Tuesday, June 27, 2023

இரட்டை சகோதரிகள் சாதனை...!

நீட் தேர்வில் பள்ளிவாசல் இமாமின் இரட்டை மகள்கள் தேர்ச்சிப் பெற்று சாதனை....!

2023-ஆம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 7ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வில் சுமார் 20 லட்சத்து 38 ஆயிரம் பேர் கலந்துக் கொண்டு தேர்வை எழுதினர். இந்த தேர்வின் முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டது. இதில் 11 லட்சத்து 45 ஆயிரம் மாணவ மாணவியர்கள் தேர்ச்சி பெற்றனர்.  இந்த நீட் தேர்வில் முஸ்லிம் மாணவ மாணவியரும் தேர்ச்சி பெற்று இருக்கும் நிலையில், முதல் முயற்சியிலேயே, காஷ்மீரைச் சேர்ந்த முஸ்லிம் இரட்டை சகோதரிகள், தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளனர். 

பள்ளிவாசல் இமாமின் இரட்டை மகள்கள்:

தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள தம்ஹால் ஹன்ஜிபோரா என்ற கிராமத்தை சேர்ந்த சஜாத் ஹுசைன், அங்குள்ள ஜாமியா மசூதியின் இமாம் இருந்து வருகிறார். இமாம் சஜாத் ஹுசைனின் இரட்டை மகள்களான சையத் பிஸ்மா மற்றும் சையத் சபியா ஆகிய இருவரும் கல்வியில் மிகுந்த ஆர்வம் கொண்டு இருந்ததால், அவர்களின் ஆர்வம் மற்றும் விருப்பதை நிறைவேற்றும் வகையில், இமாம் அவர்களின் படிப்பிற்கு ஊக்கம் அளித்து வந்தார். 

சிறுவயதிலிருந்தே தாங்கள் படிக்கத் தேவையான அனைத்தையும் தங்களுடைய பெற்றோர் வழங்கி வந்ததாக கூறும் இரட்டை சகோதரிகள்,  தங்களின் எதிர்காலத்திற்காக அவர்கள் ஒரு மிகப்பெரிய தியாகம் செய்தார்கள் என்றும் தெரிவிக்கின்றனர்.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை: 

இந்நிலையில், மருத்துவத்துறையில் ஆர்வம் கொண்ட  சகோதரிகள் இருவரும், இந்தாண்டிற்கான நீட் தேர்வில் கலந்துகொண்டு தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வில் பிஸ்மா மற்றும் சபியா முறையே 625 மற்றும் 570 மதிப்பெண்களைப் பெற்றனர். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றது குறித்து கருத்து கூறியுள்ள இருவரும், மதிப்புமிக்க இந்த தேர்வுக்கு தகுதி பெறுவதற்கான  தங்களின் பயணத்திற்கு, தங்களது பெற்றோர் அசைக்க முடியாத ஆதரவை வழங்கியதாக தெரிவித்துள்ளனர். தங்களை ஊக்குவிப்பதிலும் வழிகாட்டுவதிலும் பெற்றோர் இருவரும் முக்கியப் பங்காற்றியதாகவும், இதன்மூலம் மட்டுமே குறிப்பிடத்தக்க இந்த மைல்கல்லை அடைய முடிந்ததாகவும் அவர்கள் பெருமையுடன் கூறியுள்ளனர்.

மருத்துவச் சேவையில் ஆர்வம்:

நீட் தேர்வில் தகுதி பெற்றுள்ள  சகோதரிகள் இருவரும், நல்ல மருத்துவர்களாகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று விரும்புவதாக கூறியுள்ளனர். நீட் தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவ மாணவியர், முதலில் தங்கள் நிலையைச் சரிபார்த்து, தங்கள் பலவீனங்களைக் கண்டறிய வேண்டும் என்று இருவரும் ஆலோசனை கூறுகின்றனர். தங்கள் பலவீனங்களை ஆசிரியர்களிடம் விவாதிக்க வேண்டும் என்றும், அவற்றைக் கடக்க இணையத்தின் உதவியையும் பெற வேண்டும் என்று சாதனை சகோதரிகள் இருவரும் யோசனை தருகின்றனர். 

இமாம் பெருமிதம்: 

தனது மகள்கள் பிஸ்மா மற்றும் சபியா நிகழ்த்திய மகத்தான சாதனை மிகவும் பெருமை அளிப்பதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ள இமாம் சஜாத் ஹுசைன், வாழ்க்கையில் தாம் பல போராட்டங்களை எதிர்கொண்டதாகவும், ஆனால், தனது மகள்களுக்கு அவர்களின் கல்விக்காக முழு ஆதரவை வழங்க, அயராது கடுமையாக உழைத்ததாகவும் கூறியுள்ளார். தனது அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு, நீட் தேர்வில் தனது மகள்கள் தேர்ச்சிப் பெற்று தங்களின் கனவுகளைத் தொடர தேவையான ஆதாரங்கள், வழிகாட்டுதல் மற்றும் ஊக்கம் ஆகியவற்றை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டிருந்தது என்றும் இமாம் தெரிவித்துள்ளார். 

மார்க்க மற்றும் உலகக் கல்வி:

தனது இரட்டை மகள்களின் சாதனைக்காக, ஏக இறைவனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளும் இமாம், இருவரின் சாதனையை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடையவதாகவும் கூறியுள்ளார். முஸ்லிம்களுக்கு மார்க்கக் கல்வி மற்றும் உலகக் கல்வி இரண்டும் முக்கியம் என்றும், எனவே,  தனது மகள்களுக்கு இஸ்லாம், தொழுகை, குரான் ஆகியவற்றைக் கற்றுக் கொடுத்ததோடு, பள்ளிக் கல்வியையும்  சொல்லிக் கொடுத்தாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகளின் நல்ல எதிர்காலத்திற்காக சிறந்த வாய்ப்புகளை உருவாக்கி வழங்க வேண்டும் என்றும் இமாம் ஆலோசனை கூறியுள்ளார். 

சாதிக்க வறுமை தடையில்லை:

காஷ்மீரின் ஒரு சிறிய கிராமத்தில் அதுவும் எந்தவித வசதியும் இல்லாத கிராமத்தில் பிறந்த இரட்டை சகோதரிகள் பிஸ்மா மற்றும் சபியா, கல்வியில் ஆர்வம் கொண்டு கடுமையாக உழைத்ததால் இன்று சாதனை புரிந்துள்ளனர். சாதாரண பள்ளிவாசல் இமாமின் மகள்களான இருவரும், தங்களது குடும்ப சூழ்நிலையிலும் சாதித்துள்ளனர். எனவே, கல்வி கற்கவும், வாழ்க்கையில் சாதிக்கவும் வறுமை ஒரு தடையில்லை என்பதை மற்றவர்கள் உணர்ந்துக் கொள்ள வேண்டும். அப்படி உணர்ந்துக் கொண்டால் நிச்சயம் சாதிக்க முடியும்.

கடைசியாக, நீட் நுழைவுத் தேர்வு, ஏழை, எளிய, நடுத்தர மற்றும் கிராமப்புற மாணவ மாணவியர்களின் மருத்துவராக வேண்டும் என்ற கனவை சீர்குலைத்துவிடுகிறது. இதில் மாற்றுகருத்து இல்லை. எனவே, நீட் தேர்வு தேவையில்லாத ஒன்று என்பதும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதும் உண்மையான சமூக ஆர்வலர்கள் அனைவரின் விருப்பம். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: