Saturday, August 27, 2016

விருது.....!

விருது.....! வாழ்த்துக்கள்.....!!


சமூகப் பணிகளில் அக்கறை செலுத்தி வரும் ராஜ் தொலைக்காட்சிக்கு, தெலுங்கு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் விருது வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

சென்னையில் உள்ள ஆந்திரா சமூக மற்றும் காலச்சார மையத்தில் நடைபெற்ற விழாவில், தமிழக ஆளுநர் ரோசையா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, ராஜ் தொலைக்காட்சி தலைமைச் செய்தி ஆசிரியர் பொன்.மகேந்திரனுக்கு விருதை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

சமூக அக்கறையுடன் செய்திகளை வெளியிடுவதில் அதிக ஆர்வம் செலுத்தி, அதில் வெற்றியும் பெற்ற எங்கள் தலைமைச் செய்தி ஆசிரியர் பொன்.மகேந்திரனுக்கு எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.

அவருக்கு நாங்களும் பாராட்டுக்களை கூறி மகிழ்கிறோம்.

பொன்.மகேந்திரனின் சிறப்பான பணிகள் இனிவரும் நாட்களிலும் மேன்மேலும் தொடர வாழ்த்துகிறோம்.

S.A.Abdul Azeez
Journalist

ரூல்சே ஃபாலோ பண்ராங்க....!

அவங்க ரூல்சே ஃபாலோ பண்ராங்க....!



சென்னை அரும்பாக்கம் அண்ணா வளைவுப் பகுதி அருகே இருக்கும் சித்தா, ஆயுர்வேத மற்றும் யுனானி மருத்துவ கல்லூரி மருத்துவனைக்கு வழக்கம் போல சென்று இருந்தேன்.

வாரம் ஒருமுறை செவ்வாய்கிழமையன்று சர்க்கரை குறைபாட்டிற்காக தரும் சித்தா மருந்தை வாங்க நான் அங்கு செல்வது உண்டு.
என்னை போன்று ஏராளமானோர் வருவதால், கூட்டம் அலை மோதும்.

இதனால், நீண்ட வரிசையில் சில மணி நேரம் நின்று மருந்தை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

இந்த வாரம் சென்றபோது, இஸ்லாமிய பெண்மணி ஒருவர், வயது கிட்டத்தட்ட 50க்கு மேல் இருக்கும் வரிசையில் நின்றுக் கொண்டிருந்தார்.

மருத்துவரை நெருங்கும் நேரத்தில் அவரை கவனித்த அந்த பெண் மருத்துவர், ஏங்க உங்களைதான் நான் நேரடியாக வந்து சீட்டை வாங்கி செல்லும்படி அல்லவா சொன்னேன்.

ஏன், நீங்க வரிசையில் நின்று வருகிறீர்கள் என அன்புடன் கடிந்துக் கொண்டார்.

ஏராளமானோர் வரிசையில் நிற்பதால், மனம் கேட்கவில்லை என்றார் அந்த பெண்மணி.

நான் எவ்வளவோ சொல்லியும் அவங்க ரூல்சே ஃபாலோ பண்ராங்க என்று அங்கு வந்திருந்த மற்றவர்களை பார்த்து சிரித்துக் கொண்டே சொன்னார் மருத்துவர்.

ரூல்சே ஃபாலோ பண்ணுவது ஒரு விதத்தில் மகிழ்ச்சிதான்.

அதில் தனி சுகம் உண்டு.

மற்றவர்கள் சில மணி நேரம் கால் வலியை தாங்கிக் கொண்டு வரிசையில் நிற்க, திடீரென வந்து மருந்தை வாங்கிச் செல்வது சரியான முறையும் இல்லை.

அதை, அந்த முஸ்லிம் பெண்மணி நன்கு புரிந்துக் கொண்டிருந்தார்.

ஆனால்தான், மருத்துவர் சொல்லியும் கூட கேட்காமல், நீண்ட வரிசையில் நின்று மருந்தை வாங்கிச் சென்றார். செல்கிறார்.

சட்டத்தையும், ரூல்சையும் மதிக்காத மனிதர்கள் மத்தியில், இப்படி, சில மனிதர்கள் நாட்டில் இருக்கவே செய்கிறார்கள்.

அதைப் பார்க்கும்போது, உண்மையிலேயே மனம் மகிழ்ச்சி அடையவே செய்கிறது.

S.A.Abdul Azeez
Journalist

Friday, August 19, 2016

சீரகம்....!

சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்...!



மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.

கர்ப்பகாலத்தில் ஏற்ப்படும் வாந்தியைக் குறைக்க எலுமிச்சம்பழச் சாற்றுடன் சீரககுடிநீரை சேர்த்துக் கொடுக்கலாம்.

ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.

சீரகம் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யும்.

மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.


சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும்.

கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்துப் பொடித் தேனில் குழைத்து சாப்பிட்டால், தொடர் விக்கல் விலகும்.

பசியின்மை, வயிற்றுப்பொருமல், சுவையின்மை, நெஞ்செச்ரிச்சல் தீர சீரகம் + கொத்தமல்லி+ சிறிது இஞ்சி இவைகளை லேசாகவறுத்து நீரில் கொதிக்கவைத்து வடித்து தேநீர் போல வெல்லம் அல்லது நாட்டுசர்க்கரை சேர்த்து பருகி வரலாம்.

வாய்ப்புண், உதட்டுப்புண் குணமாக சீரகம் + சின்னவெங்காயம் இவற்றை லேசாக நெய்விட்டு வதக்கி உண்ணலாம்.

சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.

சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும்.

"ஓமம், சீரகம் கலவை வய்ற்றுக்கு மருந்து"

தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து 'சீரகக் குடிநீர்' தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை, நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும்.

உனக்கே தங்கம்....!

உனக்கே தங்கம்....!


இந்திய மகளே,
சிந்துவே,
தங்கம்
உனக்கு மட்டும்
கனவு இல்லை,
எங்களுக்கும்தான்....

சாதிக்க பிறந்த நீ,
ஒலிம்பிக்கில்
நிச்சயம்
அசத்துவாய்,
அதன்மூலம்,
தங்கத்தை
உனதாக்கிக் கொண்டு
எங்களை
மகிழ்ச்சி கடலில்
மூழ்கடிக்கச் செய்வாய்....

இன்றிரவு (19.08.2016)
உன்
ஆக்ரோஷ
ஆட்டத்தைக் காண
இந்தியாவே
தொலைக்காட்சி முன்
தவமாக கிடக்கும்,
நீ தங்கம்
வெல்வதை
கொண்டாடும்....

இந்திய மகளே,
சிந்துவே
உனக்கே தங்கம்
வெல்க நீ
=========


(வெள்ளிப்பதக்கம் வென்ற பிறகு எழுதிய வரிகள்)

உன் கனவு
தங்கம்
என்றாலும்,
வெள்ளி
கிடைத்ததும்
மகிழ்ச்சியே
என்றாய்...

அதன்மூலம்
எங்களையும்
நாட்டிற்கும்
பெருமை
அடையச் செய்தாய்...

தொடரட்டும்
உன் சாதனைகள்
இனி வரும் நாட்களில்....


எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்

வேகப் புயல்....!

வேகப் புயல்....!


உலகின் 
வேகப் புயல்
உசேன் போல்ட்டே,
உன்
கால்களில்
என்ன
இறக்கைகளையா
கட்டிக்கொண்டு
ஓடுகிறாய்...
சாரி
பறக்கிறாய்....

நூறு,
இருநூறு
என
அனைத்து
மீட்டர்களையும்
சில நொடியில்
அசால்டாய்
கடந்து
அள்ளுகிறாய்
நீ
தங்கம்....


அதன்மூலம்
ஹாட்ரிக்
சாதனையை
புரிந்து
மற்றவர்களை
வியப்பில்
ஆழ்த்துகிறாய்....

வெற்றிகளை
குவித்தாலும்
சிறிதும்
இல்லை கர்வம்
உன்னிடம்
அதனால்
உயர்ந்து நிற்கிறாய்
மக்கள்
மனங்களில்
நீ.....


உலகின்
அதிவேக மனிதனே
ஜமைக்காவின்
தவப்புதல்வனே
உன்னிடம்
கற்றுக் கொள்ள
இளைஞர்களுக்கு
நிறைய
உண்டு
பாடம்....

கற்றுக்கொண்டால்
சாதிக்க
அவர்களுக்கும்
தேடிவரும்
வாய்ப்புகள்
நிச்சயம்
ஏராளம்....

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

Friday, August 12, 2016

விடுதலைக்காக குர்பானி......!

விடுதலைக்காக குர்பானி......!


வழக்கம் போல இந்த வாரமும் ஜும்மா தொழுகைக்காக, சென்னை திருவல்லிக்கேணியில் இருக்கும் 162 ஆண்டுகள் பழமை வாய்ந்த மஸ்ஜித்-இ-சைய்யதியா பள்ளிவாசலுக்கு சென்றேன்.

மஸ்ஜித்தில், மவுலானா மவுலவி அழகிய உர்தூ மொழியில் எல்லோருக்கும் புரியும்படி, மிக எளிமையான வார்த்தைகளில் பயான் (பிரசங்கம்) செய்தார்.

நாட்டின் விடுதலைக்காக முஸ்லிம்கள் செய்த தியாகங்களை பட்டியலிட்டு அடுக்கினார்.

மாவீரன் திப்புசுல்தான்,
மன்னர் பகதூர் ஷா ஜபர்,
வள்ளல் ஹபீப் சகி,
மவுலானா முகமது அலி

உள்ளிட்ட பலர், இந்தியாவின் சுதந்திர போரில் ஆற்றிய பணிகளை கூறிய மவுலவி, ஏராளமான முஸ்லிம் மக்களும் தங்களுடைய உயிர்களை தியாகம் செய்து விடுதலை போரில் பங்கேற்றதையும் அழகாக எடுத்துக் கூறினார்.


செல்வம், பொருள், உயிர் என அனைத்தையும் இழந்து, தியாகங்களை செய்த முஸ்லிம்களின் விடுதலை போராட்டத்தை மறைக்க, வரலாற்றை மாற்றி அமைக்க தற்போது மிகப் பெரிய சூழ்ச்சி நடப்பதாக மவுலவி வேதனை தெரிவித்தார்.

ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட ஒரு கூட்டம், தற்போது முஸ்லிம்களின் தியாகங்களை கொச்சைப்படுத்தும் நோக்கில் காரியங்களை ஆற்றி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

அத்துடன்,

நாட்டில் முஸ்லிம் மக்கள் மூன்றாம் தர மக்களை போன்று நடத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

நாட்டின் விடுதலைக்காக முஸ்லிம்கள் செய்த குர்பானி, தியாகம் அளவிட முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

முஸ்லிம்கள் செய்த தியாகங்களை மறைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளை மிக எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் என்றும் மவுலவி கேட்டுக் கொண்டார்.


மேலும், இளம் சமுதாயத்திற்கு விடுதலைக்காக முஸ்லிம்கள் செய்த தியாகங்களை எடுத்துக் கூற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நாட்டில் அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ முஸ்லிம்களுக்கு முழு உரிமை உண்டு என்றார் மவுலவி.

இந்திய நாட்டின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் தற்போதும் முஸ்லிம்கள் ஆற்றி வரும் பங்கை யாரும் மறைக்க முடியாது என்றும் மவுலவி தெரிவித்தார்.

எனவே,

வரும் 70வது சுதந்திர தினவிழாவை முஸ்லிம்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி கொண்டாட வேண்டும் என்றும் அவா கேட்டுக் கொண்டார்.

அழகிய உர்தூ மொழியில் மிக எளிமையான வார்த்தைகள் மூலம், சுதந்திர தியாகங்களை மவுலவி எடுத்துக் கூறிய விதம் என்னை வெகுவாக கவர்ந்தது.

இதுபோன்ற, பயான்கள் மிகவும் அவசியம் என்றே தோன்றியது.

நவீன உலகில், இளம் சமுதாயம் பல தியாகங்களை அறியாமல் இருந்து வருகின்றனர்.

அவர்களுக்கு முஸ்லிம்களின் தியாகங்களை எடுத்துக் கூறுவது மிகவும் அவசியம்.

அந்த பணியை ஜும்மா பயானில், பிரசங்கத்தில் மவுலவி ஆற்றி, தமது பணியை நன்கு செய்துள்ளார்.

உண்மையிலேயே மவுலவியை பாராட்ட வேண்டும்.

ஆக,

முஸ்லிம் மக்களே உங்களுடைய தியாகங்களை மறந்து விடாதீகள்.

இந்திய நாட்டிற்காக, உங்கள் முன்னோர்கள் செய்த குர்பானிகளை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

அதன்மூலம் மட்டுமே, உங்களுக்கு எதிராக எழும் குரல்களை எதிர்ப்புகளை நீங்கள் எதிர்கொள்ள முடியும்.\

S.A.Abdul Azeez
Journalist