Tuesday, June 27, 2023

ஜங்க் ஃபுட் ஆபத்து....!


தூக்கத்தை சீர்குலைக்கும் ஆரோக்கியமற்ற உணவுகள்....!

ஆய்வில் அதிர்ச்சி தகவல்.....!!

வாழ்க்கை வசதிகளுக்காக ராக்கெட் வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்கள், தங்களது உடல்நலம் குறித்து சிறிதும் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. எப்போதும் பணியில் மூழ்கிக் கொண்டே இருக்கும் அவர்கள், அவ்வப்போது கிடைக்கும் பாஸ்ட் புட் எனப்படும் உணவுகளை உண்டு வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு செல்கிறார்கள். இதனால் ஏற்படும் விபரீத விளைவுகளை அவர்கள் உணர்ந்து கொள்வதில்லை. 

உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல சத்தான உணவு மிகவும் அவசியம் என்பது மருத்துவர்களின் கருத்து. சரியான நேரத்தில், நல்ல தரமான உணவை உட்கொள்ளும் ஒருவருக்கு, அடிக்கடி மருத்துவர்களிடம் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது. ஆனால், தற்போது நவீன உலகில் இளைஞர்கள் மத்தியில், உணவு பழக்கங்களில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த உணவு பழக்கவழக்க மாற்றங்களால் ஏற்படும் ஆபத்துகள் அதிகம் என மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள்.  

​​ஜங்க் ஃபுட் ஆபத்து:

ஸ்வீடனில் உள்ள உப்சாலா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஜங்க் உணவுகள், மனிதர்களை எப்படி பாதிக்கிறது என்பது குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். இந்த ஆய்வில் பங்கேற்ற நபர்களை இரண்டு பிரிவுகளாக பிரித்து அவர்களில் ஒரு குழுவிற்கு ஆரோக்கியமான உணவையும், மற்றொரு குழுவைச் சேர்ந்தவர்களுக்கு ஆரோக்கியமற்ற ஜங்க் உணவுகளையும் ஆராய்ச்சியாளர்கள்  வழங்கினர். 

ஆய்வின் இரண்டு அமர்வுகளில் மொத்தம் 15 ஆரோக்கியமான சாதாரண எடையுள்ள இளைஞர்கள் பங்கேற்றனர்.  இப்படி பங்கேற்றவர்களின் தூக்கப் பழக்கம் உள்ளிட்ட அம்சங்கள் முதலில் ஆய்வு செய்யப்பட்டது. ஒரு இரவுக்கு 7 முதல் 9 மணி நேரம் வரை தூக்கம் இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் ஆய்வில் பங்கேற்றவர்களுக்கு ஆரோக்கியமான உணவு மற்றும் ஆரோக்கியமற்ற உணவு இரண்டும் மாறிமாறி வழங்கப்பட்டது. இரண்டு உணவுகளிலும் ஒரே எண்ணிக்கையிலான கலோரிகள் இருந்தன. ஒவ்வொரு நபரின் தினசரி தேவைகளுக்கு ஏற்ப உணவு வழங்கப்பட்டது. 

ஆய்வில் அதிர்ச்சி தகவல்:

இந்த ஆய்வில் பங்கேற்ற இளைஞர்களுக்கு ஒவ்வொரு உணவும் ஒரு வாரத்திற்கு  வழங்கப்பட்டது. அப்போது, ஆரோக்கியமற்ற உணவில் அதிக சர்க்கரை மற்றும் நிறைவுற்ற கொழுப்பு மற்றும் அதிக பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் ஆய்வில் பங்கேற்றவர்களின் தூக்கம், செயல்பாடு மற்றும் உணவு அட்டவணைகள் தனிப்பட்ட அளவில் கண்காணிக்கப்பட்டன.

இரண்டு உணவு வகைகளை உட்கொண்டு ஒரேநேரத்தில் தூங்கிய இளைஞர்களின் ஆழ்ந்த தூக்கம் எப்படி இருந்தது என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அப்போது, ஆரோக்கியமான உணவை உட்கொண்ட இளைஞர்களின் தூக்கம் நல்ல நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

ஆரோக்கியமான உணவை உட்கொண்டவர்களை ஒப்பிடும்போது,  ஜங்க் உணவை சாப்பிட்ட இளைஞர்களின் ஆழ்ந்த தூக்கம் குறைவான செயல்பாட்டை வெளிப்படுத்தியதை தாங்கள் கண்டதாக ஆராய்ச்சியாளர் செடெர்னேஸ் கூறியுள்ளார். 

தூக்கத்தை பாதிக்கும் ஜங்க் உணவு:

பின்னர் ஆய்வில் பங்கேற்ற இளைஞர்களுக்கு ஒரே மாதிரியான உணவுகள் வழங்கப்பட்டன.  இப்படி தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில்,  ஆரோக்கியமான உணவு நல்ல தூக்கத்தையும், ஆரோக்கியமற்ற உணவு ஆழமற்ற  தூக்கத்தையும் கொடுப்பது உறுதி செய்யப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்வது குறைந்த தூக்கத்துடன் தொடர்புடையது என்றும், ஆழ்ந்த தூக்கம், தூக்கத்தின் மூன்றாவது நிலை, நினைவகம், தசை வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி போன்ற தேவையான செயல்பாடுகளை ஆரோக்கியமான உணவுகள்  சரிசெய்து மீட்டெடுக்கிறது என்றும் இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. 

ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை:

ஆரோக்கியமற்ற மோசமான உணவுகள், மற்றும் அதன்மூலம் கிடைக்கும் மோசமான தூக்கம் ஆகிய இரண்டும் மனிதர்களுக்கு உடல் மற்றும் மன ரீதியாக பல்வேறு ஆபத்துகளை ஏற்படுத்தும் என்று உப்சாலா பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியர் ஜொனாதன் செடெர்னேஸ் எச்சரித்துள்ளார். ஜங்க் உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும் என்றும் அவர் கூறியுள்ளார். 

இத்தகைய ஆபத்துகளில் இருந்து தப்பிக்க, மனிதர்கள் தங்களது நவீன உணவுப் பழக்கங்களில் இருந்து மீண்டு வர வேண்டும்.  உணவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஜங்க் உணவு வகைகளை அடிக்கடி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை சரியான நேரத்தில் சாப்பிட்டு, சரியான அளவுக்கு தூங்க வேண்டும். ஆழ்ந்த தூக்கம், உடல், மனம் ஆகிய இரண்டிற்கும் அவசியம் என்பதை இளைஞர்கள் மறந்துவிடக் கூடாது. இப்படி பல ஆலோசனைகளை இந்த ஆய்வுக்குப் பிறகு ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். 

தூக்கமின்மை ஒரு நோய். அதனால் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படும் என்பதை மக்கள் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ள மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், தூக்கமின்மை பிரச்சினையை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், இல்லாவிட்டால் ஆபத்துகள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக வந்து கதவை தட்டும் என்றும் எச்சரித்துள்ளனர்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: