Sunday, September 4, 2011

வவ்வால்





ழிக்கப்பட்டு வரும் வ்வால் இனம் :

காசநோய் உள்ளிட்ட பல நோய்களின் மருந்துக்காக வேட்டையாடப்படும்  வவ்வால் இனம்.  

காவல்துறையின் கண்களில் மிளகாய் பொடியை தூவி விட்டு சமூக விரோதிகள் நடத்ததும் அட்டூழியம். 

நெல்லை மாவட்டத்தில் அரங்கேற்றப்படும் கொடுச் செயலை, கண்டும் காணாமல் இருக்கும் வனவிலங்கு பாதுகாப்புத்துறை. 

_______________________________________________________

இறைவனால் படைக்கப்பட்ட அதிசய பாலூட்டிகளில்,  பெரும்பாலான இனங்கள் மெல்ல மெல்ல அழிக்கப்பட்டு வருகின்றன. 

ஒரு லட்சம் பாலூட்டி இனங்களில்,  தற்போது 4 ஆயிரம் பாலூட்டிகள் மட்டுமே, உலகத்தில் இருப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.  

இவற்றின் எண்ணிக்கை மேலும் மிக வேகமாக குறைந்து வருகிறது.

இதே நிலை தொடர்ந்தால், உயிரியல் கண்காட்சிகளில் மட்டுமே இனி பாலூட்டி இனங்களை காணக்கூடிய நிலை ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர் அறிவியல் ஆய்வாளர்கள்.  

பாலூட்டிகளில்,  நான்கில் ஒரு பகுதியைக் கொண்டது வவ்வால் இனம். 

பல அதிசய தன்மைகளை தன்னகத்தே கொண்ட வாவ்வால் இனம், தங்களது உடல் எடையைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக உண்ணக் கூடியவை. 

வவ்வால்களில் 951 இனங்கள் இருப்பதாக ஆய்வுகள் மூலம் தெரிய வருகிறது. 

ஒரு சமுதாயமாக வாழும் வவ்வால் இனம், ஆண்டு முழுவதும் உணவுத் தட்டுபாடின்றி கிடைக்கக் கூடிய இடங்களை தேர்வு செய்து வாழும் தன்மை கொண்டவை. 

உலகின் அனைத்து பகுதிகளிலும் வவ்வால்கள் காணப்பட்டாலும், அதிக வெப்பம் மிகுந்த நாடுகளில்தான் இவை பொதுவாக காணப்படுகின்றன. 

மரங்களின் கிளைகளில் தலை கீழாக தொங்கிக் கொண்டு, அதிசயமாக வாழும் வவ்வால் இனம், ஒரு ஆச்சரியமான பாலூட்டி. 

இப்படி பல அதிசயங்களை தன்னகத்தே கொண்ட வவ்வால் இனம் மனிதர்களால் தற்போது வேட்டையாடப்பட்டு அழிக்கப்பட்டு வருகிறது.

காசநோய், ஆஸ்துமா உள்ளிட்ட பல நோய்களுக்கு, வவ்வால்கள் மூலம் தீர்வு கிடைப்பதாக நம்பப்படுகிறது. 

இதனால், தமிழகத்தின் பல பகுதிகளில் அதிசயமாக காட்சி அளிக்கும் வவ்வால்கள், துப்பாக்கித் தோட்டாக்களுக்கு இரையாகி வருகின்றன. 

நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றுப் பகுதிகளில் காணப்படும் வவ்வால் இனம், மெல்ல மெல்ல அழிந்து வருவது,  வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

இதே நிலை தொடர்ந்தால், இன்னும் சில ஆண்டுகளில், தமிழகத்தில் வவ்வால் இனமே இல்லாத நிலை உருவாகிவிடும். 

இளம் தலைமுறையினருக்கு வவ்வால்கள் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்காமல் போய்விடும். 

அதிசய பாலூட்டி இனமான வவ்வால் குறித்தும், நெல்லை மாவட்டத்தில் அது அழிவின் விளிம்பில் இருப்பது குறித்தும் இப்போது பார்க்கலாம். 
_______________________________________________________
திருநெல்வேலி மாவட்டம் குறுக்குத்துறை அருகேயுள்ள சாலைப் பகுதிகளில் அழகாக காட்சியளிக்கின்றன ஏராளமான மருத மரங்கள்.

அழகாக காட்சி அளிக்கும் இந்த மருத மரங்களின் கிளைகளில், தலைக்கீழாக தொங்கிக் கொண்டிருக்கின்றன ஆயிரக்கணக்கான கருமை நிற வவ்வால்கள். 
இப்படி, ஸ்ரீவைகுண்டம் ஆற்றுப்பகுதியில் இருக்கும் மருதமரங்களில் தொங்கிக் கொண்டிருக்கும் வல்வால்களை காணும்போது மனத்தில் ஒரு மிரட்சி இயற்கையாகவே ஏற்பட்டு விடுகிறது. 

பாலூட்டி இனங்களில் மிகப் பழமையான இனம் இந்த வவ்வால். 

பார்ப்பதற்கு சிறிய பூனைக்குட்டி போன்று காட்சி அளிக்கும் வவ்வால்,  மிக அமைதியான சுவாபம் கொண்டது. 

வவ்வால்களுக்கு பகலில் கண் பார்வை அவ்வளவாக தெரியாது என்பதால், இரவு நேரங்களில் மட்டுமே, இரையை தேடிக் கொள்ளும் தன்மை கொண்டது. 

இரவு நேரத்தில் இரையை தேடி விட்டு, பகல் நேரங்களில் மருதமரங்களின் கிளைகளில் தொங்கிக் கொண்டு, குட்டித் தூக்கம் போடுகின்றன இந்த வவ்வால்கள். 

மருதமரத்தின் கிளைகளில் வாழும் வவ்வால்கள் பார்ப்பதற்கு கருமையாக இருந்தாலும், மிகப் பெரிய ஆற்றல்களை தன்னுள் கொண்டுள்ளன. 

வவ்வால்களின் இறக்கை,  மழைக்கு குடை விரித்தது போன்று இருக்கும். 

தலைக் கீழாகவே தொங்கிக் கொண்டு உறங்கும் தன்மை கொண்டது வவ்வால். 

மரங்களின் கிளைகளில் தலைக் கீழாக தொங்கிக் கொண்டிருந்தாலும், மற்ற பாலூட்டிகளை காட்டிலும் வேறுபட்ட தன்மையை கொண்டவை வவ்வால். 

தலைக்கீழாக தொங்குவதால் எந்தவிதமான சக்தி இழப்பும் வவ்வாலுக்கு ஏற்படுவதில்லை. 

இப்படி பல விசித்தரங்களை கொண்ட வவ்வால், மிக வேகமாக பறக்கக் கூடிய ஆற்றல் கொண்டது. 

இரையை தேடும் போது ஜெட் வேகத்தில் பறக்கும் வவ்வால்கள், எதிலும் மோதி விடக்கூடாது என்பதற்காக, ஒரு வித எதிரொலியை எழுப்பும். 

இன்றைய நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஒன்றான ரேடாரின் இயக்கத்தை ஒத்த ஒரு உத்தியை வவ்வால் தனது இரையை தேடும்போது கையாளுகிறது.

எதிரொலியின் மூலம் இரையை பிடிக்கும் அதிசயமான ஆற்றல் கொண்டது வவ்வால்.  

மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் ஆற்றல் கொண்ட வவ்வால், ஆண்டு முழுவதும் ஒரே மரத்தில் தங்கியும் விடுகின்றன. 

பகல் பொழுதை ஓய்விற்கும் இரவு பொழுதை தங்களது வாழ்க்கைத் தேவைக்கும் பயன்படுத்துகின்றன வவ்வால்கள். 

அந்திப் பொழுது முதல் வைகறைப் பொழுது வரை மிகச் சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவை வவ்வால் இனம். 

இரவில் மட்டும் இயங்கக் கூடிய உயிரினங்களில் வவ்வாலும் ஒன்று. 

இரவில் நன்கு பார்க்கக்கூடிய கண் அமைப்பு வவ்வாலுக்கு இறைவன் அளித்துள்ளான். 

தூரக் கடல் தீவுகளில் வசிக்கக்கூடிய சில வவ்வால்கள் மட்டுமே, பகல் பொழுதில் தங்களது இரையை தேடுகின்றன. 

கதைகளிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் தீய சக்திக்கும் சாத்தானிய சக்திக்கும் , வவ்வால்கள் உதாரணமாக கூறப்படுகின்றன. 

ஆனால், உண்மையில் வவ்வால்கள் மனிதர்களுக்கு பல விதங்களில் சேவை ஆற்றி வருகின்றன. 

ஆம். 

மனிதர்களுக்கு ஊறுவிளைவிக்கும் பூச்சி, கொசு, வண்டு, ஈக்கள் ஆகியவற்றை தங்களது முக்கிய உணவாக உட்கொள்கின்றன வவ்வால்கள்.


சில வவ்வால்கள் ஒரு மணி நேரத்தில் 600 கொசுக்களை பிடித்து திண்ணும் ஆற்றல் கொண்டவை. 

இதனால், பல வித நோய்கள் தாக்கப்படுவதில் இருந்து மனிதன் தப்பித்துக் கொள்கின்றான். 

பல நாடுகள் கொசுகளை அழித்து மனித இனத்தை நோய்களில் இருந்து காப்பாற்ற தங்களது பட்ஜெட்டில் கோடிக்கணக்கான நிதியை ஒதுக்கி வருகின்றன. 

ஆனால், வவ்வாலோ எந்த கட்டணமும் இன்றி , கொசுக்களை வேட்டையாடி மனித இனத்தை நோய்களில் இருந்து காப்பாற்றி வருகிறது. 

 இப்படி மனித குலத்திற்கு வவ்வால்கள் ஆற்றி வரும்  தொண்டினை  வார்த்தைகளால் விவரிக்க முடியாது. 

இது மட்டுமல்ல, வவ்வால்களின் கழிவுகளில் மிக அதிக அளவுக்கு நெட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் உள்ளதால், மிகச் சிறந்த உரமாக அது கருதப்படுகிறது. 

பல நாடுகளில்,  வவ்வால்களின் கழிவுகள் சேகரிக்கப்பட்டு, விவசாயத்திற்கு தேவையான மிக உயர்ந்த உரம் தயாரிக்கப்படுகிறது. 

வவ்வால்களின் வாயில் இருந்து சுரக்கும் உமிழ் நீரில் இருந்து,  மனிதர்களுக்கு ஏற்படும் இதய சம்பந்தமான நோய்களுக்கு அருமருந்து தயாரிக்கப்படுகிறது. 

மூளைக்கு செல்லும் இரத்தம் தடைப்படுவதை தடுக்கவும், காயங்களில் இருந்து வெளியேறும் இரத்தத்தை விரைவில் உறைய வைக்கவும் இந்த மருந்து பயன் அளிக்கிறது. 

இது மட்டுமல்ல, காசநோய், ஆஸ்துமா உள்ளிட்ட பல நோய்களுக்கு வவ்வால்கள் மூலம் தீர்வுகள் கிடைக்கின்றன. 


இதனால்தான், ஸ்ரீவைக்குண்டம் பகுதியில் மருதமரக்கிளைகளில் வாழும் வவ்வால்கள் தற்போது சமூக விரோதிகளால் வேட்டையாடப்பட்டு வருகின்றன.

நரிக்குறவர் இன மக்களை பயன்படுத்தி, சில சமூக விரோதிகள் வவ்வால்களை தங்களது துப்பாக்கிகளின் தோட்டாக்களுக்கு இரையாக்குகின்றனர். 

இதனால், நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகளில் ஆயிரக்கணக்கில் வாழ்ந்து வந்த வவ்வால் இனம் தற்போது, மெல்ல மெல்ல அழிந்து வருகிறது. 

நெல்லை மாவட்டத்தில் மட்டுமல்ல, தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் வவ்வால்கள் வேட்டையாடப்பட்டு வருவது தொடர்கதையாகியுள்ளது. 

அதிசய பாலூட்டி இனமான வவ்வால் அழிக்கப்பட்டு வருவதை தமிழக அரசின் வன விலங்கு பாதுகாப்புத்துறை ஏனோ கண்டும் காணாமல் இருந்து வருகிறது. 

இதனால்தான், காவல்துறையின் கண்களில் மிளகாய் பொடியை தூவி விட்டு,  சமூக விரோத கும்பல், வவ்வால் இனத்தை வேட்டையாடி, கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்து வருகிறது. 

இதனால், நெல்லை மாவட்ட மருதமரக்கிளைகளில் ஆயிரக்கணக்கில் தொங்கிக் கொண்டிருந்த வவ்வால்களின் எண்ணிக்கை தற்போது நூறு என்ற அளவுக்கு குறைந்துள்ளது. 

வனவிலங்குகளை வேட்டையாடுவதைத் தடுக்க நாட்டில் பல சட்டங்கள் இருக்கின்றன. 

7 ஆண்டுகள் சிறைத்தண்டனை. 

30 ஆயிரம் ரூபாய் அபராதம். 

இப்படி, பல கடுமையான தண்டனைகள் வழங்கச் சட்டத்தில் இடம் இருந்தாலும், ஏனோ,  வனவிலங்குகள் வேட்டையாடப்படுவது மட்டும் நிறுத்தப்படவில்லை.

நெல்லை மாவட்டத்தில் வவ்வால்கள் இனம் அழிக்கப்பட்டு வருவதே,   இதற்கு ஒரு நல்ல உதாரணம்.

தடை செய்யப்பட்ட விலங்குகள், பறவைகள் ஆகியவற்றை வேட்டையாடுவது மிகப் பெரிய குற்றம். 

ஆனால், தற்போது இவையெல்லாம் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. 

சட்டத்தை யாருமே மதிப்பதில்லை. 

பணம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்படும், சமூக விரோத கும்பல், மனசாட்சி இல்லாமல், வவ்வால் இனத்தை கூண்டோடு அழிக்கும் செயலில் தீவிரமாக இறங்கியுள்ளது. 

இப்படி, ஈவு இரக்கம் இன்றி,  வவ்வால்களை வேட்டையாடும் நபர்களை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். 

அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். 

வவ்வால்களால் மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. 

மாறாக,  வவ்வால்களால் மனித இனத்திற்கு பல நன்மைகள்தான் கிடைத்து வருகின்றன. 

இப்படி, மனித சமுதாயத்திற்கு அளப்பரிய சேவையை ஆற்றிக் கொண்டிருக்கும் வவ்வால் இனத்தை காப்பற்ற அரசு துணிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

வவ்வால்கள் அழிக்கப்படுவதை தடுக்க வேண்டிய பொறுப்பு தமிழகஅரசின் கைகளில்தான் உள்ளது. 

அரசு இனியும் மவுனம் கடைப்பிடித்தால், வவ்வால் இனம் குறித்து எதிர்காலத்தில் கதைகளில் மட்டும்தான் தமிழக இளைஞர்கள்,அறிந்துக் கொள்ளக்கூடிய ஒரு அவல நிலை உருவாகிவிடும். 

இதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்பதுதான் வனவிலங்கு ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு. 



S.A.ABDUL AZEEZ



No comments: