"தமிழ்நாட்டில் பிரியாணி வணிகம்
ரூ.10 ஆயிரம் கோடியாக உயர்ந்து சாதனை"
உலகம் முழுவதும் உள்ள மக்கள் மத்தியில், பிரியாணிக்கு எப்போதும் ஒரு தனி மவுசு இருந்து வருகிறது. சுவையான பிரியாணியை யாரும் விரும்பாமல் இருக்க மாட்டார்கள். அந்த வகையில், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பிரியாணி வணிகம், நாளுக்கு நாள் சூடுபிடித்துக் கொண்டே வருகிறது.
தென்மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில், தற்போது நாள்தோறும் பிரியாணி உணவை உண்பது மக்களிடையே பழக்கமாக மாறிவிட்டது. பண்டிகை, விசேஷ காலங்கள் மற்றும் திருமணம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளில் மட்டுமே, பிரியாணியை சமைத்து சாப்பிட்டு வந்த மக்கள், தற்போது அதன் சுவையில் மயங்கி, தங்களுடைய வாழ்க்கையின் முக்கிய உணவாக பிரியாணியை சாப்பிடுவது பழக்கமாக்கிக் கொண்டு வழக்கமாக்கி விட்டார்கள். இதனால் பிரியாணி வணிகம், தற்போது விண்ணை தாண்டும் வகையில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மக்களிடையே தொடர்ந்து அதிகரித்து வரும் ஆர்வம் காரணமாக, பிரியாணி வணிகத்தில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.
தமிழ்நாட்டில் பிரியாணி வணிகம்:
தமிழக மக்கள் நல்ல உணவுப் பிரியர்கள் என்பது
நிதர்சனமான உண்மையாகும். நல்ல சுவையான உணவு வகைகளுக்கு தமிழர்கள் என்போதும் ஆதரவு கரம்
நீட்டுவார்கள். இதனால் தான் உணவுத் திருவிழாக்களில் மக்களின் கூட்டம் அலை மோதுவதை நாம்
காண முடிகிறது. அந்த வகையில் பிரியாணிக்கு தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து
வருகிறது. வகைவகையான, சுவையான பிரியாணியை, தேடிச் சென்று சாப்பிடும் பழக்கம் தமிழர்கள்
மத்தியில் தற்போது இருந்து வருகிறது. இதனால், தமிழ்நாட்டில் பிரியாணி வணிகம் முன் எப்போதும்
இல்லாத அளவுக்கு உச்சத்தைத் தொட்டுக் கொண்டே செல்கிறது.
தமிழ்நாடு தற்போது பிரியாணி வணிகத்தின் மையமாக
மாறியுள்ளது என்றே கூறலாம். தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் பிரியாணி வணிகத்தின்
மதிப்பு ஆண்டு ஒன்றுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உணவு வணிகத்தை கண்காணிப்பவர்கள், பிரியாணியின் ஒழுங்கமைக்கப்பட்ட சந்தை 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் என்றும், அமைப்புசாரா சந்தை 7 ஆயிரத்து 500 கோடிக்கும் அதிகமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் பிரியாணி தொழிலில், திண்டுக்கல் தலப்பாக்கட்டி, ஜூனியர் குப்பண்ணா, புகாரி, பிலால், அஞ்சப்பர், சேலம் ஆர்ஆர் பிரியாணி, பொன்னுசாமி மற்றும் எஸ்எஸ் ஹைதராபாத் பிரியாணி போன்ற நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த நன்கு அறியப்பட்ட பிராண்டுகளுடன் கூடுதலாக, பல்வேறு பெயர்களில் இயங்கும் நடுத்தர அளவிலான நிறுவனங்களின் பரந்த நெட்வொர்க்கும் தமிழ்நாட்டில் உள்ளது. மேலும், எண்ணற்ற தள்ளு வண்டி விற்பனையாளர்கள் பகல் மற்றும் இரவு முழுவதும் பிரியாணியை விற்பனை செய்து வருகிறார்கள்.
இதனால், இந்த பிரபலமான பிரியாணி உணவு பரவலாக எப்போதும் கிடைப்பதற்கு வாய்ப்பாக அமைகிறது.
.
பிரியாணியின் முக்கிய மையங்கள்:
தமிழ்நாட்டில் பிரியாணி உணவின்
முக்கிய மையங்களாக கொங்கு
மண்டலம், ஆம்பூர், திண்டுக்கல் ஆகியவை இருந்து வருகின்றன. இந்த பகுதிகளில் எப்போதும்
பிரியாணி வணிகம் சூடாகவே இருக்கும். சென்னை முஸ்லிம் பிரியாணி, கொங்கு பிரியாணி, செட்டிநாடு
பிரியாணி, ஆம்பூர் பிரியாணி, வாலாஜா பிரியாணி, திண்டுக்கல் பிரியாணி, ஆற்காடு பிரியாணி,
என பல வகையான பிரியாணிகள் தயாரிக்கப்பட்டு, மக்களுக்கு சுடசுட வினியோகம் செய்யப்படுகிறது.
இதன்மூலம் தமிழகத்தில் மட்டும் ஆண்டு ஒன்றுக்கு 10 லட்சத்து 20 ஆயிரம் பிரியாணி விற்பனை
செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 65 பிரியாணி விற்பனை
நிறுவனங்கள் இருந்தாலும், திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி நிறுவனம் மிகப்பெரிய
அளவுக்கு மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளதால், அந்த நிறுவனம் நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம்
முதல் 6 ஆயிரம் கிலோ பிரியாணியை விற்பனை செய்கிறது.
பிலால், புஹாரி பிரியாணி:
சென்னையில் மிகவும் புகழ்பெற்ற பிரியாணி
நிறுவனங்களில் பிலால் பிரியாணி, புஹாரி பிரியாணி, காஜா பிரியாணி, சார்மினார் பிரியாணி
உள்ளிட்ட நிறுவனங்கள் முக்கியமானவையாக கருதப்படுகின்றன. சென்னை அண்ணா சாலையில் உள்ள
பிலால் பிரியாணி நிறுவனத்தின் நிறுவனர் அப்துல் ரஹீம், தனது பிரியாணி வணிகம் குறித்து
கருத்து தெரிவிக்கையில், தாங்கள், விற்பனையை முக்கியமாக கருதவில்லை என்றும், தரத்திற்கு
மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும் கூறியுள்ளார்,. இரண்டு மணி நேரத்திற்கு
ஒருமுறை தங்கள் நிறுவனம் பிரியாணி தயாரித்துக் கொண்டே இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
விடியற் காலையில் மட்டுமே தாங்கள் பிரியாணி சமைக்கவில்லை என்றும், ஒவ்வொரு இரண்டு மணி
நேரத்திற்கும் சமைத்து, சூட சூட வாடிக்கையாளர்களுக்கு வினியோகம் செய்வதாகவும் குறிப்பிட்டுள்ள
ரஹீம், நாள் ஒன்றுக்கு 300 முதல் 400 கிலோ பிரியாணியை தங்கள் நிறுவனம் விற்பனை செய்வதாகவும்
தெரிவித்துள்ளார்.
பிரியாணியின் விலைகள் ஒவ்வொரு நிறுவனத்திலும்
வெவ்வேறு வகையில் மாறுபட்டு இருந்து வருகின்றன. சில நிறுவனங்களில் தரம் மற்றும் சுவைக்கு
ஏற்ப நிலை நிர்ணயம் செய்யப்படுகிறது. சாலையோர பிரியாணி கடைகளில், 100 ருபாய்க்கு பிரியாணி
கிடைத்து விடுகிறது.
மட்டன், சிக்கன், பீப், முட்டை என பல்வேறு
வகைகளில் பிரியாணி தயாரிக்கப்படுகிறது. அத்துடன், வெஜ் பிரியாணியும் தயாரிக்கப்பட்டு,
மக்கள் மத்தியில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு வகையில் பிரியாணி இருந்தாலும்,
மட்டன் பிரியாணிக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருவதாக புள்ளிவிவரங்கள்
தெரிவிக்கின்றன.
சில வணிக நிறுவனங்களில் ஒரு பிளேட் பிரியாணி
600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நட்சத்திர விடுதிகளில் ஒரு பிளேட் ஆயிரத்து
600 ரூபாயாக உள்ளது. பிரியாணியின் விலை அதிகமாக இருந்தாலும் அதன் சுவையில் மயங்கும்
வாடிக்கையாளர்கள், அதுகுறித்து (விலையை) எந்தவித கவலையும் அடையாமல், சுவையான பிரியாணியை
உண்டு மகிழ்கிறார்கள்.
விற்பனையோ விற்பனை:
சென்னையில் மட்டும் இந்தாண்டில் (2024) மட்டும்,
ஆன்லைன் மூலம் பதிவு செய்து பிரியாணியை வாங்கி சாப்பிட்டவர்களின் எண்ணிக்கை அதிகம்
என தெரியவந்துள்ளது. swiggy நிறுவனம் நடப்பாண்டில் மட்டும், 46 லட்சத்திற்கும் அதிகமான
சிக்கன் பிரியாணியை தங்களது வாடிக்கையாளர்களுக்கு வினியோகம் செய்துள்ளார்கள். இதன்மூலம்
பிரியாணியின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன், அதை சாப்பிடுபவர்களின் எண்ணிக்கையும்
தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கிறது என்பது உறுதியாக தெரியவருகிறது.
மக்களிடையே பிரியாணிக்கு நல்ல வரவேற்பு இருப்பதால்,
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் புதிதாக தொடங்கப்பட்டு அதன்மூலம், பிரியாணி விற்பனை செய்யும்
போக்கும் தற்போது அதிகரித்துள்ளது. சென்னையில் உள்ள ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒவ்வொரு
மாதமும், 30 ஆயிரம் பிரியாணி பொட்டலங்களை விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளது.
பிரபல வணிக நிறுவனங்கள், நட்சத்திர விடுதிகள்
மற்றும் சாலையோர கடைகள் ஆகியவற்றில் விற்பனை செய்யப்படும் பிரியாணி, தமிழ்நாட்டு மக்களிடையே
வெறும் ஒரு உணவாக மட்டுமே கருதப்படுவதில்லை. பிரியாணியை தங்கள் வாழ்வின் ஒரு அங்கமாக
தமிழக மக்கள் தற்போது மாற்றிக் கொண்டனர் என்பதை, பிரியாணி மீது அவர்கள் கொள்ளும் அன்பே
சாட்சியாக இருந்து வருகிறது.
- (குறிப்பு: தி இந்து
ஆங்கில நாளிதழில் 26.12.2024 அன்று வந்த கட்டுரையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கட்டுரை
இது)
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment