Sunday, August 23, 2015

0.01 நொடியில் வாழ்க்கை மாறலாம்....!

0.01 நொடியில் கூட வாழ்க்கை மாறலாம்....! வெற்றி கிடைக்கலாம்....!!


சீனாவின் பீஜிங் நகரில் நடக்கும் 15வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், உலகின் அதிக வேக மனிதன் யார் என்பதை நிர்ணயிக்கும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.

இதில் நடப்பு சாம்யினும், ஒலிம்பிக் சாம்பியனுமான ஜமைக்கா புயல் உசேன் போல்ட் மிகப் பெரிய சாதனை நிகழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.

குறிப்பிட்ட இலக்கை 9.79 வினாடிகளில் கடந்து சாதனை படைத்த உசேன் போல்ட் உலக மக்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

அதேநேரத்தில் இரண்டாவது இடம் பிடித்த அமெரிக்க வீரர் ஜஸ்டின் கேத்லின் 9.80 வினாடிகளில் குறிப்பிட்ட இலக்கை அடைந்தார்.

உசேன் போல்ட்க்கும், ஜஸ்டின் கேத்லினுக்கும் இடையேயான வித்தியாசம் வெறும் 0.01 வினாடிதான்.

அதாவது 0.01 வினாடியில் உலக சாதனை நிகழ்த்தியுள்ளார் உசேன் போல்ட்.

ஆக மனிதனின் வாழ்க்கை எந்த நேரத்திலும் மாறலாம்.

எப்போது வேணுமானாலும் வாழ்க்கையில் அதிசயம் நிகழலாம்.

வெற்றி என்பது யாரும் எதிர்பார்க்காத வேளையில் எப்போதும் கிடைக்கலாம்.

இதுதான் உசேன் போல்ட்டின் தற்போதையை சாதனை வெற்றி மனித சமுதாயத்திற்கு தரும் படிப்பினை.

எனவே, தோல்வி, வெற்றிகளை பற்றி கவலைப்படாமல், குறிக்கோளை மட்டுமே இலக்காக வைத்து இளைஞர்கள் உழைக்க வேண்டும்.

அதன்மூலம் வெற்றிகளை குவிக்க வேண்டும்.

அதிசய புயல் மனித உசேன் போல்ட் தமது வெற்றியின் மூலம் இதைத்தான் சொல்லி இருக்கிறார்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

Saturday, August 22, 2015

சென்னையில் நான்....!

சென்னையில் நான்....!


சென்னை தினத்தையொட்டி இந்த பதிவு செய்யப்படுகிறது.

சென்னை குறித்து பல பதிவுகள் எழுதினாலும், இன்னும் எழுதிக் கொண்டே இருக்கும் வகையில் இங்கு பல தகவல்கள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன.

அந்த வகையில் சென்னையில் இருக்கும் பல அழகான மால்கள் மக்களின் மனங்களை கவர்ந்து வருகின்றன எனலாம்.

இந்த மால்களுக்கு செல்லும்போது உண்மையிலேயே மனதில் ஒரு உற்சாகம் பிறக்கிறது.


அதற்கு பல காரணங்கள் உண்டு.

நானும் சென்னையில் உள்ள மால்களுக்கு பலமுறை சென்று ரசித்து வருகிறேன்.

ஒவ்வொரு முறை செல்லும்போது ஒரு புதிய அனுபவம் கிடைக்கிறது.

மால்களுக்கு செல்லும்போது, பாக்கெட் மணி தண்ணீர் போல செலவாவது வேறு விஷயம்.

ஆனால், மால்களின் அழகில் நிச்சயம் மனம் அமைதி கொள்கிறது.

அங்கு வரும் விதவிதமான மனிதர்களை காணும்போது, ஒருவித தேடுதல் பிறக்கிறது.

ஆக, சென்னைக்கு அழகு சேர்க்கும் மால்களை சென்னை தினத்தில் எப்படி நாம் மறக்க முடியும்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

Sunday, August 9, 2015

தங்க மனசு.....!

பெண்ணுக்கு தங்க மனசு.....!


உலக மகள்கள் தின வாரத்தையொட்டி இந்தி நடிகர் அமிதாப்பச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

அதில்,

பெற்றோர்களுக்கு பெண் குழந்தைகள் இருப்பது பெருமையான விஷயம்.

மகள்களை நாம் மகன் போல ‘வாடா... போடா...’ என்று கூப்பிடுகிறோம்.

அதேநேரம், மகன்களை மகள்கள் போல அழைப்பது இல்லை.

இதுதான் மகள்களுக்கு இருக்கிற முக்கியத்துவம்.

பெற்றோருக்கு மகள்கள் பதற்றத்தை ஏற்படுத்த மாட்டார்கள்.

இன்றைய உலகில் ஒரு மகள் இருப்பது 10 மகன்களுக்கு சமம்.

இவ்வாறு அமிதாப்பச்சன் கூறியுள்ளார்.


ஐக்கிய நாடுகளின் சபையில் பெண் குழந்தைகள் நல அமைப்பின் தூதுவராக அமிதாப்பச்சன் இருக்கிறார்.

இதன்மூலம் பெண் குழந்தைகள் பாதுகாப்புக்காக பல்வேறு விழிப்புணர்வு பணிகளில் அமிதாப் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tuesday, August 4, 2015

இன்னுமா மதுவுக்கு ஆதரவு...!

இன்னுமா மதுவுக்கு ஆதரவு...!


தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தக் கோரி மாநிலம் முழுவதும் போராட்டங்கள் வலுத்துள்ளன.

மாணவர் சமுதாயம் போராட்டத்தில் குதித்துள்ளது.


இதற்கு பெண்கள் ஆதரவு கரம் நீட்டியுள்ளனர்.

ஏன் அனைத்து தரப்பு மக்களும் மதுவுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு முழு ஆதரவு அளித்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட நிலையில் மதுவுக்கு ஆதரவாக மாநில அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அறிக்கை வெளியிட்டு தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்த முடியாது என்ற ரீதியில் கருத்து தெரிவித்து இருப்பது வேதனை அளிக்கிறது.


மக்களுக்காக இயங்கும் ஒரு அரசு மக்களின் உணர்வுகளை மதிக்காமல் இன்னும் மதுவுக்கு ஆதரவான நிலையில் இருப்பது நியாயம் இல்லை.

அதுவும் ஒரு பெண் முதலமைச்சரை கொண்ட தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தக் கோரி நடக்கும் நியாயமான போராட்டங்களை அலட்சியம் செய்வது சரியல்ல.

அரசியல் காரணங்கள் இலாபங்கள் ஆகியவற்றிற்காக இந்த போராட்டங்கள் நடந்தாலும் அவற்றில் சுயநலத்தை விட பொதுநலமே மக்கள் நலமே அதிகமாக உள்ளது.


எனவே மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து சுய கவுரவம் பார்க்காமல் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் நல்ல முடிவை முதலமைச்சர் ஜெயலலிதா உடனே அறிவிக்க வேண்டும்.

இது காலத்தின் கட்டாயம் என்பதை அதிமுக அரசு புரிந்துகொள்ள வேண்டும்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

கவிதாஞ்சலி...!

கவிதாஞ்சலி...!


தமிழ் ஊடகப் படைப்பாளிகள் சங்கம் சார்பில் மெல்லிசை மன்னருக்கும்


ஏவுகணை மன்னருக்கும் கவிதாஞ்சலி செலுத்தப்பட்டது.


சகோதரர்கள் சக்திவேல் சம்பந்தன் முரளி ஆகியோர் அழகிய கவிதைகளை

வாசித்து கவிதாஞ்சலி செலுத்தினார்கள்.நிகழ்ச்சியில் நான் உட்பட பல ஊடக நண்பர்கள் கலந்து கொண்டனர்.எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

Sunday, August 2, 2015

பாபநாசம்...!

கொஞ்சம் லேட்டுதான்....!


பாபநாசம் படத்தை கொஞ்சம் லேட்டாகதான் பார்க்க முடிந்தது.

குப்பையாக திரைப்படங்களை எடுக்கும் இந்த காலத்தில், ஒரு சிறிய கதை கருவை வைத்துக் கொண்டு என்னமாய் படத்தை நகர்த்தி இருக்கிறார் இயக்குநர் ஜீது ஜோசப்.

படத்தில் மது அருந்தும் காட்சிகள் இல்லை.

புகை பிடிக்கும் காட்சிகள் இல்லை.

ஆபாச காட்சிகள் நடனங்கள் இல்லை.

இரட்டை அர்த்த வசனங்கள் இல்லை.

மச்சி ஜொச்சி போன்ற வசனங்கள் இல்லை.

இருந்தும் படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

கிரைம் படம் என்றாலும் இயற்கை எழில்கொஞ்சம் இடங்களில் அழகாக காட்சிகளை படமாக்கி இருக்கிறார் இயக்குநர்.

குடும்பத்துடன் சேர்த்து கண்டிப்பாக இந்த படத்தை தைரியமாக பார்க்கலாம்.

அப்படி எடுக்கப்பட்டு இருக்கிறது பாபநாசம்.

உலக நாயகன் கமல் ஹாசன், என்னமாய் நடித்து ஜமாய்த்து இருக்கிறார்.

நடிப்பு என்பது தெரியாமல், அந்த கதாபாத்திரமாகவே மாறி கலக்கி இருக்கிறார் கமல்.


கௌதமி, ஆஷா சரத், எம்.எஸ்.பாஸ்கர், நிவேதா தாமஸ், எஸ்தர் அனில் உட்பட படத்தில் நடித்த அத்தனை பேரும் அற்புதமாக வாழ்ந்துள்ளனர்.

ரசிகர்களின் கவனத்தை அந்த பக்கம் இந்த பக்கம் திருப்ப விடாமல், கதையிலேயே ஒன்றி இருக்கும்படி இயக்குநர் செய்து இருப்பதே படத்தின் வெற்றிக்கு காரணம் என கூறலாம்.

அழகிய குடும்பம். அதை நேசிக்கும் அதன் தலைவன், குடும்பத்தில் ஏற்படும் ஒரு பிரச்சினைக்கு எப்படி தீர்வு காண முயற்சி செய்கிறான். குடும்பத்தின் மகிழ்ச்சியை சிதைக்க விடாமல் இருக்க என்ன வழிகளை பின்பற்றுகிறான் என்பதை இதைவிட அழகாக சுவையாக யாராலும் சொல்ல முடியாது.

ஆபாச கலப்படம் இல்லாமல் பாபநாசம் திரைப்படத்தை எடுத்த இயக்குநர் ஜீது ஜோசப்பை நிச்சயமாக பாராட்டிதான் ஆக வேண்டும்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

நல்ல மனுஷன்...!

நல்ல மனுஷன்...! குடிமகன் சர்டிபிகேட்....!!


சென்னை மாநகர பேருந்தில் அலுவலகத்திற்கு பயணம்.

பின்புற சீட்டில் இரண்டு குடிமகன்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

என்ன மச்சா கையிலே.

நாளைக்கு டாஸ்மாக் கடைக்கு லீவாபா...அதா இப்போவே சரக்கு வாங்கிட்டேன்.

கில்லாடிடா நீ.

நல்ல மனுஷன். அவருக்காக லீ விடுறதிலேயே தப்பே இல்லே.

ஆனா, நம்மாலே சரக்கு குடிக்காமே இருக்க முடியுமா.

என அந்த குடிமகன் விளக்கம் அளிக்க

இருவருமே சிரித்துக் கொண்டனர்.

கலாம் அய்யாவிற்கு நல்ல மனுஷன் என சர்டிபிகேட் கொடுக்கும் குடிமகன், அவருக்காக ஒருநாள் தம்மால் மது குடிக்காமல் இருக்க முடியாது என சொன்னபோது என் மனம் உண்மையிலேயே வேதனை அடைந்தது.

அந்தளவுக்கு மது தமிழகத்தின் ஓர் அங்கமாக மாறிவிட்டது.

என்ன செய்வது.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திகையாளர்

பேமானி....!

பேமானி....! கஸ்மாலம்...!! பண்ணாடே...!!!

பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை நோக்கி பயணம் செய்துக் கொண்டிருந்தேன்.

அரக்கோணம் ரயில் நிலையத்தில் வண்டி நின்றபோது இரண்டு பேர் ஏறினார்கள்.

இருக்கையில் அமர்ந்தும் அவர்களில் ஒருவர் கலாமின் இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரில் நடக்குது என்றார்.

என்னாது கலாம் செத்திட்டாரா. உடல்நலம் சரியில்லாமல் இருந்தாரா. வெளிநாட்டு பயணத்தின்போது காலமாறிட்டாரா என ஆச்சரியத்துடன் அந்த இரண்டாம் நபர் பல கேள்விகளைக் கேட்டார் பாருங்கள்.

எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.

அத்துடன் கலாமின் சொந்த ஊர் ராமேஸ்வரமா என்றும் அந்த நபர் வினா எழுப்பினார்.

பார்த்தால் படித்த நபராகவே தெரிந்தது.

உலகம் போற்றும் ஒரு உத்தம தலைவர் திடீரென மறைந்ததால் இரண்டு நாட்களாக நாடே சோகத்தில் முழ்கியிருக்கிறது.

இந்த பண்ணாடே கஸ்மாலம் பேமானிக்கு அதுபற்றி ஒன்றுமே தெரியவில்லை.

ஏபிஜெ அவர்களின் பெருமையை அறியாத இவர்களைப் போன்றவர்களை இப்படி அழைக்காமல் பின்னே எப்படி அழைப்பது ?

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

இவர் போல யார்....!

இவர் போல யார்....!


முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் திடீர் மரணம் இந்திய மக்களை பெரும் அதிர்ச்சியில் மூழ்க வைத்துள்ளது.

குறிப்பாக இளைஞர் சமுதாயம் மிகப் பெரிய இழப்பை சந்தித்து தவிக்கின்றனர்

முகநூல் டுவிட்டர் தொலைக்காட்சி செய்தித்தாள் ஆகிவற்றில் வந்துள்ள செய்திகளை பார்க்கும்போது கலாமின் மீது இளைய சமுதாயம் கொண்டிருந்த அளப்பரிய அன்பு பாசம் நம்பிக்கை கண்கூடாகக் காண முடிகிறது.

இந்தியாவின் வளர்ச்சி முன்னேற்றம் ஆகியவற்றிற்காகவே கலாம் அவர்கள் தம்முடைய வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டார்.

அந்த இலட்சியத்தை நோக்கியே பயணித்தார்.

இளைஞர் சமுதாயத்தை தயார்படுத்தினார்.

தமது வெளிநாட்டு பயணங்களின் போதுகூட அதன் முலம் இந்திய திருநாட்டிற்கு பலன் கிடைக்குமா எண்ணினார்.

தற்போதைய தலைவர்களைப் போன்று செல்பி போட்டோ எடுத்து டுவிட்டரில் போட்டு சுய விளம்பரம் தேடிக் கொள்ளவில்லை.

இருந்தாலும்
மறைந்தாலும்
பேர் சொல்ல வேண்டும்
இவர் போல
யார் என்று
ஊர் சொல்ல வேண்டும்

என்று ஒரு கவிஞர் பாடியது போல தமது வாழ்க்கையை நாட்டிற்காக அர்ப்பணித்தார்.

அப்துல் கலாமை போன்ற எளிமையான தலைவரை இனி இந்திய நாடு காணுமா என்பது சந்தேகம்தான்.

அனைவரும் மரணத்தை சுவைத்துதான் ஆக வேண்டும் என்ற இயற்கையின் நியதிக்கு ஏற்ப கலாம் நம்மை விட்டு பிரிந்து சென்றுள்ளார்.

இந்த துன்ப நேரத்தில் கலாமின் மறு உலக நன்மைக்காக இறைவனிடம் துஆ பிரார்த்தனை செய்கிறேன்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.