"லிபியாவில் மாபெரும் இஸ்லாமிய கல்வி உச்சி மாநாடு"
இஸ்லாமிய மார்க்கத்தில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நல்ல கல்வியின் மூலம் மட்டுமே, ஒருவரின் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் அமைவதுடன், பொருளாதார ரீதியாகவும் உயர்ந்த நிலையை எட்டும். எனவே, முஸ்லிம்கள் அனைவரும் கட்டாயம் கல்வி பெற வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
எனினும் குடும்பத்தின் வறுமை, பொருளாதார பின்தங்கிய நிலை என பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக முஸ்லிம்கள் கல்வியில் அதிகளவு ஆர்வம் செலுத்தாமல் இருந்து வருகிறார்கள். இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் முஸ்லிம்கள், கல்வி குறித்து இன்னும் புரிதல் இல்லாமல் இருந்து வருகிறார்கள்.
எனவே தான் கல்வி குறித்து முஸ்லிம் குடுங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் தங்களுடைய பணிகளை ஆற்றி வருகிறார்கள். கல்வி கண்காட்சி என்பன உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, வாழ்க்கைக்கு கல்வியின் அவசியம் என்ன? என்பது குறித்து அறிஞர் பெருமக்கள் மற்றும் கல்வியாளர்களின் உதவியுடன் நல்ல விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் முஸ்லிம் நாடுகளில் கூட, கல்வி குறித்து கருத்தரங்கங்கள், மாநாடுகள் அவ்வவ்போது நடத்தப்பட்டு வருகின்றன.
இஸ்லாமிய கல்வி உச்சி மாநாடு:
இந்த வரிசையில் வரும் 2025ஆம் ஆண்டு லிபியாவில் இஸ்லாமிய கல்வி குறித்த உச்சி மாநாடு நடத்தப்பட உள்ளது. இஸ்லாமிய உலக கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (ICESCO) நிர்வாகக் குழுவின் 45வது அமர்வு மற்றும் மாநாட்டை வரும் ஜனவரி 2025-இல் லிபியாவின் திரிப்போலியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது, இஸ்லாமிய கல்வி மற்றும் கலாச்சார வளர்ச்சிக்கான அதன் பங்களிப்புகளில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது.
இந்த உச்சி மாநாட்டை நடத்துவதற்கான ஒப்பந்தம் மொராக்கோவின் ரபாத்தில் உள்ள ICESCO தலைமையகத்தில், ICESCOவின் தேசிய ஆணையங்கள் மற்றும் மாநாடுகளுக்கான தலைமைச் செயலகத்தின் இயக்குநர் டாக்டர் சலீம் அல்-ஹப்சி மற்றும் லிபியாவின் நிரந்தரப் பிரதிநிதி டாக்டர் முகமது அமரி சயீத் ஆகியோரால் கையெழுத்திடப்பட்டது.
மாநாட்டின் முக்கியத்துவம்:
இஸ்லாமிய உலகத்திற்கான சவால்கள் மற்றும் வாய்ப்புகளை நிவர்த்தி செய்யும் சிறப்பு ஆலோசனை அமர்வை உள்ளடக்கிய உச்சி மாநாட்டை நடத்தும் லிபியாவின் திறனில் தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாக ICESCO தலைமைச் செயலக இயக்குநர் சலீம் அல்-ஹப்சி தெரிவித்துள்ளார். "இந்த மாநாட்டின் வெற்றியை உறுதிப்படுத்த தேவையான அனைத்து ஆதாரங்களையும் வழங்க தாங்கள் முழுமையாக கடமைப்பட்டுள்ளோம்" என்று ICESCOவுக்கான லிபியாவின் நிரந்தரப் பிரதிநிதி மொஹமட் அமரி சயீத் கூறியுள்ளார். மாநாட்டை நடத்தும் லிபியாவின் பொறுப்புகளின் அர்ப்பணிப்பை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
மொத்தம் 53 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ICESCO நிர்வாகக் குழு, அமைப்பின் முதன்மை மேற்பார்வை அமைப்பாக செயல்படுகிறது. இஸ்லாமிய உலகில் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சாரத்திற்கான ICESCOவின் பார்வையை வடிவமைக்கும் செயல்திட்டங்களை மதிப்பிடுவதற்கும், செயல்திட்டங்களை அங்கீகரிப்பதற்கும் கவுன்சில் ஆண்டுதோறும் கூடுகிறது.
இந்த உச்சிமாநாட்டை நடத்துவது திரிப்போலியை இஸ்லாமிய உலகம் முழுவதும் கல்வி மற்றும் கலாச்சாரத்தில் உள்ள அழுத்தமான பிரச்சினைகளை சமாளிப்பதற்கும் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும் ஒரு மையமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது உலக அரங்கில் லிபியாவின் பங்கை மேலும் உறுதிப்படுத்துகிறது.
கல்வியாளர்கள், அறிஞர்கள் பங்கேற்பு:
ICESCOவின் 45வது நிர்வாகக் குழுவை லிபியா நடத்துவது மட்டுமல்லாமல், இஸ்லாமிய கல்வி உச்சி மாநாடு, திரிப்போலியில் நடத்துவது கல்வியாளர்கள், இஸ்லாமிய அறிஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 53 நாடுகளில் இருந்து, வரும் இஸ்லாமிய அறிஞர்கள், கல்வியாளர்கள், தற்போது இஸ்லாமிய உலகம் எதிர்கொள்ளும் கல்வி சவால்கள் குறித்தும், அதை எப்படி எதிர்கொண்டு, சரியான திசையில் இளைஞர்களை கல்வி மூலம் வழிப்படுத்துவது குறித்தும் தங்களது எண்ணங்களையும், சிந்தனைகளையும் கருத்துகளையும் எடுத்து கூறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நவீன காலத்திற்கு ஏற்ப, இஸ்லாமிய கல்வியை, அதாவது மார்க்கக் கல்வியை முஸ்லிம் குழந்தைகளுக்கு சொல்லி தருவது குறித்தும், மார்க்கக் கல்வி மற்றும் உலகக் கல்வியை ஒருங்கிணைந்து போதித்து, அதன்மூலம் இம்மை, மறுமை பலன்களை முஸ்லிம் குழந்தைகள் பெற அவர்களுக்கு நல்ல வழிகளை உருவாக்கி தருவது குறித்தும் இந்த உச்சி மாநாட்டில் வழிவகை காணப்படும் என நம்பிக்கை எழுந்துள்ளது. தற்போதைய சவால்கள் நிறைந்த இந்த நவீன யுகத்தில், லிபியாவில் நடத்தப்படும் இந்த மாபெரும் இஸ்லாமிய கல்வி உச்சி மாநாடு, வரவேற்கப்படவேண்டிய ஒன்று என்று உறுதியாக கூறலாம்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment