Thursday, June 29, 2023

கல்வியல் அதீத ஆர்வம்...!


அச்சுறுத்தல்கள் மற்றும் துயரங்களுக்கு மத்தியில் கல்வியில் அதீத ஆர்வம்....! 

இந்தியாவில் படித்து பட்டம் பெற்று ரோஹிங்கியா முஸ்லிம் பெண் அகதி தஸ்மிதா ஜோஹர் சாதனை....!

மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை வெடித்தால், சுமார் 7 லட்சத்திற்கும் அதிகமான ரோஹிங்கியாக்கள் வங்கதேசம், இந்தியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் அகதிகளாக  தஞ்சம் புகுந்தனர்.  சமீபத்திய ஒன்றிய அரசின் தரவுகளின்படி இந்தியாவில் டெல்லி, சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் சுமார் 21 ஆயிரம் ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் உள்ளனர். டெல்லியின் கலிந்தி குஞ்சில் உள்ள அகதிகள் முகாமில் ஏராளமான  ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். 

முஸ்லிம் பெண் அகதி தஸ்மிதா ஜோஹர்:

டெல்லி கலிந்தி குஞ்சி அகதிகள் முகாமில் வாழும் பல ரோஹிங்கியா பெண் அகதிகளில் ஒருவர் தான் தஸ்மிதா ஜோஹர். மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள், தங்களை முஸ்லிம்கள் என்று அடையாளப்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது. எனவே, பலர் முஸ்லிம் பெயர்களை வைத்துக் கொள்ளாமல், பௌத்த பெயர்களை சுட்டிக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.  மேலும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் நல்ல கல்வி பெறுவதில் கடும் சிக்கல்களும் நெருக்கடிகளும் மற்றும் அச்சுறுத்தல்களும் நிலவி வருகின்றன. 

அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் கல்வியில் ஆர்வம்:

இந்த சூழ்நிலையில்தான், அங்கு வாழ்ந்த தஸ்மிதா ஜோஹருக்கு கல்வி மீது அதீத ஆர்வம் பிறந்தது. ஆனால், அவரது குடும்பம் மிகவும் ஏழ்மையாக இருந்ததால், கல்விக்கு செலவு செய்ய முடியாத நிலை இருந்து வந்தது. எண்ணற்ற நாட்கள் பட்டினியாகவும் பல ஆண்டுகள் கிழிந்த உடைகள் மற்றும் செருப்புகளை அணிந்து கொண்டுதான் தஸ்மிதா ஜோஹர் வாழ்க்கையை நகர்த்தியுள்ளார். 

மியான்மரில் முஸ்லிமாக அடையாப்படுத்திக் கொள்ளாமல், ஆரம்பக் கல்வியை பயின்றபோது பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை அவருக்கு உருவானது. தனது ரோஹிங்கியா முஸ்லிம் பெயரை மறைக்க வேண்டியிருந்தது. அத்துடன் மற்றவர்களை போன்று கல்வி கற்கவும், அதன்மூலம் முன்னேற்றப் பாதையில் செல்லவும் தஸ்மிதாவுக்கு சம வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. பௌத்த மாணவிகளுக்கு மட்டுமே முன்னுரியை அளிக்கப்பட்டது. பள்ளியில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு பாகுபாடு காட்டப்பட்டது. அத்துடன் அவரது தந்தையும் கைது செய்யப்பட்டதால் தஸ்மிதா வாழ்க்கையில் தொடர்ந்து புயல் வீசிக் கொண்டே இருந்தது. 

மியான்மரை விட்டு வெளியேற முடிவு:

தனது உயிருக்கு பல அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட தஸ்மிதாவின் தந்தை அமானுல்லா ஜோஹர், கடந்த 2005-ஆம் ஆண்டில் மியான்மரை விட்டு வெளியேறி வங்கதேசத்திற்கு  செல்ல முடிவு செய்தபோது, தஸ்மிதா ஜோஹரின் பயணமும் தொடங்கியது. வங்கதேசத்திற்கு சென்று ஒரு ஆண்டுக்குப் பிறகு, தஸ்மிதா மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டார். ஆனால், அவர் மீண்டும் பழையபடி ஒன்றாம் வகுப்பில் இருந்து தனது படிப்பை தொடர வேண்டிய நிலை உருவானது. 

வங்கதேசத்தில் அவரது  தந்தைக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. கனமழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் காரணமாக, வேலைக்கு செல்ல முடியாத நிலையில்,  ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே, தஸ்மிதாவின் குடும்பத்தினர் சாப்பிட்டு வந்தனர்.  மேலும் கடும் பொருளாதார நெருக்கடியில் குடும்பம் சிக்கித் தவித்தால், படிப்பை நிறுத்த தஸ்மிதா மற்றும் அவரது சகோதரர்கள் முடிவு செய்தனர்.  ஆனால் இதற்கு அவர்களின் பெற்றோர் அனுமதிக்கவில்லை.

இந்தியாவுக்கு வருகை:

இந்த நேரத்தில்தான், தஸ்மிதாவின் குடும்பம் இந்தியாவுக்கு குடிபெயர்ந்தது. ஹரியானாவில் உள்ள எந்தப் பள்ளியும் அகதி மாணவர்களை சேர்த்துக் கொள்ளத் தயாராக இல்லாததால், அவர்கள் டெல்லியில் குடியேற முடிவு செய்தனர். இந்தியாவில், அவரது குடும்பத்திற்கு அகதி அட்டை இருந்தது, ஆனால் ஜோஹரால் வழக்கமான பள்ளியில் சேர முடியவில்லை, இதனால் அவர் திறந்தவெளி பள்ளியைத் தேர்வுசெய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இப்படி பல்வேறு நெருக்கடிக்கு மத்தியில் ஜோஹரும் அவரது சகோதரர்களும் ஐ.நா. அவை நடத்தும் பயிற்சி பள்ளிகள் மூலம்,  மொழிகள் மற்றும் கணினி திறன்களைக் கற்றுக்கொள்வதில் நான்கு ஆண்டுகள் செலவிட்டனர். கடந்த 2016-ஆம் ஆண்டில் 10-ஆம் வகுப்பையும், 2018-ஆம் ஆண்டில் 12 ஆம் வகுப்பையும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓபன் ஸ்கூலிங் மூலம் ஜோஹர் முடித்தார்.

அகதி மாணவர்களுக்கான உதவித்தொகை திட்டமான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஜெர்மன் அகடெமிக் அகதிகள் முன்முயற்சியின் நிதி உதவியால் அவர் கல்லூரிக்குச் சென்றார்.

அவர் இந்தியாவில் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தையும், வங்கதேசத்தில் பெங்காலியையும், மியான்மரில் ரோஹிங்கியா மற்றும் பர்மிய மொழியையும் கற்றுள்ளார்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டம்:

பல சிரமங்களுக்கு மத்தியில் தனது 25-வது வயதில் பட்டம் பெற்ற ஜோஹர், பின்தங்கிய மாணவர்களுக்கான உதவித்தொகைக்காக UNHCR-Duolingo கூட்டுத் திட்டத்தின் மூலம் கனடாவுக்குச் சென்று சட்டப்படிப்பை படிக்க முடிவு செய்துள்ளார்.

தஸ்மிதா ஜோஹர் டெல்லி பல்கலைக்கழகத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டில்  பட்டம் பெற்றபோது, இந்தியப் பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டம் பெற்ற முதல் ரோஹிங்கியா பெண்மணி  என்ற பெருமையை பெற்றார். வாழ்க்கையின் பின்னடைவுகள் மற்றும் அச்சுறுத்தல்கள், துயரங்கள்  நிறைந்த பயணத்திற்கும் இடையேயும் கல்வியில் சாதித்து மற்றவர்களுக்கு  அவர் முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளார்.  

25 வயதில் பட்டம் பெற்ற ஜோஹர், டெல்லியின் கலிந்தி குஞ்சில் உள்ள அகதிகள் முகாமில் வசிப்பவர்களுக்கு மன உறுதி மற்றும்  விடாமுயற்சி குறித்து அழகான பாடத்தை சொல்லித் தந்துள்ளார். தற்போது டெல்லி அகதி முகாமில் உள்ள மற்ற பெண்கள் தங்கள் மகள்களும், ஜோஹரைப் போலவே வளர வேண்டும், கல்வியில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையில் அவரது பெயரை சூட்டி வருகின்றனர்.

கல்வியில் சாதித்த ஜோஹர், தம் மக்களுக்காக குரல் கொடுப்பதே தனது குறிக்கோள் என கூறியுள்ளார். சிறுபான்மையினரின் மனித உரிமைகளுக்காக போராட தாம் ஒரு வழக்கறிஞராக மாற விரும்புவதாகவும், குறிப்பாக, ரோஹிங்கியா சமூகத்திற்காகவும்,  அவர்களின் உரிமைகளுக்காக வாதிடும் சர்வதேச குரல் தேவை என்றும் தஸ்மிதா ஜோஹர் தெரிவித்துள்ளார். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: