Sunday, December 29, 2024

சந்திப்பு.....!

முனம்பம் வக்பு நிலம் பிரச்சினை:

சீரோமலபார் கத்தோலிக்க திருச்சபையின் தலச்சேரி பேராயருடன் இ.யூ.முஸ்லிம் லீக் கேரள மாநில தலைவர் பானக்காடு சையது சாதிக்கலி ஷிஹப் தங்ஙள் சந்திப்பு.....!

கோழிக்கோடு, டிச.30- இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  கேரள மாநிலத் தலைவர் பானக்காடு சையது சாதிக்கலி ஷிஹாப் தங்ஙள், 29.12.2024 ஞாயிற்றுக்கிழமையன்று கண்ணூர் தலச்சேரியில் உள்ள பிஷப் இல்லத்தில், சீரோ மலபார் கத்தோலிக்க திருச்சபையின் தலச்சேரி பேராயர் மார் ஜோசப் பாம்ப்ளனியை சந்தித்தார். ஷியாப் தங்ஙள் நேற்று காலை 9 மணியளவில் பிஷப் இல்லத்தை அடைந்தார். பின்னர் பேராயர் மார் ஜோசப் பாம்ப்ளியை சந்தித்து சுமார் ஒரு மணிநேரம் அவர்  கலந்துரையாடினார். கிறிஸ்துமஸ் பண்டிகையை ஓட்டி, கேக் வெட்டிய பிறகு, காலை உணவை இருவரும் ஒன்றாக சாப்பிட்டனர். இந்த சந்திப்பின்போது, முனம்பம் வக்பு நிலம் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள சறுகல் நிலை போன்ற விஷயங்கள் விவாதத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேராயர் விளக்கம்:

தங்ஙள்  உடனான சந்திப்பு குறித்து கருத்து கூறியுள்ள பேராயர் மார் ஜோசப் பாம்ப்ளனி, இந்த சந்திப்பு ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என விளக்கம் அளித்தார். மேலும், சந்திப்பின்போது எந்தவித அரசியல் பேச்சும் விவாதத்திற்குள் எடுத்துக் கொள்ளப்படவில்லை என தெரிவித்தார். இரு சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறியுள்ள பேராயர், இருவரும் வெளிப்படையாக கருத்துகள் பறிமாறிக் கொண்டதாவும் குறிப்பிட்டுள்ளார். முனம்பம் வக்பு நிலம் பிரச்சினை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்,. 

தங்ஙள் விளக்கம்:

இதேபோன்று, பேராயர் உடனான சந்திப்பு குறித்து விளக்கம் அளித்துள்ள பானக்காடு சையது சாதிக்கலி ஷிஹாப் தங்ஙள், இரு சமூகங்களுக்கு இடையே நல்ல உறவுகள் நீடிப்பது மிகவும் அவசியம் என தெரிவித்தார். முனம்பம் வக்பு நிலம் தொடர்பாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு குறித்து எந்தவித கருத்துகளையும் தெரிவிக்க தங்ஙள் மறுத்துவிட்டார். 

முனம்பம் வக்பு நிலம் பிரச்சினையை எந்தவித அரசியல் குறுக்கீடுகள் இல்லாமல், தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பேராயர் ஏற்கனவே சொல்லி இருக்கிறார். இந்த பிரச்சினையில் மாநில அரசின் செயல்பாடுகளையும் அவர் விமர்சனம் செய்துள்ளார். பல்வேறு போராட்டங்களை அப்பகுதி மக்கள் நடத்திவரும் நிலையில், அவர்களை பேராயர் சந்தித்து பேசினார்.  பாஜக உள்ளிட்ட சில கட்சிகள் இந்த பிரச்சினைக்கு மத சாயம் பூசுவதாக பேராயர் குற்றம்சாட்டியுள்ளார். இத்தகையை சூழ்நிலையில், பானக்காடு சையது சாதிக்கலி ஷிஹாப் தங்ஙள், பேராயரை சந்தித்து கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை கூறிக் கொண்டு, மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டான செயலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. 

சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

=============================

No comments: