முஸ்லிம்களுக்கு எதிராக ஏன் இந்த பாகுபாடு....?
இந்தியாவில் வாழும் 25 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள், அனைத்து சகோதர சமுதாய மக்களிடையே எப்போதும் அன்பையும், பாசத்தையும் செலுத்தி, சகோதரத்துவ உணர்வுடன் வாழ்ந்து வருகிறார்கள். அப்படி வாழ்வதை பெருமையாக கருதுகிறார்கள். எல்லோரிடமும் அமைதியாக வாழ்வதை இஸ்லாம் சொல்லித் தந்த அருமையான வாழ்க்கை நெறியாகக் கருதி அதனை வாழ்வில் உறுதியாக கடைப்பிடித்து வருகின்றனர்.
பேரிடர் காலங்களில் முஸ்லிம்கள், சாதி, மதம், மொழி, கலாச்சாரம் ஆகிய எதையும் பார்க்காமல் அனைத்து மக்களுக்குச் செய்யும் மனிதநேய உதவிகள் எல்லோராலும் பாராட்டப்படுகிறது. ஆனால் பாராட்டு பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இத்தகைய உதவிகளையும், சேவைகளையும் முஸ்லிம்கள் செய்வது இல்லை. மாறாக, இந்த மண்ணில் வாழும் அனைவரும் ஏக இறைவனின் படைப்புகள். ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ வேண்டியவர்கள். இத்தகைய உயர்ந்த எண்ணமே, முஸ்லிம்களை பேரிடர் காலங்களில் மட்டுமன்றி மற்ற நேரங்களில் கூட முன்னணியில் நின்று சமூக அக்கறையுடன் சேவை செய்ய தூண்டுகிறது. இஸ்லாமிய மார்க்கம் அத்தகைய சேவைகளைச் செய்ய தூண்டுகிறது. மனிதநேய சேவைகளை ஊக்குவிக்கும் மார்க்கமாக இஸ்லாம் இருந்து வருகிறது.
முஸ்லிம் என்பவன் யார்?
இஸ்லாம் குறித்தும் முஸ்லிம்கள் குறித்தும் தவறான புரிதல் காரணமாக, சிலர் முஸ்லிம்களை தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். அணுகுகிறார்கள். முஸ்லிம் என்பவன் யார்? என்ற கேள்விக்கு கீழ்க்கண்ட முறையில் சுருக்கமாக, அழகாக விளக்கம் அளிக்கலாம்.
'இந்த பிரபஞ்சத்தை படைத்தவன் ஏக இறைவன். அந்த ஏக இறைவனை உறுதியாக நம்ப வேண்டும். அவன் ஒருவனுக்கு மட்டுமே அடிப்பணிய வேண்டும். உலகில் மனிதன் தான் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் மறுமை நாளில் மட்டுமன்றி, உலகில் வாழும்போது கூட பதில் சொல்லியாக வேண்டும்.
உறவு முறைகளை நல்ல முறையில் பேண வேண்டும். அண்டை வீட்டாரை நேசிக்க வேண்டும். ஏழை, எளிய மக்களுக்கு உதவ வேண்டும். மற்றவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் உயர துணை நிற்க வேண்டும். உலகில் சண்டை, சச்சரவு இல்லாமல் அமைதியாக வாழ வேண்டும். சக மனிதனை நேசிக்க வேண்டும். இஸ்லாமிய நெறிமுறைகளை பின்பற்றாத மக்கள் மீது கூட அன்பு செலுத்த வேண்டும். அவர்களுடைய மத நம்பிக்கைகள், பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை விமர்சனம் செய்யக் கூடாது. அவர்கள் மீது வெறுப்பு காட்டக் கூடாது. பெண்களுக்கு அவர்களுக்கான உரிமைகளை வழங்க வேண்டும். கல்வி பெறும் உரிமை, பொருள் ஈட்டும் உரிமை என அவர்களுக்கு மார்க்கம் வழங்கிய உரிமைகளை வழங்க வேண்டும். பெற்றோர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும். முதியவர்களை நேசித்து அன்பு செலுத்த வேண்டும். அத்துடன், ஏக இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து அவனை வணங்கி, வாழ்க்கையில் எப்போதும் மன தூய்மையுடன் வாழ வேண்டும்.'
இப்படி வாழ்பவனுக்கு பெயர் தான் முஸ்லிம். இத்தகைய அருமையான பண்புகள் கொண்ட முஸ்லிம்களை இந்தியாவில் ஒருசிலர் சரியாக புரிந்துக் கொள்ளாமல் அவர்களை வெறுத்து வருகிறார்கள். பாகுபாடு கொண்டு வன்மம் கொள்கிறார்கள். சகோதர சமுதாய மக்களுடன் நேசத்துடன் வாழ விரும்பும் முஸ்லிம்களுக்கு வாடகைக்கு வீடு கொடுக்க மறுக்கிறார்கள். சொந்தமாக வீடு வாங்குவதையும் தடுக்கிறார்கள். நாட்டின் பல மாநிலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன.
உ.பி.யில் முஸ்லிம் மருத்துவருக்கு வீடு விற்க எதிர்ப்பு:
நாட்டில் பா.ஜ.க. ஆளும் அனைத்து மாநிலங்களில் முஸ்லிம்களின் பாதுகாப்பு, முன்எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது மிகப்பெரிய கேள்விக்குறி உள்ளது. முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு பாசிச கும்பல் நாள்தோறும் ஏதாவது ஒரு பிரச்சினையை எழுப்பிக் கொண்டே இருக்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது முஸ்லிம் மருத்துவர் ஒருவருக்கு வீடு விற்பனை செய்யக் கூடாது என உத்தரப் பிரதேசத்தில் ஒரு கும்பல் வன்மம் கக்கியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் நகரில் உள்ள டி.டி.ஐ. சிட்டி சொசைட்டியில் உள்ள குடியிருப்பு பகுதியில் 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு வசிக்கும் மருத்துவர் அசோக் பஜாஜ் என்பவர் சக மருத்துவரான யூசுப் மற்றும் இக்ரா சவுதிரி என்ற முஸ்லிம் மருத்துவருக்கு தனது வீட்டை விற்பனை செய்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள மற்ற குடியிருப்புவாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
"டி.டி.ஐ.சிட்டி சொசைட்டி என்பது இந்துகள் வாழும் பகுதியாகும். எனவே இங்கு மற்ற சமூகங்களை சேர்ந்தவர்கள் வர நாங்கள் விரும்பவில்லை. அதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுகிறோம்" என்று சொசைட்டியின் தலைவர் அமித் வர்மா கூறியுள்ளார். "
"பிற சமூகங்களை சேர்ந்தவர்கள் இங்கு வந்தால் சூழல் மாறிவிடும். எனவே அதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என்று மற்றொரு குடியிருப்புவாசியும் தெரிவித்துள்ளார். தற்போது பிரச்சினை மாவட்ட நிர்வாகத்திடம் சென்றுள்ளது.
சாதாரண முஸ்லிம்களின் நிலை என்ன?
மருத்துவம் படித்து மனிதநேய சேவை செய்யும் ஒரு முஸ்லிம் மருத்துவருக்கே இந்த நிலை என்றால், சாதாரண முஸ்லிம்கள் எத்தகைய கடுமையான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்று நினைத்துப் பார்த்தால் மனம் வேதனை அடைகிறது.
நன்கு படித்த ஒரு சகோதர சமுதாய சகோதரி,'முஸ்லிம்களை நாங்கள் அனுமதிக்க முடியாது' என ஊடகங்களில் நேரடியாக எச்சரிக்கை செய்கிறார்.
இதுபோன்ற சம்பவங்கள் முஸ்லிம்களுக்கு புதிதல்ல. முஸ்லிம்களுக்கு வீடு விற்பனை செய்யக் கூடாது. வீடு வாடகைக்கு கொடுக்கக் கூடாது என நாட்டின் சில பகுதிகளில் சிலர் பிடிவாதத்துடன் இருந்து வருகிறார்கள். இதன் காரணமாக சில முஸ்லிம் பிரபலங்கள் கூட, மும்பை உள்ளிட்ட நகரங்களில் வீடு வாங்க முடியாத நிலை இருந்து வருகிறது. சென்னையில் கூட ஒருசில பகுதிகளில் இதுபோன்ற நிலை உள்ளது.
முக்கிய அம்சங்கள்:
இந்த விவகாரங்களில் நாம் மூன்று முக்கிய அம்சங்களை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். முதலாவது, முஸ்லிம்களுக்கு வீடு விற்பனை செய்யக் கூடாது, வீடு வாடகைக்கு விடக் கூடாது என்று செல்பவர்கள் நன்கு படித்து சமுதாயத்தில் உயர் நிலையில் இருக்கும் மேல்மட்ட மக்கள் ஆவார்கள்.
இரண்டாவது, முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளை குறிவைத்து வெறுப்பு பிரச்சாரம் செய்யப்படுகிறது. அந்த பகுதிகள் மினி பாகிஸ்தான் என இந்துத்துவ அமைப்புகளால் அழைக்கப்படுகிறது. மூன்றாவதாக, சமூக நலனில் அக்கறை கொண்டவர்கள், அரசியல்வாதிகள் கூட இத்தகைய செயல்களை கண்டும் காணாமல் இருந்து விடுகிறார்கள். இதனால் நன்கு படித்த முஸ்லிம்கள் மன ரீதியாக பாதிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்.
மொராதாபாத் வீடு விவகாரத்தில் மருத்துவர் யூசுப், மருத்துவர் இக்ரா சவுதிரிக்கு நியாயமும் நீதியும் கிடைக்க சமூக அக்கறை கொண்டவர்கள் யாராவது குரல் கொடுப்பார்களா? என்பது தான் தற்போதைய முக்கிய கேள்வியாக உள்ளது.
முஸ்லிம்களுக்கு எதிராக இதுபோன்ற பாகுபாடு காட்டக் கூடாது. இந்தியா நான்காயிரத்திற்கும் அதிகமான பல்வேறு கலாச்சாரங்களை பின்பற்றும் மக்கள் வாழும் நாடு. இப்படிப்பட்ட அருமையான நாட்டில் மதம், மொழி, சாதி ஆகியவற்றின் அடிப்படையில் வாழ்வது நாட்டின் நலனுக்கும், முன்னேற்றத்திறன சரியல்ல என்ற குரல் எழுப்பினால் மட்டும் பயன் இல்லை. நன்கு படித்த சகோதர சமுதாய மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் குறித்து இருந்து வரும், தப்பான புரிதல்கள், கருத்துகள் நீங்க வேண்டும். நீக்கப் பட வேண்டும். அதுவரை, இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாக தொடரும். அதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment