஸ்லாமிய நெறிமுறைகள், அமைதிக்கான வழிகளை திறந்து வைத்து, அனைவரும் அந்த வழியில் பயணம் செய்ய வேண்டும் என பெருந்தன்மையுடன் அழைக்கிறது. அமைதியை விரும்பும் அனைவரும் இனி அதை அடைந்து வாழ்க்கையில் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டுமானால், அதற்கான தேர்வு அமைதியை விரும்புவர்களின் கைகளில் தான் உள்ளது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: