Thursday, June 29, 2023

வேலையில்லா திண்டாட்டம்....!


இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம்  கடுமையாக அதிகரிப்பு....!

இந்திய மக்கள்தொகையில் 25 வயதிற்குட்பட்டவர்கள் 40 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளனர். அவர்களில் கிட்டத்தட்ட 45 புள்ளி 8 சதவீதம் பேர்  வேலையில்லாமல் திண்டாடி வருகின்றனர். கடந்த டிசம்பர் 2022-ஆம் ஆண்டின் நிலவரப்படி நாட்டில் வாழும் இளைஞர்களில் பாதி பேர் வேலையில்லாமல் உள்ளனர் என்று இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE)  என்ற ஒரு தன்னார்வ சிந்தனைக் குழு தெரிவித்துள்ளது. 

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த அமைப்பு, பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, இளைஞர்களின் தற்போதைய நிலைமை, அவர்கள் செய்யும் பணி உள்ளிட்ட அம்சங்கள் குறித்த தகவல்களை அவ்வவ்போது வெளியிட்டு வருகிறது. தற்போது இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,  நாட்டில் இளைஞர்கள் மத்தியில் வேலையின்மை பிரச்சினை கடுமையாக அதிகரித்து வருகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலையின்மையால் பாதிக்கப்படும் சமூகம்:

நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் கடுமையாக அதிகரித்து வருவதால் இளைஞர்களின் மத்தியில் நம்பிக்கை குறைந்துகொண்டே வருகிறது. இதனால் தற்கொலை உள்ளிட்ட பல விபரீதமான முடிவுகளுக்கு அவர்கள் ஆளாக நேரிடுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். போதிய வருவாய் இல்லாத காரணத்தால், கோடிக்கணக்கான குடும்பங்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. 

நாட்டில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க எந்தவித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை என கூறும் பொருளாதார வல்லுநர்கள், இதன் காரணமாக தொழிலாளர்களின் எண்ணிக்கையும் குறைந்துகொண்டே வருவதாக அச்சம் தெரிவித்துள்ளனர்.  பல தொழில்களை செய்ய பணியாளர்கள் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் அவர்களின் பணியில் தரம் இருப்பது இல்லை என்றும் பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் நிலையில், பல தொழில் நிறுவனங்கள் குறைந்த சம்பளத்தில் பணியாளர்களை தேர்வு செய்து பணியில் அமர்த்தும் போக்கு நாட்டில் அதிகரித்துள்ளது.

சமூக அமைதியின்மைக்கு வாய்ப்பு:

நாட்டில் அதிகரித்து வரும் இளைஞர்களின் தொகைக்கு ஏற்ப, அதிக வேலைவாய்ப்புகளை  உருவாக்க வேண்டும்.  அப்படி செய்ய முடியாவிட்டால் அது சமூக அமைதியின்மைக்கு வழி வகுக்கும் என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 

ஒவ்வொரு ஆண்டும் மக்கள் தொகை பெருகும்போதும், பல்கலைக்கழகங்களில் இருந்து லட்சக்கணக்கான இளைஞர்கள் படித்துவிட்டு, வெளியே வரும்போதும்,  வேலைக்கான போட்டி இன்னும் கடுமையாகி கொண்டே போகிறது. இதனால் ஏற்படும் வேலையில்லா திண்டாட்டப்  பிரச்சனை இன்னும் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

அதிகரிக்கும் வேலையின்மை பிரச்சினை:

கார்னெல் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியரும், இந்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகருமான கௌசிக் பாசு, இந்தியாவில் இளைஞர்களின் மத்தியில் வேலையின்மை விகிதம் அதிர்ச்சியூட்டும் அளவிற்கு உயர்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். 

வேலையில்லா திண்டாட்டம்  கடந்த பல ஆண்டுகளாக மெதுவாக உயர்ந்து வருவதாகவும், கடந்த 15 ஆண்டுகளாக அது மெல்ல மெல்ல ஏறுமுகத்தில் இருந்து வருவதாகவும் பாசு கூறியுள்ளார். ஆனால் கடந்த 7-8 ஆண்டுகளில் இளைஞர்கள் மத்தியில் வேலையில்லா திண்டாடப் பிரச்சினை சுனாமி போன்று விஸ்வரூப ஏற்றத்தில் இருப்பதாகவும் கௌசிக் பாசு தெரிவித்துள்ளார். 

இந்திய இளைஞர்களின் திறமை:

உலகிலேயே அதிக இளைஞர் சக்தி கொண்ட நாடாக இந்தியா இருந்து வருகிறது. இதனால் பல நாடுகளின் பார்வை இந்திய இளைஞர்கள் மீது இருந்து வருகிறது. திறமையான இந்திய இளைஞர்களை தங்கள் நிறுவனத்தில் பணிக்கு அமர்த்தி, அவர்களின் நல்ல திறமையை பயன்படுத்திக் கொள்ள புகழ்பெற்ற தொழில் நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. 

இதனால் உள்நாட்டில் வேலையில்லா பிரச்சினையால் திண்டாடும் இந்திய இளைஞர்கள், வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். பல இளைஞர்கள் நல்ல ஊதியம், சலுகை உள்ளிட்டவை கிடைத்ததும், அந்த நாடுகளிலேயே தங்கி விடுகின்றனர். இதனால், இந்திய இளைஞர்களின் திறமைகள் சொந்த நாட்டுக்கு பயன்படுத்த முடியாமல் போய் விடுகிறது. 

வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்:

அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப போதுமான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும், அப்படி செய்யாவிட்டால், வேலையில்லா திண்டாட்டத்தின் வீக்கம் மேலும் அதிகரித்து, இந்தியாவிற்கு ஒரு மிகப்பெரிய  சவாலாகவும் பிரச்சனையாகவும் மாறும் என்றும் பொருளாதார வல்லுநர் பாசு எச்சரித்துள்ளார்.

மக்கள் தொகை சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்தியா பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன்படி, உலக அளவில் போட்டி மற்றும் உழைப்பு மிகுந்த இளைஞர் உற்பத்தித் துறையை இந்தியா பெற்றுள்ளது. ஆனால், இந்த இளைஞர் சக்தியில் 15 சதவீதத்திற்கும் குறைவான இளைஞர்கள் மட்டுமே வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர் என கூறும், இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம், பல்வேறு திட்டங்கள் மூலம் புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி இளைஞர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையின் ஒளியை ஏற்படுத்த வேண்டும் என்றும் ஆலோசனை கூறியுள்ளது. 

-  எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: