Thursday, June 29, 2023

நூலகங்கள் - தமிழ்நாடு டாப்....!


நூலகங்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு டாப்....!

பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம் படுமோசம்...!

நாட்டில் இருக்கும் மாநிலங்களில் உள்ள மதுபான கடைகள் மற்றும் நூலகங்களின் எண்ணிக்கை குறித்து ஒன்றிய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் ராஜாராம்  மோகன் ராய் நூலக நிறுவனம் புள்ளி விவரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

உ.பி. படு மோசம்:

பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தில் நூலகங்களின் எண்ணிக்கையை விட, மதுபான கடைகளின் எண்ணிக்கை தான் மிகவும் அதிகம் என புள்ளி விவரத்தில் தெரிய வந்துள்ளது.

உ.பி.யில் மொத்தம் 27 ஆயிரத்து 352 மதுபான கடைகள் உள்ளன.

ஆனால், அம்மாநிலத்தில் உள்ள பொது நூலகங்களின் எண்ணிக்கை வெறும் 573 மட்டுமே ஆகும்.

அதேநேரத்தில், 3 லட்சத்து 29 ஆயிரத்து 970 இ-நூலக சேவை இருப்பதாக உத்தரப் பிரதேச பொது நூலக அமைப்பு தெரிவிக்கிறது.

இதன்மூலம் உத்தரப் பிரதேசத்தில் பிற மாநிலங்களை விட நூலகங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்பது உறுதியாக தெரிவதுடன், கல்வியறிவு பெறுவதில் அந்த மாநிலம் ஏன் மிகவும் பின் தங்கி உள்ளது என்பதையும் தெளிவாக அறிய முடிகிறது.

அத்துடன் புதிய நூலகங்களை திறப்பதை விட மதுபான கடைகளை திறப்பதில் தான் உ.பி. பாஜக அரசு அதிக அக்கறை செலுத்தி வருகிறது.

மாநிலத்தின் வருவாயை அதிகரிக்க புதிதாக 2 ஆயிரத்து 76 மதுக் கடைகளை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்  அண்மையில் திறந்து வைத்துள்ளார்.

அதிக நூலகங்கள் கொண்ட மாநிலம் தமிழ்நாடு:

பாஜக கூட்டணி ஆளும் மற்றொரு மாநிலமான மகாராஷ்டிராவில் 25 ஆயிரம் மதுக் கடைகளும் 12 ஆயிரத்து 148 நூலகங்களும் உள்ளன.

பாஜக ஆட்சி செய்யும் கர்நாடகாவில் 11 ஆயிரம் மதுபான கடைகளுக்கு 6 ஆயிரத்து 798 நூலகங்களும் உள்ளன.

ஆனால், நூலகங்கள் விவகாரத்தில் தமிழ்நாட்டில் நிலைமையோ மிகவும் சூப்பராக உள்ளது.

தமிழ்நாட்டில் 5 ஆயிரத்து 329 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன.

அதே அளவிற்கு அதாவது 4 ஆயிரத்து 622 நூலகங்கள் தமிழ்நாட்டில் இயங்கி வருகின்றன.

அறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம்:

சென்னை கோட்டூர்புரத்தில் அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம் 172 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு கடந்த 2010-ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது.

இது ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகம் என பாராட்டுகிறது.

அனைத்து அதிநவீன வசதிகளுடன் இந்த நூலகம் உருவாக்கப்பட்டு நன்றாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

பல லட்சம் தலைப்புகளில் ஏராளமான நூல்கள் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

கணினி சேவை, இணையதளம், வைஃபை உள்ளிட்ட வசதிகளுடன் இயங்கி வரும் இந்த நூலகம்,  ஆராய்ச்சி மாணவர்களுக்கு மிகவும் பலன் அளித்து வருகிறது.

அத்துடன், பல்வேறு போட்டி தேர்வு எழுதும் இளைஞர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள இந்த நூலகம் நல்ல வாய்ப்பை அளிக்கிறது.

கலைஞர் நினைவு நூலகம்:

மதுரை தல்லாக்குளம் பகுதியில் பிரமாண்டமாக கட்டப்படுள்ள கலைஞர் நினைவு நூலகம் வரும் ஜூன் 3-ஆம் தேதி திறக்கப்படுகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த நூலகத்தை திறந்து வைக்க உள்ளார்.

சுமார் 2 லட்சம் சதுர பரப்பளவில் கட்டப்பட்ட இந்த நூலகம் 115 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.

7 தளங்களை கொண்ட இந்த பிரமாண்டமான நூலகத்தில் அனைத்து நவீன வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

உலக தரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த கலைஞர் நினைவு நூலகம், மதுரை  மட்டுமல்லாமல் தென் மாவட்ட மக்கள், இளைஞர்கள், மாணவர்கள் ஆகியோரின் அறிவு பசிக்கு நல்ல தீனி போடும் என்பது உறுதி.

மதுபான கடைகளுக்கு நிகராக நூலகங்கள் உள்ள தமிழ்நாட்டில், இனிவரும் காலத்தில், டாஸ்மாக் மதுபான கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாக குறைத்து, நூலகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள சிறிய நூலகங்களை சீரமைத்து மேம்படுத்த அரசு முன்வர வேண்டும்.

இதன்மூலம், டாஸ்மாக் கடைகளுக்கு செல்லும் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து, நூலகங்களுக்கு செல்லும் இளைஞர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும். இதற்காக பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாநிலம் முழுவதும் அரசு தொடர்ந்து நடத்தினால், இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் அதிக நூலகங்களை கொண்ட மாநிலம், தமிழ்நாடு என்ற பெருமை தமிழர்களுக்கு கிடைக்கும்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்.

No comments: