Tuesday, June 27, 2023

பெற்றோரின் குடிப்பழக்கம் - குழந்தைகள் பாதிப்பு...!


குடிப்பழக்கமுள்ள பெற்றோர்கள், கல்வி அழுத்தம் உள்ளிட்ட முக்கிய காரணங்களால் வீட்டை வெளியே வெளியேறும் குழந்தைகள்....!

அதிர்ச்சி ரிப்போர்ட்......!!

தமிழகத்தில் உள்ள பல நகரங்களில் ரயில்வே சில்ட்ரன் இந்தியா மற்றும் ஸ்கோப் இந்தியா ஆகிய இரண்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் குழந்தைகள் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது. வீட்டை விட்டு குழந்தைகள் ஏன், ஓடி வருகிறார்கள், அதன்மூலம் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன என்பது குறித்து பல்வேறு கோணங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  இந்த ஆய்வில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

குடிப்பழக்கமுள்ள பெற்றோர்கள்:

இரயில்வே சில்ட்ரன் இந்தியா மற்றும் ஸ்கோப் இந்தியா ஆகிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, ஓடிப்போன குழந்தைகளை அவர்களது குடும்பங்களுடன் மீண்டும் ஒருங்கிணைப்பதற்கும், குடும்ப அமைப்பை வலுப்படுத்துவதற்கும் உதவும் கொள்கைகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கடந்த ஜனவரி 2021 முதல் 2022 வரை விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து மீட்கப்பட்டு பின்னர் குடும்பங்களுடன் இணைந்த குழந்தைகளில் 109 பேர் அதே மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இதில்  53 குழந்தைகளை ஆய்வுக்குத் தேர்ந்தெடுத்த தொண்டு நிறுவனங்கள், குழந்தைகளை நேர்காணல் செய்வதோடு, தாய், தந்தை மற்றும் பராமரிப்பாளர்களுடன் இரண்டு முறை குழு விவாதங்களை நடத்தியது.  

அப்போது, குழந்தைகள் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முக்கிய காரணம் பெற்றோர்களின் குடிப்பழக்கம் மற்றும் அடிக்கடி பெற்றோர்கள் இடையே ஏற்படும் குடும்ப தகராறு ஆகியவை என்பது உறுதியாக தெரியவந்தது. 

கல்வி அழுத்தம்:

குழந்தைகள் வீட்டை விட்டு வெளியேறுவதற்கான  மற்றொரு முக்கிய காரணமாக  கல்வி அழுத்தம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. குழந்தைகள் மீது பல குடும்பங்கள் செலுத்தும் கல்வி அழுத்தம் அவர்களை மன ரீதியாக பாதிக்கிறது. பெற்றோர்களின் கண்டிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் ஏற்படும் மனச் சோர்வு, அழுத்தம் உள்ளிட்ட காரணங்கள் வேதனை அடையும் குழந்தைகள், பெற்றோரிகளிடம் சொல்லிக் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியே ஓடி விடுகிறார்கள். 

வீட்டை விட்டு வெளியே ஓடும் பெரும்பாலான குழந்தைகள் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இப்படி வீட்டை விட்டு ஓடிப்போவதற்கான காரணங்களை விரிவாக ஆய்வு செய்யும்போது,  குடும்ப நிலை, குழந்தைகளின் பெற்றோர்களில் ஏறத்தாழ 68 சதவீத பேர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்பதை ஆய்வு வெளிப்படுத்தியது. அத்துடன் குழந்தைகள் படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருப்பதும் ஒரு முக்கிய தனிப்பட்ட அளவிலான காரணமாக இருந்து வருகிறது. 

குழந்தைகளின் தேவைகள்:

வீட்டை விட்டு வெளியே ஓடி போகாமல் இருக்கும்  குழந்தைகள் குறித்தும் ஆய்வில் கவனம் செலுத்தப்பட்டது. அதில் 13 சதவீத குழந்தைகள் மட்டுமே, தங்களுடைய தேவைகளும், எதிர்பார்ப்புகளும் பூர்த்தி செய்யப்பட்டதால், பெற்றோர்களிடம் தங்கி இருப்பதாக கூறியுள்ளனர். 

பெரும்பாலான குழந்தைகள் தங்கள் பெற்றோர் மற்றும் பராமரிப்பாளர்கள் அவர்களுடன் பாசத்துடன் இருக்க வேண்டும் என்றும், நல்ல அன்பை செலுத்த வேண்டும் என்றும் விரும்புகிறார்கள். அத்துடன் 15 முதல் 18 வயதுக்கு உட்பட பெரும்பாலான குழந்தைகள் படிப்பில் ஆர்வத்தை இழந்தவர்களாக இருப்பதால், அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க திறன் பயிற்சி போன்ற மாற்று வழிகளை ஆராய வேண்டும் என்றும் ஆய்வு செய்த தொண்டு அமைப்பு ஆலோசனை கூறியுள்ளது. 

குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு ஆலோசனை:

வீட்டை விட்டு ஓடிப் போய் மீட்கப்பட்டு பின்னர் தங்கள் குடும்பங்களுடன் மீண்டும் இணைந்த பிறகு, 62 சதவீத குழந்தைகளுக்கு நல்ல ஆலோசனை வழங்கப்பட்டது. வீட்டை விட்டு வெளியேறும் குழந்தைகளின் விவரங்களை சேரிக்க வேண்டும் என்றும், அரசு குழந்தை இல்லங்களில் பயோமெட்ரிக் முறையைப் பயன்படுத்தி குழந்தைகளின் ஆதார் விவரங்களை திரட்ட வேண்டும் ஆய்வாளர்கள் பரிந்துரை செய்துள்ளளனர். இந்த நடவடிக்கைகள்,  குழந்தைகளை அடையாளம் காணவும் தேவையான ஆதரவை வழங்கவும் உதவும். 

குழந்தை உதவி மையங்களை போதுமான உள்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்துவது மற்றும் சந்தேகத்திற்குரிய குழந்தைகள் அல்லது வயது வந்தோருடன் பயணம் செய்யும் குழந்தைகள் செல்லுபடியாகும் டிக்கெட்டை வைத்திருந்தாலும், அவர்களை பின்தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுத்தால், சமூகத்தில் குற்றச்செயல்கள் தடுக்கப்படும் என்றும் குழந்தைகளின் எதிர்காலம் சிதைக்கப்படாமல் இருக்க வாய்ப்பு உருவாகும் என்றும் இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. 

- நன்றி:  தி இன்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்

                 தமிழில் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: