Friday, June 30, 2023

பாஜக திட்டம்....!


நாடாளுமன்ற தேர்தலுக்காக பாஜக புதிய திட்டம்….!

இந்துத்துவ கொள்கையை தீவிரப்படுத்த முடிவு….!!

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 125 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி இன்று பதவியை ஏற்றுக் கொள்கிறது. அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சித்தராமையா இரண்டாவது முறையாக முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், பெங்களூருவில் நடைபெற்ற பதவி ஏற்றுவிழாவில் கர்நாடகாவின் புதிய முதலமைச்சர் பதவி ஏற்றுக் கொண்டார். மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் துணை முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார்.

இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்  செயலாளர் பிரியங்கா காந்தி, மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர.. பெங்களூருவில் நடைபெற்ற பதவி ஏற்பு விழா, வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் நிகழ்ச்சியாக இருக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். 

பாஜக கடும் அதிர்ச்சி:

கர்நாடக தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்று அதன்மூலம் நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை வேகப்படுத்தலாம் என பாஜக தலைவர்கள் திட்டமிட்டிருந்தனர். இந்த தேர்தலில் வளர்ச்சிப் பணிகள் குறித்து பாஜக தலைவர்கள் பேசவில்லை. மாறாக சாதி, மதம், தி கேரளா ஸ்டோரி, உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மட்டுமே பேசி பிரச்சாரம் செய்தனர். 

ஆனால், இதற்கு கர்நாடக மக்கள் ஆதரவு வழங்கவில்லை. இதனால் 66 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக, 30 தொகுதிகளில் டெபாசிட் பறிகொடுத்து பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டது. கர்நாடக தேர்தல் முடிவுகள் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,. 

மேலும் பிரதமர் மோடியை முன்னிலைப்படுத்தி பாஜக பிரச்சாரம் செய்ததால், கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்கு  பிரதமர்  மோடியே பொறுப்பு என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. மேலும், ஹிஜாப் உள்ளிட்ட விவகாரங்கள் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பாஜக 50 சதவீதம் பிரச்சாரம் செய்ததாக காங்கிரஸ் கட்சி கிண்டல் செய்துள்ளது. 

பாஜக அதிரடி திட்டம்:

கர்நாடக தோல்வி பாஜகவுக்கு கிடைத்த மிகப்பெரிய பின்னடைவாக கருத்தப்படுகிறது. எனவே, சிறிது காலத்திற்கு முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மக்களுக்கு எதிரான போக்குகள் மற்றும் நடவடிக்கைகளை குறைத்துக் கொண்டு செயல்பட அக்கட்சி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் போது மீண்டும் இந்துத்துவ கொள்கையை தூக்கிப் பிடித்து செயல்பட பாஜக திட்டமிட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

அனைத்து துறைகளில் தோல்வி: 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், பாஜக ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் நிறைவுபெற்ற நிலையில், நாட்டில் மிகப்பெரிய அளவுக்கு வளர்ச்சி எதுவும் ஏற்படவில்லை என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்தியப் பொருளாதாரக் குறியீடு மிகவும் மோசமாக இருந்து வருகிறது.

2020 ஆம் ஆண்டின் உலக பட்டினி குறியீடு அட்டவணையில்  107 நாடுகளில் இந்தியா 94 வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் வேலையின்மை விகிதம் பிப்ரவரி 2023-ல் முந்தைய மாதத்தில் 7.14 சதவீத்தில் இருந்து  7.45 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் 15-24 வயதிற்குட்பட்ட இளைஞர்களின் வேலையின்மை 24.9 சதவீதமாகும். இது தெற்காசியப் பிராந்தியத்தில் மிக அதிகமாக உள்ளது. தொழிலாளர் பங்கேற்பு விகிதங்கள்- இந்தியாவின் எல்பிஆர் 46 சதவீதமாக உள்ளது, இது உலக அளவை விட மிகக் குறைவு. இந்தியாவில் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக வீழ்ச்சியடைந்து வருகிறது.

குழந்தை வளர்ச்சி விகிதம் இந்தியாவில் 17.3 சதவீதமாக உள்ளது, இது தெற்காசியாவிலேயே மிக மோசமானது. ஏனென்றால், இந்திய குடும்பங்கள் பலவிதமான பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன, இதில் மோசமான உணவுப் பன்முகத்தன்மை, குறைந்த அளவிலான தாய்வழி கல்வி மற்றும் குடும்ப வறுமை ஆகியவை அடங்கும். இந்தியாவில் தற்கொலை விகிதத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு உள்ளது. இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் 12 பேர் தற்கொலை செய்து கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

2023-ஆம் ஆண்டின் உலக மகிழ்ச்சி அறிக்கையின்படி, 137 நாடுகளில் இந்தியா 126வது இடத்தைப் பிடித்துள்ளது. கடுமையான வேலையின்மை, அதிக பணவீக்கம் மற்றும் சுகாதார கவலைகள் ஆகியவை மகிழ்ச்சியின்மைக்கான காரணங்கள் ஆகும். இது இந்தியர்களின் மன ஆரோக்கியத்தை பாதித்துள்ளது. 

பாஜகவின் அடுத்த திட்டம்:

அனைத்துத் துறைகளிலும் வீழ்ச்சி ஏற்பட்டு, இந்தியப் பொருளாதார வளர்ச்சியின் பலன்கள்  சாமானிய மக்களுக்கு முறையாக வழங்கப்படவில்லை என்பதை, மேற்கூறிய குறியீடுகள் மிகச் சிறப்பாகச் சுட்டிக்காட்டுகின்றன.

இத்தகைய சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி. நாட்டில் வாழும் பெரும்பான்மை இந்து மக்களின் மத்தியில் தன்னுடைய புகழை எப்படி தக்க வைத்துக் கொள்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 9 ஆண்டு கால ஒன்றிய பாஜக ஆட்சியில் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்கள், பெரும்பான்மை இந்துக்களே. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு, உள்ளிட்ட பிரச்சினைகளில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்தது இந்து குடும்பங்கள்தான். எனவே வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு மீண்டும் வாக்கு அளிக்க மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். 

இத்தகைய சூழ்நிலையில், தேர்தலுக்கு ஒருசில மாதங்களில் இருந்து மீண்டும் இந்துத்துவ கொள்கையை தீவிரப்படுத்தி சிறுபான்மையின மக்களுக்கு எதிரான எதிர்ப்பு சூத்திரத்தை பயன்படுத்த பாஜக முடிவு செய்து இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதன்படி வரும் 2024-ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற ‘ தேர்தலுக்கு முன்னதாக முஸ்லிம்களுக்கு எதிரான பேச்சுக்கள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. 

என்ன செய்யப் போகின்றன எதிர்க்கட்சிகள்:

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மூலம், நாட்டுக்கு ஒரு நல்ல கருத்தை அம்மாநில மக்கள் உறுதிப்பட கூறியுள்ளனர். நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றம்தான் முக்கியம் என்றும், சாதி, மத ரீதியாக மக்களை பிளப்படுத்தி அரசியல் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதுதான் அது. நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைக்கும் கட்சிக்கு ஆதரவு அளிக்க மக்கள் தயாராக உள்ளனர் என்பது கர்நாடக தேர்தல் முடிவுகள் சொல்லித்தரும் பாடமாகும். 

இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக என்ன செய்யப் போகின்றன என்ற கேள்வி நாட்டு மக்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது. அனைத்து எதிர்க்கட்சிகளும்  ஒருங்கிணைந்து செயல்பட்டு, பாஜகவை வீழ்த்தப் போகின்றவா, அல்லது தனித்தனியாக நின்று அதன்மூலம் வாக்குகளை பிரித்து பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்தப் போகின்றவா என்ற வினா மக்களிடம் நாள்தோறும் எழுந்துக் கொண்டே வருகிறது. 

வரும் நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒற்றுமையாக செயல்பட்டு, நல்ல செயல் திட்டத்தை உருவாக்கி பணியாற்றினால், நாட்டு மக்கள் நிச்சயம் தங்களது முழுமையான ஆதரவை அளிப்பார்கள். மேலும், பாஜக முன்வைக்கும் இந்துத்துவ கொள்கை,யை பெரும்பான்மை இந்து மக்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நாட்டு மக்கள் மிகத் தெளிவாக இருந்து வரும்நிலையில், இனி முடிவு செய்ய வேண்டியது எதிர்க்கட்சி தலைவர்கள்.‘தான் என்று நாட்டு நடப்புகளை உன்னிப்பாக கவனித்து வரும் மூத்த பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Thursday, June 29, 2023

ம.பி. ஹிஜாப்.....!


மத்திய பிரதேசத்தில் வெடித்த ஹிஜாப் பிரச்சினை....!

முஸ்லிம் மாணவிகள் பாதிப்பு.....!!

கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த முந்தைய பாஜக அரசு, ஹிஜாப் பிரச்சினையை கிளப்பி முஸ்லிம் மாணவிகளின் கல்வியை பறித்தது. இந்த செயலுக்கான தண்டனையை அண்மையில் நடந்த முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கர்நாடக மாநில மக்கள் அளித்து பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றினர். தற்போது புதிதாக பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ள முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான அரசு, ஹிஜாப் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்துள்ளது. இதன்மூலம், கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலவி வந்த ஹிஜாப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது. அத்துடன் படிப்பை பாதியில் நிறுத்திய மாணவிகளுக்கு மீண்டும் கர்நாடக அரசு வாய்ப்பு அளிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. 

மத்திய பிரதேசத்தில் வெடித்த ஹிஜாப் பிரச்சினை: 

இந்நிலையில், தற்போது பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் ஹிஜாப் பிரச்சினை வெடித்து, ஒரு பள்ளியின் அங்கீகாரத்தை அம்மாநில அரசு ரத்து செய்துள்ளது. தாமோவில் உள்ள கங்கா ஜமுனா மேல்நிலைப் பள்ளியில் படித்த முஸ்லிம் மாணவிகள் பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை புரிந்தனர். இப்படி படிப்பில் சாதனை நிகழ்த்திய மாணவிகளை வாழ்த்தி, சுவரொட்டி ஒன்று ஒட்டப்பட்டது. இந்த சுவரொட்டியில், மாணவிகள் ஹிஜாப் அணிந்துகொண்டு இருந்த புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. இதனால், அதிர்ச்சி அடைந்த பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் உடனடியாக செயலில் இறங்கினர். 

இந்த சுவரொட்டியின் படங்களைப் பயன்படுத்தி, வி.எச்.பி. மற்றும் ஏபிவிபி உள்ளிட்ட பல்வேறு வலதுசாரி அமைப்புக்கள், முஸ்லிம் அல்லாத பெண் மாணவிகள் ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினர். மேலும், மகாகாவி அல்லாமா முஹம்மது இக்பால் எழுதிய  கவிதைகளை  மாணவிகளை பாட வைத்ததாகவும் குற்றச்சாட்டுகளை சுமத்தினர். இதைத் தொடர்ந்து, தாமோ மாவட்ட ஆட்சியர் மயங்க் அகர்வால், பள்ளியின் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க உயர் அதிகாரம் கொண்ட குழுவை அமைத்தார்.

பள்ளியின் அங்கீகாரம் ரத்து:

அதன்படி, தாமோவில் உள்ள கங்கா ஜமுனா மேல்நிலைப் பள்ளியை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது, பள்ளியில் குடிநீர் வசதியின்மை, மாணவிகளுக்கான கழிப்பறை வசதியின்மை ஆகியவை இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர். 

பின்னர், மாவட்ட கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில், தாமோவில் உள்ள கங்கா ஜமுனா மேல்நிலைப் பள்ளி, மாநிலக் கல்வித் துறை நிர்ணயித்த விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே, பள்ளியின்  பதிவை உடனடியாக ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் பள்ளிக் கல்வித்துறை குறிப்பிட்டுள்ளது. எனினும், ஹிஜாப் பிரச்சினை குறித்து எதுவும் பள்ளிக் கல்வித்துறை குறிப்பிடவில்லை. 

சிவராஜ் சிங் சவுகான் எச்சரிக்கை:

இந்த பிரச்சினை குறித்து கருத்து கூறியுள்ள மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், இந்து மாணவிகள் ஹிஜாப் அணிந்துகொண்டும் தலையை மூடிக்கொண்டும் பள்ளிக்கு வர வற்புறுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். இது கண்டனத்திற்குரியது என்றும் இதுபோன்ற செயல்கள்  மத்திய பிரதேசத்தில் அனுமதிக்க முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, அமல்படுத்திய தேசிய கல்விக் கொள்கை மட்டுமே மாநிலத்தில் அமலுக்கு வரும் என்றும்,  புதிய கல்விக் கொள்கைக்கு பொருந்தாத எதையும் கற்பிக்கும் பள்ளிகளை அனுமதிக்க முடியாது என்றும் சவுகான் கூறியுள்ளார். அத்துடன், ஹிஜாப் அணிந்து வர கட்டாயப்படுத்தினால், அதற்கு மத்திய பிரதேசத்தில் அனுமதியில்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் மாணவிகள் பாதிப்பு:

மத்திய பிரதேச பள்ளிகளில் ஹிஜாப் அணிந்து வர அனுமதி இல்லை என்று முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானின் இந்த அறிவிப்பு, முஸ்லிம்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், முஸ்லிம் மாணவிகளின் கல்வி பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. பல முஸ்லிம் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளின் படிப்பை பாதியிலேயே நிறுத்த முடிவு செய்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஹிஜாப் பிரச்சினையால் கர்நாடக மாநில முஸ்லிம் மாணவிகள் எப்படி பாதிக்கப்பட்டார்களோ, அதேபோன்ற நிலைமையை தற்போது மத்திய பிரதேச முஸ்லிம் மாணவிகளும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது சமுக ஆர்வலர்கள், முஸ்லிம் தலைவர்கள் மத்தியில் கவலையை உருவாக்கியுள்ளது. 

தேர்தலுக்கான நடவடிக்கை:

மத்திய பிரதேசத்தில் இன்னும் நான்கு மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்துவிட்டு, எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கைப்பற்றிய பாஜக, மக்களின் நலனில் எந்தவித அக்கறையும் கொண்டு திட்டங்களை நிறைவேற்றவில்லை. மேலும், பாஜக ஆட்சியில் அனைத்து திட்டங்களிலும் ஊழல் நடைபெற்று இருப்பதாகவும், 50 சதவீத கமிஷன் பெறப்பட்டதாகவும், மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் குற்றம்சாட்டி வருகிறார். 

அத்துடன், மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை விதைக்கும் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்றும்  மத்திய பிரதேச மக்களை அவர் வலியுறுத்தி வருகிறார். கர்நாடக காங்கிரஸ் அரசை பின்பற்றி, பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்த இருப்பதாகவும் கமல்நாத் அறிவித்துள்ளார். இது ஏழை, நடுத்தர மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால், அதிர்ச்சி அடைந்துள்ள பாஜக, தற்போது ஹிஜாப் உள்ளிட்ட பிரச்சினைகளை வேண்டும் என்றே கிளப்பியுள்ளது. பாஜகவின் இந்த வெறுப்பு அரசியலுக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மத்திய பிரதேச மக்கள் தக்க பாடம் கற்பிப்பார்கள் என்பது உறுதி. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

மகாகவி இக்பால்....!

மகாகவி அல்லாமா  முகமது இக்பால் குறித்த பாடம் நீக்கம்.....!

டெல்லி பல்கலைக்கழகம் முடிவு....!!

கடந்த 9 ஆண்டு கால ஒன்றிய பாஜக ஆட்சியில் நாட்டில் இந்துத்துவ கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்தவும், முஸ்லிம்களுக்கு ஏதிரான நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தவும் பல்வேறு திட்டங்கள் அரங்கேற்று வருகின்றன. 

நாட்டில் வாழும் 20 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள்  தங்களுடைய வாழ்க்கைப் பயணத்தை அமைதியாக தொடரக் கூடாது என்ற ஒரே திட்டத்தின் கீழ் இந்துத்துவ அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அதன்படி வரலாற்றை மாற்றி எழுதுவது, நாட்டின் விடுதலைக்காக இஸ்லாமியர்கள் செய்த தியாகங்களை மூடி மறைப்பது, முஸ்லிம்களின் கல்வி, வேலைவாய்ப்புகளை பறிப்பது, வணிகம் உள்ளிட்ட தொழில்களில் தொடர்ந்து நெருக்கடி கொடுப்பது என பல்வேறு நடவடிக்கைகளை இந்துத்துவ அமைப்புகள்  தொடர்ந்து எடுத்து வருகின்றன. 

முஸ்லிம்கள் குறித்த பாடங்கள் நீக்கம்:

அந்த வகையில் தற்போது நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் சொல்லித் தரப்படும் படிப்புகளுக்கான பாடங்களில், முஸ்லிம் தலைவர்கள், கவிஞர்கள், சமூக ஆர்வலர்கள், விடுதலை போராட்ட வீரர்கள் உள்ளிட்டவர்கள் குறித்த பாடங்கள் மிகமிக குறைவு. ஒருசில தலைவர்களின் பாடங்கள் மட்டும் சொல்லித் தரப்பட்டு வருகின்றன. அத்துடன் முஸ்லிம்கள் குறித்த தவறான பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. 

குறிப்பாக, கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் திப்பு சுல்தான் குறித்து தவறான பிரச்சாரம் செய்யப்பட்டது. அவர் இந்துக்களுக்கு எதிரானவர் என்ற பிம்பத்தை இளம் பிஞ்சுகளின் மனதில் பதிய வைக்க பாஜக அரசு நடவடிக்கைகளை எடுத்தது. அதற்கு அம்மாநில மக்கள் நல்ல பதிலடி கொடுத்து, பாஜக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். தற்போது புதிதாக வந்துள்ள காங்கிரஸ் அரசு, பாடப் புத்தகங்களில் பாஜக புகுத்திய பாசிக கருத்துகள் நீக்கப்படும் என தெரிவித்துள்ளது. 

அல்லாமா முகமது இக்பால் யார் ? :

முஸ்லிம்களின் தியாகங்களை மறைக்கும் நடவடிக்கைகள் தீவிரம் அடைந்து வரும் நிலையில் தற்போது டெல்லி பல்கலைக்கழகம் மகாகவி அல்லாமா முகமது இக்பால் பற்றிய பாடத்தை நீக்க முடிவு செய்துள்ளது. 

‘சாரே ஜஹான் சே அச்சா இந்துஸ்தான் அமாரா' (உலகிலேயே மிகச்சிறந்த நாடு இந்தியா) என்ற பாடலை இயற்றி அனைத்து இந்திய மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் மகாகவி இக்பால். கடந்த 1877ஆம் ஆண்டில் ஒருங்கிணைந்த இந்தியாவின் பஞ்சாப் மாகாணம் சிலாகோட்டில் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) பிறந்தவர் முகமது இக்பால். அவர் ஏப்ரல் 21, 1938 அன்று பிரிட்டிஷ் இந்தியாவின் (இப்போது பாகிஸ்தான்) பஞ்சாப், லாகூரில் காலமானார்.

இக்பால் உருது இலக்கியத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படுகிறார்.  உருது மற்றும் பாரசீக மொழிகளில் அவரது கவிதைப் படைப்புகளுக்காக பிரபலமாக அறியப்படுகிறார்.  அவரது கவிதைகள் பெரும்பாலும் ஆன்மீகம், தேசியவாதம் மற்றும் தெற்காசியாவில் முஸ்லிம் சமூகத்தின் மறுமலர்ச்சி ஆகியவற்றின் கருப்பொருளை மையமாகக் கொண்டிருந்தன.

இக்பால் தனது இலக்கியப் பங்களிப்புகளைத் தவிர, ஒரு சிறந்த தத்துவஞானி மற்றும் முஸ்லிம் மக்களின் உரிமைகள் மற்றும் நலனுக்காக வலுவான வழக்கிறிஞரலாக இருந்தார். அவர் தனது தத்துவக் கருத்துக்களில் சுயநலம், சுய கண்டுபிடிப்பு மற்றும் அறிவைப் பின்தொடர்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இக்பாலின் சுயத்துவம் என்ற கருத்து, தனிநபர்கள் தங்கள் முழுத் திறனையும் உணர்ந்து, சமூகத்தின் முன்னேற்றத்திற்காக உழைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தது. முகமது இக்பாலின் எண்ணங்கள் மற்றும் எழுத்துக்கள் தொடர்ந்து பரவலாக ஆய்வு செய்யப்பட்டு மதிக்கப்படுகின்றன. அவரது கவிதை மற்றும் தத்துவக் கருத்துக்கள் பிராந்தியத்தின் கலாச்சார, அறிவுசார் மற்றும் அரசியல் நிலப்பரப்பில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

அத்துடன் ‘சாரே ஜஹான் ஸே அச்சா இந்துஸ்தான் அமாரா' என்னும் புகழ்பெற்ற பாடலை இயற்றியதற்காக இவர் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பிரபலமாக அறியப்பட்டவர். கவிதைகள் தவிர அரசியல், பொருளாதாரம், வரலாறு, மெய்யியல், சமயம் ஆகிய துறைகளில் இவர் எழுதிய நூல்கள் மிகவும் பிரபலமானவை. 

டெல்லி பல்கலைக்கழகம் முடிவு:  

இந்நிலையில் டெல்லி பல்கலைக்கழகத்தின் கல்விக் கவுன்சில் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாடத்திட்டத்தில் பல மாற்றங்களை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. அந்த வகையில், கவிஞரும் தத்துவஞானியுமான அல்லாமா முகமது இக்பால் குறித்த பாடத்தை பிஏ அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தில் இருந்து நீக்குவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

தற்போது அல்லாமா முகமது இக்பால் குறித்த பாடம், 'நவீன இந்திய அரசியல் சிந்தனை' (Modern Indian Political Thought) என்ற தலைப்பிலான அத்தியாயத்தில் டெல்லி பல்கலைக்கழகத்தின் பி.ஏ. அரசியல் அறிவியல் பாடப்பிரிவில் 6-வது செமஸ்டரில் இடம்பெற்றிருந்தது. அந்தப் பாடத்தை, அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தில் இருந்து நீக்குவதற்கான தீர்மானத்தை டெல்லி பல்கலைக்கழகத்தின் கல்விக் கவுன்சில் இயற்றியிருக்கிறது. இந்த தீர்மானம் குறித்து இறுதி முடிவு எடுக்க பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. 

டெல்லி பல்கலைக்கழகத்தின் அகாடமிக் கவுன்சில் எடுத்துள்ள இந்த முடிவை ஆர்எஸ்எஸ் அமைப்புடன் இணைந்த அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) வரவேற்றுள்ளது. அல்லாமா முகமது இக்பால் குறித்து தரக்குறைவாக விமர்சனம் செய்துள்ள ஏபிவிபி, இந்திய பிரிவினைக்கு அவர் முக்கிய காரணம் என்றும் குற்றம்சாட்டியுள்ளது. 

கல்வியாளர்கள் எதிர்ப்பு:

 அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தில் மாற்றம் செய்து அல்லாமா முகமது இக்பால் பற்றிய பாடத்தை நீக்குவதற்கு டெல்லி பல்லைக்கழகம் எடுத்துள்ள இந்த முடிவுக்கு நாட்டில் உள்ள கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர். உலகிற்கு மிகச்சிறந்த இலக்கியப் பங்களிப்புகளை அல்லாமா முகமது இக்பால் வழங்கி இருப்பதாக கூறியுள்ள அவர்கள், குறுகிய கண்ணோட்டத்துடன் டெல்லி பல்கலைக்கழகம் முடிவு எடுத்து இருப்பதாகவும் விமர்சனம் செய்துள்ளனர். தன்னுடைய முடிவு டெல்லி பல்கலைக்கழகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கல்வியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

 - எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

ஹிஜாப்...!

கர்நாடகாவில் ஹிஜாப் மீதான தடையை நீக்குவோம்....!

காங்கிரஸ் எம்எல்ஏ கனீஸ் பாத்திமா உறுதி....!!

கர்நாடகாவில் முந்தைய பாஜக அரசு முஸ்லிம் மாணவிகள் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வர தடை விதித்தது. இதையடுத்து ஹிஜாப் தடை தொடர்பான சர்ச்சை  கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பரில் இருந்து தொடங்கியது. 

பாஜக அரசின் உத்தரவுக்கு கர்நாடகா மாநிலம் முழுவதும் எதிர்ப்புகள் எழுந்தன.  இதுதொடர்பான வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், ஹிஜாப் அணிவது அவசியமில்லை என்று கூறி அரசின் தடையை உறுதி செய்தது. பின்னர் இந்த விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு சென்றது.  ஆனால் வழக்கை விசாரிக்க இன்னும் ஒரு பெஞ்ச் அமைக்கப்படவில்லை.

ஹிஜாப் விவகாரம் காரணமாக நூற்றுக்கணக்கான முஸ்லிம் மாணவிகள் தங்கள் படிப்பை பாதியில் நிறுத்தினர். இதனால் முஸ்லிம்கள் மத்தியில் கவலை பிறந்தது.

தேர்தலில் முஸ்லிம்கள் பாடம்:

இந்நிலையில், அண்மையில் நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில்  மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 135 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்றது. காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து, வாக்கு அளித்தது  ஒரு முக்கிய காரணமாகும்.

31 தொகுதிகளில் டெபாசிட் பறிகொடுத்த பாஜக:

கர்நாடகாவில் முஸ்லிம் மக்களின் வெறுப்பை சம்பாதித்த பாஜகவிற்கு பிற சமுதாய மக்களும் தங்களது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி, அதை தேர்தல் வாக்குரிமை மூலம் செய்து காட்டினர்.

இதனால் பாஜக 31 தொகுதிகளில் படுதோல்வி அடைந்து டெபாசிட் பறிகொடுத்தது.

அத்துடன், சில தொகுதிகளில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற முடிந்தது.

கனீஸ் பாத்திமா உறுதி:

இந்த தேர்தலில் குல்பார்கா உத்தர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட கனீஸ் பாத்திமா, பாஜக வேட்பாளர் சந்திரகாந்த் பாட்டீலை தோற்கடித்து மீண்டும் வெற்றி பெற்றார். இதேபோன்று காங்கிரஸ் கட்சி சார்பில் மேலும் 8 பேர் வெற்றி பெற்றனர். 

கடந்த 2017-ஆம் ஆண்டில் தனது கணவர் கமர்-உல்-இஸ்லாம் இறந்ததைத் தொடர்ந்து, கனீஸ் பாத்திமா இடைத்தேர்தலில் போட்டியிட்டு கடந்த 2018-ஆம் ஆண்டில் முதல் முறையாக கர்நாடக சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டார். அப்போது முதல் முஸ்லிம் பெண்களின் நலன் மற்றும் கல்வியில் மிகுந்த அக்கறை கொண்டு அவர் சேவை ஆற்றி வருகிறார். 

கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் வெடித்தபோது, பாஜக அரசின் தடைக்கு எதிராக   கல்புர்கியில் முஸ்லிம் பெண்களின் போராட்டத்தை ஏற்பாடு செய்ததோடு, ஒருங்கிணைந்து நடத்தி, பாஜகவிற்கு பெரும் எதிர்ப்பை கனீஸ் பாத்திமா வெளிப்படுத்தினார்.  இப்படி முஸ்லிம் பெண்களின் உரிமைகளை மீட்டு தருவதில்  அவர் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறார். 

தற்போது காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நேர்காணல் அளித்த கனீஸ் பாத்திமா, கர்நாடக மாநிலத்தில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கப்படும் என்று உறுதிப்பட கூறியுள்ளார். 

ஏக இறைவனின் கருணையால் வரும் நாட்களில் ஹிஜாப் தடையை நாங்கள் திரும்பப் பெறுவோம் என்றும்,  மேலும் ஹிஜாப் பிரச்சினையால் பள்ளி, கல்லூரிகளில் படிப்பை பாதியில் நிறுத்திய முஸ்லிம் மாணவிகளை மீண்டும் வகுப்பறைகளுக்கு அழைத்துச் சென்று கல்விக் கற்க வைப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முஸ்லிம் மாணவிகள் கல்வி கற்று மீண்டூம் தேர்வை எழுதி கல்வியில் சாதிப்பார்கள் என்றும் ஹிஜாப் விவகாரத்தால்,  இரண்டு மதிப்புமிக்க ஆண்டுகளை முஸ்லிம் மாணவிகள் இழந்துவிட்டனர் என்றும் கனீஸ் பாத்திமா வேதனை தெரிவித்துள்ளார். 

முஸ்லிம் மாணவிகள் வரவேற்பு:

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் ஹிஜாப் விவகாரம் குறித்து எந்த அறிவிப்பும் இல்லாவிட்டாலும், கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கப்படும் என கனீஸ் பாத்திமா தெரிவித்து இருப்பது, முஸ்லிம் மாணவிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அத்துடன், ஹிஜாப் பிரச்சினையால் தங்கள் பெண் பிள்ளைகளின் படிப்பை பாதியில்  நிறுத்திய முஸ்லிம் குடும்பங்களில்,  தற்போது மீண்டும், கல்வி நிறுவனங்களில் முஸ்லிம் மாணவிகளை சேர்த்து படிக்க வைக்கலாம் என்ற ஆர்வம் பிறந்துள்ளது. 

ஹிஜாப் தடை அமல்படுத்தியவர் தோல்வி:

காங்கிரஸ் கட்சியின் ஒரே முஸ்லிம் பெண் எம்.எல்.ஏ. என்ற பெருமையை பெற்ற கனீஸ் பாத்திமா, முஸ்லிம் உட்பட அனைத்துத் தரப்பு மக்களின் நலனுக்காக பணியாற்றி பாராட்டு பெற்றுவருகிறார். ஆனால் ,ஹிஜாப் தடையை அமல்படுத்திய பாஜகவைச் சேர்ந்த கர்நாடக கல்வி அமைச்சர் பிசி நாகேஷ், சட்டப்பேரவைத் தேர்தலில் திப்டூர் தொகுதியில் தோல்வியடைந்தார். அனைத்து தரப்பு மக்களின் வெறுப்பை சம்பாதித்து அதற்கான பலனை அடைந்துள்ளார். இதைத்தான் விதி வலியது என்று பெரியவர்கள் கூறுவார்களோ....!

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

ஜகாத்.....!

ஜகாத் - சில கசப்பான உண்மைகள்

மருத்துவர்  எம்.ஏ.படன்கர்

தமிழில் :எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

இஸ்லாம் மனித வாழ்க்கைக்கான  முழுமையான வழிகாட்டி. வாழ்வின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய மனிதர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான வழிகாட்டுதல்களின் தொகுப்பைக் கொண்டுள்ளது இஸ்லாம்.  மனிதர்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும்  தீர்வுகளையும் உண்மையில்  இஸ்லாம் வழங்குகிறது. 

ஆனால் துரதிர்ஷ்டவசமான போக்கு என்னவென்றால், காலப்போக்கில் முஸ்லிம்கள், மார்க்கத்தின் போதனைகளிலிருந்து விலகிச் செல்லத் தொடங்கினர். இந்த போக்கு இஸ்லாமிய சமூகத்தை வறுமை மற்றும் பின்தங்கிய நிலைக்கு வழிவகுத்தது. ஒரு முஸ்லீம் இஸ்லாத்தின் போதனைகளை உண்மையான அர்த்தத்தில் பின்பற்றினால், அவருக்கு இங்கேயும், மறுமையிலும் செழிப்பு கிடைக்கும். 

ஜகாத் ஓர் அற்புதம்:

ஜகாத் (ஏழை வரி) என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாகும். இது ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் பணம் சம்பாதிக்கும் அனைத்து வயது முஸ்லீம்களுக்கும் கட்டாயமாகும். முஸ்லீம்கள் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஜகாத் ஒரு தீர்வு என்று உறுதிப்பட கூறலாம்.  மேலும் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் நிதி மற்றும் கல்வி சிக்கல்களைத் தீர்ப்பதில் ஜகாத் பயனுள்ளதாக இருக்கும். ஜகாத்,  நிதி மற்றும் கல்வியில் பின்தங்கிய நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவுகிறது.  அதுமட்டுமின்றி, தூய்மையான சமுதாயத்தை அமைப்பதில் பலனளிக்கிறது.  பெரும்பான்மையான முஸ்லீம்கள் ஜகாத் செலுத்தினாலும், இன்னும் சிலர் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி அதிலிருந்து விலகி இருக்கிறார்கள்.

வீணாகும் ஜகாத் நிதி:

அறக்கட்டளைகளில் வழங்கப்படும்  ஜகாத்தின் பெரும் தொகை வீணாகிறது. பெரும்பாலும் தவறான நிர்வாகத்தால். பணம் செலுத்துபவர்கள் தங்கள் பணத்தைப் பற்றி விசாரிக்கவோ அல்லது அந்தத் தொகை யாருக்கு சென்றடைகிறது, அவர்கள் தேவையா இல்லையா, தகுதியானவர்களா என்று விசாரிக்க கூட கவலைப்படுவதில்லை. சில தகுதியற்ற பிரிவினர் ஜகாத் கேட்க விரும்பினாலும், சில குழுக்கள் மற்றும் தனிநபர்கள் மோசடியில் ஈடுபட்டு, அதன் மூலம் உண்மையான பயனாளிகளை இழக்கின்றனர். 

தனியாகவோ அல்லது கூட்டாகவோ ஜகாத் செலுத்தப்பட்டாலும், அனைத்து தகவல்களையும் சேகரித்து பயனாளிகள் பற்றிய அனைத்து விவரங்களையும் சரிபார்ப்பது முக்கியம். ஜகாத் அதன் அசல் பயனாளியை சென்றடைய வேண்டும். அதன்மூலம் மட்டுமே பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை மேலும் வளராது.  இஸ்லாம் பிச்சை எடுப்பதை ஊக்குவிக்கவில்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். 

நமது சமூகத்தில், மத அடிப்படையில் மக்களின் உணர்வுகளைத் தவறாகப் பயன்படுத்தியும், சுரண்டியும் சிலர் ஜகாத் தொகையைத் திருடுகிறார்கள். உண்மையில், கடின உழைப்பின் மூலம் சட்டப்பூர்வமான வாழ்வாதாரத்தை ஈட்டுவதற்காக ஏழைகளுக்கு ஜகாத் வழங்கப்பட வேண்டும். இது ஒரு வகையில் தற்காலிக நிதி உதவி. 

கலந்தாலோசித்து செயல்பட வேண்டும்:

மசூதிகளுக்கு உள்ளேயும் சுற்றிலும் நீண்ட வரிசைகள் மற்றும் பிச்சைக்காரர்களின் பெரிய குழுக்கள் ஒரு முழு சமூகத்திற்கும் அவமானம். இந்த அவலத்தில் இருந்து சமூகம் விரைவில் விடுபட வேண்டும். எனவே ஜகாத் செலுத்தப்பட வேண்டிய சரியான பிரிவை அடையாளம் காண்பது பொருத்தமானது. இஸ்லாத்தில் அமைக்கப்பட்ட மற்றும் தெளிவான வழிகாட்டுதல்கள் உள்ளன, அதாவது முஸ்லிம்கள் மதத் தலைவர்கள் மற்றும் அறிஞர்களுடன் கலந்தாலோசித்து ஜகாத்தின் சிறந்த பயன் என்ன என்பதைக் கண்டறிய வேண்டும். ஜகாத்தின் பெரும்பகுதி மதரஸாக்கள் எனப்படும் மதப் பள்ளிகளுக்குச் செல்கிறது.

ஜகாத்தை முறைசாரா முறையிலும் பயன்படுத்தலாம். இது நாட்டின் சில பகுதிகளில் வரையறுக்கப்பட்ட அளவில் சோதிக்கப்பட்டு சில நல்ல முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.  இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் ஆலோசனையுடன் இந்த சோதனை பெரிய அளவில் துணைபுரிய வேண்டும்.

முஸ்லிம்கள் ஜகாத்தை முறையாக சேகரித்து புத்திசாலித்தனமாக செலவு செய்தால், வறுமையும் பின்தங்கிய நிலையும் காணாமல் போகும்.  மனிதாபிமானம், கருணை மற்றும் உயர்ந்த ஒழுக்க விழுமியங்கள் சமூகத்தில் வளர்க்கப்படும்.

கவனம் செலுத்த வேண்டிய அம்சம்:

ஜகாத் கொடுக்கும்போது பலவிதமான இன்னல்களுக்கு ஆளானவர்களுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும். சிலர் தீராத நோய்களால் பாதிக்கப்படுகின்றனர், மற்றவர்கள் பெரும் கடனில் உள்ளனர். சிலர் தங்கள் மகள்கள் மற்றும் மகன்களின் திருமணத்தை நிச்சயிக்க முடியாது. அத்தகையவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு உதவுவது கட்டாயமாகும். 

ஊழல்வாதிகள் மற்றும் மோசடிகாரர்களின் கைகளுக்கு ஜகாத் செல்வதைத் தடுக்கவும், பணம் தேவைப்படும் மற்றும் ஆதரவற்ற மக்களுக்குச் செல்வதை உறுதி செய்யவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். உண்மையான ஜகாத் அமைப்பு ஏற்படுத்தப்பட்டால், சுற்றிலும் செழிப்பும் மகிழ்ச்சியும் இருக்கும். 

நிபுணர்களின் கூற்றுப்படி, முஸ்லிம்கள் ஆண்டுதோறும் கல்வி மற்றும் நலத்திட்டங்களுக்காக தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலுத்துகிறார்கள். ஆனாலும், முஸ்லிம்கள் பரிதாபகரமான நிலையில் இருந்து வருகின்றனர். ஜகாத் பணம் உண்மையிலேயே சரியாக நிர்வகிக்கப்பட்டால், முஸ்லிம் சமூகத்தின் சமூக-கல்வி நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படும். எனவே, ஜகாத்தை வசூலிக்கவும், தேவைப்படும் பகுதிகளில் அதையே செலவழிக்கவும் ஒரு மையப்படுத்தப்பட்ட அமைப்பை அமைக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

முஸ்லிம்கள் புறக்கணிப்பு..!


அரசுத் திட்டங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான  பாகுபாடு: 

தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்....!

நாடு முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிரான சூழ்நிலைகளை உருவாக்க இந்துத்துவ அமைப்புகள் முயற்சிகளில் இறங்கியுள்ளன.

நாட்டில் வாழும் 21 கோடி முஸ்லிம் மக்களும் அரசின் எந்தவொரு நலத்திட்ட உதவிகளை பெறக் கூடாது, அதற்கான அனைத்து கதவுகளையும் மூட வேண்டும் என்ற இலக்கை கொண்டு பாஜக செயல்பட்டு வருகிறது.

இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு:

முஸ்லிம்களுக்கு தெலங்கானா அரசு வழங்கி வரும் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என பகிரங்கமாகவே பாஜக மூத்த தலைவரும் மத்திய  உள்துறை அமைச்சருமான அமித்ஷா அறிவித்துள்ளார்.

கர்நாடகாவில் தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் முஸ்லிம் வாக்குகள் பாஜகவிற்கு தேவையில்லை என தோல்வியின் விரக்தியில் அக்கட்சியின் மூத்த தலைவர் ஈஸ்வரப்பா கொக்கரித்துள்ளார். இதன்மூலம் பாஜக இந்திய முஸ்லிம்களின் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத கட்சி என்பது 100 சதவீதம் உறுதியாகியுள்ளது.

ஆய்வில் அதிர்ச்சி தகவல்:

இந்நிலையில், SPECT அறக்கட்டளை என்ற இலாப நோக்கற்ற தனியார் அமைப்பு ஒன்று, நாட்டில்  சிறுபான்மை மக்கள் அதிகம் வாழும் 10  மாவட்டங்களில் உள்ள நிலைமை குறித்து அண்மையில் ஆய்வு நடத்தியது.

சிறுபான்மையின மக்கள் வாழும் மாவட்டங்களில் முஸ்லிம்களின் முன்னேற்றம் என்ற தலைப்பில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வின் அறிக்கை அண்மையில் டெல்லியில் உள்ள  இந்திய பிரஸ் கிளப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. 

இந்த அறிக்கை, 10 மாவட்டங்களில் சிறுபான்மையின முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் சமூக, பொருளாதார சவால்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

மக்கள் தொகை பெருக்கம், அண்டை நாடுகளிலிருந்து சட்டவிரோத ஊடுருவல் போன்ற குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த மாவட்டங்களை பாஜக குறிவைப்பதாலும் இந்த 10 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

பீகாரில் அராரியா, புர்னியா, கிஷன்கஞ்ச், கதிஹார், அசாமில் துப்ரி, கோக்ரஜார், உத்தரப்பிரதேசத்தில் ஷ்ராவஸ்தி, பலராம்பூர், மேற்கு வங்கத்தில் மால்டா, முர்ஷிதாபாத் ஆகிய பத்து குறிப்பிட்ட மாவட்டங்களில் ஆய்வு நிறுவனம் கவனம் செலுத்தியது.

ஆய்வு நடத்தப்பட்ட பத்து மாவட்டங்களில் உள்ள முஸ்லிம் மக்கள், நாட்டின் பிற மாநிலங்களை விட அதிகமான அடிப்படை வளங்களையும் வசதிகளையும் இழந்துள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.  

இதன்மூலம் முஸ்லிம்களின் சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை என்பது  உறுதியாகியுள்ளது.

பொய் பிரச்சாரம் அம்பலம்:

இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள், பிற சமூக மக்களை விட அதிக பலன்களை, வாய்ப்புகளை  பெறுகிறார்கள், வசதியாக வாழ்கிறார்கள்  என பாஜக தலைவர்கள் பொய்யான பிரச்சாரம் செய்து வருகிறார்கள். 

ஆனால் தற்போது ஆய்வில் கிடைத்த இந்த தரவுகள் மூலம் முஸ்லிம்கள் பிற சமூகங்களை விட மிகவும் பின் தங்கியுள்ளது உறுதியாக தெரிய வந்துள்ளது. 

பீகாரின் நான்கு மாவட்டங்களில் நிலவும் மோசமான சமூக பொருளாதார நிலையை இந்த அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. 

இந்த மாவட்டங்களில் முஸ்லிம் சமூகம் சராசரியை விட குறைவான கல்வியறிவு விகிதத்தைக் கொண்டு இருப்பது கண்டறியப்பட்டது.

அரசு நலத்திட்டங்களில் புறக்கணிப்பு:

முஸ்லிம்களுக்கு மத்திய,  மாநில அரசுகள் வழங்கும் சலுகைகள், நலத்திட்ட உதவிகள் கூட அவர்களுக்கு சென்று அடைவதில்லை என்பது ஆய்வு உறுதி செய்துள்ளது.

முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட எந்த திட்டத்திற்கும் முன்னுரிமை வழங்கப்படவில்லை என்பது தெரியவருகிறது.

கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களில் முஸ்லிம்களுக்கு எந்த முன்னுரிமை அளிக்கப்படுவது இல்லை என்றும் குறிப்பிட்ட ஒருசில திட்டங்களை தவிர பெரும்பாலான திட்டங்கள் முஸ்லிம்களுக்கு சென்று  அடைவது இல்லை என்றும் சமூக, பொருளாதார ரீதியாக முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாவும் ஆய்வு அறிக்கையில் உறுதிப்பட, திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்.

கல்வியில் சாதனை....!


சதிகளையும் தடைகளையும் உடைத்து கல்வியில்  சாதிக்கும் இஸ்லாமிய மாணவ-மாணவியர்....!

இந்தியாவில் வாழும் சிறுபான்மையின மக்கள், குறிப்பாக முஸ்லிம்கள் கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பது அனைவரும் அறிந்ததே.

எனினும், தற்போது முஸ்லிம் மாணவர்கள் மத்தியில் கல்வி குறித்த ஓர் விழிப்புணர்வு ஏற்பட்டு, அதன்மூலம் எப்படியாவது படித்து வாழ்க்கையில் முன்னேற  வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டுள்ளது. இதனால் குடும்ப சூழ்நிலைகளையும் தாண்டி முஸ்லிம் மாணவ-மாணவியர் கல்வியில் ஆர்வம் செலுத்தி வருகிறார்கள். அதற்கு அவர்களின் குடும்பத்தினரும் ஆதரவு வழங்கி வருகிறார்கள்.

முஸ்லிம்களின் கல்விக்கு எதிராக சதி வலை:

கல்வி, வேலைவாய்ப்புகளில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள முஸ்லிம் சமுதாயம் தற்போது விழித்துக் கொண்டு முன்னேறி வருவதை கண்டு இந்துத்துவ அமைப்புகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளன.

எனவே, பல்வேறு சதிகளை செய்து முஸ்லிம்கள் கல்வியறிவு பெறுவதை தடுக்கும் காரியங்களில் அதிரடியாக இறங்கியுள்ளன.

அதன்படி பள்ளி, கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை, முஸ்லிம் மாணவர்களுக்கான கல்வி ஊக்கத் தொகை நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு செயல்திட்டங்களை பாஜக அரசுகள் அரங்கேற்றி வருகின்றன.

இதனால் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த முஸ்லிம் மாணவ-மாணவியர் பள்ளி, கல்லாரிகளுக்கு செல்வது தடைப்பட்டுள்ளது.

ஹிஜாப் பிரச்சினையால் கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் முஸ்லிம் மாணவிகள் தங்களுடைய படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டனர்.

முஸ்லிம்களின் இந்த போக்கு இந்துத்துவ அமைப்புகள் மற்றும் பாஜகவை மகிழ்ச்சி அடைய செய்தது. தங்களுடைய செயல்திட்டம் நிறைவேறி வருவதைக் கண்டு பாஜக ஆனந்தம் அடைந்தது.

சதிகளை உடைத்து சாதித்த  முஸ்லிம் மாணவி தபசும் ஷேக்:

இந்துத்துவ அமைப்புகளின் சூழ்ச்சியை உணர்ந்து கொண்ட முஸ்லிம் சமுதாயம், கல்விதான் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் மிகப்பெரிய ஆயுதம் என்பதை நினைவில் கொண்டு அதில் கவனம் செலுத்த தொடங்கியது.

"சீனாவிற்கு சென்றாவது சீர்கல்வி பெறு" என்ற நபி மொழியை உள்வாங்கி கொண்டு, "இறைவா என்னுடைய கல்வி ஞானத்தை அதிகப்படுத்துவாயாக" என்ற திருக்குர்ஆனின் பிரார்த்தனைக்கு ஏற்ப ஏக இறைவனிடம் துஆ கேட்டுவிட்டு முஸ்லிம் மாணவ-மாணவியர் கல்வியில் கவனம் செலுத்த தொடங்கினர்.

கர்நாடகாவில் சென்ற ஆண்டு ஹிஜாப் பிரச்சினை பூதாகரமாக வெடித்தபோதும், அதை பொருட்படுத்தாமல் படிப்பில் தனிக் கவனம் செலுத்தி பி.யூ.சி. தேர்வில் மாணவி தபசும் ஷேக் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்து சாதித்துள்ளார். அந்த மாணவி பெற்ற மதிப்பெண்ணின் சதவீதம் 98.3 ஆகும்.

இந்த சாதனை குறித்து கருத்து தெரிவித்த தபசும் ஷேக், ஹிஜாப் விவகாரம் எழுந்தபோது, கல்வி, ஹிஜாப் ஆகிய இரண்டில் ஒன்றை நான் தேர்ந்தெடுக்க வேண்டி இருந்தது. நாங்கள் கல்வி கற்க கூட பல தியாகங்களை செய்ய வேண்டி உள்ளது.

அந்த நேரத்தில் என் பெற்றோர் என்னிடம் கல்விதான் சரியான பாதை என்றும் நீ ஒரு நிலை அடையவும் உன்னை போன்று மற்றவர்களை உயர்த்தவும் இதுபோன்ற அநீதிகள் மீண்டும் நிகழாமல் தடுக்கவும் கல்வியே ஓரே வழி என்றும் அறிவுரை கூறினர்.

அதனால், கல்விக்காக கல்லூரியில் மட்டும் நான் ஹிஜாப்பை துறந்தேன் என தபசும் ஷேக் கூறியுள்ளார்.

இதன்மூலம் 600-க்கு 593 மதிப்பெண் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பிடித்து இந்துத்துவ அமைப்புகளின் கன்னத்தில் ஓங்கி அறைத்துள்ளார்.

உ.பி. மாணவ-மாணவியரும் சாதனை:

தபசும் ஷேக் போலவே நாங்களும் சாதிக்க பிறந்தவர்கள் என பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முஸ்லிம் மாணவி மிஷ்காத் நூர் மற்றும் மாணவன் ஷஹான் அன்சாரி கல்வியில் சாதித்து முஸ்லிம் சமுதாயத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

உபியில் மாணவி மிஷ்காத் நூரியின் வெற்றி:

அயோத்தி கனோஸா கான்வன்ட்டில் பத்தாம் வகுப்பு படித்த மிஷ்காத், நடந்து முடிந்த மாநிலத் தேர்வில் மாநிலத்தின் இரண்டாவது மாணவியாக வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்ற மதிப்பெண் 600-க்கு 587. சதவீதம் 97.83%.

மிஷ்காத் நூரியின் தந்தை அயோத்தியிலுள்ள ஹஸ்னு பகுதியில் இருக்கும் ஒரு மதரஸாவில் ஆசிரியராக உள்ளார். மிஷ்காத்தும் அதே மதரஸாவில் எட்டாம் வகுப்பு வரை பயின்ற பிறகே ஒன்பதாம் வகுப்பில் கனோஸா கான்வென்ட்டில் சேர்ந்துள்ளார்.

தினமும் அதிகாலை நான்கு மணி முதல் தொடர்ந்து ஆறு மணிநேரம் படிக்கும் பழக்கமுடைய மிஷ்காத், தனக்கு மருத்துவராக வேண்டும் என்ற கனவின் முதல் அடித்தளமாக இதனை அல்லாஹ் நிறைவேற்றித்தந்துள்ளதாக கூறுகிறார்.

ஷஹான் அன்சாரி அசத்தல்:

இதேபோன்று உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவன் ஷஹான் அன்சாரி 10-ஆம் வகுப்பு தேர்வில் 96.83 சதவீத மதிப்பெண்கள் பெற்று தனது பெற்றோருக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

பல்வேறு நெருக்கடிகள், தொல்லைகள், மிரட்டல்கள் என பல தடைகளை தாண்டி முஸ்லிம் மாணவ-மாணவியர் இன்று கல்வியில் சாதித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்துத்துவ அமைப்புகளின் மிரட்டல்களுக்கு அச்சாமல் முஸ்லிம் மாணவ-மாணவியர் கல்வியில் முன்னேறிக் கொண்டே செல்ல வேண்டும். கல்விதான் வாழ்க்கையில் முன்னேற மிகப்பெரிய மூலதனம் என்பதை உணர்ந்து கொண்டு தங்களுடைய குழந்தைகளுக்கு பெற்றோர்களும், சமூதாயமும் முழு ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்க வேண்டும். இது காலத்தின் கட்டாயம் என்பதை மறந்து விடக் கூடாது.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

நூலகங்கள் - தமிழ்நாடு டாப்....!


நூலகங்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு டாப்....!

பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம் படுமோசம்...!

நாட்டில் இருக்கும் மாநிலங்களில் உள்ள மதுபான கடைகள் மற்றும் நூலகங்களின் எண்ணிக்கை குறித்து ஒன்றிய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் ராஜாராம்  மோகன் ராய் நூலக நிறுவனம் புள்ளி விவரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

உ.பி. படு மோசம்:

பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தில் நூலகங்களின் எண்ணிக்கையை விட, மதுபான கடைகளின் எண்ணிக்கை தான் மிகவும் அதிகம் என புள்ளி விவரத்தில் தெரிய வந்துள்ளது.

உ.பி.யில் மொத்தம் 27 ஆயிரத்து 352 மதுபான கடைகள் உள்ளன.

ஆனால், அம்மாநிலத்தில் உள்ள பொது நூலகங்களின் எண்ணிக்கை வெறும் 573 மட்டுமே ஆகும்.

அதேநேரத்தில், 3 லட்சத்து 29 ஆயிரத்து 970 இ-நூலக சேவை இருப்பதாக உத்தரப் பிரதேச பொது நூலக அமைப்பு தெரிவிக்கிறது.

இதன்மூலம் உத்தரப் பிரதேசத்தில் பிற மாநிலங்களை விட நூலகங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்பது உறுதியாக தெரிவதுடன், கல்வியறிவு பெறுவதில் அந்த மாநிலம் ஏன் மிகவும் பின் தங்கி உள்ளது என்பதையும் தெளிவாக அறிய முடிகிறது.

அத்துடன் புதிய நூலகங்களை திறப்பதை விட மதுபான கடைகளை திறப்பதில் தான் உ.பி. பாஜக அரசு அதிக அக்கறை செலுத்தி வருகிறது.

மாநிலத்தின் வருவாயை அதிகரிக்க புதிதாக 2 ஆயிரத்து 76 மதுக் கடைகளை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்  அண்மையில் திறந்து வைத்துள்ளார்.

அதிக நூலகங்கள் கொண்ட மாநிலம் தமிழ்நாடு:

பாஜக கூட்டணி ஆளும் மற்றொரு மாநிலமான மகாராஷ்டிராவில் 25 ஆயிரம் மதுக் கடைகளும் 12 ஆயிரத்து 148 நூலகங்களும் உள்ளன.

பாஜக ஆட்சி செய்யும் கர்நாடகாவில் 11 ஆயிரம் மதுபான கடைகளுக்கு 6 ஆயிரத்து 798 நூலகங்களும் உள்ளன.

ஆனால், நூலகங்கள் விவகாரத்தில் தமிழ்நாட்டில் நிலைமையோ மிகவும் சூப்பராக உள்ளது.

தமிழ்நாட்டில் 5 ஆயிரத்து 329 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன.

அதே அளவிற்கு அதாவது 4 ஆயிரத்து 622 நூலகங்கள் தமிழ்நாட்டில் இயங்கி வருகின்றன.

அறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம்:

சென்னை கோட்டூர்புரத்தில் அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம் 172 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு கடந்த 2010-ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது.

இது ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகம் என பாராட்டுகிறது.

அனைத்து அதிநவீன வசதிகளுடன் இந்த நூலகம் உருவாக்கப்பட்டு நன்றாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

பல லட்சம் தலைப்புகளில் ஏராளமான நூல்கள் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

கணினி சேவை, இணையதளம், வைஃபை உள்ளிட்ட வசதிகளுடன் இயங்கி வரும் இந்த நூலகம்,  ஆராய்ச்சி மாணவர்களுக்கு மிகவும் பலன் அளித்து வருகிறது.

அத்துடன், பல்வேறு போட்டி தேர்வு எழுதும் இளைஞர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள இந்த நூலகம் நல்ல வாய்ப்பை அளிக்கிறது.

கலைஞர் நினைவு நூலகம்:

மதுரை தல்லாக்குளம் பகுதியில் பிரமாண்டமாக கட்டப்படுள்ள கலைஞர் நினைவு நூலகம் வரும் ஜூன் 3-ஆம் தேதி திறக்கப்படுகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த நூலகத்தை திறந்து வைக்க உள்ளார்.

சுமார் 2 லட்சம் சதுர பரப்பளவில் கட்டப்பட்ட இந்த நூலகம் 115 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.

7 தளங்களை கொண்ட இந்த பிரமாண்டமான நூலகத்தில் அனைத்து நவீன வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

உலக தரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த கலைஞர் நினைவு நூலகம், மதுரை  மட்டுமல்லாமல் தென் மாவட்ட மக்கள், இளைஞர்கள், மாணவர்கள் ஆகியோரின் அறிவு பசிக்கு நல்ல தீனி போடும் என்பது உறுதி.

மதுபான கடைகளுக்கு நிகராக நூலகங்கள் உள்ள தமிழ்நாட்டில், இனிவரும் காலத்தில், டாஸ்மாக் மதுபான கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாக குறைத்து, நூலகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள சிறிய நூலகங்களை சீரமைத்து மேம்படுத்த அரசு முன்வர வேண்டும்.

இதன்மூலம், டாஸ்மாக் கடைகளுக்கு செல்லும் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து, நூலகங்களுக்கு செல்லும் இளைஞர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும். இதற்காக பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாநிலம் முழுவதும் அரசு தொடர்ந்து நடத்தினால், இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் அதிக நூலகங்களை கொண்ட மாநிலம், தமிழ்நாடு என்ற பெருமை தமிழர்களுக்கு கிடைக்கும்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்.

கல்வி நிறுத்தம் - அதிகரிப்பு....!


கல்வி நிறுவனங்களில் படிப்பை பாதியில் நிறுத்தும் போக்கு முஸ்லிம் சமுதாயத்தில் அதிகரிப்பு.....!

அதிர்ச்சி தகவல்....!!

நாடு முழுவதும் முஸ்லிம் மாணவ-மாணவியர் இடையே கல்வி  குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டு, இதன்மூலம் சமுதாயத்தில் நல்ல மாற்றம் ஏற்பட்டு வருகிறது.

பல தடைகளை உடைத்து முஸ்லிம் மாணவ-மாணவியர் கல்வியில் சாதனை புரிந்து வருகின்றனர். இது மற்றவர்களுக்கு ஒரு உத்வேகம் அளித்து வருகிறது.

கல்வியை பாதியில் நிறுத்தம் அதிகரிப்பு:

கல்வியில் முஸ்லிம் மாணவ-மாணவியர் சாதித்து வரும் நிலையில், கல்வி நிறுவனங்களில் இருந்து படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு செல்லும் போக்கு முஸ்லிம் சமுதாயத்தில் தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதுதொடர்பாக டெல்லியில் அண்மையில் நூல் ஒன்று வெளியிடப்பட்டது.

ஜனாபா ரூபினா தபசும் என்பவர் தயாரித்துள்ள இந்த நூலில், பல அதிர்ச்சி அளிக்கும் புள்ளி விவரங்கள் தெரிய வந்துள்ளன.

முஸ்லிம்கள் மத்தியில் கல்வி நிறுவனங்களில்  சேர்க்கை விகிதம் குறைந்து வருகிறது என்று நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கல்வியை பாதியில் நிறுத்தம் போக்கு  விகிதம் அதிகரித்து வருகிறது.

முஸ்லிம்கள் மத்தியில் கல்விக்கான உந்துதல் கணிசமாக அதிகரித்து இருந்தாலும், அவர்களிடையே படிப்பை பாதியில் நிறுத்தும் விகிதம் மிக அதிகமாக உள்ளது. 

தேசிய அளவில் படிப்பை பாதியில் நிறுத்தம் சராசரி 18.96 சதவீதமாக உள்ளது.

இதை ஒப்பிடும்போது முஸ்லிம்களின் விகிதம் 23.1 சதவீதமாக உள்ளது.

கல்வி உரிமை பிரகடனம் செய்யப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகியும் நாட்டில் படிப்பை பாதியில் நிறுத்தம் செய்யும் விகிதம் இன்னும் குறையவில்லை.

கடைசி இடத்தில் முஸ்லிம்கள்:

ஒன்றிய கல்வி அமைச்சகம் உள்ளிட்ட அரசு வட்டாரங்களிலிருந்து திரட்டப்பட்ட உண்மைத் தரவுகளின் அடிப்படையில் கல்வி, சமூக, பொருளாதாரக் குறியீடுகளில் முஸ்லிம்கள் கடைசி இடத்தில்தான் இருக்கிறார்கள் என்பது உறுதிப்பட தெரிகிறது.

ஒவ்வொரு முஸ்லிம் குடும்பமும் தங்களுடைய வருமானத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை தங்கள் குழந்தைகளின் கல்விக்காக செலவழிக்க முடியாத நிலையில் உள்ளனர். 

பலவீனமான முஸ்லிம் சமூகம் அவர்களின் சமூக பொருளாதார நிலைமை காரணமாக கல்வி வாய்ப்புக்களை அணுகுவதில்லை என்பது தெரிய வந்துள்ளது. 

வறுமை மிக முக்கிய காரணம்:

முஸ்லிம்கள் கல்வியை பாதியில் நிறுத்துவதற்கு  வறுமை உள்ளிட்டவை முக்கிய காரணங்களாக இருந்து வருகின்றன.

படிப்பை இடையில் நிறுத்துவதால் பல முஸ்லிம் இளைஞர்கள் அரசு வேலைவாய்ப்புகளை இழக்கிறார்கள்.

முஸ்லிம் மாணவர்கள் கல்வியை பாதியில் நிறுத்தி விடுவதால், அது, நாட்டின் சமூக-பொருளாதார பின்னடைவுக்கும் காரணமாக அமைந்து விடுகிறது.

சமுதாயம் விழித்துக் கொள்ள வேண்டும்:

கல்வி நிறுவனங்களில் முஸ்லிம் மாணவ-மாணவியர் படிப்பை பாதியில் கைவிடுவதை தடுக்க சமுதாயம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

கல்வியின் முக்கியத்துவம், அதன்மூலம் கிடைக்கும் நீண்ட கால பலன்கள், சமுதாயத்தில் ஏற்படும் மாற்றம், மறுமலர்ச்சி ஆகியவை குறித்து முஸ்லிம்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும்.

கல்வியில் ஆர்வம் உள்ள ஏழை, நடுத்தர முஸ்லிம் குடும்பங்களைச் சேர்ந்த மாணவ மாணவியருக்கு பல்வேறு வகையிலும் உதவிக்கரம் நீட்டி, ஊக்கப்படுத்தி, உற்சாகம் அளிக்க வேண்டும்.

இதன்மூலம் மட்டுமே படிப்பை பாதியில் நிறுத்தம் போக்கு முஸ்லிம்கள் மத்தியில் குறையும்.

இந்துத்துவ அமைப்புகளின் சதி திட்டங்களை முறியடிக்க  முஸ்லிம் சமுதாயம் தங்கள் முன் உள்ள இந்த மிகப்பெரிய சவாலை துணிச்சலுடன் எதிர்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்.

நவீன சாவல்கள்....!

முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் நவீன சவால்கள்.....!

முஸ்லிம் சமூகம் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு நவீன சவால்களை தற்போது  எதிர்கொண்டுள்ளது. இந்த சவால்கள் வெவ்வேறு அளவுகளில், வடிவங்களில் உள்ளன. தற்போதைய நவீன காலத்தில்  சமூக ஊடகங்கள், சமூக பிரச்சனைகளை முன்னிறுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

பெரும்பாலான சமூக ஊடகங்களில்


கட்டமைக்கப்பட்ட கதைகள் பரப்பட்டுகின்றன.  

சில சமயங்களில் இந்த கதைகள் முஸ்லிம் விரோத சக்திகளால் கட்டமைக்கப்படுகின்றன.  தெரிந்தோ தெரியாமலோ ஒட்டுமொத்த சமூகமும் அதில் விழுகிறது. சில நேரங்களில் சமூக ஊடகங்களில் இந்த போக்குகள் சமூகத்தின்  துடிப்பை பிரதிபலிக்கின்றன.

சமூக ஊடகங்களில் சுறுசுறுப்பாக இருப்பவர்களுக்கு சில அடிப்படை உண்மைகள் பற்றிய அறிவு இருப்பது இல்லை.  பிரச்சினையை எழுதுபவர்கள் அல்லது பேசுபவர்களில் பெரும்பாலானவர்கள் சமூகத்திற்கு சரியான வழிகாட்டுதலை வழங்குவதில் குறைபாடுடையவர்கள். மேலும் சரியான எண்ணிக்கையிலான தரவுகளை வழங்க உண்மை கண்டறியும் குழு எதுவும் இல்லை. 

பன்முகத்தன்மை கொண்ட நாடு:

அண்டை வீட்டாராகவும், வகுப்புத் தோழர்களாகவும் அல்லது சக ஊழியர்களாகவும் முஸ்லிம் அல்லாதவர்களைக் கொண்ட பன்முகத்தன்மை கொண்ட மிகவும் அழகான நாட்டில் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த சூழலில் தற்போது கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சி, பெண்களின் உரிமைகள் மற்றும் பாலின நீதி என்ற முழக்கங்கள் இன்றைய தலைமுறையில் பெரும் தாக்கத்தை உருவாக்கியுள்ளன.

இத்தகைய நேரங்களில் வெறும் உணர்ச்சிகளால் பிரச்சினையை கையாள முடியாது. எனவே விழிப்புணர்வை உருவாக்குவதில் சமூகம் செயல் வடிவங்களை உருவாக்கி வழிகாட்ட வேண்டும். தீர்வுகள் இல்லாத விழிப்புணர்வு மிகவும் கடினமான சூழ்நிலையை உருவாக்கும். 

தங்கள் பெண் குழந்தைகளை பாதுகாப்புடன் காப்பாற்றுவது முஸ்லிம் பெற்றோரின் கடமை.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில்  சமூக ஊடக கருவிகளில் பெண் பிள்ளைகள்  சிக்கிக் கொள்வது பெற்றோருக்குத் தெரியாமல் போய் விடுகிறது.  

தயக்கம் காட்டக் கூடாது:

முஸ்லிம் அமைப்புகளும் மஸ்ஜித் கமிட்டிகளும் பெண்களை மசூதி மற்றும் ஜும்மா குத்பா பிரசங்கங்களுக்கு அருகில் கொண்டு வருவதில் இன்னமும் தயக்கம் காட்டுகின்றன. பெற்றோர்களும் இதில் கவனம் செலுத்துவதில்லை.  எனவே இதில் தனிக் கவனம் செலுத்தி இஸ்லாமிய பெண்களிடம் உள்ள திறமைகள் மற்றும்  தலைமைத்துவத்தை வெளிப்படுத்த சமூகம் முன்வர வேண்டும். 

2017-18 ஆம் ஆண்டு ஹாதியா வழக்கு முதல் ‘தி கேரளா ஸ்டோரி’ வரை பெண்களை குறிவைத்து மிகப்பெரிய பிரச்சார இயந்திரங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் இஸ்லாம் மீதான வெறுப்பும் விஷமும் நிறைந்த சூழல் நிலவுகிறது. 

இதனால் முஸ்லீம் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் பல நிலைகளில் போராட வேண்டிய கட்டாயம் உள்ளது. 

எனினும், மார்க்கத்தின் மீதான அவர்களின் அர்ப்பணிப்பு ஈடு இணையற்றது. ஹிஜாப் அணிந்த பெண்கள் மற்ற பெண்களை சந்தேகத்துடன் பார்க்கக் கூடாது. ஹிஜாப் பிரச்சினை பெண்களின் கல்விக்கு ஒருபோதும் தடையாக இருக்கக்கூடாது. அதேநேரத்தில் அவர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். ஆனால் கல்வி மறுக்கப்படக்கூடாது. 

திருமணத்துடன் வலுவான குடும்ப பிணைப்புகளும் இருக்க வேண்டும். கல்வி என்பது அறிவுசார் செயல்முறை மற்றும் திருமணம், குடும்பம் என்பது வாழ்வியல் செயல்முறை என கல்வி, தொழில் மற்றும் குடும்பம் ஒன்றாக செல்ல வேண்டும்.

குடும்பத்தையும் தொழிலையும் மிகவும் புத்திசாலித்தனமாக சமன் செய்த இஸ்லாமிய அறிவுஜீவிப் பெண்களுக்கு எண்ணற்ற உதாரணங்கள் உண்டு.

 ஐந்து அம்சத் திட்டம்:

சமூக ஊடகங்கள் மூலம் முஸ்லிம் சமூகம் சந்திக்கும் சவால்களை குறித்து உலமாக்கள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள்,  பள்ளிவாசல் கமிட்டிகள் கவனம் செலுத்தி, இந்த பிரச்சினையை கையில் எடுக்க வேண்டும். தரவு, ஆவணங்கள், ஆலோசனை, வழிகாட்டுதல், சட்ட உதவி, ஆகியவற்றின் மூலம் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்தால், பெண்களைக் காப்பாற்றுவதில் பயனுள்ளதாக இருக்கும்.

இஸ்லாமிய  பெண்கள் வெள்ளிக்கிழமை ஜும்மா பிரசங்கங்களை கேட்க ஆர்வம் செலுத்த வேண்டும். மத்ரஸாக்களின் மூலம் முஸ்லிம் பெண் குழந்தைகளுக்கு தீனி தர்பியாத்துக்கான (மார்க்கக் கல்விக்கான) ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

பள்ளிக் கல்வி முடித்து உயர்கல்வி பெறும் முஸ்லிம் பெண்களுக்கு சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்.  இதற்கு அறிவுசார் பெண் ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், மருத்துவர்கள் தங்கள் மதிப்புமிக்க நேரத்தை செலவிட முன்வர வேண்டும்.

இஸ்லாமிய முறைப்படி நடக்கும் திருமணம் ஊக்குவிக்கப்பட வேண்டும். சமூகக் கொடுமைகள் ஒழிக்கப்பட வேண்டும்.  ஷரியத்  நடைமுறைப்படி பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். பல்வேறு வகைகளில் பாதிக்கப்படும் பெண்களுக்கு   உதவ ஆலோசனை மையங்கள் மற்றும் ஹெல்ப்லைன்கள் உருவாக்கப்பட வேண்டும்.

 ஆண், பெண் என பாகுப்பாடு காட்டாமல், தொழில்முறை ஆலோசனைகளை இருவருக்கும் வழங்க இஸ்லாமிய அமைப்புகள் முன்வர வேண்டும். 

மார்க்கக் கல்வி மாற்றத்தை ஏற்படுத்தும்:

பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் ஆண் குழந்தைகளுக்கும் தீனியாத் தர்பியத் (மார்க்கக் கல்வி) செய்வது நிச்சயமாக சமூகத்திற்கு மிகப்பெரிய சொத்தாக அமையும். இதன்மூலம், குழந்தைகளிடம் ஒழுக்க மாண்புகள் வளரும். மற்றவர்கள் மீதான புரிந்துணர்வு அதிகரிக்கும். இஸ்லாம் குறித்து பிற சகோதர சமுதாய மக்களிடையே நல்ல எண்ணங்கள் உருவாகும். 

இதனால் அனைவரிடமும் அன்பு, சகோதரத்துவம் தழைத்தோங்கும். எதிர்காலத்தில் பிரச்சினை ஏற்படாத வகையில் நல்ல இதமான சூழ்நிலை உருவாகும். 

இந்த விவகாரங்களில் ஏற்கனவே, முஸ்லிம் சமூகம் தாமதம் செய்துவிட்டது. மேலும் தாமதமாகிவிடும் முன், சவாலை ஏற்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. எனவே, பிரச்சினைக்கு விகிதாசாரமான தொழில்முறை அணுகுமுறையின் தேவையை முன்னிலைப்படுத்துவது மிகவும் முக்கியமானது என்பதை முஸ்லிம் சமூகம் புரிந்துகொள்ள வேண்டும்.

- நன்றி முஸ்லிம் மிரர்

- தமிழில்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

எதிர்க்கட்சிகள்.....!

2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தல்....!

ஓர் அணியில் திரளும் எதிர்க்கட்சிகள்....!!

வரும் 2024-ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை பாஜக ஏற்கனவே தொடங்கி விட்ட நிலையில்,  பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஓரே அணியில் திரட்டும் முயற்சிகள்  தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மற்றும் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் அண்மையில் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி,  டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து, பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே அணியில்   இணைந்து செயல்படுவது தொடர்பாக முக்கிய ஆலோசனை மேற்கொண்டனர்.

பின்னர், கொல்கத்தா சென்ற அவர்கள், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜியை சந்தித்து மக்களவை தேர்தல் தொடர்பாகவும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை குறித்தும் முக்கிய ஆலோசனை மேற்கொண்டனர்.

மேலும், லக்னோவில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவையும் சந்தித்து பேசினர். இந்த சந்திப்புகள் அனைத்தும் மிகவும் ஆக்கப்பூர்வமான முறையிலும் நம்பிக்கை அளிக்கும் வகையிலும் இருந்ததாக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மகிழ்ச்சி தெரிவித்தார்.




பீகாரில் எதிர்க்கட்சிகள் தலைவர்கள் ஆலோசனை:

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த பிறகு, அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் பீகார் தலைநகர் பட்னாவில் நடைபெறும் என நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜகவுக்கு எதிராக உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் கலந்துகொள்ளும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

வரும் மக்களவைத் தேர்தல் குறித்தும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை, ஓர் அணியில் திரள்வதன் அவசியம் ஆகியவை குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 

மம்தா பானர்ஜி அழைப்பு:

இந்நிலையில், நாட்டில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பாஜகவை எதிர்த்துப் போராட வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். 

முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள சம்ஷர்கஞ்ச் என்ற இடத்தில் கடந்த 5-ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், எதிர்க்கட்சித் தலைவர்களை துன்புறத்த சி.பி.ஐ., அமலாகத்துறை போன்ற அமைப்புகளை பாஜக பயன்படுத்தி வருவதாக கண்டனம் தெரிவித்தார். 

வரும் பொதுத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்குகளைப் பெற சிபிஐ மற்றும் அமலாகத்துறை உள்ளிட்ட  அமைப்புகளின் நடவடிக்கைகள் எந்த பயனும் அளிக்காது என்றும் மம்தா பானர்ஜி கூறினார்.

பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு, மக்களுக்காக வேலை செய்வதை விட, அரசியல் செய்வதிலும், அட்டூழியங்கள் செய்வதிலும், குழப்பங்களை  பரப்புவதிலும் மும்முரமாக உள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

ஒவ்வொரு தொகுதியிலும் பொது வேட்பாளர்:

வரும் பொதுத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகளுக்கு மம்தா பானர்ஜி யோசனை கூறியுள்ளார்.

எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றுபட்டு பாஜவுக்கு எதிராக போராட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.  1:1 என்ற அடிப்படையில் பொது வேட்பாளர்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும்,  ஒரு தொகுதியில் எந்த அரசியல் கட்சி பலமாக இருக்கிறதோ, அந்த தொகுதியில் அக்கட்சியில் மக்கள் மத்தியில் நல்ல அறிமுகம் உள்ள வலுவான வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும் என்றும் மம்தா பானர்ஜி வலியுறுத்தினார்.  

பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற இது மிகவும் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார். மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட

11 மாநிலங்களின் உதாரணத்தை மேற்கோள் காட்டிய அவர்,  இந்த 11 மாநிலங்களில் 271 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளதாக குறிப்பிட்டார். 

இந்த 271 தொகுதிகளில்  வரும் தேர்தலில் பாஜக சிறப்பாக செயல்பட வாய்ப்பில்லை என்றும் மம்தா பானர்ஜி கூறினார். கர்நாடகாவில் இருந்து பாஜகவின் வீழ்ச்சி தொடங்குவதைக் கண்டு தாம் மகிழ்ச்சி அடைய இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை:

கடந்த மார்ச் மாதத்தில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பிஜேடி தலைவர் நவீன் பட்நாயக், ஜேடிஎஸ் தலைவர் எச்.டி. குமாரசாமி, ஜேடியு தலைவர் நிதிஷ் குமார் மற்றும் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோருடன் மம்தா பானர்ஜி தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார்.   அப்போது பாஜகவிற்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைந்து செயல்படுவது காலத்தின் கட்டாயம் என்றும் மம்தா பானர்ஜி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

லாலு பிரசாத் யாதவ் எச்சரிக்கை:

வரும் மக்களவை தேர்தலில் ஒன்றிய பாஜக அரசை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓர் அணியில் இணைய மறுத்தால், நாடும் நாட்டின் எதிர்கால, புதிய தலைமுறை தலைவர்களை மன்னிக்காது என ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்தார். இது நாட்டு நலனில் உண்மையான அக்கறை கொண்ட அனைத்து எதிர்க்கட்சிகளையும்  தற்போது சிந்திக்க வைத்துள்ளது. ஈகோவை விட்டு கொடுக்க பல தலைவர்கள் முன்வந்துள்ளனர்.

பாஜக அதிர்ச்சி:

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓர் அணியில் திரள வேண்டும் என்றும், ஒவ்வொரு தொகுதியிலும் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளர் நிறத்தப்பட வேண்டும் என்றும் மம்தா பானர்ஜி கருத்து கூறியுள்ளது, புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

ஜாதி, மதம் என மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி அதன்மூலம் அரசியல் லாபம் பெற்றுவரும் பாஜக, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை கண்டு கலக்கமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளது.

எனவே கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அம்மாநிலத்தில் மட்டுமல்லாமல், தேசிய அரசியலிலும் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்றும் நாட்டு மக்கள் மத்தியிலும் பாஜக குறித்த சிந்தனையில் நல்ல மாற்றம் ஏற்படும் என்றும் அரசியல் நோக்கர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

முஸ்லிம் மாணவன் சாதனை....!


ஏழ்மையிலும் சாதித்த முஸ்லிம் மாணவன் முகமது இர்பான்....!

உ.பி. சமஸ்கிருத வாரியத் தேர்வில் 

முதலிடம் பிடித்து அசத்தல்...!! 

உத்தரபிரதேச மத்தியமிக் சமஸ்கிருத சிக்ஷா பரிஷத் வாரியத்தின் 12-ஆம் வகுப்பு தேர்வு அண்மையில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து 13 ஆயிரம் மாணவ மாணவியர் கலந்துகொண்டு தேர்வை எழுதினர்.  இந்த தேர்வின் முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. தேர்வில் யார் முதலிடம் பிடிப்பார்கள் என்ற கேள்வி அனைத்து மாணவர்கள் மத்தியில் பரபரப்பாக இருந்து வந்தது. இதனால் தேர்வு முடிவை  மிகவும் ஆர்வத்துடன் மாணவ-மாணவியர் எதிர்நோக்கி இருந்தனர். 

முகமது இர்பான் முதலிடம் பிடித்து சாதனை:

இந்த தேர்வில் யாரும் எதிர்பார்க்காத வகையில் முஸ்லிம் மாணவன் முகமது இர்பான் முதலிடம் பிடித்து சாதனை புரிந்துள்ளார். 17 வயதான முகமது இர்பான், உத்தரபிரதேசத்தின் சந்தௌலி மாவட்டத்தில் வசிக்கும் தினசரி கூலித் தொழிலாளியான சலாவுதீனின் மகன் ஆவார்.  சமஸ்கிருத வாரியத் தேர்வில் கலந்துகொண்ட 13 ஆயிரம் பேரில்  முகமது இர்பான்  82.71 சதவீத மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்து இருப்பது அனைவரையும் வியப்பு அடையச் செய்துள்ளது. 

சமஸ்கிருத ஆசிரியராக வர வேண்டும் என்ற இலட்சியம் கொண்ட இர்பான், 10 மற்றும் 12 வகுப்புகளிலும்  தேர்ச்சி பெற்ற முதல் 20 மாணவர்களில் ஒரே முஸ்லீம் மாணவராக தேர்ச்சி பெற்று  தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். 

வறுமையான குடும்ப சூழ்நிலை:

தினசரி 300 ரூபாய் மட்டுமே ஊதியம் பெறும் முகமது இர்பானின் தந்தைக்கு கடும் பண நெருக்கடி இருந்து வருகிறது. இதன் காரணமாக தனது மகனை நல்ல தனியார் பள்ளியில் அவரால் சேர்க்க முடியவில்லை. எனவே சம்பூர்ணானந்த் சமஸ்கிருத அரசுப் பள்ளியில் தனது மகனை சேர்க்க வேண்டிய  கட்டாய சூழ்நிலை ஏற்பட்டது. 

சமஸ்கிருதம் கற்க வேண்டும் என்ற இர்பானின் விருப்பத்தை அறிந்த அவரது தந்தை  அதற்கு தடையாக இருக்காமல், கல்வி தொடர எப்போதும் ஊக்குவித்து வந்துள்ளார்.

இர்ஃபான் வித்தியாசமான பாதையைத் தேர்ந்தெடுத்ததில் மகிழ்ச்சி அடைவதாக கூறியுள்ள அவரது தந்தை, ஆரம்பத்திலிருந்தே சமஸ்கிருதத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த தனது மகன் அதை மேலும் படிக்க விரும்பியதாகவும் அதனால் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

வித்தியாசமான தனது மகனின் முயற்சிக்கு ஊக்கம் அளித்ததால்,அவரது விடாமுயற்சிக்கு தற்போது நல்ல பலன் கிடைத்துள்ளதாகவும்  சலாவுதீன் கூறியுள்ளார். ஒரு முஸ்லீம் சமஸ்கிருதம் படிக்க முடியாது என்ற கருத்து தற்போது உடைக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

ஜூனியர் வகுப்புகளில் சமஸ்கிருதம் ஒரு கட்டாயப் பாடமாக இருந்தது. அங்கிருந்துதான்  இர்பானுக்கு அந்த மொழியின் மீது விருப்பம் ஏற்பட்டது. அவர் இப்போது சாஸ்திரி (BA-க்கு சமமானது) மற்றும் ஆச்சார்யா (MA-க்கு சமமானது) செய்ய திட்டமிட்டுள்ளார்.

பின்னர் சமஸ்கிருத ஆசிரியர்  வேலையில் சேரவும் இர்பான் முடிவு செய்துள்ளார். 

இஸ்லாத்தில் உறுதி:

சமஸ்கிருதம் படிப்பதில் ஆர்வத்துடன் இருந்தாலும், முகமது இர்பான்  இஸ்லாமிய மார்க்க ஒழுக்க நெறிகளை உறுதியுடன் கடைப்பிடித்து வருகிறார். ஒரு உண்மையான முஸ்லீம் குடும்பத்தைச் சேர்ந்தவராக எப்போதும் தம்மை அடையாளப்படுத்தி கொண்டு வருகிறார். 

இர்பான் கருத்து:

குறிப்பிட்ட மொழியை ஒரு மதத்துடன் தொடர்புபடுத்துவது தமக்கு புரியவில்லை என கூறியுள்ள இர்பான்,  ஒரு இந்து மாணவர் உருது மொழியைக் கற்றுக்கொள்வதில் மிகச் சிறந்தவராக இருக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார். இதேபோன்றுதான்  ஒரு முஸ்லீம் மாணவர் சமஸ்கிருதத்தைப் படிப்பதில் மிகச் சிறந்தவராக இருக்க முடியும் என்றும் தான் கல்வியின் மதிப்பைப் புரிந்துகொண்ட ஒரு மாணவன் என்றும் அவர் கூறியுள்ளார். 

இர்பான் தொடர்ந்து விடாமுயற்சியும், கடின உழைப்பும் கொண்ட மாணவராக இருந்ததாகவும், தனது சாதனைகள் மூலம் கல்லூரிக்கு மதிப்பைக் கொண்டு வந்ததாகவும் அவர் படித்த கல்லூரியின் முதல்வர் ஜெய் ஷ்யாம் திரிபாதி பாராட்டு தெரிவித்துள்ளார். 

முஸ்லிம்களிடையே அதிகரித்து வரும் கல்வி ஆர்வம்:

ஏக இறைவனின் வாக்கான திருக்குர்ஆன் சமஸ்கிருத மொழியிலும் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், அந்த மொழி  தெரிந்தவர்கள், திருக்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ள ஏக இறைக் கொள்கை, வாழ்க்கை நெறிகள், இம்மை, மறுமை குறித்து  அறிந்து கொள்ள முடிகிறது.

இந்நிலையில், முகமது இர்பானை போன்ற மற்ற முஸ்லிம்களும் சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளை கற்றுக் கொண்டு தேர்ச்சி பெறுவதில் எந்த வியப்பும் இல்லை. 

அந்த வகையில் சமீப காலமாக, முஸ்லீம் சமூகத்தினரிடையே பல்வேறு மொழிகளை கற்றுக் கொள்ளும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. இதற்காக இஸ்லாமிய அமைப்புகள் பல்வேறு முயற்சிகளை எடுத்தும் வருகிறது. முஸ்லிம் மாணவ-மாணவியர் மத்தியில் ஏற்பட்டுள்ள இந்த ஆர்வத்திற்கு சமூகம் நல்ல வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டும். அதன்மூலம் சமுதாயத்தில் மாற்றம் ஏற்பட்டு நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது உறுதி. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

ஜப்பானில் இஸ்லாம்.....!


ஜப்பானில் வேகமாக வளர்ந்து வரும் இஸ்லாம்....!

சமீப காலமாக மதங்களைப் பற்றிய புரிதலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முயற்சிகள் உலகம் முழுவதும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, இஸ்லாம் குறித்து அறிந்துகொள்ள பல்வேறு மதம், கலாச்சார நம்பிக்கை கொண்ட மக்களிடையே ஆர்வம்  அதிகரித்துள்ளது. 

உலகின் அனைத்து மூலைகளிலும் இஸ்லாம் பரவியதற்கு என்ன காரணம் என்ற கேள்வி எழுந்து அதற்கான விடை தேடுதல் உலக மக்களிடையே தற்போது ஏற்பட்டுள்ளது. 

சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் இஸ்லாம்:

உலகின் அனைத்து மதங்களும் சமூகத்தை நேர்மறையான வழிகளில் வடிவமைக்க உதவும் அறநெறிகள் மற்றும் நம்பிக்கைகளுக்கு அடித்தளமாக உள்ளன. உண்மையில், இஸ்லாம் சமூகப் பிரச்சனைகளை, இனவெறி, சமத்துவமின்மை மற்றும் பாலின வேறுபாடு போன்றவற்றைத் தீர்க்கும் மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளது.

இதனால் உலக மக்கள் இஸ்லாத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். இதன் காரணமாக உலகில் வேகமாக வளர்ந்து வரும் மதங்களில் ஒன்றாக இஸ்லாம் அமைந்துள்ளது. 

ஜப்பானில் இஸ்லாமிய எழுச்சி:

கிழக்கு ஆசிய நாடான ஜப்பானில், கிட்டத்தட்ட 1 லட்சத்து 12 ஆயிரம் முதல் 2 லட்சத்து 30 ஆயிரம்  மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். இஸ்லாம்  வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக ஜப்பான் இருந்து வருகிறது.  கடந்த காலங்களில்  முஸ்லிம்களை, ஜப்பான் அவ்வளவாக வரவேற்கவில்லை. ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக, ஜப்பானியர்கள் வித்தியாசமான நம்பிக்கை மற்றும் கலாச்சாரத்தைப் புரிந்துகொள்வதில் அதிகமாக ஆர்வம் கொண்டுள்ளனர்.

ஜப்பானில் உள்ள முஸ்லிம்கள் தேசியம், இனம், கலாச்சாரம், வாழ்க்கை முறை போன்ற பல்வேறு பின்னணியில் இருந்து வருகிறார்கள். மேலும் ஜப்பானிய முஸ்லிம்கள் தொழுகை மற்றும் நோன்பு போன்ற அவர்களின் பாரம்பரியங்களை கண்டிப்பாக பின்பற்றுகிறார்கள். மற்றவர்களுக்கு மிகவும் தாராளமாக உதவி செய்யும் குணம் கொண்டவர்களாகவும் இருந்து வருகின்றனர். 

முஸ்லீம் மக்கள் தொகை ஜப்பானில் அதிகரித்து வருவதற்கு இரண்டாவது பெரிய காரணம் அந்நாட்டில் வளர்ந்து வரும் பொருளாதாரம் ஆகும். ஈரான், பாகிஸ்தான், இந்தோனேசியா, பங்களாதேஷ் போன்ற முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஜப்பானுக்கு தொழிலாளர்களாக வந்தனர். 

பொருளாதாரம் பின்தங்கி இருந்த  காலத்தில் பெரும் வளர்ச்சியைக் கண்ட கட்டுமானத் தொழிலில் அவர்களில் பலர் பணிபுரிந்தனர். பல நாடுகளில் இருந்து வந்த முஸ்லீம்கள், தங்களுடைய இஸ்லாமிய நெறிமுறைகளை உறுதியாக கடைப்பிடித்து, ஜப்பான் மக்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தனர். 

இதனால் ஜப்பானியர்கள் மத்தியில் இஸ்லாம் கவரப்பட்டு, அந்நாட்டில் முஸ்லிம்களின் எண்ணிக்கையை அதிகரித்தது. அத்துடன்  மட்டுமல்லாமல் ஜப்பான் முழுவதும் மசூதிகளின் எண்ணிக்கையையும் அதிகரித்தது. 

இளம் முஸ்லிம் மக்கள் தொகை:

ஜப்பானில், நிரந்தர முஸ்லீம் குடியிருப்புகளில் பாதி பேர் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால், எதிர்காலத்தில் இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறை இளம் முஸ்லீம்கள் கொண்ட நாடாக ஜப்பான்  இருக்கும். புதிய முஸ்லீம்கள் பல்வேறு கலாச்சார மற்றும் சமூக பின்னணியில் வெளிப்படுவார்கள் என்றும், பாரம்பரிய ஜப்பானிய சமுதாயத்தை முஸ்லீம் சமூகத்துடன் இணைக்கும் திறவுகோலாக இருப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

மசூதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு:

முஸ்லீம்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஜப்பானில் அதிகமான மசூதிகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த மசூதிகளுக்கு முஸ்லீம் அல்லாத ஜப்பானிய சுற்றுப்பயணிகள் அடிக்கடி சென்று பார்த்து வருகின்றனர். இதன்மூலம் சமூகத்தில் புதிய நம்பிக்கை சரியாக வெளிப்பட்டு வருகிறது. 

உலகம் முழுவதும் இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வுகள் பரப்பட்டு வரும் நிலையில், இஸ்லாம் குறித்து அறிந்துகொள்ளும் ஆர்வம் ஜப்பான் மக்கள் மத்தியில் எழுந்தது. இஸ்லாம் வன்முறையை தூண்டுகிறதா, அல்லது அமைதி, சகோதரத்துவத்தை போதிக்கிறதா என்பது குறித்து அறிய ஜப்பானியர்கள் ஆவல் கொண்டனர். 

எனவே மசூதிகள் வளாகத்தில் முஸ்லீம் அல்லாத ஜப்பானிய பார்வையாளர்களின் எண்ணிக்கையில் அதிகரித்தது. இஸ்லாத்தைப் பற்றி மேலும் அறிய ஜப்பானிய மக்களிடம் உள்ள ஆர்வத்தையே இது காட்டுகிறது.

மேலும், இஸ்லாம் குறித்து ஜப்பானில் முந்தைய காலங்களில் இல்லாத ஒரு புதிய கண்ணோட்டம் மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.

இஸ்லாமிய சுற்றுலாப் பயணிகள்:

இந்தோனேசியா மற்றும் மலேசியா போன்ற சில முஸ்லீம் நாடுகளின் பயணிகளுக்கு ஜப்பான் செல்ல விசா தேவையில்லை. குறைந்த கட்டண விமானப் பயணத்தின் மூலம்,  முஸ்லீம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஜப்பானில் சுற்றுப்பயணம் சென்று ஜப்பானின் அழகை ரசித்தது வருகின்றனர்.  

ஜப்பானுக்கு வரும் முஸ்லிம் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக , முஸ்லீம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்குவதற்காக, பல உணவகங்கள் தங்களிடம் ஹலால் உணவு வகைகளை உறுதிப்படுத்துக் கொண்டு முஸ்லிம் பயணிகளை கவர்ந்து வருகின்றன. அத்துடன் முஸ்லிம்கள் மீது மிகவும் நடுநிலை மற்றும் வரவேற்கும் மனப்பான்மையைப் பேணுவதில் ஒரு சிறந்த சேவையை ஜப்பான் வணிக நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. 

ஜப்பான் முஸ்லிம்களின் ஈமான்:

ஜப்பானில்  முஸ்லிம்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பௌத்தம் உள்ளிட்ட பிற மதங்களில் மாறும் எண்ணிக்கை முஸ்லிம்கள் மத்தியில் குறைவாகவே  உள்ளது. பொதுவாக, முஸ்லீம் பெற்றோருக்கு பிறந்த முஸ்லிம்கள், இஸ்லாத்தை உறுதியாக கடைபிடித்து வருகிறார்கள்.  

மசூதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால், அங்கு பல சமூக  சேவைகள் மக்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன.

இதன்மூலம் முஸ்லீம் அல்லாத ஜப்பானியர்களுக்கு இஸ்லாம் குறித்து அறிந்து கொள்வதற்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.  

முஸ்லிம்களின் ஈமான், ஒழக்க நெறிமுறைகள், சகோதரத்துவம், பொருளாதார கொள்கைகள், அனைத்து மக்களிடம் அன்பை வெளிப்படுத்துவது, தீவிரவாதத்திற்கு எதிரான முழக்கம் உள்ளிட்ட அம்சங்கள் ஜப்பான் மக்களை வெகுவாக கவர்ந்து வருவதால், அந்நாட்டில், இஸ்லாம் வேகமாக வளர்ச்சி அடையவதற்கு முக்கிய காரணங்களாக இருப்பதாக சமூக ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

மண்ணின் மைந்தர்கள்....!

இந்திய முஸ்லிம்கள் இந்த மண்ணின் மைந்தர்கள்.....!    

இந்திய முஸ்லிம்களுக்கு  எதிராக குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் என்.ஆர்.சி. உள்ளிட்ட திட்டங்களை பாஜக கொண்டு வந்து  ஒருவித அச்சத்தில் வாழக்கூடிய  சூழ்நிலைகளில் முஸ்லிம்களை தள்ளியுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல போராட்டங்கள் நடைபெற்றன. இந்த போராட்டங்களில் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு பாஜகவிற்கு தங்களுடைய எதிர்ப்பை கடுமையாக வெளிப்படுத்தினர். ஆனால் இந்த விவகாரங்களுக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை.

இந்திய முஸ்லிம்கள் யார்.?                                                                                                                                                                                                                   


இந்தியாவில் வாழும் அனைத்து முஸ்லீம்களும்  அரேபியா, மத்திய ஆசியா அல்லது பெர்சியாவில் இருந்து வந்தவர்கள் இல்லை. இந்துக்கள், பௌத்தர்கள், ஜைனர்கள், சீக்கியர்கள், தலித்துகள், கிறிஸ்தவர்கள், அல்லது சனாதன தர்மிகள் என அனைவரும் தங்களை இந்தியர்கள் எனக் கூறிக்கொள்வது போல, முஸ்லீம்களும் இந்த நாட்டின் பூர்வீகக் குடிமக்கள். அவர்கள் திராவிடத்திற்கு முந்தைய பழங்குடியினர்.  தற்போதைய பழங்குடியினர் அல்லது ஆதிவாசிகளின் முன்னோர்கள். 

ஆரியர்கள் வருகை:

ஆரியர்கள் சுமார் கி.மு. 2000-1500க்கு இடையே இந்தியாவிற்கு வந்தனர். சமஸ்கிருதம் பேசிய அவர்கள், வேதங்களை  தங்கள் பழமையான புத்தகமாக அடையாளப்படுத்தினார்கள்.  அவை வாய்வழி மரபாகத் தொடங்கி இந்திய துணைக்கண்டத்தின் பண்டைய இந்தோ-ஆரிய கலாச்சாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறது. 

ஆரியர்கள் தங்களது கருத்துகளை ஏற்றுக்கொள்ளும்படி இந்திய பூர்வீக மக்களை கட்டாயப்படுத்தினர். இதனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அதிகார உயரடுக்கால் ஊக்குவிக்கப்பட்ட போலி மதக் கதையின் கீழ் இந்திய பூர்வீகவாசிகள் ஏற்றத்தாழ்வுகளை அனுபவித்தனர்.

அதிகார மேட்டுக்குடிகளால் தொடரப்பட்ட கதைகளை புத்தர் உள்ளிட்டோர் எதிர்த்தனர். இதனால் பௌத்தம் தோன்றி பிராமணியத்திற்கு எதிர்வினையாக வளர்ந்தது.  எனினும் மக்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வுகள் குறையவில்லை. பழையப்படி அப்படியே தொடர்ந்தது.

இஸ்லாம் அறிமுகம்:

இந்த நேரத்தில்தான், அரேபிய வணிகர்களின் வருகை, விளிம்புநிலை பழங்குடியின மக்கள் மத்தியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அரேபிய வணிகர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட சமத்துவம், சகோதரத்துவம், ஓர் இறைக்கொள்கை, உள்ளிட்ட அம்சங்களை கொண்ட இஸ்லாம் பழங்குடியின மக்களை வெகுவாக கவர்ந்தது.  அத்துடன் அரேபிய முஸ்லிம்களின் சகோதரத்துவ பண்புகள், அவர்களின் அன்பு செலுத்தும் குணம் இந்திய பழங்குடியின மக்களை ஈர்த்தது. 

இதனால் ஏற்றத்தாழ்வுகள் குறைந்து, சகோதரத்துவம் தழைத்தால், நாளாடையில் அவர்களின் மதமாக  இஸ்லாம் மாறியது. இந்தோ-பாக்-பங்களாதேஷ் துணைக்கண்டத்தில் உள்ள பெரும்பாலான முஸ்லிம்கள் ஆரம்பகால புரட்சியாளர்கள் மற்றும் தொலைநோக்கு பார்வையாளர்களின் வழித்தோன்றல்கள் என்பது வரலாறு. 

சமத்துவத்திற்கான ஆரம்பகால இந்தியர்களின்  வேட்கை, அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பின்னரும் தொடர்ந்தது. 

எனினும் சிலர், புதிய உயர்சாதியினரின் மதத்திற்கு மாறினர். மற்றவர்கள் அரசியல் தேவைக்காக தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டனர்.

மேலும் முந்தைய முஸ்லீம் இந்தியர்களின் சந்ததியினர் தங்கள் முன்னோர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற முடியவில்லை என்பதால்,  அவர்களில் சிலர் பழையபடி தங்கள் நிலைகளுக்கு புத்துயிர் அளித்தனர். இதனால் பல்வேறு நெருக்கடிகளை அவர்கள் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. 

முஸ்லிம்கள் மண்ணின் மைந்தர்கள்:

அத்துடன் தொடர் நெருக்கடிகளால், முஸ்லிம்கள் ஓரங்கட்டப்பட்டதுடன், பிறப்பின் அடிப்படையிலான சமத்துவமின்மை உருவானது. இதனால் தவறாகப் பயன்படுத்திய ஒரு சித்தாந்தத்திற்கு எதிரான தேடல் மக்கள் மத்தியில் மீண்டும் ஏற்பட்டது. இதன் காரணமாக நாட்டின் பூர்வீகக் குடிமக்கள் இஸ்லாத்தின்பால் கவரப்பட்டு, அதனை தங்களுடைய வாழ்வியல் நெறியாக மாற்றிக் கொண்டனர்.  இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட அவர்கள் கவுரவமான, மரியாதையான, சகோதரத்துவமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். 

நீண்ட காலமாக ஒதுக்கப்பட்ட நாட்டின் பூர்வீகக் குடிமக்கள், கண்ணியமான வாழ்க்கையை தேடி அதற்கு இஸ்லாம் ஒரு நல்ல தீர்வு என்று கருதி, அந்த மார்க்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதன்மூலம், இந்தியாவில் வாழும் அனைத்து இஸ்லாமியர்களும் இந்த மண்ணின் மைந்தர்கள்  என்று உறுதியாக கூறலாம். 

அதேநேரத்தில், தற்போது இந்தியாவில் வாழும் முஸ்லீம்கள் அனைவரும் தங்கள் முன்னோர்கள் எடுத்த துணிச்சலான முடிவை பெருமையுடன்  எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். பல நெருக்கடிக்கு மத்தியிலும் கண்ணியமான வாழ்க்கையை வாழ்ந்து வரும் இந்திய முஸ்லிம்கள், தங்கள் முன்னோர்கள் சரியான முடிவை எடுத்தனர் என்றும், அவர்களின் புரட்சிகர மற்றும் துணிச்சலான செயலால் தற்போது இம்மை, மறுமை ஆகிய இரண்டடிற்கான வாழ்க்கையை தாங்கள் பெற்று இருப்பதை எண்ணி முன்னோர்களின் முடிவை பாராட்டி எப்போதும் பெருமை கொள்ள வேண்டும். 

உதவிக்கரம் நீட்ட முன்வர வேண்டும்:

இந்தியர்களில் 68 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்ட சாதியினர் (எஸ்சி) அல்லது பழங்குடியினர் (எஸ்டி) மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்  என அடையாளப்படுத்துகின்றனர். ஆனால் இவர்களின் நிலைமை இன்னும் உயர்வு அடையவில்லை. கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இவர்கள் இன்னும் பின்தங்கியே உள்ளனர். முஸ்லிம்களின் நிலைமையும் ஒருவகையில் இதுபோன்றுதான் உள்ளது. 

இந்நிலையில், துணிச்சலுடன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு தங்களின் வாழ்வை கண்ணியமிக்க வாழ்வாக மாற்றிய தங்களின் மூதாதையர்களுக்கு மரியாதை செலுத்த இந்திய முஸ்லிம்கள் முன்வர வேண்டும். அதற்கு ஒரு சிறந்த வழி, இன்னும் வாழ்க்கையில் எந்தவித உயர்வை பெறாமல் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கையை பல்வேறு வகையிலும் மேம்படுத்த முஸ்லிம்கள் முன்வர வேண்டும்.  இதன்மூலம் மட்டுமே இஸ்லாத்தைத் தழுவிய தங்கள் முன்னோர்களின் முடிவால் தாங்கள் பெருமை கொள்கிறோம் என்று இந்திய முஸ்லிம்கள் உறுதியாக கூற முடியும். 

- நன்றி: முஸ்லிம் மிரர்

- தமிழில் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

நல்ல சமுதாயம்.....!


நல்ல சமுதாயத்தை உருவாக்க சிறந்த வழி என்ன....?

உலகம் முழுவதும் வேகமாக மாறிவரும் நவீன சூழ்நிலைகளின் தாக்கம் தற்போது அனைத்து தரப்பு மக்களையும் பாதித்து வருகிறது. இந்த பாதிப்புக்கு இஸ்லாமிய சமூகமும் விதிவிலக்காக இருக்கவில்லை. சமூக ஊடகங்களின் மீதான ஆர்வம் முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

முகநூல், டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களை தவிர்த்துவிட்டு, தற்போதைய நவீன வேகமான உலகில் யாரும் வாழ முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. சமூக ஊடங்கள் பல்வேறு வகைகளில்இளைஞர்கள் உட்பட அனைத்துத் தரப்பு மக்களுக்கும்  பலன் அளிக்கும் வகையில் இருந்தாலும், அவற்றின் மூலம் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படுவதையும் மறுக்க முடியாது. 

உளவியல் பாதிப்புகள்:

சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலியான தகவல்களை உண்மை என நம்பும்  இளைஞர்கள், பின்னர் உளவியல் ரீதியாக பாதிப்புக்கு ஆளாகிறார்கள். அண்மை காலமாக போலியாக பரப்பப்படும் தகவல்கள் காரணமாக குடும்பங்களில் அமைதி சீர்குலைகிறது. பல இளைஞர்கள் விபரீதமான முடிவுகளை எடுத்து தங்களது உயிர்களை மாய்த்துக் கொள்கிறார்கள்.  இத்தகைய போக்கு முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் அவ்வளவாக இல்லை என்றாலும், அங்காங்கே ஒருசில நிகழ்வுகள் நடந்துக் கொண்டே இருக்கின்றன. 

குடும்பங்களை நேசிக்க வேண்டும்:

தற்போது உலகம் முழுவதும் ராக்கெட் வேகத்தில் மக்கள் பயணித்துக் கொண்டு இருக்கிறார்கள். வசதியான வாழ்க்கைக்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும்,   குடும்பங்களை மறந்து அதிக நேரத்தை பணம் ஈட்டுவதில் செலவழித்துக் கொண்டு இருக்கிறார்கள்.  இதனால் வருவாய் கிடைத்தாலும் மனதில் அமைதி இருப்பது இல்லை. எப்போது ஒருவித படபடப்பு ஏற்பட்டு பதட்டம் உருவாகிறது.  குடும்ப உறுப்பினர்கள் உட்பட யார் மீதும் நம்பிக்கை கொள்ள மறுப்பது உள்ளிட்ட பழக்கங்களுக்கு ஆளாக வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு வருகிறார்கள். இத்தகைய நிலை, இஸ்லாமியர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

வேகமான உலகத்தில் குடும்பங்களையும் குழந்தைகளையும் நேசிக்க தவறியதால், அதன் பலனை சமூகம் இன்று அனுபவித்து வருகிறது. சிறந்த சமுதாயத்தை உருவாக்குவதற்கான முதல் படி, ஒவ்வொருவரும் தங்கள் குடும்பங்களை நேசிக்க வேண்டும் என உளவியல் நிபுணர்கள் ஆலோசனை தருகின்றனர். குழந்தைகளை நேசித்தல் மற்றும் அவர்களின் சுய மரியாதைக்கு மதிப்பளித்தல் உள்ளிட்ட பண்புகள் மூலம் சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பது உளவியல் நிபுணர்களின் கருத்து. 

உறவுகள் மூலம் மட்டுமே மகிழ்ச்சி கிடைக்கும்:

அமைதியான, மகிழ்ச்சியான வாழ்க்கையை விட சிறந்த வாழ்க்கை இருக்க முடியுமா என கேள்வி எழுப்பும் உளவியல் நிபுணர்கள், அதற்காக குடும்ப சொந்தங்களுடன் சிறிது நேரத்தை செலவழித்து, அவர்களின் இன்ப, துன்பங்களில் பங்கெடுத்துக் கொள்வது மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்றும் ஆலோசனைகளை தருகிறார்கள். 

உறவுகளை உதறி தள்ளிவிடாமல், அவர்களை நேசிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்றும், சின்ன சின்ன செயல்கள் மூலம் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டும் என்றும் யோசனைகள் தரப்படுகின்றன. 

இஸ்லாமிய வாழ்க்கை நெறி:

உற்றார், உறவினர்கள், அண்டை வீட்டார் என அனைத்து தரப்பு உறவுகளையும் சரியாக பேண வேண்டும் என இஸ்லாமிய மார்க்கம் அழகாக சொல்லி தருகிறது. ஏழ்மை நிலையில் உள்ள உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரை கண்டுகொள்ளாமல் இருப்பதை கைவிட்டு, அவர்களை நேசிப்பதுடன், அவர்கள் கேட்காமலேயே பல்வேறு நிலைகளிலும் அவர்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்று கூறும் இஸ்லாமிய மார்க்க நெறி,  உறவு முறைகளை சரியாக கடைப்பிடிக்காமல், உதறி தள்விவிட்டு  இருக்கும் ஒருவர் உண்மையான முஸ்லிமாக இருக்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கிறது. 

வேகமான உலகத்தின் நவீன காலத்திலும், தாய், தந்தை, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை உள்ளிட்ட உறவுகளை நாம் நேசிக்க வேண்டும். அவர்களின் நலனில் எப்போதும் அக்கறை செலுத்த வேண்டும். அவர்களிடம் கலந்து ஆலோசனை செய்ய வேண்டும். பெரியவர்களின் யோசனைகளை காது கொடுத்து கேட்க வேண்டும். இதன்மூலம் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்து, குழந்தைகளிடமும் சரியாக நாம் மார்க்கத்தை கொண்டு செல்ல முடியும். அனைவரையும் நேசிக்கும் பண்பை அவர்களுக்கு கற்றுத்தர முடியும். 

உறவுகளை சிதைக்க நமது குழந்தைகளை எப்போதும் நாம் அனுமதிக்கக் கூடாது. தாயிடம் எப்படி நடந்துக் கொள்வது, உறவினர்களை எப்படி நேசிப்பது உள்ளிட்ட அழகிய வாழ்க்கை நெறிமுறைகளை நம்முடைய குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் இருந்தே நாம் சொல்லித்தர வேண்டும். அதற்காக நேரத்தை ஒதுக்கி உண்மையாக செயல்பட வேண்டும். 

அனைத்து தரப்பு மக்களையும் நேசித்தல்:

பெற்றோர்கள் அல்லது பெரியவர்களின் ஆலோசனைகளை பல நேரங்களில் இளைஞர்கள் கேட்க மறுக்கிறார்கள். தங்களுடைய பிரச்சினைகளை பெற்றோர்களிடம் எடுத்துக் கூற தயங்குகிறார்கள். அல்லது கலந்து ஆலோசிக்க மறுக்கிறார்கள். நாள்தோறும் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து வீட்டில் உள்ள மற்ற உறுப்பினர்களிடம் கூறி அதற்கு எத்தகையை தீர்வு காண முடியும் என கேட்க இன்றைய இளம் தலைமுறை தயங்குகிறது. இதனால், அவர்களின் பிரச்சினைகள் மேலும் அதிகரித்து, மன நிம்மதி பறிபோகிறது. 

தவறான கண்ணோட்டம் அல்லது சிந்தனை காரணமாக அனைத்து தரப்பு மக்களையும் நேசிக்க இன்றைய தலைமுறை மறுக்கிறது. பிற மக்களை சந்தேக பார்வையுடன் பார்ப்பதால், உறவுகள் சிதைந்து போகின்றன  என்பதை இளைஞர்கள் உணர்ந்துக் கொள்வதில்லை. இதனால் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும், பாதிப்புகள் ஏற்படுகின்றன. உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, மனநோய், உடல் பலவீனம் நரம்பு தளர்ச்சி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதுடன்,  சமூக பிரச்சனைகளும் உருவாகின்றன.  

பரபரப்பான வேகமான உலகில் இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு இளைஞர்கள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. கலகலப்பாக, மகிழ்ச்சியாக இருக்க பழகிக் கொள்ளாமல் எப்போதும் மன அழுத்தத்துடன் இருப்பதே  இதற்கு முக்கிய காரணம் என்பது மருத்துவர்களின் கருத்ததாக இருந்து வருகிறது. 

பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் ஓர் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அது, குடும்பத்தை நேசித்து, உறவு முறைகளை நல்ல முறையில் பேணுவதன் மூலம் மட்டுமே வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் அதன்மூலம் மட்டுமே சிறந்த சமூதாயத்தை உருவாக்க முடியும் என்பதுதான். குழந்தைகளை நேசித்து, அவர்களின் சுயமரியாதைக்கு மதிப்பு அளித்தால், அந்த பண்புகள் குழந்தைகளிடம் வளரும். அதன்மூலம், அழகான, அமைதியான அனைவரையும் நேசிக்கும் நல்ல சமுதாயம் உருவாகும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

உயர்கல்வி - ஆய்வில் தகவல்...!


உயர்கல்வியில் சேரும் முஸ்லிம் மாணவர்களின் 

எண்ணிக்கை தொடர்ந்து சரிவு....!

கடந்த 2006-ஆம் ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்ட சச்சார் கமிட்டி அறிக்கையில், கல்வியில் முஸ்லிம்களின் நிலை மிகவும் மோசகமாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் மிகவும் பின்தங்கிய சமூகங்களுடன் ஒப்பிடும்போது முஸ்லிம்கள், கல்வி, வேலைவாய்ப்புகளில் மிகவும் பின்தங்கியே உள்ளனர். ஆரம்பத்தில் கல்வி, வேலைவாய்ப்புகளை பெறுவதில் முஸ்லிம்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும்  சற்று அதிகமாகவே இருந்தனர். ஆனால் கடந்த 2017-18-ஆம் ஆண்டு முதல்  கல்வியில், தாழ்த்தப்பட்ட மக்கள் முஸ்லீம்களை முந்தி விட்டனர். இதேபோன்று  கடந்த 2020-21-ஆம் ஆண்டில் இருந்து ஆதிவாசிகள் முஸ்லிம்களை விட நல்ல கல்வி பெற்று வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் கல்வி, வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்கள் ஓரங்கட்டப்படுவது உறுதியாகிறது. 

ஆய்வில் அதிர்ச்சி தகவல்:

கடந்த 2019-20-ஆம் ஆண்டில் இருந்து உயர்கல்வியில் சேரும் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதாக, 2020-21-ஆம் ஆண்டுக்கான உயர்கல்வி குறித்த சமீபத்தில் வெளியிடப்பட்ட அகில இந்திய கணக்கெடுப்பு கூறுகிறது. இந்த அளவுக்கு முழுமையான சரிவு, சமீப காலங்களில் இந்தியாவில் மற்ற எந்த சமுதாய மக்களுக்கும் ஏற்பட்டதில்லை. 

உயர்கல்வியில் சேரும் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை நாட்டில் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் மிக குறைவாக உள்ளது. அங்கு உயர்கல்வியில் சேரும் முஸ்லிம் மாணவர்களின் சரிவு விகிதம் 36 சதவீதமாக உ்ளளது. அதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர், 26 சதவீதம், மகாராஷ்டிரா 8 புள்ளி 5 சதவீதம் தமிழ்நாடு 8 புள்ளி 1 சதவீதம், குஜராத் 6 புள்ளி 1 சதவீதம், பீகார் 5. புள்ளி 7 சதவீதம் மற்றும் கர்நாடகா 3 புள்ளி 7 சதவீதம் என்ற அளவுக்கு உள்ளது. 

முஸ்லீம் மக்கள்தொகையில் அதிகமாக கொண்ட மாநிலங்கள் வீழ்ச்சியின் அதிக பங்கைக் கொண்டாலும், சிறிய மாநிலங்களிலும் இதேபோன்ற நிலைமை நீடித்து வருகிறது.  உதாரணமாக, கடந்த 2019-20-2020-21-க்கு இடையில், டெல்லியில் முஸ்லீம் மாணவர்களில் 20 சதவீதம் பேர் உயர்கல்வியில் சேரவில்லை. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும் சுமார் 36 சதவீத முஸ்லிம் மாணவர்கள் மேற்படிப்புகளில் சேரவில்லை.

உயர்கல்வியில் முஸ்லிம்களின் நிலை மோசம்:

உயர்கல்வி பெறும் தாழ்த்தப்பட்ட மற்றும் ஆதிவாசி மக்களை விட முஸ்லிம்கள் மிகவும் மோசமாக பின்தங்கியுள்ளனர். ஆய்வுகளில் கிடைத்த புள்ளி விவரங்களின்படி, ஆதிவாசிகளில் 21 சதவீத பேரும், தாழ்த்தப்பட்ட மக்களில்  26 சதவீத பேரும், இந்து ஓபிசிக்களில் 34 சதவீத பேரும், உயர்சாதி இந்துக்களில் 45 சதவீத பேரும் உயர்கல்வி  நிறுவனங்களில் படிக்கின்றனர். ஆனால், முஸ்லிம்களில் வெறும் 19 சதவீதம் பேர் மட்டுமே தற்போது உயர்கல்வி நிறுவனங்களில் படித்து வருகின்றனர். 

கடந்த 2020-21-ஆம் ஆண்டில் இருந்து தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் டெல்லியைத் தவிர, மற்ற எந்த மாநிலத்திலும் உயர்கல்வி பெறுவதில் முஸ்லிம்கள் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை.  ராஜஸ்தான், அசாம், குஜராத், மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் போன்ற பல மாநிலங்களில் முஸ்லிம்களை விட தாழ்த்தப்பட்ட மற்றும் ஆதிவாசி மாணவர்கள் அதிகளவு உயர்கல்வி பெற்று வருகிறார்கள். 

உத்தரப் பிரதேச மாநிலத்தின் மக்கள் தொகையில் 20 சதவீதத்தைக் கொண்ட முஸ்லிம்கள், மொத்த உயர்கல்வி சேர்க்கையில் வெறும்  4 புள்ளி 5 சதவீதம் அளவுக்கு மட்டுமே இருந்து வருகின்றனர். இதேபோன்று படிப்பை பாதியில் நிறுத்துவதும் அம்மாநிலத்தில் அதிகரித்து வருகிறது. 

கேரளா, தமிழ்நாடு சிறப்பு:

உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல வட மாநிலங்களில் உயர்கல்வியில் சேரும் முஸ்லீம்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வரும் அதேநேரத்தில்,  கேரளா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் உயர்கல்வி பெறும் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கேரளாவில் தற்போது உயர்கல்வி படிக்கும் முஸ்லிம் இளைஞர்களின் எண்ணிக்கை 43 சதவீதமாக உள்ளது. அம்மாநிலத்தில் கல்வி குறித்து முஸ்லிம்கள் இடையே தொடர்ந்து செய்யப்பட்ட விழிப்புணர்வு பிரச்சாரங்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எடுத்த தொடர் நடவடிக்கைகளே கேரள முஸ்லிம் மாணவர்கள் அதிகளவு உயர்கல்வி பெற முக்கிய காரணமாக அமைந்துள்ளது. 

கேரளாவில் முஸ்லிம்களுக்கு அரசு வேலைகளில் 10 சதவீத இடஒதுக்கீடும், கல்வி நிறுவனங்களில் 12 சதவீத இடஒதுக்கீடும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த இடஒதுக்கீடு முஸ்லிம் மாணவர்கள்  உயர்கல்வியில் சேர மிகவும் பலன் அளித்து வருகிறது. 

வேலையின்மை விகிதம் அதிகரிப்பு:

நாட்டில் உயர்கல்வியில் சேரும் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதுடன், முஸ்லிம்கள் மத்தியில் வேலையின்மை விகிதமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2018-19-ஆம் ஆண்டில் 1 புள்ளி 6 சதவீதமாக இருந்த முஸ்லிம்களின் வேலையின்மை சதவீதம், 2019-20-ஆம் ஆண்டில் 13 புள்ளி 2 சதவீதமாக உயர்ந்துள்ளது. பல்வேறு அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்புக்கான நேர்காணலுக்கு அழைக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

முஸ்லிம் குடும்பங்களின் பலவீனமான பொருளாதார நிலை காரணமாக வாழ்வாதாரத்திற்காக உடனடியாக ஏதாவது ஒரு வேலையில் சேர வேண்டிய நிலை உள்ளது. எனவே உயர்படிப்புக்கு போதுமான நிதி இல்லாத காரணத்தால், உயர்கல்வியில் சேர்ந்ததாலும் பல முஸ்லீம் இளைஞர்கள் கல்வியை பாதியில் நிறுத்துவது தொடர்கதையாக உள்ளது. 

பாஜக அரசுகள் நெருக்கடி:

இந்தியாவில் பாஜக ஆட்சியில் முஸ்லிம்களுக்கான ஆதரவு வெகுவாகக் குறைந்துள்ளது. உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. கர்நாடகாவில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 4 சதவீத ஒதுக்கீட்டை சமீபத்தில் பாஜக அரசால் ரத்து செய்யப்பட்டது. 2022-23 ஆண்டு முதல் சிறுபான்மை மாணவர்களுக்கான உயர்கல்வியைத் தொடர்வதற்காக வழங்கப்படும் மௌலானா ஆசாத் பெல்லோஷிப்பை சிறுபான்மை விவகார அமைச்சகம் நிறுத்தியுள்ளது.

ஒரே தீர்வு:

உயர்கல்வியில் முஸ்லீம் மாணவர்களின் சேர்க்கை குறைந்து வரும் போக்கை தடுத்து நிறுத்த ஒரே தீர்வு, இந்தியாவில் முஸ்லிம்களுக்கு சாதகமான பாகுபாடு கொள்கையை அரசு உருவாக்க வேண்டும். சச்சார் கமிட்டி அறிக்கை மற்றும் மிஸ்ரா அறிக்கை ஆகியவை முஸ்லிம்களுக்கு ஆதரவாக ஒரு நேர்மறையான பாகுபாடு கொள்கையை தொடங்க பரிந்துரை செய்துள்ளன. இதை சில தென் மாநிலங்கள் வெற்றிகரமாக செய்தன. ஆனால் அதிக முஸ்லீம் மக்கள் தொகை கொண்ட உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் அதை கண்டுக் கொள்ளவில்லை. எனவே இந்திய முஸ்லிம்களின் கல்வி நிலையில் ஏற்பட்டுள்ள தேக்கத்தை களைய ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும். அதன்மூலம் மட்டுமே, உண்மையான சமூக நீதி நாட்டில் மலரும். 

-  எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

கல்வி.....!


மார்க்கக் கல்வியும் உலகக் கல்வியும்.....!

உலகில் வாழும் முஸ்லிம்களில் பலர் கல்வியை மார்க்கக் கல்வி என்றும் உலகக் கல்வி என்றும் பிரித்து பார்க்கும் நிலை தற்போது இருந்து வருகிறது. மார்க்கக் கல்வியை கற்கும் இஸ்லாமிய மாணவர்கள், சமுதாயத்தில் பெரும் அளவுக்கு கண்டுக் கொள்ளப்படுவதில்லை. மதராஸாக்களின் ஆசிரியர்கள், நிர்வாகிகள், மிகக் குறைந்த வருமானத்துடன் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களின் நிலையை உயர்த்த எந்தவித முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதில்லை.  பல நேரங்களில் மார்க்கக் கல்வி பயிலும் இஸ்லாமிய மாணவர்கள்அவமானப்படுத்தப்படுகிறார்கள்.

கல்வியை பிரித்து பார்ப்பது தவறு:

இஸ்லாமிய குடும்பங்களில் பிறந்தவர்கள், கல்வியை மார்க்கக் கல்வி என்றும், உலகக் கல்வி என்றும் பிரித்துப் பார்க்கக் கூடாது. அத்தகைய கண்ணோட்டத்துடன் நோக்குவது தவறு. அழகான வாழ்வியல் போதனைகளுடன் இம்மை, மறுமைக்கான கல்வியை மதராஸாக்களில் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் தற்போதைய நவீன  காலத்திற்கு ஏற்ப, மதராஸாக்களிலும், கணினி படிப்பு, உள்ளிட்ட உலகப் படிப்புகள் சொல்லித் தரப்படுவதுடன், தொழில் கல்வியும் கற்று தரப்படுகிறது. 

இதன்மூலம், மதராஸா மாணவர்கள், அழகான இஸ்லாமிய கல்வியை கற்பதுடன், உலகத்தில் மாறி வரும் சூழ்நிலைக்கு எற்ப, இஸ்லாமிய வாழ்வியலை, மிகச் சிறப்பாக பேண வாய்ப்பு உருவாக்கப்படுகிறது. 

இஸ்லாமிய மார்க்கம், மார்க்கக் கல்வி, உலகக் கல்வி என்று வேறுபடுத்திப் பார்க்கவில்லை. ஏக இறைவன் அருளிய திருக்குர்ஆனில், “இறைவா எங்களை இந்த உலகிலும் நல்வழிப்படுத்துவாயாக,  மறு உலகிலும் நல்வழிப்படுத்துவாயாக. மேலும் நரக வேதனையில் இருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக (சூரா 2:201) என்று மிக அழகாக கூறப்படுகிறது. 

இதன்மூலம், இம்மை, மறுமை ஆகிய இரண்டிலும், சிறப்பான வாழ்வை  முஸ்லிம்கள் பெற வேண்டும் என இறைவன் விரும்புகிறான் என்பது உறுதியாக தெரிகிறது. இதற்காக நாம் கல்வியை சிறப்பாக பயன்படுத்துக் கொள்ள வேண்டும் என்றும், பிரித்துப் பார்ப்பது தவறு என்றும் இஸ்லாமிய அறிஞர்கள் ஆலோசனைகளை வழங்குகிறார்கள். 

முஸ்லிம்களுக்கு எச்சரிக்கை:

அதேசமயம் உலக வாழ்க்கையிலேயே மூழ்கி இருந்து விடக் கூடாது என்றும்,பொருளாசையால்  மறுமையை மறப்பது இறைவனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இம்மைக்கு முன்னுரிமை அளிப்பது குறித்து  இஸ்லாம் மார்க்கம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், அதன் மோசமான முடிவை, அதாவது நரகத்தில் தள்ளப்படும் செய்தியையும் தந்து அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

எனவே, முஸ்லிம்கள் விரைவாகப் பெறக்கூடிய நம்மைகளில் மட்டும் கவனம் செலுத்தக் கூடாது. கல்வி விவகாரத்திலும், மார்க்கக் கல்வியை புறக்கணித்துவிட்டு, நவீன உலகக் கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவது சரியல்ல. 

உலகின் அனைத்து சுகங்களும் இன்பங்களும் அழகாக தெரிந்தாலும்,  உலகம் அழியக்கூடியது என்பதை இஸ்லாமியர்கள் மறந்துவிடக் கூடாது. நித்தியமான மறுமை வாழ்விற்காக .சிறப்பாக அடித்தளத்தை உருவாக்க முஸ்லிம்கள் முன்வர வேண்டும்.  அதற்காக, இஸ்லாமிய குடும்பங்களில் உலகக் கல்விக்கு தரும் முக்கியத்துவத்தைப் போன்றே, மார்க்கக் கல்விக்கும் தர வேண்டும்.  மதராஸாக்களை ஊக்கப்படுத்த வேண்டும். அதன் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். 

மார்க்கக் கல்வியின் முக்கியத்துவம்:

தனித்துவமான ஒழுக்கப் பண்புகளுடன் வாழ இஸ்லாமிய மார்க்கக் கல்வி முஸ்லிம்களுக்கு மிகவும் அவசியம். உலகக் கல்வி ஒழுக்க நெறிகளை போதித்தாலும், இஸ்லாமிய மார்க்கக் கல்வியை போன்று மிக ஆழமாக ஒழுக்கப் போதனைகளை அங்கு சொல்லித் தரப்படுவதில்லை. குடும்ப வாழ்வியல், சமுதாயத்தில் எப்படி ஒழுக்கப் பண்புகளுடன் வாழ வேண்டும், அனைவரையும் சகோரத்துவத்துடன் எப்படி நேசிக்க வேண்டும், பெண்களை எப்படி மதிக்க வேண்டும் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் இஸ்லாமிய மார்க்கக் கல்வியில், முஸ்லிம்களுக்கு மிக அழகாக சொல்லித் தரப்படுகிறது. 

எனவே, இஸ்லாமிய குடும்பங்களில் உலகக் கல்வியை விட மார்க்கக் கல்விக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து, நல்ல பண்புள்ள இஸ்லாமிய சமுதாயத்தை உருவாக்க வேண்டும். இதன்மூலம், இம்மையில், அமைதியும், நிம்மதியும், கிடைப்பதுடன், மறுமை குறித்த அச்சம் முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் எப்போதும் இருக்கும். அதன்மூலம், ஒழுக்க நெறிகளில் அவர்கள் உறுதியுடன் இருப்பார்கள். 

கல்வி விவகாரத்தில் இனியும், கவனக் குறைவாக இருந்து விடாமல், இஸ்லாமிய சமுதாயம், சிறப்பான பணிகளை செய்ய முன்வர வேண்டும். இதன்மூலம் மட்டுமே, தரமான கல்வியை பெற்று, ஒரு நல்ல பண்புள்ள மற்றும் அனைத்து மக்களையும் நேசிக்கும் முஸ்லிம் இளைஞர்கள் மார்க்கத்திற்கு கிடைப்பார்கள் என உறுதிப்பட கூறலாம். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

கல்வியாளர்கள் கோரிக்கை....!


தேசிய கல்விக் கொள்கையை காங்கிரஸ் நிராகரிக்க வேண்டும்....!

கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்....!!

நாடு முழுவதும்  தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில், புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த ஒன்றிய பாஜக அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, பாஜக ஆளும் மாநிலங்களில் தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழ்நாட்டில், தேசிய கல்விக் கொள்கை வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக, மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்க தமிழ்நாடு அரசு ஏற்கனவே ஒரு குழுவை அமைத்துள்ளது.

கல்வியாளர்கள் வலியுறுத்தல்:

கர்நாடகாவில் ஆளும் கட்சியாக இருந்த பாஜக தேசிய கல்விக் கொள்கையின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து, பள்ளி, கல்லூரி பாடங்களில் மாற்றங்களை செய்தது. மேலும், தேசிய கல்விக் கொள்கையை சந்தேகத்திற்குரிய முறையில் சிக்கல்களுடன் செயல்படுத்தத் தொடங்கியது. கடந்த 2022-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட மாநிலத்தின் கல்வி ஆவணங்களில்  பொய்மையையும் சமூகப் பிளவுகளையும் பாஜக அரசு ஊக்குவித்தது.

எனவே, பாஜக அரசின் கீழ் தயாரிக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை தொடர்பான ஆவணங்கள் மூலம் பரப்பப்பட்ட அனைத்து தவறான தகவல்களையும் கர்நாடக காங்கிரஸ் அரசு இப்போது திரும்பப் பெற வேண்டும் என்று டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள்  டீன் அனிதா ராம்பால் வலியுறுத்தியுள்ளார். 

முட்டை, இறைச்சி குறித்த சர்ச்சை: 

தேசிய கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பசவராஜ் பொம்மை அரசால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவால், கடந்த ஜூலை 2022-ஆம் ஆண்டில்  தயாரிக்கப்பட்ட உடல்நலம் மற்றும் நல்வாழ்வு பற்றிய கட்டுரையில், மதிய உணவில் முட்டைகளை உட்கொள்வதை ஆதரிக்கவில்லை. மாறாக, முட்டை சாப்பிடுவது பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்பட்டுள்ளது. 

மேலும், இந்தியர்களின் சிறிய உடல் கட்டமைப்பைக் கருத்தில் கொண்டு, முட்டை மற்றும் இறைச்சி ஆகியவற்றை சாப்பிட்டால், கொலஸ்ட்ரால் மூலம் உடலுக்கு கிடைக்கும் கூடுதல் ஆற்றல், வாழ்க்கை முறை சீர்குலைவுகளுக்கு வழிவகுக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், தேசிய கல்விக் கொள்கையின் நுண்ணிய மேலாண்மை மூலம் கல்வியை மையப்படுத்துதல், வகுப்புவாதம் மற்றும் வணிகமயமாக்குதல் ஆகியவற்றை ஊக்குவிக்க ஒன்றிய அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. 

தேசிய கல்விக் கொள்கை, எழுத்தறிவு, எண்ணறிவு மற்றும் தொழிற்திறன் ஆகியவற்றை குறைக்கிறது என குற்றம்சாட்டும் கல்வியாளர்கள்,. கல்வியை தனியார்மயமாக்குவதை ஊக்குவிக்கிறது என்றும், இதனால் நாட்டில் வாழும் ஏழைகளுக்கு தரமான நல்ல கல்வி கிடைக்காமல் போய்விடும் என்றும் எச்சரிக்கை செய்கின்றனர். 

காங்கிரஸ் நிராகரிக்க வேண்டும்:

எனவே, கர்நாடகாவில் அனைத்து தரப்பு மக்களின் நம்பிக்கையுடன் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள காங்கிரஸ் கட்சி, தேசிய கல்விக் கொள்கை தொடர்பான ஒன்றிய அரசின் முயற்சிகளைய எதிர்க்க வேண்டும் என கல்வியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

தேசிய கல்விக் கொள்கையை நிராகரித்து, மாநிலத்திற்கு சொந்தக் கல்விக் கொள்கையை வழங்குவோம் என்று தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை காங்கிரஸ்  காப்பாற்ற வேண்டும் என்றும் பல கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்  வலியுறுத்தியுள்ளனர். 

தேசிய கல்விக் கொள்கையால் ஏற்படும் பாதிப்புகளை உன்னிப்பாக கவனத்தில் எடுத்துக் கொண்டு, அதை  எதிர்க்கவும் நிராகரிக்கவும் மற்ற மாநிலங்களை ஒன்றிணைப்பதில் புதிய கர்நாடக காங்கிரஸ் அரசு  முன்னோடியாக இருக்க வேண்டும் என்றும் டெல்லி பல்கலைழக்கழக முன்னாள் பேராசிரியர்  அனிதா ராம்பால் உள்ளிட்டோர் கேட்டுக் கொண்டுள்ளனர். 

கர்நாடகாவில் புதிய காங்கிரஸ் அரசு, தேசிய கல்விக் கொள்கையை  நிராகரித்து, கல்வித் துறையில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற தனது வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று டெல்லியைச் சேர்ந்த மற்றொரு பேராசிரியர்  அபா தேவ் ஹபீப் வலியுறுத்தியுள்ளார்.  

கல்வியின் முக்கிய நோக்கம் குடிமக்களுக்கு அறிவு மற்றும் விமர்சனப் பகுப்பாய்வுக்கான திறன்களை வழங்குவதன் மூலம் அவர்களை மேம்படுத்துவதாகும். ஆனால் தேசிய கல்விக் கொள்கை, மலிவான உழைப்பை வழங்குவதற்காக பல்வேறு தொழில்களில் திறமையானவர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அது, அறிவுசார் அதிகாரம் பெற்ற நல்ல குடிமக்களை உருவாக்கத்தை நோக்கமாக கொண்டு இருக்கவில்லை என்றும் கல்வியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். . 

என்ன செய்யப் போகிறது காங்கிரஸ்: 

அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவுடன் கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்துள்ள காங்கிரஸ், தனது வாக்குறுதியின் படி தேசிய கல்விக் கொள்கைக்கு பதிலாக, மாநிலத்திற்கு என சொந்தக் கல்விக் கொள்கையை உருவாக்கி செயல்படுத்த உள்ளதா, அல்லது வாக்குறுதியை கிடப்பில் போடுமா என்பதை எதிர்காலம் தான் பதில் சொல்லும். பள்ளி, கல்லூரி பாடப் புத்தகங்களில் நச்சை விதைக்கும் பாஜகவின் நடவடிக்கைகளுக்கு கர்நாடக காங்கிரஸ் அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதன்மூலம் மட்டுமே, மதசார்பற்ற நாட்டில் நல்ல மாணவர்களையும், சிறந்த சமுதாயத்தையும் உருவாக்க முடியும் என்பதை உணர்ந்து காங்கிரஸ் செயல்பட வேண்டும் என்றும் கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்